Published:Updated:

அவமானங்களை வென்று சாதித்த அஞ்சு ஜார்ஜ்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
அவமானங்களை வென்று சாதித்த அஞ்சு ஜார்ஜ்!
அவமானங்களை வென்று சாதித்த அஞ்சு ஜார்ஜ்!

போராட்டம் சிவ.உறுதிமொழி

பிரீமியம் ஸ்டோரி

வீட்டுவாசலைத் தாண்டி வகுப்பறை புகுந்தால்கூடப் பரவாயில்லை. ஆனால், அதையும் தாண்டி மைதானத்துக்குள் அடியெடுத்துவைத்தால் இன்னல்கள் பலவற்றைச் சந்தித்துத்தான் ஆக வேண்டும். நிறம், சாதி, அந்தஸ்து எதுவுமே இதற்கு விதிவிலக்கு இல்லை. அவள் பெண்ணாக இருந்தால் உடல்ரீதியாகவோ, மனரீதியாகவோ எப்படியும் தாக்கப்படுவாள். அவமானங்கள் அவளைத் துரத்தும். ஆனால், சிலர் ஒருபோதும் போராடுவதை நிறுத்த மாட்டார்கள். அஞ்சு பாபி ஜார்ஜ்... அவர்களுள் ஒருவர்.

அவமானங்களை வென்று சாதித்த அஞ்சு ஜார்ஜ்!

உலக தடகள சாம்பியன்ஷிப் - ஒலிம்பிக் தொடருக்கு அடுத்து, ஒவ்வொரு தடகள வீரர் வீராங்கனையும் சாதிக்கத் துடிக்கும் களம். அதில் பங்கேற்பது என்பதே இந்தியர்களுக்குக் குதிரைக் கொம்பு. அப்படிப்பட்ட தொடரில் பதக்கம் வென்ற ஒரே இந்தியர் அஞ்சு ஜார்ஜ். 2003-ம் ஆண்டு பாரீஸில் நடந்த உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற அஞ்சு, அதற்கு முன்பு சந்தித்த சங்கடங்களைப் பற்றிச் சமீபத்தில் பதிவிட்டிருந்தார்.

“நான் 1998-ம் ஆண்டு பாபியிடம் பயிற்சிபெற ஆரம்பித்தேன். 6.59 மீட்டர் தூரம் தாண்டி, 2000-ம் ஆண்டு நடந்த சிட்னி ஒலிம்பிக்குக்கு முதல் இந்திய வீராங்கனையாகத் தகுதி பெற்றேன். அதே ஆண்டில் எனக்கும் பாபிக்கும் திருமணம் நடைபெற்றது. ஆனால், நாங்கள் இருவரும் திருமணத்தைக் கொண்டாடும் மனநிலையில் இல்லை. எங்கள் சிந்தனை முழுவதும் ஒலிம்பிக்கில் சாதனை புரிவதில் இருந்தது. விதி யாரை விட்டது? நாகர்கோவிலில் நடந்த ஒரு போட்டியில் என்னுடைய குதிகால் முட்டியில் காயம் ஏற்பட்டது. ஒலிம்பிக்கைப் பெரிதும் எதிர்பார்த்துக்கொண்டிருந்த எனக்கு இந்தக் காயம் மிகப் பெரிய அதிர்ச்சியை அளித்தது.

பெங்களூரில் மற்ற வீரர்கள் அனைவரும் பெரும் உற்சாகத்தோடு பயிற்சி பெற்றுக் கொண்டிருந்தார்கள். ஒருநாள் அவர்கள் அனைவரும் பயிற்சி பெற்றதை நான் பார்த்துக்கொண்டிருந்தேன். என்னுடைய தலைமை பயிற்சியாளர் என் அருகில் வந்து, ‘நீ இன்னும் வீட்டுக்குச் செல்லாமல் இங்கே ஏன் சுற்றிக்கொண்டு இருக்கிறாய்?’ என்று குத்தலாகக் கேட்டார். நான் அதிர்ந்துபோய்விட்டேன். இந்தியாவிலிருந்து ஒலிம்பிக்குக்குத் தேர்வு செய்யப்பட்ட வெகுசில வீரர்களில் நானும் ஒருத்தி. ஆனால், ஓர் இளம் வீராங்கனையை அவர் அலட்சியமாகக் கேள்வி கேட்ட விதம் என்னை மிகவும் பாதித்தது.

அதற்குப்பிறகு, பாபி என்னிடம், ‘அஞ்சு, நீ யார் என்று களத்தில் காட்டு. பழிவாங்கும் நடவடிக்கையாக இல்லாமல், நீ எவ்வளவு திறமைசாலி என்று இந்த உலகத்துக்கு நீ நிரூபிக்க வேண்டும்’ என்று கூறினார். அதற்குப்பிறகு நாங்கள் பாபியின் சொந்த ஊரான பேராவூருக்குச் சென்றோம். அங்கு தங்கி நான் இரண்டு மாதங்கள் ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக்கொண்டேன். நான் குணமடைந்தாலும், என் கால்களில் வலி அவ்வளவாகக் குறையவில்லை. நாங்கள் மீண்டும் பெங்களூருக்குத் திரும்பி என் பயிற்சிகளைக் குறித்துக் கவனம் செலுத்தினோம். ஒவ்வொரு நாளும் என் பயிற்சியாளர் கூறிய வார்த்தைகள் என் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருந்தன” என்று அந்தப் பதிவில் எழுதியிருந்தார் அஞ்சு ஜார்ஜ்.

அந்த அவமானத்தை நினைத்து உடைந்துபோயிருந்தால் அஞ்சு ஜார்ஜ் என்ற பெயர் இன்றைய தலைமுறைக்குத் தெரியாமலேயே மறைந்திருக்கும். தன்னை நிரூபிக்கப் போராடினார். உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலம் வென்றார். நீளம் தாண்டுதலில் அவர் நிகழ்த்திய தேசிய சாதனை

14 ஆண்டுகளாக முறியடிக்கப்படாமல் இருக்கிறது. இத்தனை ஆண்டுகள் கழித்தும் அவர் பெயர் பேசப்படுகிறது. காரணம் - அஞ்சு ஜார்ஜ்... அவமானத்தை வென்ற பெண்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு