தற்போது உள்ளங்கையிலேயே அனைத்தும் கிடைக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றன ஸ்மார்ட் போன்கள். ஸ்மார்ட் போனில் இயங்கும் வகையில் விவசாயிகளுக்குப் பயன்தரக்கூடிய பல செயலிகளும் சந்தையில் உள்ளன. அவற்றில் இயற்கை வேளாண்மை, தோட்டக்கலை, கால்நடை, வானிலை, வேளாண் காடுகள், சுற்றுச்சூழல் தொடர்பான தகவல்களை அளிக்கக்கூடிய செயலிகள் குறித்துப் பார்ப்போம்.

தென்னை வல்லுநர் அமைப்பு (Coconut Expert System Tamil)
இந்தச்செயலி தென்னை விவசாயிகளுக்கு உதவக்கூடியது. வானிலை அடிப்படையில் தென்னங்கன்றுகளை நடுவதற்கான பருவம் மற்றும் மண் வகைக்கேற்ற ரகங்கள் போன்ற விவரத்தை இச்செயலியின் மூலம் தெரிந்துகொள்ள முடியும். நிலத்தைத் தயார் செய்வதிலிருந்து நடவு, களை மேலாண்மை போன்ற தகவல்களை அனைத்தையும் அறிந்துகொள்ளலாம். பூச்சி மற்றும் நோய் ஆகியவற்றின் தாக்குதலை எளிதாகக் கண்டறியும் வகையில் புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அவற்றைக் கொண்டு நம்முடைய பண்ணையில் உள்ள பிரச்னையைத் தெரிந்துகொண்டு தீர்வுகளை

அறியலாம். தென்னை விவசாயத்துக்குத் தேவையான கருவிகள் குறித்த விவரங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. அறுவடை பின்சார் தொழில்நுட்பம் என்ற பகுதியில் அறுவடை மற்றும் சேமிப்பு முறைகள் குறித்துத் தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் சந்தைப்படுத்துதல் தொடர்பான விவரங்கள், ஏற்றுமதி வாய்ப்புகள் போன்ற தகவல்களையும், இச்செயலி மூலம் அறிந்து கொள்ளலாம். தென்னை விவசாயம் தொடர்பாக அடிக்கடி எழும் சந்தேகங்களுக்கான பொதுவான பதில்களும் தரப்பட்டுள்ளன.
இந்தச் செயலியை http://bit.ly/2tCA6KZ என்ற முகவரி மற்றும் கூகுள் பிளே ஸ்டோர் ஆகியவற்றில் தரவிறக்கம் செய்யலாம்.

தமிழ்நாட்டில் தினசரி சந்தை விலை (Tamilnadu Market Rates - Daily Market rate)
பெரும்பாலான விவசாயிகள் தங்களின் விளை பொருள்களுக்கான அன்றாடச் சந்தை விலை நிலவரங்களைத் தெரிந்து வைத்திருப்பதில்லை. கமிஷன் கடைக்காரர் துண்டுச்சீட்டில் எழுதிக் கொடுக்கும் விலைதான் அவர்களுக்குத் தெரிகிறது. மேலும் விவசாயிகள் தினமும் சந்தைக்குச் செல்வதில்லை. மொத்தமாக வாகனங்களில் அனுப்பிவிட்டு, வாரம் ஒருமுறைதான் சந்தைக்குச் சென்று கணக்கு முடிப்பர். அதனால், அன்றாட விலை நிலவரத்தை அறிந்துகொள்ள வாய்ப்பில்லாமல் போய் விடுகிறது.

இந்நிலையை மாற்றி, தமிழகம் முழுவதும் இருக்கும் முக்கியமான சந்தைகளின் விலை நிலவரங்களை அறிந்துகொள்ள உதவி செய்கிறது இச்செயலி. காய்கறிகள், மலர்கள், பழங்கள், தானியங்கள், எண்ணெய் வகைகள் என அனைத்துப் பொருள்களின் விலையையும் இச்செயலியின் மூலம் தெரிந்து கொள்ளலாம். ஒவ்வொரு விளைபொருளுக்குமான பிரத்யேகச் சந்தைகளின் விலை நிலவரங்களைத் தெரிந்துகொள்ளலாம். இரண்டு, மூன்று மணி நேரத்துக்கு ஒருமுறை விலை நிலவரம் குறித்த விவரங்கள் புதுப்பிக்கப்படுவது இச்செயலியின் சிறப்பம்சம்.
இந்தச் செயலியை http://bit.ly/2GiseAQ என்ற முகவரி மற்றும் கூகுள் பிளே ஸ்டோர் ஆகியவற்றில் தரவிறக்கம் செய்யலாம்.