யுள் காப்பீடு என்பது நம் அனைவருக்கும் பரிச்சயமான ஒன்று. உதாரணத்திற்கு, ஆண்டுக்கு ரூ 25,000 என 20 வருடங்களுக்கு பிரீமியம் கட்டிக்கொண்டே  இருப்போம். 20 வருட முடிவில், கட்டியதைப் போல் கிட்டத்தட்ட ஒரு மடங்கு அதிகமாகக் கிடைக்கும். இந்த இருபது வருடத்தில் உயிரிழப்பு நடந்தால், அவரது குடும்பத்திற்கு ஒரு வருடத்திற்குக் கட்டிய பணத்தைப் போல் சுமார் 20 மடங்கு (இந்த உதாரணத்தில் சுமார் ரூ 5 லட்சம்) இழப்பீடு கிடைக்கும். இதுதான் அந்தக் கால இன்ஷூரன்ஸ்.

பணம் பழகலாம்! - 4

சற்று யோசியுங்கள், ஆண்டு வருமானமாக ஐந்து லட்சம் சம்பாதிப்பவருக்கு, வெறும் 5 லட்சத்திற்குக் காப்பீடு போதுமா? எதற்காக இன்ஷூரன்ஸ் எடுக்கிறோம்? சம்பாதிக்கக்கூடியவர், எதிர்பாராத காரணங்களால் இறந்துவிட்டால் குடும்பத்திற்கு இரண்டுவிதமான இழப்புகள் ஏற்படுகின்றன. ஒன்று, பாசமான அப்பாவோ அம்மாவோ அல்லது வாழ்க்கைத் துணையோ இறப்பது மனதளவில் குடும்பத்தைப் பெரிதும் பாதிக்கிறது. மற்றொன்று, அவர் இதுவரை கொண்டுவந்த வருமானம் சடாரென்று நின்றுவிடுவதால் நிதி நெருக்கடி ஏற்படுகிறது. அதனால் குடும்பத்தினர் தங்களது வாழ்க்கைத் தரத்தை சடாரென்று குறைக்க வேண்டிய நெருக்கடி ஏற்படலாம். கணவரோ மனைவியோ இறந்துவிட்டால் அதுவரை வேலை செய்யாத பார்ட்னர், திடீரென்று வேலைக்குச் செல்ல வேண்டிய அவசியம் ஏற்படலாம். முதலாம் இழப்பு ஈடுகட்ட முடியாத இழப்பு. ஆனால், இரண்டாவது இழப்பைச் சரியாகத் திட்டமிட்டிருந்தால், தாராளமாகத் தவிர்க்கலாம்.

இரண்டாவது இழப்பை ஈடுகட்டுவதற்குத்தான் நாம் டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுக்கப் பரிந்துரைக்கிறோம். உதாரணத்திற்கு, குடும்பத்தில் ஒருவர் வருடத்திற்கு ரூ. 5 லட்சம் சம்பாதிக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். எதிர்பாராத விதத்தில் அவர் இறந்தால், அவர் வீட்டிற்குக் கொண்டுவந்த வருமானத்தை இழக்கக் கூடாது. அதற்கு அவரின் பெயரில் ரூ. 75 – 100 லட்சத்திற்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்திருக்க வேண்டும். அவ்வாறு எடுத்திருந்தால், அவர் இறந்த பிறகு அந்த 75 – 100 லட்சம் அவரது வாழ்க்கைத் துணைக்குக் கிடைக்கும். அந்தப் பணத்தை ஒரு வங்கியில் டெபாசிட் செய்தால், அவரது வாழ்க்கைத் துணைக்கு ரூ. 5.25 – 7 லட்சம் வருடத்திற்கு (டெபாசிட்டிற்கு வட்டி ஆண்டிற்கு 7%  என்ற அடிப்படையில்) கிடைக்கும். அசல் அப்படியே இருக்கும். இந்த வகையில் குடும்பத்தின் வாழ்க்கைத் தரம் குறையாமல் பார்த்துக்கொள்ளலாம். பொதுவாக நாம் ஒவ்வொருவரும் நமது ஆண்டு வருமானத்தைப் போல 15 – 20 மடங்கிற்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்துக்கொள்வது அவசியம். அவ்வாறு எடுக்கும்போது ‘பிளைன் வெண்ணிலா’ டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்துக் கொள்வது நன்று! அதுதான் குறைந்த விலையில் அதிக கவரேஜைக் கொடுக்கும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பணம் பழகலாம்! - 4

