Published:Updated:

என் ஆயுசுக்கு அத்தனை பண்ண முடியுமா, தெரியலியே..?

என் ஆயுசுக்கு அத்தனை பண்ண முடியுமா, தெரியலியே..?

என் ஆயுசுக்கு அத்தனை பண்ண முடியுமா, தெரியலியே..?

என் ஆயுசுக்கு அத்தனை பண்ண முடியுமா, தெரியலியே..?

Published:Updated:
##~##

சென்னை ராஜாஜி ஹாலில் நடந்த இன்டர் நேஷனல் லெதர் எக்ஸிபிஷனுக்குப் போயிருந்தோம். உள்ளே நடந்து நடந்து கால் வலிக்க, கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கலாம் என்று ஒரு வெளிநாட்டுக்காரரின் ஸ்டாலில் ஒதுங்கினோம். ஏதாவது பேச வேண்டுமே என்று தெரியாத்தனமாய், நாம் பத்திரிகையாளர் என்று அறிமுகம் செய்துகொள்ள, அவர் ஒரேயடியாய்ப் பிடித்துக்கொண்டு 'ஷூக்களை மெஷின் மூலம் செய்வது எப்படி?’ என்று 'வாழ்க்கைக் கல்வி’ நடத்த ஆரம்பிக்க, அப்போது 'பளிச்’சென்று தோன்றியது ஒரு ஐடியா!

 இந்த வெளிநாட்டுக்காரரையும் நம்ம தேசத்து செருப்பு தைக்கும் தொழிலாளி ஒருவரையும்  சந்திக்கவைத்தால்...

உடனே சுறுசுறுப்புடன், வெலிங்டன் தியேட்டருக்கு எதிரே பிளாட்ஃபாரத்தில் உட்கார்ந்து செருப்பு தைக்கும் தொழிலாளி கண்ணனைப் பேச அழைத்தோம்... ''நெறைய்ய்ய வேலை கீது... நீ நாளைக்கு வாயேன்'' என்று ரொம்ப நேரம் 'பிகு’ காண்பித்துவிட்டுப் பிறகு வந்தார்.

கண்ணனைச் சந்திக்க மிகவும் மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டார் டோனால்ட் சி கேமரான் என்ற அந்த இங்கிலாந்துக்காரர். இந்தியாவுக்கு முதல்முறையாக வந்திருக்கும் இவர், 'இன்டர்நேஷனல் ஷூ மெஷின் கோ’ என்ற நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்டர். இந்தத் தொழிலில் படிப்படியாக உழைத்து முன்னுக்கு வந்தவர். உற்சாகத் துடன் கண்ணனை வரவேற்றுக் கைகுலுக்கினார். இருவரும் தங்கள் தொழிலைப் பற்றி, அவரவர் மொழியில் பேசிக்கொண்டார்கள் (நமது உதவியுடன்தான்!)

என் ஆயுசுக்கு அத்தனை பண்ண முடியுமா, தெரியலியே..?

டோனால்ட்: ''நீங்க இந்தத் தொழிலுக்கு எப்ப வந்தீங்க?''

கண்ணன்: ''அது ஆயிப்போச்சு சார். முப்பத்தஞ்சு நாப்பது வருஷம்கிட்ட... பன்னெண்டு வயசிலயே இதுக்கு வந்துட்டேன். இது எனக்குப் பரம்பரைத் தொழிலு. ஆமா... நீ எப்பருந்து பண்ற?''

டோனால்ட்: ''உங்களை மாதிரி அவ்வளவு சின்ன வயசுல இல்ல. என்னோட ஃபாதர் 'டி-ஷர்ட்’ செய்ற சின்ன கம்பெனி ஒண்ணு வெச்சிருந்தார். நானும் அவருக்கு உதவியா இருந்தேன். அதுக்கப்புறம் இந்த ஷூ தயாரிக்கிற லைன்ல இன்ட்ரெஸ்ட் வந்தது. ஏன்னா, இதுக்கு அப்போ நல்ல மார்க்கெட் இருந்தது. அதனால, ஒரு தனியார் கம்பெனியில ரெண்டு வருஷம் டிரெய்னிங் எடுத்துக்கிட்டேன். பிறகு, ஷூ கம்பெனியில ரெண்டு வருஷம் வொர்க் பண்ணி, நூறு மெஷின் ஆபரேட் பண்ணி, சர்வீஸும் கத்துக்கிட்டேன். அதுக்கப்புறமா இந்த கம்பெனியில சேர்ந்தேன். ஆமாம், இது சம்பந்தமா நீங்க ஏதாவது படிச்சீங்களா..?''

