Published:Updated:

அமேசான் பிரைம் முதல் ஹாட் ஸ்டார் வரை... ஸ்ட்ரீமிங் தளங்களுக்கும் வருகிறதா சென்சார்?

அமேசான் பிரைம் முதல் ஹாட் ஸ்டார் வரை... ஸ்ட்ரீமிங் தளங்களுக்கும் வருகிறதா சென்சார்?

வாடிக்கையாளர்கள் இந்தத் தளங்களுக்குப் பணம் கட்டியிருப்பதே அன்றாடம் டிவியில் வரும் சராசரி பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளைப் போல இல்லாமல், எந்த ஒரு கட்டுப்பாடுமின்றி எடுக்கப்படும் நிகழ்ச்சிகளைப் பார்ப்பதற்குத்தான்.

அமேசான் பிரைம் முதல் ஹாட் ஸ்டார் வரை... ஸ்ட்ரீமிங் தளங்களுக்கும் வருகிறதா சென்சார்?

வாடிக்கையாளர்கள் இந்தத் தளங்களுக்குப் பணம் கட்டியிருப்பதே அன்றாடம் டிவியில் வரும் சராசரி பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளைப் போல இல்லாமல், எந்த ஒரு கட்டுப்பாடுமின்றி எடுக்கப்படும் நிகழ்ச்சிகளைப் பார்ப்பதற்குத்தான்.

Published:Updated:
அமேசான் பிரைம் முதல் ஹாட் ஸ்டார் வரை... ஸ்ட்ரீமிங் தளங்களுக்கும் வருகிறதா சென்சார்?

மீபத்தில் மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் அமர்வு ஹாட்ஸ்டார், நெட்ஃப்ளிக்ஸ் போன்ற முக்கிய ஸ்ட்ரீமிங் தளங்களில் இருக்கும் ஆபாசம், தவறான வார்த்தைகள் பயன்பாடு, வன்முறை போன்ற விஷயங்களுக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும், இதைத் தகவல் தொழில்நுட்ப அமைச்சரகத்தின் பார்வைக்கு எடுத்துச்சென்று தக்க நடவடிக்கை எடுக்குமாறும் உத்தரவிட்டது.

திவ்யா கோன்தியா என்னும் வழக்கறிஞர் தொடுத்த பொதுநல வழக்கில், இந்த ஸ்ட்ரீமிங் தள நிகழ்ச்சிகளில் இருக்கும் வரம்பு மீறல்களைத் தடுக்க ஏதேனும் வழிமுறை செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். இந்தப் புதிய ட்ரெண்டானது இந்தியக் கலாசாரத்தைச் சீர்குலைக்கிறது என்றும் தெரிவித்தார். மேலும், சிலநேரங்களில் மதரீதியாகப் புண்படுத்தும் விதமாகவும் இந்த ஸ்ட்ரீமிங் நிகழ்ச்சிகள் இருக்கின்றன; டிவி, செய்தி ஊடகங்கள், படங்கள் போன்றவற்றுக்கு இருக்கும் கண்காணிப்பு ஆணையங்கள் இந்த வெப் சீரிஸ் போன்றவற்றுக்கு இல்லாததுதான் இந்த வரம்பு மீறலுக்குக் காரணம் எனவும் அந்தப் பொது நல வழக்கில் குறிப்பிடப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பூஷன் தர்மாதிகரி மற்றும் நீதிபதி முரளிதர் கிரட்கர், கமிட்டி ஒன்றை அமைத்து ஆன்லைனில் ஒரு நிகழ்ச்சியோ, விளம்பரமோ வெளியாகும் முன் கண்காணிக்க வேண்டும் எனத் தகவல் தொழில்நுட்ப அமைச்சரகத்துக்கு  உத்தரவிட்டனர். உள்நாட்டு நிகழ்ச்சிகள் என்றில்லாமல் வெளிநாட்டு நிகழ்ச்சிகளும் இந்த கமிட்டியின் பார்வைக்குள் வராமல் ஸ்ட்ரீமிங் தளங்களில் வெளியாகக் கூடாது என்றும் Indecent Representation of Women Prohibition Act 1986 மற்றும் பிற சட்டங்களை மீறும் தளங்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் நீதிமன்றம் அமைச்சரகத்துக்கு உத்தரவிட்டுள்ளது. 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நெட்ஃப்ளிக்ஸ் போன்ற தளங்கள் இதை ஏற்றுக்கொள்ளாது என்றே எதிர்பார்க்கலாம். ஏனெனில் அவர்களது வாடிக்கையாளர்கள் இந்தத் தளங்களுக்குப் பணம் கட்டியிருப்பதே அன்றாடம் டிவியில் வரும் சராசரி பொழுதுபோக்கு போல இல்லாமல் எந்த ஒரு கட்டுப்பாடுமின்றி எடுக்கப்படும் நிகழ்ச்சிகளைப் பார்ப்பதற்குத்தான். இதற்கும் சென்சார் போன்ற ஓர் அமைப்பு வந்துவிட்டால் பாதிக்கும் மேலான வாடிக்கையாளர்கள் ஏமாற்றமடைந்துவிடுவர்; பலரும் வெளியே வரவும் வாய்ப்பு உண்டு. கேம் ஆஃப் த்ரோன்ஸ் போன்ற அமெரிக்க நிகழ்ச்சிகளை வைத்துத்தான் பலரையும் கவர முயற்சி செய்துவருகிறது ஹாட்ஸ்டார். தற்போது கூறியிருப்பதைப் போல் வெளிநாட்டு நிகழ்ச்சிகளையும் சென்சார் செய்யவேண்டியிருந்தால் நாங்கள் டோரன்ட்டிலேயே பார்த்துக்கொள்கிறோம் என்று முடிவெடுத்துவிடுவர்.

