Published:Updated:

யார் இவர்... ஏன் தற்கொலை... ஐ.ஏ.எஸ் அகாடமி சங்கரின் துயரக் கதை!

யார் இவர்... ஏன் தற்கொலை... ஐ.ஏ.எஸ் அகாடமி சங்கரின் துயரக் கதை!
யார் இவர்... ஏன் தற்கொலை... ஐ.ஏ.எஸ் அகாடமி சங்கரின் துயரக் கதை!

``நான் ஜெயித்திருந்தால், நான் மட்டும்தான் ஐ.ஏ.எஸ்., ஆகியிருப்பேன். தோற்றதினால் இன்று பல ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்-களை உருவாக்கிக்கொண்டு இருக்கிறேன்'' என்று எப்போதும் பெருமைபட சொல்வார் சங்கர்.

தமிழ்நாட்டையே கலங்கவைத்திருக்கிறது சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமியின் தலைவர் சங்கரின் துயர மரணம். தமிழ்நாட்டில் இருந்து பல ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், அரசு அதிகாரிகளை உருவாக்கிய பெருமைக்கு சொந்தக்காரர் சங்கர். குடும்ப பிரச்னை காரணமாக அக்டோபர் 11-ம் தேதியன்று தற்கொலை செய்துகொண்டார்.

யார் இவர்... ஏன் தற்கொலை... ஐ.ஏ.எஸ் அகாடமி சங்கரின் துயரக் கதை!

யார் இந்த சங்கர்?

திருச்செங்கோடு பக்கம் ஓர் உள்ளடங்கிய கிராமத்தில் பிறந்து, முதல் தலைமுறைக் கல்வி பெற்றவர். ஊத்தங்கரையில் எட்டாம் வகுப்பு வரை படித்தவர் படிப்பில் சுமாராக இருக்க, நல்லாக்கவுண்டம்பாளையத்தில் இருந்த தாத்தா வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கிறார். அங்கே இருந்த பள்ளியில் ஈடுபாட்டுடன் படிக்க பள்ளியின் முதல் மாணவராக உயர்ந்திருக்கிறார்.

கல்லூரியில் பி.எஸ்ஸி., அக்ரி படித்திருக்கிறார். அந்த வயதின் குறும்பு, வைஷ்ணவி என்ற பெண்ணை ராகிங் செய்ய, அது பெரிய பிரச்னை  ஆகி ஒரு வருட காலம் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். திரும்பவும் முதல் ஆண்டு மாணவராகப் படிக்க வந்து வெறியோடு படித்திருக்கிறார்.  எந்தப் பெண்ணை  ராகிங் செய்ததாக கல்லூரியைவிட்டு நீக்கப்பட்டாரோ அதே வைஷ்ணவியை காதலித்து பிறகு திருமணம் செய்திருக்கிறார் சங்கர்.

அக்ரி படித்தாலும் சினிமாவின் மீது அதிக ஆர்வம் கொண்டவர் சங்கர். அதனால் கல்லூரி படிப்பை முடித்ததும் சினிமா ஆசையில் சென்னை வந்திருக்கிறார்.  ஒன்றரை வருட காலம் சினிமாக் கனவுடன் சென்னையை சுற்றிவந்தவரை உறவினர் ஒருவரின் அறிவுரை படிப்பின்மீது கவனத்தை திரும்பவைத்திருக்கிறது.  'இப்படியே வீணாப்போகப் போறியா? ஞான ராஜசேகரன்னு ஓரு ஐ.ஏ.எஸ்., இருக்கார். இப்பவும் அவர் அரசு அதிகாரிதான். ஆனா 'மோகமுள்'னு நல்ல படம் இயக்கலையா? நீயும் படிச்சு நல்ல நிலைமைக்கு வா. அப்புறமா சினிமா பண்ணு' என்று சொன்ன வார்த்தைகள்  அவரை யோசிக்கவைத்திருக்கின்றன.

யார் இவர்... ஏன் தற்கொலை... ஐ.ஏ.எஸ் அகாடமி சங்கரின் துயரக் கதை!

மீண்டும் எம்.எஸ்ஸி. அக்ரி படிக்க என்ட்ரன்ஸ் எழுதியிருக்கிறார். அரசு ஃபெல்லோஷிப்புடன் ஹரியானாவில் படிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதை முடித்ததும் 'அப்படியே சிவில் சர்வீஸ் எழுதலாம்' என்று டெல்லிக்குக் கிளம்பியிருக்கிறார். வீட்டில் மிகக்கடுமையான வறுமை. ''ஆயிரம் ரூவா சம்பளத்துலயாவது ஒரு வேலைக்குச் சேர்' என்று அப்பா நெருக்கியிருக்கிறார். ''சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோங்க'' என்று மறுபக்கம் வைஷ்ணவி  சொல்லியிருக்கிறார். ஆனால், சங்கரின் சிரமத்தைப் புரிந்துகொண்ட வைஷ்ணவி டெல்லிக்கு வந்து, வேலைபார்த்துக் கொண்டே சங்கரைப் படிக்கவைத்திருக்கிறார். 2001, 2002 இரண்டு வருடங்களும் ஐ.ஏ.எஸ்., தேர்வு எழுதி இறுதிக் கட்டம் வரை போனாலும் சங்கருக்கு வெற்றி கிடைக்கவில்லை. அந்தச் சமயத்தில்தான் சங்கரின் அப்பா தேவராஜ் ஹார்ட் அட்டாக்கில் இறந்து போயிருக்கிறார்.

ஐ.ஏ.எஸ்., தேர்வில் மூன்றாவது, நான்காவதுமுறையாகவும் தோல்விகள். இந்தப் பக்கம் திருமணத்துக்கான நெருக்கடி. ஏதாவது சம்பாதிக்க வேண்டும் என்ற நிலையில், அத்தனை வருட காலம் சிவில் சர்வீஸ் தேர்வில் கிடைத்த அனுபவத்தைவைத்து, ஓரு அகாடமி தொடங்கலாம் என்று திட்டமிட்டிருக்கிறார் சங்கர். அவர் அம்மா தான் சேர்த்துவைத்திருந்த 720 ரூபாய் பணத்தைத் தன் பங்காகக் கொடுக்க, அண்ணா நகரில் 36 மாணவர்களுடன் அகாடமி ஆரம்பித்திருக்கிறார். இப்போது சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமியில் வருடத்துக்கு பல ஆயிரம் மாணவர்களுக்கும் மேல்  படித்து வருகிறார்கள்.

''என்னுடன் படித்தவர்கள், என்னிடம் படித்தவர்கள் எத்தனையோ பேர் உயர் அதிகாரிகளாக இருக்கிறார்கள். அவர்களைப் பார்க்கும்போது பெருமையாகவும், பொறாமையாகவும் இருக்கும். அரசு அலுவலகங்களுக்குச் செல்ல நேர்கையில் அங்குள்ள அதிகாரிகளைப் பார்க்கும்போது, மனது லேசாக வலிக்கத்தான் செய்யும். ஆனாலும், நான் ஜெயித்திருந்தால், நான் மட்டும்தான் ஐ.ஏ.எஸ்., ஆகியிருப்பேன். தோற்றதினால் இன்று பல ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்-களை உருவாக்கிக்கொண்டு இருக்கிறேன்'' என்று எப்போதும் பெருமைபட சொல்வார் சங்கர்.

காதலால் படித்து முன்னேறியவர் இன்று குடும்பப் பிரச்னை காரணமாக தற்கொலை செய்திருப்பது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு