Published:Updated:

விக்கு விநாயகராமுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது...! மியூசிக் அகாடமி கெளரவம்

விக்கு விநாயகராமுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது...! மியூசிக் அகாடமி கெளரவம்
விக்கு விநாயகராமுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது...! மியூசிக் அகாடமி கெளரவம்

நேற்று (புதனன்று) பொன்மாலைப்பொழுதில் `சிறப்பு வாழ்நாள் சாதனையாளர்' விருது பெற்றார் கடம் மேதை, விக்கு விநாயகராம். மியூசிக் அகாடமி மிக அரிதாக வழங்கும் விருது இது. இதற்கு முன்னால் கமலா லட்சுமி நாராயணன் (பரதநாட்டியம்), லால்குடி ஜெயராமன் (வயலின்) இருவர் மட்டுமே வாழ்நாள் சாதனையாளர்களாக அகாடமியால் அங்கீகரிக்கப்பட்டவர்கள்.

முன்பு, லால்குடிக்கு `சங்கீத கலாநிதி' விருது கொடுக்காமல் விடுபட்டுப்போய்விட்டதை ஈடுசெய்யும் வகையில் அவருக்கு சாதனையாளர் விருது வழங்குவதாகச் சொல்லப்பட்டது. இப்போது, ஏற்கெனவே விக்குவுக்கு `சங்கீத கலா ஆசாரியா' தரப்பட்டுவிட்டதால் `சங்கீத கலாநிதி' பெறும் தகுதியை இழக்கிறார். அதனால் அவருக்கு `சாதனையாளர்' கிரீடம்!

1942-ம் ஆண்டில் திருச்சியில் பிறந்தவர் விநாயகராம். முதலில் இவருக்குச் சூட்டப்பட்ட பெயர் ராமசேஷன். பிறந்த ஒருசில நாளிலேயே இக்கட்டான சூழலில் உள்ளூர் பிள்ளையாருக்குக் குழந்தையைத் தத்துக்கொடுக்க நேரிட்டது. பெயரும் `விநாயகராமன்' என மாறியது. எம்.எஸ்.சுப்புலட்சுமியுடன் ஒருமுறை வெளிநாட்டுக்குப் பயணித்தபோது `விக்கு' என்ற செல்லப் பெயர் இணைந்தது.

தந்தை ஹரிஹர சர்மாதான் இவரின் குரு. சின்னஞ்சிறு வயதிலேயே கடம் இவர் மடியில் உட்கார்ந்துகொண்டது. 1955-ம் ஆண்டு தூத்துக்குடியில் ராமநவமி உற்சவத்தில் அரங்கேற்றம். வாசிப்புத் திறமையால் கிடுகிடுவென வளர்ந்தார். (உருவத்தில் அல்ல... வித்தையில்!) அப்போதைய பிரபலங்களுக்கு உப பக்கவாத்தியமாக கடம் வாசிக்க நிறைய வாய்ப்பு கிடைத்தது.

வயலின் கலைஞர் எல்.சுப்பிரமணியன் அழைக்க, `சக்தி' குழுவில் இணைந்தார். தபலா ஜாகிர் உசேனுடன் சேர்ந்து விக்குவின் கடம் உலகம் சுற்றியது. அமெரிக்காவைச் சேர்ந்த தாளவாத்தியர் மிக்கி ஹார்ட் (Mickey Hart) `பிளானெட் டிரம்' என்ற பெயரில் ஆல்பம் தயாரித்தபோது, உலகளவில் பங்குகொண்ட தாளவாத்தியக் கலைஞர்களுடன் விக்குவும் விரல்களை இணைத்தார். பெருமைமிகு கிராமி விருது இவருக்குக் கிடைத்தது. உலக வரைபடத்தில் முக்கியப் புள்ளியானார்.

காஞ்சி மாமுனிவர் மீது அபரிமிதமான பக்திகொண்டிருப்பவர் விக்கு விநாயகராம். அந்த மகானின் அருள் இன்றி தன் வாழ்க்கையில் ஓர் அணுவும் அசைவதில்லை என்பதில் பரிபூரண நம்பிக்கை இவருக்கு.