சரி, டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுக்கத் தயார். ஆனால், அது மிகவும் காஸ்ட்லியாக இருக்குமே? கவலை கொள்ள வேண்டாம்! 30 வயது நபர், தான் ரிட்டையர் ஆகும் வரை (58 வயது), அடுத்த 28 வருடங்களுக்கு இந்த டேர்ம் இன்ஷூரன்ஸை ரூ. 1 கோடிக்கு எடுக்க விரும்பினால் அவர் செலுத்த வேண்டிய வருடாந்திர பிரிமியம் ரூ 9,000-த்திற்கும் குறைவுதான்! நாள் ஒன்றுக்கு வெறும் ரூ. 25 தான். இது நீங்கள் அன்றாடம் ஓரிரு முறை அருந்தும் டீ/ காபிக்கான செலவுதான்! இவ்வளவு மலிவான விலையில் கிடைத்தும் பலர் டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுக்க யோசிக்கிறார்கள். அவர்கள் சொல்வது, எனக்குப் பணம் திரும்ப வராதே என்பதுதான்! பணம் திரும்ப வரவேண்டும் என்பதற்காகப் பலர் யோசிக்காமல் எண்டோவ்மென்ட், ஹோல்-லைஃப், மணிபேக் போன்ற பாலிசிகளில் தங்கள் பணத்தைப் போடுகிறார்கள். அந்தத் தவற்றைச் செய்யாதீர்கள், ப்ளீஸ்!

எண்டோவ்மென்ட் பாலிசிகளில் வருடத்திற்கு ரூ. 50,000 போடுவதற்குப் பதிலாக, கீழ்க்கண்ட முறையைக் கையாளுங்கள். 50 லட்சத்திற்கு டேர்ம் பாலிசியை எடுத்துக்கொள்ளுங்கள். அதற்கு சுமார் ரூ. 5,000 செலவாகும். எஞ்சிய ரூ. 45,000-த்தை மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்து கொள்ளுங்கள். நெருக்கடி காலகட்டத்தில் குடும்பத்திற்கு ரூ. 50 லட்சம் + உங்களின் முதலீட்டு வேல்யூ கிடைக்கும். நீங்கள் பாலிசி முடியும் வரை நன்றாக இருந்தால், நல்ல முதலீட்டு வேல்யூ கிடைக்கும். அவ்வாறு மியூச்சுவல் ஃபண்டுகளில் இருந்து உங்களுக்குக் கிடைக்கும் முதிர்வுத் தொகை, எண்டோவ்மென்ட் பாலிசிகளில் இருந்து கிடைத்திருக்கும் தொகையைவிட, குறைந்தது இரு மடங்கு அதிகமாக இருக்கும். ஆக மொத்தத்தில் உங்களுக்குப் போதுமான ஆயுள் காப்பீடும் கிடைக்கும், நல்ல லாபத்துடன் கூடிய முதிர்வுத் தொகையும் கிடைக்கும்.

மொத்தத்தில் நம்மைச் சார்ந்திருப்போரின் நலத்திற்காக நாம் டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்துக் கொள்வது அவசியம்! பொதுவாக 58 வயதிற்குமேல் ரிட்டையர் ஆகி பென்ஷன் வாங்குபவர்களுக்கு, டேர்ம் இன்ஷூரன்ஸ் தேவையில்லை. சம்பாதிக்கும் வயதில் இருக்கும் ஒவ்வொருவரும் டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்துக்கொள்வது அவசியம்.

எண்டோவ்மென்ட் பாலிசியோ அல்லது யூலிப் பாலிசியோ யார் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். ஆனால், சம்பாதிப்பவர்கள் மட்டுமே டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்துக் கொள்ள முடியும். சம்பாத்தியம் இல்லாதவர் களுக்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசியை இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் வழங்க மறுத்துவிடும். மேலும், டேர்ம் இன்ஷூரன்ஸ், முழு மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகே உங்களுக்கு வழங்கப்படும் என்பதை நினைவில் கொள்க!

உங்கள் குடும்பத்தை நினைவில் கொண்டு, டேர்ம் இன்ஷூரன்ஸை இன்றே எடுத்து விடுங்கள். வேலைக்குச் சேர்ந்தவுடன் இதுவே உங்களின் முதல் செலவாக இருக்கட்டும்!

- வரவு வைப்போம்...