Published:Updated:

ஏஜென்ட் ஆரஞ்ச்... லட்சக்கணக்கான வியட்நாமியர்களைக் கொன்றழித்த அமெரிக்க வேதி அரக்கன்!

ஏஜென்ட் ஆரஞ்ச்... லட்சக்கணக்கான வியட்நாமியர்களைக் கொன்றழித்த அமெரிக்க வேதி அரக்கன்!
ஏஜென்ட் ஆரஞ்ச்... லட்சக்கணக்கான வியட்நாமியர்களைக் கொன்றழித்த அமெரிக்க வேதி அரக்கன்!

அன்று அதைச் செய்யும்போது அமெரிக்காவின் கண்களில் அங்கு வாழும் பல லட்சம் மக்களின் வாழ்க்கை தெரியவில்லை, பச்சிளம் குழந்தைகளின் முகங்கள் தெரியவில்லை; ஏனென்றால், கம்யூனிசம் வேறூன்றிவிடக் கூடாதென்ற வெறி அதன் கண்களை மறைத்திருந்தது.

வர் ஒரு வியட்நாமிய தந்தை. தனது வீட்டுக்குப் பின்பக்கமிருந்த காலியிடத்துக்குச் செல்கிறார். நீண்டநேரமாக அப்படியே நிற்கிறார். அவர் மிகுந்த மன வேதனையிலிருப்பது புரிகிறது. ஆனால், கண்களில் ஒருசொட்டுக் கண்ணீர்கூட வரவில்லை. அவரது கண்களில் கண்ணீர் வற்றிவிடுமளவுக்கு அழுது தீர்த்துவிட்டார் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. உண்மைதான். தனக்குப் பிறந்த முதல் குழந்தை இறந்தால் கதறி அழுகலாம். இரண்டாவது குழந்தையும் இறந்தால் அதற்கும் அழுகத் தோன்றும். பன்னிரண்டாவது குழந்தைவரை அத்தனையும் பிறந்த சில வருடங்களிலேயே ஏதாவதொரு குறைபாட்டால் நோயால் இறந்து கொண்டேயிருந்தால் மனம் மரத்துப்போய் கண்ணீர் வற்றி வாழ்க்கையே வெறுத்து வெறுமையாகிவிடும். அந்த வெறுமையில்தான் அவர் நிற்கிறார். இப்படியொரு ரணத்தைச் சுமந்துகொண்டு வாழும் அவரை யாரோ ஒருவரென்று கடந்துபோக முடியவில்லை. பலவிதமான நோய்களுக்கு ஆளாகி இறந்துபோனது அவரது குழந்தைகள் மட்டுமல்ல. அமெரிக்கா நடத்திய கொடூரத் தாக்குதலால் வியட்நாமில் இன்னும் எத்தனையோ லட்சம் குழந்தைகள் இப்படி இறந்துள்ளன.

ஃபான் தான் ஹங் டக். வயது 20. கட்டிலில் அசைவின்றி அமைதியாகப் படுத்திருக்கிறார். அவரது உடலின் மத்தியப் பகுதி ஏனோதானோவென்று ஒரு வெள்ளைத் துணியால் மூடப்பட்டிருக்கிறது. வாய் திறந்த நிலையிலிருக்க, நெஞ்சுப் பகுதி மேலே தூக்கியபடியே இருந்தது. கைகால்கள் சரியான வடிவத்தில் அமைந்திருக்கவில்லை. வெவ்வேறு திசைகளில் திரும்பிக் கொண்டிருந்தது. தாங்கொணாத்துயரில் உறைந்து போயிருந்தார்.

Photo Courtesy: Richard Hughes

ஃபாம் தி ஃபுவாங் கான். 21 வயதான இவர், முந்தையவைரைப் போலவே ஹோ சி மின் என்ற நகரத்திலிருக்கும் டு டு மருத்துவமனையின் இன்னொரு நோயாளி. தன் முகத்தின் மீதிருந்த துணியை மெதுவாக நீக்குகிறார். அவரைப் பார்க்க வந்திருந்த பார்வையாளர்கள் அவருடைய பெரிய தலையைப் புகைப்படமெடுக்கிறார்கள். திரு. ஹங் டக்கைப் போலவே செல்வி கான் கூட ஆபரேஷன் ரான்ச் ஹேண்டில் (Operation Ranch Hand) பாதிக்கப்பட்டவர்கள்தாம். 30 ஆண்டுகளுக்கு முன் வியட்நாம் போரின்போது அமெரிக்க ராணுவம் நடத்திய ஒரு கொடூரத் தாக்குதலின் விளைவுகளை அதற்குப் பிறகு பிறந்த இந்த இருவரும் இன்னும் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். பாதிக்கப்பட்டவர்கள் இவர்கள் மட்டுமல்ல; வியட்நாம் முழுவதும் இவர்களைப் போல் பல்வேறு உடற்கோளாறுகளால் நிறைய பேர் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

தன்னைப் புகைப்படமெடுப்பதை செல்வி கான் விரும்பவில்லை. இப்படியொரு நிலையிலிருக்கும் தான் புகைப்படமெடுக்கப் படுவதை அருவருப்பாக நினைக்கிறார். ஆனால், உண்மையில் இவரை இப்படியொரு நிலைக்குக் கொண்டுவந்தவர்கள் அல்லவா அருவருப்பாகவும் கேவலமாகவும் உணர வேண்டியவர்கள். அதைச் செய்த அமெரிக்கா அப்படி நினைக்கிறதா?

ஜெனிவா அமைதி ஒப்பந்தம் மூலமாக பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழிருந்த வியட்நாம், கம்போடியா, லாவோஸ் ஆகிய நாடுகளுக்கு 1954-ம் ஆண்டு சுதந்திரம் கிடைத்தது. அப்போது 17-வது அட்சரேகையை வைத்து வியட்நாமை இரண்டாகப் பிரித்தார்கள். தெற்கு வியட்நாம் வடக்கு வியட்நாம் என்று இரண்டாகப் பிரிக்கப்பட்டது. அதில் கம்யூனிச சித்தாந்தம் நிலைத்திருந்த வடக்கு வியட்நாமில் கம்யூனிசத்தைச் சுத்தமாக ஒழித்து அங்கு தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட தெற்கு வியட்நாம் நினைத்தது. அப்போது ரஷ்யா, சீனா ஆதிக்கத்தின் கீழ் ஆசியக் கண்டத்தில் கம்யூனிசம் பரவிக்கொண்டிருந்தது. அதை எப்படியாவது முறியடிக்க வேண்டுமென்று கங்கணம் கட்டிய அமெரிக்கா வியட்நாமிலும் பரவுவதைத் தடுக்க முடிவுசெய்தது. வியட்நாம் உள்நாட்டுப் போரைச் சாதகமாக வைத்து, அந்தக் கொள்கைக்கு எதிராக நின்ற தெற்கு வியட்நாமுக்குச் சாதகமாக நின்றது அமெரிக்கா. அவர்களை வெற்றிபெற வைப்பதைச் சிரமேற்கொண்டு பணிபுரியத் தொடங்கினார்கள். 1962 முதல் 1971 வரை நடந்த அந்தப் போரில் அமெரிக்கா லட்சக்கணக்கான அமெரிக்க வீரர்களை இறக்கியது. அந்தப் போரில் அமெரிக்க நடத்திய ஒரு தாக்குதல் வடக்கு வியட்நாமுக்காகப் போராடியவர்களை மட்டும் பாதிக்கவில்லை. அது மொத்த வியட்நாமையுமே இன்றுவரை பாதித்துக்கொண்டிருக்கிறது. அதுதான் ஆபரேஷன் ரான்ச் ஹேண்ட்.

மலாயாவில் சுதந்திரத்துக்காக 1948-ல் நடந்த கெரில்லா போருக்கு எதிராக பிரிட்டிஷ் ராணுவம் பயோ வார் (உயிரியல் போர்) நடத்தியது. அந்த பயோ போர்முறையை உத்வேகமாகக் கொண்டு நடத்தப்பட்டதுதான் இந்த ஆபரேஷன் ரான்ச் ஹேண்ட்.

ஏஜென்ட் க்ரீன், ஏஜென்ட் பிங்க், ஏஜென்ட் பர்ப்பிள், ஏஜென்ட் ப்ளு, ஏஜென்ட் ஆரஞ்ச் என்று பல வேதிம மருந்துகளை வியட்நாம் காடுகளிலும் வயல்களிலும் தூவினார்கள். கொஞ்ச நஞ்சமல்ல; சாதாரணமாகச் செடிகளில் தெளிப்பதைவிட 50 மடங்கு அதிக வீரியத்துடன் அந்த மருந்துகளைக் கொட்டினார்கள். அதில் மிகக் கொடிய வேதிமமாகக் கருதப்பட்டது ஏஜென்ட் ஆரஞ்ச். டைக்ளோரோ ஃபினாக்ஸி அசிடிக் அமிலம், டிரைக்ளோரோ ஃபினாக்ஸி அசிடிக் அமிலம் என்ற 2 அமிலங்களும் 50% விகிதத்தில் கலந்ததுதான் இந்த ஏஜென்ட் ஆரஞ்ச். அன்று அதைச் செய்யும்போது அமெரிக்காவின் கண்களில் அங்கு வாழும் பல லட்சம் மக்களின் வாழ்க்கை தெரியவில்லை, பச்சிளம் குழந்தைகளின் முகங்கள் தெரியவில்லை; கம்யூனிசம் வேறூன்றிவிடக் கூடாதென்ற வெறி அதன் கண்களை முற்றிலுமாக மறைத்திருந்தது.

இதை உருவாக்கியவர் தாவரவியலாளர் ஆர்தர் கால்ஸ்டன் (Arthur Galston). போர்க்காலங்களில் உணவு கிடைப்பதற்கு வீரர்கள் மிகச் சிரமப்படுவதால் விரைவாக விளையும் வகையில் சோயா செடிகளுக்கு ஊக்கமளிக்கவே 1943-ம் ஆண்டு அவர் இந்த வேதிமத்தைக் கண்டுபிடித்தார். ஆனால், அதையே மிக அதிகமான அளவில் கலந்து பயிர்க்கொல்லியாகப் பயன்படுத்தியது அமெரிக்க அரசு. அதுவே பின்னால் வியட்நாம் மக்களின் விவசாயத்தை அழித்து அவர்கள் மீதான பல்லாண்டுகால உயிரியல் போர் நடத்துவதற்கு மூலப்பொருளாக அமைந்துவிட்டதை நினைத்துப் பின்னாளில் மிகவும் வேதனைப்பட்டார்.

இந்த வேதிமங்களை அமெரிக்காவின் டௌவ், மான்ஸாண்டோ, ஹெர்குலிஸ் இன்க், தாம்சன் ஹேவர்டு மற்றும் சில முக்கிய வேதிம நிறுவனங்கள் அமெரிக்க ராணுவத்துக்காக உற்பத்தி செய்தன. 1961-ம் ஆண்டில் தெற்கு வியட்நாமுக்கு ஆதரவளித்த அமெரிக்காவின் அதிபர் கென்னடி ஆபரேஷன் ரான்ச் ஹேண்ட் என்ற பெயரில் இதைத் தொடங்கிவைத்தார். சுமார் 76,000 கன மீட்டர் வேதிமங்களை அமெரிக்கா வியட்நாமில் தூவியது. 1967 முதல் 1969-க்குள் இந்த ஆபரேஷன் உச்சத்தைத் தொட்டது. கம்யூனிச வடக்கு வியட்நாமின் கெரில்லா போராளிகள் காடுகளுக்குள் மறைந்திருந்து போராடிக்கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு மறைவிடம், உணவு ஆகியவற்றைத் தந்துகொண்டிருந்த காடுகள், கிராமப்புற விவசாய நிலங்கள் ஆகியவற்றில் இந்தப் பயிர்க்கொல்லிகளைத் தூவி மொத்தமாக அழிக்க வேண்டும். அதுவே அமெரிக்காவின் நோக்கம். அதன்மூலம் சாப்பிட உணவின்றி, மறைந்திருக்க உறைவிடமின்றி அவர்கள் வெளியே வருவார்கள். அப்போது எளிதில் எதிரிகளைச் சுட்டு வீழ்த்திவிடலாம். கிராம மக்கள் கெரில்லா போராளிகளுக்கு உதவிக் கொண்டிருந்தார்கள். அதைக் காரணம் காட்டி வியட்நாமிலிருந்த அதிகமான கிராமங்களை அழித்து, அவற்றை நகரமயமாக்கினால் தங்கள் முதலீடுகளை அங்கு கொண்டு செல்லலாமென்ற நோக்கத்தில் மேலும் அதிகமான கிராமங்களில் இந்தப் பயிர்க்கொல்லிகளை அவர்கள் கொட்டினார்கள். அதன்மூலம் வியட்நாமியர்களை அமெரிக்க ஆதிக்கம் நிலவிய நகரங்களில் வாழவைக்கத் திட்டமிட்டார்கள்.

குறைவான உயரத்தில் பறக்கும் விமானங்களில் டிரம்களில் கொண்டு செல்லப்பட்டு பெரிய குழாய்களின் உதவியுடன் அனைத்துக் காடுகள் மற்றும் கிராமங்களிலும் இது கொட்டப்பட்டது. அதுபோக டிரக்குகள், படகுகள் போன்றவற்றிலும் கொண்டுசெல்லப்பட்டு ஓர் இடம் விடாமல் இந்தப் பயிர்க்கொல்லி வேதிமங்களைத் தூவினார்கள். சுமார் 20,000 சதுர கி.மீ அளவிலான காடுகள், அலையாத்திக் காடுகள் அழிக்கப்பட்டன. குட்டி நாடான வியட்நாமில் இந்த அளவு அதிர்ச்சியடையச் செய்கிறது. அவையனைத்தும் கெரில்லாக்களின் உணவு தடைப்படுவதற்காகச் செய்யப்படுகிறதென்று ராணுவ வீரர்களுக்குச் சொல்லப்பட்டது. ஆனால், அவையனைத்தும் அந்நாட்டின் குடிமக்களுக்கு உணவுத் தட்டுப்பாட்டை ஏற்படுத்துவதற்காக என்பது பிற்காலத்தில்தான் தெரிந்தது. இது பரவலான மிகப்பெரிய பஞ்சத்துக்கு வழிவகுக்கவே ஆயிரக்கணக்கான மக்கள் பசியால் இறக்கத் தொடங்கினார்கள். மொத்தமாகப் பயன்படுத்தப்பட்ட பயிர்க்கொல்லிகளில் 42% விவசாய நிலங்களில் தூவப்பட்டன. 1966 வரை விவசாய நிலங்களில் அது தூவப்படுவது ரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தது.

இந்த வேதிமத்தைக் கண்டுபிடித்த ஆர்தர் கால்ஸ்டன் உட்பட மேலும் பல தாவர வேதியிலாளர்கள் அமெரிக்காவின் இச்செயல்களை வன்மையாகக் கண்டித்தார்கள். இது மிகக் கொடூரமான மனிதத் தன்மையற்ற பயோ வார் என்று எதிர்த்தார்கள். அமெரிக்கா அது எதையுமே காதில் வாங்கிக் கொள்ளவில்லை. 1925-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட ஜெனிவா சட்டத்தின்படி பயோ வார்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அந்தக் கட்டுப்பாடுகள் அனைத்தையும் தகர்த்தெறிந்துவிட்டுச் செயல்பட்டது அமெரிக்கா. ஏஜென்ட் ஆரஞ்ச் பயோ ஆயுதமில்லை; அது ஒரு பூச்சிக்கொல்லி மட்டுமே என்று உலகையே நம்ப வைப்பதற்காகத் தொடர்ச்சியான விளம்பரங்களையும் செய்துகொண்டிருந்தது. 

3,100,000 ஹெக்டேர் காடுகள் இந்த வேதிப்போரில் அழிக்கப்பட்டன. கொட்டப்பட்ட வேதிமங்களின் விளைவுகளால் மரங்கள் அழிந்தன. அதனால் மண் சத்திழந்து நிலச்சரிவுகள் ஏற்பட்டன. அடிவரை ஊடுருவிச் சென்ற வேதிமங்களால் அழிந்த காடுகளை மீட்டுருவாக்கம் செய்வது கடினமானது. அப்படியே மீட்டுருவாக்கம் செய்தாலும் அவற்றில் வேதிமங்கள் கலந்தே வளர்ந்தன. பல பகுதிகளில் அழிக்கப்பட்ட காடுகளில் வெளிநாட்டு மரங்கள் அதிகம் வளர்க்கப்பட்டன. காலப்போக்கில் அவை ஆதிக்கத் தாவரங்களாக மாறி உள்நாட்டு வளங்களை அழித்தன. இந்தப் போர்முறையால் 24 வகையான பறவை இனங்களும், 5 வகைப் பாலூட்டிகளும் மரபியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த வேதிமங்கள் போர்க்காலத்துக்குப் பிறகு மண்ணில் ஊடுருவி உணவுச் சங்கிலியில் கலக்கத் தொடங்கியது. விலங்குகள், மீன்கள் அனைத்தும் விஷத்தன்மையானதாக மாறியது.

இந்த டையாக்ஸின்கள் உணவில் கலந்ததால் அதைச் சாப்பிட்டவர்களும் பாதிக்கப்படத் தொடங்கினார்கள். பாதிக்கும் மேலான விவசாய நிலங்கள் மீண்டும் விவசாயம் செய்யத் தகுதியற்றதாக மாறின. கிராமப்புறப் பொருளாதாரம் அதனால் பெரிதும் பாதிக்கப்பட்டது. 1958-ல் 2.8 மில்லியனாக இருந்த மக்கள்தொகை 1971-ல் 8 மில்லியனாக மாறியது. கிராமப்புறப் பொருளாதாரம் அடிவாங்கியதால் அதிகமான மக்கள் நகரங்களை நோக்கி முன்னேறத் தொடங்கினர். மக்கள் தொகைக்குப் போதுமான உணவும் உற்பத்தி செய்யமுடியவில்லை. நகரங்களுக்குக் குடிபெயர்ந்த மக்களுக்குப் போதுமான இடவசதியும் கிடைக்கவில்லை. வியட்நாமியர்கள் வறுமையிலும் வாழிடச் சிக்கலிலும் சிக்கத் தொடங்கினார்கள்.

வியட்நாம் போரின்போது 40 லட்சம் மக்கள் இந்தத் தாக்குதலுக்கு உள்ளானார்கள். அதில் 30 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டார்கள். வித விதமான நோய்கள் அவர்களைத் தாக்கத் தொடங்கின. அவர்களின் குழந்தைகள் பாதிக்கப்பட்டார்கள். ஏஜென்ட் ஆரஞ்சின் தாக்குதலுக்கு உள்ளானவர்களின் மரபணு வழியாகத் தற்போது சுமார் 10 லட்சம்பேர் அதன் விளைவுகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஹங் டக், ஃபுவாங் கான் இருவரைப் போலவே அவர்களும் சூன்யமாகிப் போன வாழ்க்கையைத்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். ஆனால் இதை அமெரிக்க அரசு மறுக்கிறது. இவை ஆதாரமற்றவை என்று குற்றம் சாட்டுகிறது. டாக்டர். இங்குயென் வியட் நான் என்பவர் நடத்திய ஆய்வில் அமெரிக்கா கேட்ட ஆதாரங்களும் கிடைத்தன. ஏஜென்ட் ஆரஞ்ச் தூவப்பட்ட இடத்தில் அதற்குப் பிறகு க்ளெஃப்ட் பலேட் என்னும் வாய் இரண்டாகப் பிளந்தபடி பிறக்கும் குழந்தைகள் எண்ணிக்கை அதிகமானது.

நுரையீரல் புற்றுநோய், குரல்வளைப் புற்றுநோய், ப்ராஸ்டேட் புற்றுநோய், கொடிய தோல்நோய்கள், மனோவியல் குறைபாடுகள், குடலிறக்கம், வலிப்புநோய் ஆகிய குறைபாடுகளோடுதான் இன்னமும் பிறந்து கொண்டிருக்கிறார்கள். போர் முடிந்து 20 ஆண்டுகளுக்குப் பிறகு வியட்நாமிய பெண் ஒருவரின் தாய்ப்பாலைச் சோதித்துப் பார்த்தபோது அதில் பயோ வாரில் பயன்படுத்தப்பட்ட டையாக்ஸின் என்ற வேதிமம் அதிகளவில் கலந்திருந்தது தெரியவந்தது. ட்ருவாங் சன் என்ற மலைத்தொடரும், வியட்நாம் கம்போடியா எல்லைப்பகுதியும்தான் அதிகமான பாதிப்புகளை இன்னமும் சந்தித்துக் கொண்டிருக்கிறது. அங்கு பிறக்கும் குழந்தைகள் தங்கள் பெற்றோரிடமிருந்து மரபுவழியாகக் கிடைத்த பல குறைபாடுகளால் அவதிப்பட்டு வருகின்றனர்.

வியட்நாமுக்கு அமெரிக்கா இழைத்த கொடுமைகளுக்காக நீதிகேட்டு சட்டபூர்வமாகப் போராடிக்கொண்டிருக்கும் ஹான் சொல்கிறார், ``அமெரிக்கா ஒரு அரக்கன். அதன் பேராசைப் பசிக்குக் கொஞ்சம்கூட இரக்கமின்றி அனைவரையும் இரையாக்கிக்கொள்ளும் சுயநலக் கழுகு" என்கிறார். உண்மைதான். மனிதநேயமின்றி நடத்தப்படும் ஒவ்வொரு போரும் ஏதாவதொரு பணக்காரக் கழுகின் பசியைத் தீர்ப்பதற்காகத்தான்.

அடுத்த கட்டுரைக்கு