கண்ணன்: ''இதுக்குன்னு ஸ்கூலாக் கீது, படிச்சுத் தெரிஞ்சுக்க? எல்லாம் கை வேலதான்! பார்த்தா, தானா வருது... படிச்சா என்ன வேலயா கெடைக்குது? எம் பையன்கூடத்தான் எஸ்.எல்.சி. படிச்சிட்டு ச்சும்மாக் கீறான். இது பரம்பரைத் தொழிலுங்க. படிப்பு எதுக்கு?''

டோனால்ட்: ''எஸ்.எல்.சி-யா..? இது சம்பந்தமான படிப்பா அது?''

கண்ணன்: ''அது கெவர்மெண்டு படிப்பு. அப்போதான் சேர்ல குந்திக்கிற வேலை தருவாங்களாம். சரி, அத்தை வுடுங்க... நீங்க எதுக்கு இங்க வந்தீங்க?''

டோனால்ட்: ''நாங்க எங்க கம்பெனி மெஷின் விக்கிறதுக்காக வந்தோம். எல்லாத்தையும் வித்துட்டோம். இப்போ...''

கண்ணன்: (இடைமறித்து): ''ஓ... ஒவ்வொரு ஊரா சந்தையில விக்கிறவர்போலக் கீது... இப்போ எந்த ஊரு சந்தைக்குப் போறாரு?''

டோனால்ட்: ''எங்க சொந்த ஊருக்கு... அதாவது, லண்டனுக்குப் போறோம். ஆமாம், உங்க கடை எங்கே இருக்கு?''

கண்ணன்: ''கடையா! (சிரிக்கிறார்) நம்பளது பிளாட்பாரம் சார். வெலிங்டன் தியேட்டராண்ட வந்து கண்ணன்னு சொன்னீங்கன்னா, சின்ன கொய்ந்தைகூட இட்டாந்து வுட்ரும். சரி, இது என்னா மெஷின் சார்?''

டோனால்ட்: ''இது கேம்போரியன் மெஷின். இதுலதான் ஷூ செய்வாங்க! கேம்போரியன்கிறது, எங்க பிரஸிடென்ட்டோட பேர்.. அவர் பேர்ல உலகம் பூரா இருபத்தஞ்சு கம்பெனிகள் இருக்கு. எல்லா மெஷினுக்கும் அவர் பேர்தான் வெச்சிருக்கோம். எந்த நாட்டுக்கும் போய் கேம்போரியன்னு சொன்னாப் போதும், எல்லோருக்குமே தெரிஞ்ச பேர். ஆமா, நீங்க என்ன யூஸ் பண்றீங்க?''

கண்ணன்: (இரண்டு கைகளையும் உயர்த்திக் காட்டி): ''இதுதான் சார் நமக்கு மெஷினு!''

டோனால்ட்: ''ஓ... கேனன் மெஷின் (சொல்லிச் சிரிக்கிறார்).''

(நம்மிடம்)    ''He is a Crafts man. uses his hands...' என்று சொல்ல, புரிந்தாற்போல் ''யெஸ், யெஸ்...'' என்றார் கண்ணன்.

நிருபர்: ''என்னங்க.. அவர் சொன்னது புரிஞ்சுதா..?''

கண்ணன்: ''உம்ம்... ஏன் புரியாம. அவர் மேஸ்திரி மாதிரி, நான் தொழிலாளி மாதிரிங்கறாரு! அப்பால நகரு... நீ சொல்லு தொரை...''

டோனால்ட்: ''வெல்டன்! இப்போ நான் எப்படிப் பண்றதுனு சொல்றேன். முதல்ல கிளிக்கிங் மெஷின்... அதிலே பாட்டம் சோல் எடுத்து கரெக்டா, ஷேப்புக்குக் கொண்டுவரணும். அதுக்கப்புறம் ஸ்கைளிங்க் மெஷினில் கொடுத்து எட்ஜ் எல்லாம் கட் பண்ணனும்.''

கண்ணன்: ''அதெல்லாம் நானு கத்தியை வெச்சி கரீக்ட்டா கட் பண்ணிடுவேன்.''

என் ஆயுசுக்கு அத்தனை பண்ண முடியுமா, தெரியலியே..?

டோனால்ட்: ''ஓ, அப்படியா! அடுத்து, அதை எடுத்துட்டுப்போய் 'எட்ஜ் ரப்பிங் மெஷின்’ல கொடுத்து, ஸ்மூத்தா அந்தப் பக்கங்களை ஷேப்புக்குக் கொண்டுவரணும். நீங்க என்ன பண்ணுவீங்க?''

கண்ணன்: ''என்கிட்ட மெஷின் ஏது..? கரீக்டா ஷேப் கட்டிட்டா, எமிரி பேப்பர் வெச்சி தேச்சா வழவழப்பா... உங்க பாஷையிலே என்னா அது? ஆங்... ஸ்மூத்தா வந்திடும்.''

டோனால்ட்: ''ஓ, எமிரி பேப்பர். நாங்களும் அதைத்தான் யூஸ் பண்றோம். ஆனா, அது மெஷின்ல ஃபிக்ஸ் ஆயிருக்கும். அப்புறம் அதே மாதிரி, அப்பர் பார்ட்டை எடுத்து கிளிக்கிங் மெஷின்ல கொடுத்து ஸ்டிச்சிங் லைனிங்எல்லாம் பண்ணுவோம். உங்ககிட்ட ஸ்டிச்சிங் மெஷினாவது இருக்கா?''

கண்ணன்: ''நோ... (அதற்குள் அவருக்கு ஆங்கிலம் வந்துவிட்டது!) ஸ்டிச்சிங்கூட நான்தான். கையில் பிடிச்சு வலிச்சாத்தான் ஸ்ட்ராங்கா நிக்கும்.''

டோனால்ட்: ''அப்புறம் ஸ்டாம்பிங்! அதாவது, அந்த ஷூவில் கரெக்டா கம்பெனி பெயரை ஃபிக்ஸ் பண்ணுவோம். இதுக்கு நீங்க என்ன மெட்டீரியல் யூஸ் பண்றீங்க?''

கண்ணன்: ''பியூர் லெதர்தான். இல்லாட்டி, கேம்பி லெதர். நீங்க கேன்வாஸா?''

டோனால்ட்: ''கேன்வாஸ். இல்லேன்னா, பிளாஸ்டிக் மெட்டீரியல்ல பண்ணுவோம். அதாவது, 'தெர்மோ பிளாஸ்டிக்’. அதை ஹீட் பண்ணினா வளையும். அப்புறம் கூல் ஆச்சுன்னா திடமாயிடும். சரி, (ஒரு ஷூவை எடுத்துக் காண்பித்து) இதுக்குள்ளே என்ன இருக்கு தெரியுதா?''

கண்ணன்: ''வெல்வெட்டா?''

டோனால்ட்:  ''நோ.. நோ.. நைஸின்.''

கண்ணன்: ''இதெல்லாம் நிறைய நாளைக்கு உழைக்காதே. நம்மளுது லெதர்ங்கறதால ஸ்ட்ராங்கா நிக்கும்.''

டோனால்ட்: ''யெஸ்! ஆனா, நாட்கள் கம்மியா உழைச்சாத்தானே திரும்பவும் புதுசா வாங்க வருவாங்க. அப்பத்தானே பிசினஸ் நிறைய நடக்கும்.''

கண்ணன்: ''கேட்டுக்கினீங்களா சார்... எல்லாம் ஃபாரின் ஃபாரின்னு குதிக்கிறாவுளே...? நம்மள்துதான் சார் ஒஸ்தி!''

டோனால்ட்: ''ஒரு நிமிஷம்! அதிக நாட்கள் உழைக்கிற மாதிரி நாங்க ஷூ செய்யாததுக்குக் காரணம், எங்கள்ல அடிக்கடி ஃபேஷன் மாறிக்கிட்டே இருக்கும். தவிர, எங்க ஊர்ல டிரெஸ்ஸுக்கேத்த மாதிரிதான் காலணி உபயோகிப்பாங்க. அதனால், யூஸ் பண்ணறது குறைவாத்தான் இருக்கும்.''

கண்ணன்: ''சரிதான் போ! அவர் சைடை உட்டுக் கொடுப்பாரா..? சப்போர்ட்தான் பண்ணுவாரு!''

டோனால்ட்: ''ஆமாம், ஒரு நாளைக்கு எவ்வளவு ஜோடி பண்ணுவீங்க?''

கண்ணன்: ''அது கிராக்கியைப் பொறுத்தது. பார்ட்டி அர்ஜென்ட்டுன்னா, ரெண்டு ஜோடி கூடப் பண்ணிடுவேன். நீங்க எத்தனை பண்றீங்க மெஷின்ல?''

டோனால்ட்: ''நாங்க மெஷின்ல ஒரு நாளைக்குச் சுமார் ஆறாயிரம் ஜோடி பண்ணுவோம்.''

கண்ணன்: ''அம்மாடியோவ்! நான் என் ஆயுசுக்கே அத்தனை பண்ண முடியுமா, தெரியலியே?!''

டோனால்ட்: ''உங்களுக்கு எவ்வளவு வயசு இருக்கும்?''

கண்ணன்: ''அம்பத்தஞ்சு ஆவப்போவுது... உங்களுக்கு?''

டோனால்ட்: ''ஓ, உங்களுக்கு அம்பத்தஞ்சா, எனக்கு ஐம்பத்திரண்டுதான்.'' (இரண்டு கை களையும் உயரே தூக்கி, கண்ணனை நோக்கி மரியாதை செலுத்தும் வகையில் கும்பிடு போட்டார்) அடுத்து, நம்மிடம்...

''நம்மைவிடப் பெரியவர்களைக் கண்டால் நீங்கள் இப்படித்தானே மரியாதை செய்வீர்கள்!'' என்று கேட்டுத் தெரிந்துகொண்டார்.

கண்ணன்: ''அதெல்லாம் வேணாம்ப்பா! நீங்க பெரிய மனுஷன்! நீங்க போய்க் கையெடுத்துக் கும்புட்டுக்கீனு...''

டோனால்ட்: ''கேட்க மறந்துவிட்டேன். ஒரு மாதத்துக்கு எவ்வளவு சம்பாதிக்கிறீங்க?''

கண்ணன்: ''மாசத்துக்கா... அதை எப்பிடிப்பா சொல்றது?''

நிருபர்: ''ஏங்க... சொன்னா இன்கம்டாக்ஸ்காரங்க வந்து பிடிச்சிப்பாங்களா..?''

கண்ணன்: ''அட, நீ வேற... ஒரு மாசம் துட்டு வரும், போகும்..?''

நிருபர்: ''சரி, குன்ஸா(!) சொல்லுங்க..?''

கண்ணன்: ''அப்படிச் சொன்னா கரீட்! ஐந்நூறு ரூபா வரும்.''

டோனால்ட்: ''எனக்கு 16,000 பவுண்ட்ஸ் மாதச் சம்பளமா கிடைக்குது. ஆனால், (நம்மிடம்) தயவுசெய்து என் வருமானத்தோடு இவருடை யதை கம்பேர் பண்ணி எழுதாதீர்கள். இவரைப் போலவே, எங்களுடைய ஷூ ஃபேக்டரியில் வேலை செய்யும் நபர், வாரத்துக்கு 150 இங்கிலீஷ் பவுண்ட்ஸ் (சுமாராக ஒரு பவுண்டு, இந்திய ரூபாய் 24. 24 ஜ் 150 = 3,600 ரூபாய்!) வாங்குகிறார். சரி, நேரமாகிறது... நான் கிளம்பட்டுமா... உங்களைச் சந்தித்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. இந்த நாளை நான் என்றும் மறக்க மாட்டேன்... (கை குலுக்கியவர் திடீரென்று 'ஒரு நிமிடம் கண்ணன்...’ என்கிறார். ஓடிப் போய் இரண்டு ஜோடி அப்பர் ஷூ கொண்டுவருகிறார்.) இந்தாருங்கள் கண்ணன், இது என் சிறிய பரிசு. யு.கே-வைச் சார்ந்த நானும், இந்தியாவைச் சார்ந்த நீங்களும் ஒரே தொழிலைப் பற்றிப் பேசினோம். அதன் அடையாளமாய் இந்த அப்பர் பார்ட். நீங்கள், இதற்கு பாட்டம் சோல் போட்டு அழகான ஷூவாக மாற்றுங்கள்! அந்த ஷூவுக்கு 'டோனால்ட் கேனன்’ என்று பெயர் வையுங்கள்... என்ன..?''

கண்ணன்: ''தாங்க்ஸ் சார்!''

டோனால்ட்: ''ஒரு நிமிஷம் இப்படி வாங்க... (கண்ணனை மெஷின் பக்கம் நிற்கவைத்து, ஒரு போட்டோ எடுத்துக்கொள்கிறார்.) தாங்க்யூ... இதை என் பிரசிடென்ட்டிடம் காட்டப்போகிறேன்... நன்றி. இந்தச் சந்திப்பை ஏற்பாடு செய்த (நம்மிடம்) உங்களுக்கும் நன்றி!''

கண்ணனை அழைத்துக்கொண்டு வெளியே வந்தோம். மெள்ள, ''நீங்கள் டோனால்டைச் சந்தித்ததைப் பற்றி என்ன நினைக்கிறீங்க?'' என்று கண்ணனிடம் கேட்டோம்.

''என்னத்த நினைக்கிறது... ரொம்ப அன்பா பேசறாரு... எனக்கும் அவருக்கும் ஒரே டிபரின்ஸ் (Difference)தான். நாங்க, மத்தவங்க காலுக்கேத்த மாதிரி செஞ்சு கொடுக்கறோம். அவங்க குன்ஸா செஞ்சதை வெச்சி மத்தவங்க காலை நுழைச்சிக் கிறாங்க! இன்னும் கொஞ்ச நேரம் முன்னாடியே கூட்டியாந்திருந்தீனா, நானும் என் வேலையைச் செஞ்சு காட்டியிருப்பேன்! சரி, குவிக்கா வா! பெங்களூர் பார்ட்டி காத்துக்கீனு இருக்கும்... ஏ, ஆட்டோ..!''

- சந்திப்பு ஏற்பாடு: ந.சண்முகம்
   படங்கள்: எஸ்.கோபிநாத்