இனி விழாவில்...

முதல் முக்கால் மணி நேரத்துக்குத் தாளவாத்தியக் கச்சேரி. மேடையில் நடுநாயகமாக விழா நாயகன். `சதுர் கடம்' என்று அழைக்கப்படும் 4 கடம்களுடன் விநாயகராம். இட, வலப் பக்கங்களில் அவருடைய சீடர்கள்... மடியில் ஆளுக்கொரு கடம். தவிர, கஞ்சிரா, மோர்சிங், கொன்னக்கோல். பக்கவாட்டில் நின்றபடியே தாளம் போட்ட கடம் கார்த்திக்.

`குரு லய சமர்ப்பணம்' எனத் தலைப்பிட்டு 3 அயிட்டங்கள் வாசித்தார்கள். முத்தாய்ப்பாக `சுப்ரமண்யாய சுவாமிநாதாய சந்திரசேகரேந்திரயாய...' என்று ஒரு சுலோகம். எல்லாமே 9  கடம்கள் வழியே! குறிப்பாக, 4 மண்பானைகளில் மாறி மாறி விக்குவின் கைவிரல்கள் நர்த்தனமாடிய லாகவம், பார்க்கவும் கேட்கவும் கொள்ளை அழகு!

முடிந்ததும், ஒரு குறும்படம் - 10 நிமிடத்துக்கும் குறைவாக. இதில் சிறுவயதில் விக்குவும், ஜாகிர் உசேனும் ஜாலியாகக் கன்னம் தடவிச் சீராடுவதும், `ஐ லவ் யூ விக்கு' என்று ஜாகிர் மகிழ்வதும் ரொம்ப க்யூட்.

நிறைவாக நடந்த விருது வழங்கும் விழாவில் சுரத்து கம்மி. மேடையில் அமர்ந்திருந்த தலைமை விருந்தினர், புல்லாங்குழல் ஹரிபிரசாத் செளராஸ்யாவுக்கு 80 வயது. சிறப்பு விருந்தினர் வயலின் டி.என்.கிருஷ்ணன் 90 வயது பெரியவர். விருது பெற்ற விக்குவுக்கு வயது 76. வரவேற்பு உரையைத் தடுமாற்றத்துடன் வழங்கிய அகாடமி தலைவர் என்.முரளியின் வயது தெரியவில்லை. எதுவாக இருப்பினும் அடுத்த தடவையிலிருந்து தனது உரையை இவர் எழுதி எடுத்துவந்து வாசிப்பது நலம்.

விக்குவின் ஏற்புரையில் மட்டுமே சுவை, மணம், குணம் அதிகம்!

ஒருமுறை செளராஸ்யாவுடன் கச்சேரிக்காக ஜெர்மனி சென்றாராம் விநாயகராம். ஃப்ராங்பெர்ட்டில் நிகழ்ச்சி தொடங்குவதற்கு சற்று நேரம் முன்பாக கடம் உடைந்துவிட்டது. செய்வதறியாமல் விக்கு விழிக்க, பானையை ஒட்டுவதற்குத் தேவையானவற்றை அவரிடம் கொடுத்துவிட்டு, கச்சேரியை ஆரம்பித்துவிட்டார் ஹரிபிரசாத். ஒரு மணி நேரத்துக்கு ஆலாபனை மட்டுமே செய்தார் அவர். அதற்குள் விநாயகராமும் கடத்தை ஒட்டவைத்து, காயவைத்து ரெடியாகிவிட கச்சேரி தொடர்ந்ததாம்.

* விழாவுக்கு, அகாடமி அரங்கம் நிரம்பாதது ஆச்சர்யம்!

* விரல்விட்டு எண்ணிவிடக்கூடிய அளவிலேயே இசைக் கலைஞர்கள் வந்திருந்தது வியப்பு. அப்படி என்னதான் பிஸியோ!

* வழக்கமாக மியூசிக் அகாடமி நடத்தும் மற்ற விழாக்களுடன் ஒப்பிட்டால், விநாயகராம் விழா 96 மார்க் வாங்காது என்பது மட்டுமல்லாமல், பாஸ் மார்க் வாங்குவதே சிரமம்!