Published:Updated:

செம்மர சோகம்... ஊர் திரும்பாத கூலிகள்... தலைமறைவான ஏஜென்ட்கள்!

செம்மர சோகம்... ஊர் திரும்பாத கூலிகள்... தலைமறைவான ஏஜென்ட்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
செம்மர சோகம்... ஊர் திரும்பாத கூலிகள்... தலைமறைவான ஏஜென்ட்கள்!

ஜூ.வி ஸ்பெஷல் ஸ்டோரி

செம்மர சோகம்... ஊர் திரும்பாத கூலிகள்... தலைமறைவான ஏஜென்ட்கள்!

(சென்ற இதழ் தொடர்ச்சி...)

‘செம்மரம் வெட்டச் சென்ற ஐந்து பேர் ஆந்திராவின் ஒண்டிமிட்டா ஏரியில் மூழ்கி மரணம்’ என்ற செய்தி, இந்த பிப்ரவரி 18-ம் தேதி வெளியானது. காட்டுக்குள் போலீஸ் துரத்தியபோது, இவர்கள் தடுமாறி ஏரிக்குள் விழுந்து இறந்ததாகச் சொல்லப்பட்டது. சேலம் மாவட்டம், கல்வராயன் மலையில் உள்ள கீழ்நாடு என்ற கிராமத்திலிருந்து போனவர்கள் இவர்கள். இவர்களுடன் ஆந்திரா சென்ற இன்னொருவர் எப்படியோ தப்பி வந்தார். 27 பேர் போலீஸில் பிடிபட்டனர். செம்மரக் கடத்தல் ஏஜென்ட்களுடன் இங்கிருந்து மொத்தம் 170 பேர் போனதாகச் சொல்லப்படுகிறது. மற்ற 137 பேர் என்ன ஆனார்கள் என்று இதுவரை தெரியவில்லை.

செம்மர சோகம்... ஊர் திரும்பாத கூலிகள்... தலைமறைவான ஏஜென்ட்கள்!

இதைத் தொடர்ந்து, கல்வராயன் மலைப் பகுதியில் வருவாய்த் துறை அதிகாரிகள் கணக்கெடுப்பு நடத்தினர். மலைப்பகுதியில் இருக்கும் 99 சிறுசிறு கிராமங்களில் எடுத்த கணக்கெடுப்பில், ஆந்திராவுக்குச் செம்மரம் வெட்டக் கூட்டிச் செல்லப்பட்டவர்களில் 700 பேர் இதுவரை ஊர் திரும்பவில்லை என்பது தெரிய வந்துள்ளது. பலரின் வீடுகள் இன்னமும் பூட்டிக்கிடக்கின்றன. அவர்கள் என்ன ஆனார்கள் என்பது மர்மமாக இருக்கிறது. செம்மரம் வெட்ட ஆட்களைக் கூட்டிச் செல்லும் ஏஜென்ட்கள் இந்த மலைக்கிராமங்களில் உண்டு. இப்போது, 15 ஏஜென்ட்கள் தலைமறைவாகியுள்ளனர்.

‘‘ஆந்திராவின் சிறைகளில் தமிழகத்தைச் சேர்ந்த நிறைய பேர் வாடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் சிறையில் இருப்பது, அவர்களின் உறவினர்களுக்கேகூட தெரியாது. ‘எங்கோ கூலி வேலைக்குப் போயிருக்கிறார்கள். வந்து விடுவார்கள்’ என அவர்கள் நினைத்தபடி காத்திருக்கக்கூடும்’’ என்கிறார், ஆந்திர சிறைக ளுக்குச் சென்று வந்த வழக்கறிஞர் புகழேந்தி. ‘‘அங்கு சிறையில் இருக்கும் ஒவ்வொருவர்மீதும் குறைந்தபட்சம் மூன்று வழக்குகளாவது இருக்கின்றன. ஒரு வழக்கில் அங்கு ஜாமீன் வாங்க 30 ஆயிரம் ரூபாய் செலவாகிறது. ஒரு வழக்கில் ஜாமீன் வாங்கினால், அடுத்த வழக்கைப் போட்டு உடனடியாக உள்ளே தள்ளிவிடுகின்றனர். பலரையும் வழக்கில் சேர்ப்பதற்கு முன்பாகக் கடுமையாகச் சித்ரவதை செய்திருக்கிறார்கள். இதனால், நிறைய பேர் மன அழுத்தத்தில் தவிக்கி றார்கள். சிலரைக் கைது செய்ததும், அவர்களை விட்டே மற்றவர்களுக்கு போன் செய்யச் சொல்லி வரவழைத்துக் கைது செய்திருக்கிறார்கள். இவர்களில் பலர் ஆந்திரக் காடுகளையே பார்த்தறியாதவர்கள்.

செம்மர சோகம்... ஊர் திரும்பாத கூலிகள்... தலைமறைவான ஏஜென்ட்கள்!

ஆந்திரா சிறைகளில் இருக்கும் மூவாயிரம் தமிழக கைதிகளில் 25 சதவிகிதம் பேர் மட்டும்தான் செம்மரக் கடத்தலில் நேரடியாகத் தொடர்பு உடையவர்கள். மற்றவர்கள், விஷயம் தெரியாமல் அவர்களுக்கு ஏதோ ஒருவகையில் உதவி செய்தவர்கள், நண்பர்கள், உறவினர்கள். அல்லது ஏதோ ஒரு வேலை என்று சொல்லி ஏமாற்றி, ஏஜென்ட்களால் அழைத்துச் செல்லப்பட்டு, செம்மரம் வெட்ட பணிக்கப் பட்டவர்கள். இப்போது ஆந்திரா போலீஸ் தமிழகத்துக்கு வரக்கூடாது என்றும், ஆந்திரா சிறைகளில் உள்ள தமிழர்களை மீட்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளோம். இதில் தமிழக அரசு முழுமூச்சாக இறங்கவில்லையென்றால், இன்னும் ஆயிரக்கணக்கானோர் ஆந்திரா சிறைகளில் அடைபட்டும், அடிபட்டும் சாவதைத் தவிர வேறு வழியில்லை’’ என்றார் புகழேந்தி.

சிக்கினர் ஆந்திரக் கொள்ளையர்!

ஒரு மாநில போலீஸ், மற்றொரு மாநில எல்லைக்குள் நுழைந்து ஒருவரைக் கைது செய்ய வேண்டுமென்றால், ‘ஒரிஜினல் வாரன்ட்’ கண்டிப்பாக இருக்க வேண்டும்; போலீஸ் யூனிஃபார்மில்தான் வர வேண்டும்; சம்பந்தப்பட்ட பகுதி போலீஸ் ஸ்டேஷனுக்குத் தகவல் கொடுக்க வேண்டும். ஆனால், ஆந்திரா போலீஸ் இவற்றில் எதையும் பின்பற்றுவதில்லை. நம்மிடம் பேசிய சென்னை போலீஸ் உயர் அதிகாரி ஒருவர், ‘‘கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் எங்களிடம் வந்து, ‘கடத்தல்’ புகார் கொடுக்கின்றனர். நாங்கள் விசாரித்தால், ஆந்திரா போலீஸ் முறையாக பதில் சொல்வதே இல்லை. சில நாள்களுக்கு முன்பு இப்படி ஒரு புகார் வந்தபோது, கடத்தப்பட்டதாகச் சொன்னவரின் போனுக்கு நாங்கள் பேசினோம். ரிங் போனது. போனை எடுத்தவர்கள் தெலுங்கில் பேசினார்கள். ஆனால், நான் போலீஸ் அதிகாரி என்று விவரம் சொன்னதும், போனைத் துண்டித்துவிட்டனர். அதன்பிறகு, பலமுறை தொடர்புகொண்டும் பேச முடியவில்லை.

சில மாதங்களுக்கு முன்பு செங்குன்றம் பகுதியிலிருந்து எங்களுக்கு ஒரு போன் அழைப்பு வந்தது. ‘கையில் துப்பாக்கியுடன் வந்து ஒருவரைக் கடத்த முயன்ற ஆந்திரா கொள்ளைக்காரர்களைப் பிடித்து வைத்துள்ளோம்’ என அந்தப் பகுதி மக்கள் சொன்னார்கள். அவர்களை தர்ம அடி கொடுத்துப் பிடித்து வைத்திருந்தனர். நாங்கள் போய் விசாரித்தபோது, வந்த அனைவரும் ஆந்திரா போலீஸ் என்பது தெரியவந்தது. அப்படி வந்து சர்ச்சையான பிறகும்கூட, இங்கு கைது செய்யப்பட்டவர்களை ‘ஆந்திராவில் கைது செய்ததாக’வே அவர்கள் வழக்குப் பதிவு செய்தனர். அந்தக் கைதிகள் இன்னும் கடப்பா சிறையில்தான் இருக்கின்றனர்’’ என்றார்.

செம்மர சோகம்... ஊர் திரும்பாத கூலிகள்... தலைமறைவான ஏஜென்ட்கள்!

சிறைக் கைதிகளுக்கு சில அடிப்படை உரிமைகள் உண்டு. ஆந்திர நீதித்துறை, அங்கு சிறைகளில் உள்ள தமிழர்களுக்கு அந்த அடிப்படை உரிமைகளைப் பெற்றுத் தர மறுக்கிறது. அதற்காக, தமிழக வழக்கறிஞர்கள் புருஷோத்தமன், மோகனகிருஷ்ணன், புகழேந்தி உள்ளிட்டவர்கள் பல மனுக்களைத் தாக்கல் செய்தும் எந்த முன்னேற்றமும் இல்லை. ‘‘செம்மர விவகாரத்தில் கைதாகும் ஆந்திர மாநிலக் கைதிகளுக்கு சலுகைகள் கொடுக்கப்படுகின்றன. அவர்களுக்குக் கைவிலங்குகள் போடப்படுவதில்லை. ஜாமீனில் வரக்கூடிய பிரிவுகளில்தான் பெரும்பாலும் கைது செய்யப்படுகின்றனர்’’ என்கிறார் வழக்கறிஞர் புகழேந்தி.

‘‘செம்மரம், ஆந்திராவின் மதிப்புக்குரிய சொத்து. அதை அவர்கள் காப்பாற்ற வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், இதில் மூளையாக செயல்படும் மனிதர்களை விட்டுவிட்டு, கூலிகளாகப் போகிறவர்களை மட்டும் வதைப்பது நியாயமா? சம்பந்தமே இல்லாமல் அவர்களின் உறவுகளையும் வளைப்பது சரியா? ‘வீரப்பன் வேட்டை’ என்ற பெயரில் அப்பாவி மலைவாசிகளுக்கு நேர்ந்ததற்குக் கொஞ்சமும் குறைவில்லாத கொடூரம், ‘செம்மரக் கடத்தல்காரர்கள் வேட்டை’ என்ற பெயரில் தமிழர்களுக்கு நிகழ்ந்துகொண்டிருக்கிறது.

செம்மர சோகம்... ஊர் திரும்பாத கூலிகள்... தலைமறைவான ஏஜென்ட்கள்!

தமிழக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அடங்கிய குழுவை அமைத்து, ஆந்திரா சிறைகளில் உள்ள தமிழ்நாட்டுக் கைதிகளைச் சந்திக்க வேண்டும். 3,000 கைதிகளில் வெறும் 25 சதவிகிதம் பேர் மட்டும்தான் செம்மரக் கடத்தலில் நேரடியாகத் தொடர்புடையவர்கள். அவர்கள் அங்கு அனுபவித்துள்ள தண்டனைக் காலத்தைக் கணக்கிலெடுத்து, அனைவரையும் விடுதலை செய்ய தமிழக அரசு முயற்சி எடுக்க வேண்டும்.  ஆந்திரா போலீஸ் தமிழகத்துக்குள் வந்து சட்டவிரோதமாகக் கைது செய்வதை தடுக்க வேண்டும். கைது என்ற பெயரில் கடத்தலில் ஈடுபடும் ஆந்திரா போலீஸார்மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். ஆந்திரா போலீஸ் நடத்திய காட்டுமிராண்டித்தனம் பற்றி, தேசிய மனித உரிமை ஆணையம் விசாரிக்க வேண்டும்’’ என்கிறார் புகழேந்தி.

நெஞ்சம் பதறுகிறது!

- ஜோ.ஸ்டாலின்

இப்போது கடப்பா!

செம்மர சோகம்... ஊர் திரும்பாத கூலிகள்... தலைமறைவான ஏஜென்ட்கள்!

திருப்பதியை அடுத்த சேஷாசலம் வனப்பகுதியில் போலீஸ் கெடுபிடி அதிகமானதைத் தொடர்ந்து, கடத்தல்காரர்களின் பார்வை இப்போது கடப்பாவின் பாலகொண்டா மலைப்பகுதியில் பதிந்துள்ளது. இந்தக் காடுகளில் இருக்கும் மரங்களில் 70 சதவிகிதம் செம்மரங்கள்தான். இங்குதான் இப்போது மரங்களை வெட்டுகிறார்கள். கடத்தல் மரங்கள் வெளிநாடுகளுக்குச் செல்லும் வழியையும் மாற்றிவிட்டார்கள். முன்பு ஆந்திராவிலிருந்து நேராக சென்னைக்கு செம்மரங்கள் வரும். இந்த வழிகள் எல்லாவற்றிலும் கண்காணிப்பு தீவிரமானதால், அனந்தப்பூர் வழியாக பெங்களூரு கொண்டுசென்று, அங்கிருந்து சுலபமாக சென்னை துறைமுகத்துக்குக் கொண்டுவருகிறார்கள். சில சமயங்களில் தூத்துக்குடி துறைமுகத்துக்கும் போகின்றன. துறைமுகத்தில் கொண்டுவந்து கொடுத்தால், ஒரு டன் செம்மரத்துக்கு 70 லட்சம் ரூபாய் வரை கடத்தல்காரர்களுக்குக் கிடைக்கும். வெளிநாடுகளுக்குப் போனதும் அதன் மதிப்பு பல கோடி ஆகிவிடுகிறது.

சிக்கிய சீனாக்காரர்!

செ
ம்மரக் கடத்தல் நெட்வொர்க் இந்தியா முழுக்க விரிந்திருக்கிறது என்பதை ஜெய்ப்பூரில் கைது செய்யப்பட்ட அசோக்குமார் அகர்வால் என்ற பொம்மை வியாபாரி உணர்த்தினார். ஆந்திராவிலிருந்து கடத்திவரப்படும் செம்மரங்களை அழகிய பொம்மைகளாகச் செய்து சீனாவுக்கும் ஜப்பானுக்கும் ஏற்றுமதி செய்துவந்தார் இவர். அங்கெல்லாம் கோடீஸ்வரர்களின் வீடுகளில் இந்த பொம்மை இருப்பதை அந்தஸ்தின் அடையாளமாக நினைக்கிறார்களாம். ஆந்திர போலீஸ் அகர்வாலைக் கைது செய்தபோது, அவரின் குடோனில் நான்கு கோடி ரூபாய் மதிப்புள்ள செம்மரங்கள் இருந்தன.

சமீபத்தில் ரேணிகுண்டா அருகே ஜாங் ஜியான்லின் என்ற சீன நாட்டுக்காரரை ஆந்திர போலீஸ் கைது செய்தது. இவர், இறால் ஏற்றுமதியாளர் என்ற போர்வையில் பெங்களூரில் தங்கி செம்மரக் கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளார். இதுவரை சீனா, நேபாளம் போன்ற நாடுகளைச் சேர்ந்த 26 பேர் பிடிபட்டுள்ளனர். சர்வதேசக் கடத்தல்காரர்கள் நேரடியாகவே இங்கு வந்து பிசினஸ் செய்யும் அளவுக்கு, செம்மரக் கடத்தலில் கோடிகளில் பணம் கொட்டுகிறது.

விரட்டி விரட்டி வசூல் வேட்டை!

மிழகத்தைச் சேர்ந்த சில தொழிலதிபர்களை மிரட்ட, ஆந்திர போலீஸ் செம்மரக்கட்டைகளைத் தயாராக தங்களின் வாகனத்தில் வைத்து சுற்றிக்கொண்டிருப்பது தனிக்கதை. சென்னை திருவான்மியூரைச் சேர்ந்த ஒரு தொழிலதிபரை, செம்மரக் கடத்தலில் தொடர்புடையவர் என்று பிடித்தார்கள். விசாரணையில் அவருக்குத் தொடர்பில்லை எனத் தெரியவந்தது. ஆனால், அவரை விடுவதற்கும் அவர்களுக்கு விருப்பம் இல்லை. அதனால், அவரைவிட்டே அவரின் உறவினர்களிடம் பேசி அவருடைய காரை எடுத்துவரச் செய்தனர். அந்தக் காரிலேயே தொழிலதிபரை ஆந்திராவுக்கு அழைத்துச் சென்றனர். ஆந்திரா எல்லையைத் தொட்டதும், சில செம்மரக்கட்டைகளைத் தொழிலதிபரின் காரில் வைத்துள்ளனர். ‘‘இப்போது நாங்கள் உன்னை செம்மரம் கடத்தியபோது கைது செய்துள்ளோம். நாங்கள் கேட்கும் தொகையைக் கொடுத்தால் விட்டுவிடுவோம். இல்லையென்றால் நீ நெல்லூர் சிறைக்குள் கிடந்து சாக வேண்டியதுதான்’’ என்று மிரட்டியுள்ளனர். அவர்கள் கேட்ட பணத்தைக் கொடுத்துவிட்டு ‘தப்பித்தால் போதும்’ என்று அவர் வந்துவிட்டார். ஆனால், அவருடைய கார் கிடைக்கவில்லை.

இதுபோல், சிலரைப் பிடித்து விசாரிக்கின்றனர். அவர்களிடம் செம்மரம் பற்றி ஒரு தகவலும் தேறவில்லை என்று தெரிந்தால், எவ்வளவு பணம் கறக்க முடியுமோ அவ்வளவு கறந்துவிட்டு அவர்களை அனுப்பிவிடுகின்றனர்.