எனவே, சினிமாக்களுக்கு இருப்பதைப் போன்ற கட்டுப்பாடுகள் வருமானால் கண்டிப்பாக இந்த ஸ்ட்ரீமிங் தளங்கள் எதிர்த்துப் போராடவே செய்யும். ஏற்கெனவே இந்தியாவில் சென்சார் போர்டுற்கும் சினிமா இயக்குநர்களுக்குமே நிறைய நாள்களாகப் பெரும் கருத்து வேறுபாடு இருந்துவருகிறது. தேவையே இல்லாமல் தங்கள் படங்களில் இருக்கும் காட்சிகளை நீக்குவதாகவும், படம் பார்க்க துளியும் சம்பந்தம் இல்லாத ஆட்களை சென்சார் போர்டு நியமிக்கிறது என்பது சினிமா இயக்குநர்களின் முக்கியக் குற்றச்சாட்டு. அரசியல் தலையீடுகளும் இதில் இல்லாமல் இல்லை.

நெட்ஃப்ளிக்ஸ் இந்தியாவில் தயாரித்த `Sacred Games' மற்றும் `Lust Stories' சென்சாரிடம் சென்றிருந்தால் வெளிவந்தே இருக்காது. அதைத் தாண்டி வந்திருந்தாலும் முக்கியக் காட்சிகள் எதுவும் இருந்திருக்காது. வெளிப்படையாகச் சாதிய மற்றும் மத அரசியலை வெளிப்படையாகப் பேசும் கதாபாத்திரங்கள், கெட்டவார்த்தைகளின்றி ஒரு முழு வாக்கியத்தை முடிக்காத ரவுடிகள், விரலைத் தனியாக துண்டிக்கும் வன்முறைக் காட்சிகள், நிர்வாணக் காட்சிகள் என `Sacred Games' தொடர் இதுவரை இந்தியப் பொழுதுபோக்கு பார்த்திராத விஷயங்களை வைத்திருந்தது. ஆனால், வேண்டுமென்றே வைத்தது போல் அல்லாமல் உண்மையைப் பிரதிபலிக்கும் வகையிலேயே யதார்த்தமாக இவை அமைந்திருந்தன. இவை எல்லாம் வெட்டி எடுக்கப்பட்டால் அந்தத் தொடர் உயிரோட்டமே இல்லாமல் போய்விடும்.

அதே சமயம் எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லாமல் இருந்தால் எதை வேண்டுமானாலும் சொல்லலாம், எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம் என்ற நிலைவந்துவிடும். இதன்மூலம் தனி நபர் தாக்குதல், ஒரு சமூகத்தையோ மதத்தையோ இழிவுப்படுத்துவது என எல்லைமீற வாய்ப்புகள் உண்டு. உயர்நீதிமன்றம் இப்படித் தீர்ப்பு அளிப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பே சுயமாக தங்களது நிகழ்ச்சிகளைக் கண்காணித்து வரம்பு மீறல்களைத் தடுக்க வேண்டும் என்று முக்கிய ஸ்ட்ரீமிங் தளங்கள் நடுவே ஓர் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. மேலும், இந்த நிகழ்ச்சிகள் இத்தனை வயதுக்கு மேல் உள்ளவர்கள்தாம் பார்க்க வேண்டும் என ஏற்கெனவே எல்லாத் தளங்களிலும் ரேட்டிங் இருக்கவே செய்கின்றன. குழந்தைகள் பார்க்காமல் இருக்கச் சிறப்பு 'கிட்ஸ் வெர்ஷன்' தளங்களையும் இவை தருகின்றன. ஆனால் பார்க்க வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டால் இதையெல்லாம் எளிதாகக் கடந்து பார்த்துவிடமுடியும். 

கட்டுப்பாடு இல்லாமல் இருப்பதும் நல்லது இல்லையென்றாலும், அதிகக் கட்டுப்பாடு மற்றும் தலையீடுகள் இந்த ஸ்ட்ரீமிங் நிகழ்ச்சிகளுக்கு என்று இருக்கும் தனித்தன்மையைப் பறித்துவிடும். இதைப் புரிந்துகொள்ளும் ஒரு நடுநிலைமையான அமைப்புதான் இதற்கு ஒரே தீர்வாக இருக்க முடியும். ஆனால், அது சரியாக நடப்பதுதான் மிகவும் கடினமான ஒன்று. இதில் உங்களின் கருத்து என்ன?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism