Published:Updated:

`ஐந்தே நிமிஷம்... மொத்த மேட்ச்சும் க்ளோஸ்!’ - தமிழ்த் தலைவாஸுக்கு என்ன ஆச்சு?! #ProKabaddi

`ஐந்தே நிமிஷம்... மொத்த மேட்ச்சும் க்ளோஸ்!’ - தமிழ்த் தலைவாஸுக்கு என்ன ஆச்சு?! #ProKabaddi
`ஐந்தே நிமிஷம்... மொத்த மேட்ச்சும் க்ளோஸ்!’ - தமிழ்த் தலைவாஸுக்கு என்ன ஆச்சு?! #ProKabaddi

 தெலுங்கு டைட்டன்ஸ் கேப்டன் விஷால் பரத்வாஜ் பட்டையைக் கிளப்ப, ரெய்டிங் மிஷின் ராகுல் சௌத்ரி அதகளம் செய்ய, ப்ரோ கபடி (Pro Kabaddi) தொடரின் 3 வது நாளில் மீண்டும் ஒரு தோல்வியைச் சந்தித்து ரசிகர்களை ஏமாற்றியது தமிழ்த் தலைவாஸ்.

நேற்று நடைபெற்ற தெலுங்கு டைட்டன்ஸ், தமிழ்த் தலைவாஸ் அணிகளுக்கு எதிரான போட்டியில் முதல் 10 நிமிடங்கள் பரபரப்பாக இருந்தது. தமிழ்த் தலைவாஸ் அணி சார்பில் முதலில் ரெய்டுக்குச் சென்ற `empty raid specialist', `ஸ்கார்பியன் கிக்', `ஜஸ்வீர் சிங்' empty ரெய்டுக்குப் பிள்ளையார் சுழி போட்டார். மறுபுறம் தெலுங்கு டைட்டன்ஸ் அணியில் சௌத்ரி சூப்பர் ஓப்பனிங் கொடுத்தார். ஆட்டத்தின்  4வது நிமிடத்திலேயே தமிழ்த் தலைவாஸ் டிஃபன்ஸில் சொதப்பியது தெரிந்தது. கார்னர் பிளேயர் மஞ்சித் சில்லரும் ஜஸ்வீரும் விட்ட இடைவேளையில் தப்பித்த ஐடியாலஜியில் ராகுலின் வேகம் புரிந்தது. இருந்தும் 8-8 என ஆட்டத்தில் அனல் பறந்தது.

இதன் பிறகுதான் தெலுங்கு டைட்டன்ஸ் டிபண்டர் விகாஸ் பரத்வாஜ் விஸ்வரூபம் எடுத்தார். முதல் பாதி ஆட்டம் அப்படியே மாறியது. தெலுங்கு டைட்டன்ஸ் அணியின் கார்னர் யூனிட் மிக அருமையாகச் செயல்பட்டது. பரத்வாஜ் உடன் இரானைச் சேர்ந்த அபோசூர் மிகானியும் ஆல்ரவுண்டர் மக்சுட்லூ ஒருசேர டேக்கிலில் ஈட்டியாகப் பாய்ந்தனர். இதில் மக்சுட்லோவின் டபுள் ஆங்கில் ஹோல்டில் அஜய் தாகூரும், அதுலும் மாட்டினர்.

தமிழ்த் தலைவாஸ் ரெய்டரை தங்கள் டிஃபண்டர் ஒருவர் பிடித்துவிட்டால், சற்றும் யோசிக்காமல் ரெய்டரை கூட்டாக அமுக்கி வெளியே தள்ளுவதில் ஸ்மார்ட்டாகச் செயல்பட்டனர் தெலுங்கு டைட்டன்ஸ் டிபண்டர்கள். இது ஒரு வகையான ரிஸ்க்தான். ரெய்டர் பிடிபட்டால் ஒரு பாயின்ட்... இல்லையேல் 4 புள்ளிகள் வரை இழக்க நேரிடும். ஆனால், தமிழ்த் தலைவாஸ் அணியின் டிபண்டிங் யூனிட் அவ்வளவு சுறுசுறுப்பாக இல்லை. இதனால் அஜய் தாகூர், அதுல், ஜஸ்வீர் என ரெய்டிங் யூனிட் வெளியேற அடுத்த 5 நிமிடங்களுக்குள் தமிழ்த் தலைவாஸ் ஆல் அவுட் ஆனது. முதல்பாதியின் முடிவில் 17-11 என 6 புள்ளிகள் பின்தங்கியது தமிழ்த் தலைவாஸ். 

தமிழ்த் தலைவாஸ் முதல் பாதியில் எப்போதும் பதுங்கி இரண்டாம் பாதியில் சீறுவார்கள். அதே யுக்தி இந்த ஆட்டத்திலும் தொடர்ந்தது. ராகுல் சவுத்ரி, நிலேஷ் சாலுங்கி என மஞ்சீத் சில்லரின் டேக்கிளில் வரிசையாகச் சிக்கினர். மஞ்சீத்தின் டபுள் ஆங்கில் பிடியிலும் அமித் ஹூடாவின் ஈட்டி பிடியிலும் தெலுங்கு டைட்டன்ஸ் 2 முறை ஆல் அவுட் ஆனது. இருந்தும் விகாஸ் பரத்வாஜ் டிபண்டிங்கால் 5 புள்ளிகள் இடைவெளி அப்படியே தொடர்ந்தது. விஷாலின் சோலோ டேக்கிலில் ஜஸ்வீர் சிங் திக்குமுக்காடி அவுட் ஆனார். கடைசி நிமிடம் இருக்கும் போது கிடைத்த அருமையான சூப்பர் டேக்கிலில் 2 புள்ளிகளை எடுத்தாலும் 28-33 என மீண்டும் தோல்வியடைந்தது. தமிழ்த் தலைவாஸைப் பொறுத்தவரை அஜய் தாகூர் 9 பாயின்ட் அமித் ஹூடா `ஹை 5' எடுத்தும் முந்தைய மேட்சைப் போல் போனஸ் பாயின்ட் அதிகமாக எடுக்காமல் போனது தோல்வியின் முக்கியக் காரணமாக அமைந்தது. 

முன்னதாக நடைபெற்ற ஆட்டத்தில் தபாங் டெல்லி குஜராத் பார்ட்சூன் ஜெயன்ட்ஸ் மோதின. ஆட்டத்தின் முதல் நிமிடத்திலிருந்தே இரு அணி வீரர்களும் டேக்கிலில் தெறிக்க விட்டனர். தபாங் டெல்லி சார்பாக நவீன்குமார் டோ டச்சில் முதல் புள்ளியை எடுக்க, குஜராத் அணி சார்பில் தமிழகத்தைச் சேர்ந்த பிரபஞ்சன் டுப்கி முறையில் இரு புள்ளிகளை எடுத்து அட்டகாசப்படுத்தினார். இதேபோல் முந்தைய சீசன் ஹீரோ சச்சினை ரவீந்தர் பஹல் அசால்ட்டாக வெளியேற்ற, இந்தப் பக்கம் சுனில் குமார் டேக்கிளில் தபாங் டெல்லியைச் சுளுக்கெடுத்தார். இதனால் அரங்கமே அதிர்ந்தது.

முதல் பாதியின் முடிவில் 17-12 என குஜராத் முன்னிலையில் இருந்தது. பின்னர் சுதாரித்த டெல்லி அணி டஃப் குடுத்தனர். டெல்லி ரெய்டர் சந்திரன் ரஞ்சித் `ஸ்கார்ப்பியன் கிக்’ என மிரட்ட, டெல்லி அணியின் எல்லா வீரர்களும் டேக்கிளில் புள்ளிகள் எடுக்க, ஆட்டத்தில் இன்னும் வேகம் கூடியது. கடைசி 5 நிமிடங்களில் ஆட்டம் மாறியது. ரோஹித் பலியானின் சூப்பரான `டோ டச்’சில் டெல்லி முன்னிலை பெற்றது. இருந்தும் டிபண்டர் ரவீந்தர் பஹல் அவுட் ஆக, இறுதியில் 32-32 என ஆட்டம் டிராவில் முடிந்தது.