Published:Updated:

திருட வேண்டிய தேவை இல்லை!

திருட வேண்டிய தேவை இல்லை!

திருட வேண்டிய தேவை இல்லை!

திருட வேண்டிய தேவை இல்லை!

Published:Updated:

ந்திய நாடகக் கலைஞர்களின் ஆதர்ச ஆளுமை, பாதல் சர்கார். அரங்கங்களில் இருந்த நாடகங்களைத் தெருவுக்குக் கொண்டுவந்தவர். 'வீதி நாடகம்’ என்னும் நாடக முறையை இந்தியாவுக்கு முதன்முதலில் அறிமுகப்படுத்தியவர். பார்வையாளர்களையும் பங்கேற்பாளராக மாற்றும் வல்லமை வாய்ந்தவை இவருடைய நாடகங்கள்.

திருட வேண்டிய தேவை இல்லை!
##~##

திறந்தவெளியில் இயங்கும் வீதி நாடகங்களை நடத்துவதற்காக, பாதல் உருவாக்கிய நாடகக் குழு 'சதாப்தி’. பாதல் சர்கார் இறந்துவிட்டாலும், அவருடைய நாடகங்களையும் சமூகக் கருத்துக்களையும் சுடர்  அணையாமல் சுமந்துசெல்கிறது சதாப்தி. சென்னை வந்திருந்த சதாப்தி குழுவினரை, புதுச்சேரி முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் புதுவைக்கு அழைத்து வந்தது. ஒரு மகத்தான கலைஞனின் நாடகக் குழு நடத்தும் நாடகத்துக்கு, நாமும் சென்றிருந்தோம்.

கடற்கரைச் சாலையில் நடத்தப்பட இருந்த நிகழ்ச்சி, எதிர்பாராத மழையின் காரணமாக, பெத்தி செமினார் பள்ளி வளாகத்துக்கு மாற்றப்பட்டது. இருந்தபோதும் கடைசி நேர இடமாற்றத்தைத் தெரிந்துகொண்ட பார்வையாளர்கள், அங்கேயும் திரண்டுவிட்டனர். 'சாரூபதி’ (பிக்னிக்),  'ஹட்டமாலார் ஓபரெ’ (குழப்ப உலகுக்கு அப்பால்) என்ற இரு நாடகங்கள் நடத்திக் காட்டப்பட்டன.

'சாரூபதி’ நாடகம் போரைப் பற்றியும், போர்ச் சூழல் எதனால் உருவாகிறது என்பதைப் பற்றியும் பேசுகிறது. நாடகத்தின் துவக்கத்தில் போர் நடக்கும் மைதானத்தில் சற்றுநேரம் அமைதி நிலவுகிறது. அந்த அசாதாரணச் சூழலில் ராணுவ வீரன் ஒருவன் ஸ்வெட்டர் பின்னிக்கொண்டு இருக்கிறான். திடீர் என்று துப்பாக்கிகள் முழங்கும் சத்தம் கேட்கிறது, உடனே பதற்றம் அடைந்த  வீரன், துப்பாக்கியைத் தூக்கிக்கொண்டு ஓடுகிறான். மீண்டும் அமைதி திரும்புகிறது.

திருட வேண்டிய தேவை இல்லை!

அந்தச் சமயத்தில் வீரனின் பெற்றோர் அந்த இடத்துக்குச் சுற்றுலா வருகிறார்கள். வீரனின் தந்தையும் போர் வீரனாக இருந்தவர்தான். அவருடைய காலத்தில் இருந்த போர் முறைகளைப் பற்றிப் பேசத் தொடங்குகிறார் தந்தை. ''அப்போது பால்கனியில் இருந்து உன் தாய் வேடிக்கை பார்ப்பாள். போரில் யார் வெற்றி பெறுவார்கள் என்று தோழிகளுடன் பந்தயம் கட்டுவாள்'' என்று சிரித்தபடி கூறுகிறார். மூன்று பேரும் பேசிக்கொண்டு இருக்கையில், இன்னொரு நலிந்த குடும்பத்தைச் சேர்ந்த ராணுவ வீரன் வருகிறான். அவனை கவனிக்காமலேயே இவர்கள் உரையாடல் நீள்கிறது. திடீர் என்று மீண் டும் போர் ஆரம்பமாக, இரு ராணுவ வீரர்களுக்கும் போரில் கலந்துகொள்ளுமாறு மேலதிகாரியிடம் இருந்து ஆணை வருகிறது. இரண்டு வீரர்களுடன் வீரனின் பெற்றோரும் போரில் மரணம் அடைகிறார்கள். இனிமேல் அங்கு போர் புரிய யாருமே இல்லை. இப்போது அங்கே சாவதற்கு யாருமே இல்லை. ஆனாலும் ராணுவ மேலதிகாரிகள் இன்னொரு இடத்தில் இன்னொரு போருக்குத் தயாராவதாக நாடகம் முடிகிறது.

போர் யாருக்கு இடையில் நிகழ்ந்தாலும் பாதிக்கப்படுவதும் பலியாவதும் அடித்தட்டு மக்கள்தான் என்பதை அழுத்தமாகச் சொல்கிறது நாடகம். மேலும் ஆளும் வர்க்கத்துக்குப் போர் என்பதே பிக்னிக்தான் என்பதையும் சொல்லாமல் சொல்கிறது நாடகமும் தலைப்பும்.

மற்றொரு நாடகமான 'ஹட்டமாலார் ஓபரெ’ பணமே இல்லாத ஒரு லட்சிய உலகத்தைப்

திருட வேண்டிய தேவை இல்லை!

பற்றி நகைச்சுவையாகச் சொல்கிறது. கேனாரம், பெச்சாராம் என்ற இரண்டு திருடர்கள் போலீஸ் காவலில் இருந்து தப்பிச்செல்லும்போது, வழியில் ஓர் ஆற்றுக்குள் விழுந்துவிடுகிறார்கள். அதில் இருந்து நீந்தித் தப்பிக்க முயற்சிக்கும்போது, வேறு ஒரு மாய உலகுக்கு வந்துவிடுகிறார்கள். அங்கு அனைத்துப் பொருள்களும் கடைகளில் இலவசமாகக் கிடைக்கின்றன. இவர்கள் இருவரும் ஒரு ஹோட்டலுக்குச் சாப்பிடச் செல்கிறார்கள். சாப்பிட்டவுடன் சிரித்து வழியனுப்புகிறார்களே தவிர, யாரும் பணம் கேட்கவில்லை என்றதும் இவர்களுக்குப் பயங்கர ஆச்சர்யம். சுற்றும்முற்றும் பார்த்தால் அங்கு இருந்த எந்த வீடுகளுக்கும் கடைகளுக்கும் பூட்டுகளும் இல்லை; பாதுகாவலர்களும் இல்லை. இந்தக் காட்சிகளைப் பார்க்கப் பார்க்க இரண்டு திருடர்களும் குழப்பம் அடைகிறார்கள். இவர்களுடைய வித்தியாசமான செயல்களைப் பார்த்து, அந்த நகரத்தில் இருப்பவர்களும் குழப்பம் அடைகிறார்கள். திருடர்களில் ஒருவன் ஒரு வீட்டைப் பின்பக்கமாக உடைத்து திருட முயல, அங்கு வந்த ஒருவர் ''வீடு திறந்துதானே இருக்கிறது. ஏன் இப்படி உள்ளே போக முயற்சி செய்கிறீர்கள்?'' என்று கேட்கிறார். அவருக்குத் 'திருட்டு என்றால் என்ன?’ என்று திருடன் கற்றுக்கொடுப்பதோடு நாடகம் முடிகிறது. 'எல்லோருக்கும் பொதுவாக எல்லாமும் இருக்கும்போது, திருட வேண்டிய தேவையே இல்லை’ என்பதைப் பகடியுடன் விளக்குகிறது நாடகம்.

முதலாவது நாடகத்தில் வரும் போர் விமானங்களும் சரி, இரண்டாவது நாடகத்தில் வரும் ஆறு, மரம், வீடுகள் போன்ற அனைத்துமே நாடகத்தில் பங்குபெறும் கலைஞர்களாலேயே உருவாக்கப்பெற்றது. வீட்டுக்குத் திரும்பும்போது மாற்று நாடகங்களைப் பார்த்த மனநிறைவு நிரம்பியிருந்தது!

திருட வேண்டிய தேவை இல்லை!
  • பாதல் சர்கார் இந்திராகாந்தி கொண்டுவந்த எமெர்ஜென்ஸிக்கு எதிராகத் தீவிரமாக நாடகங்களை நடத்தியவர்! "
     
  • மேற்கு நாடுகளில், மரபான நாடகங்களுக்கு எதிராக முற்போக்குக் கருத்துகளைப் பேசிய நாடகங்களை 'இரண்டாம் அரங்கு’ என்று அழைத்தனர். ஆனாலும் அவையும் மேடையிலேயே நடைபெற்றதால், தன் வீதி நாடகங்களை 'மூன்றாம் அரங்கு’ என்று அழைத்தார் பாதல்!

-ஜெ.முருகன்
படங்கள்: ஆ.நந்தகுமார்