சமூகம்
Published:Updated:

ரத யாத்திரைக்காக 144 - சர்ச்சையில் கலெக்டர்

ரத யாத்திரைக்காக 144 - சர்ச்சையில் கலெக்டர்
பிரீமியம் ஸ்டோரி
News
ரத யாத்திரைக்காக 144 - சர்ச்சையில் கலெக்டர்

ரத யாத்திரைக்காக 144 - சர்ச்சையில் கலெக்டர்

யோத்தியிலிருந்து புறப்பட்டு நான்கு மாநிலங்களைக் கடந்துவந்த ரத யாத்திரை, தமிழக எல்லையில் நுழைந்தபோது டென்ஷன் எகிறியது. ‘தமிழகத்துக்குள் ரத யாத்திரையை அனுமதிக்க மாட்டோம்’ என்று போராடிய அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் போலீஸாரால் கைது செய்யப்பட்டதால் பதற்றம் கூடியது.

‘ராம ராஜ்ஜியத்தை மீண்டும் அமைக்க வேண்டும், ராமஜென்ம பூமியில் ராமர் கோயிலைக் கட்ட வேண்டும், கல்வித் திட்டத்தில் ராமாயணத்தைப் பாடமாகச் சேர்க்க வேண்டும், தேசிய வாராந்திர விடுமுறையாக வியாழக்கிழமையை அறிவிக்க வேண்டும், சர்வதேச ஹிந்து தினம் அனுசரிக்கப்பட்ட வேண்டும்’ என்ற ஐந்து கோரிக்கைகளை வலியுறுத்தி, பிப்ரவரி 13-ம் தேதி அயோத்தியிலிருந்து ராம ராஜ்ஜிய ரத யாத்திரை புறப்பட்டது.

ஸ்ரீராமதாச மிஷன் யுனிவர்சல் சொசைட்டி என்ற அமைப்பின் சார்பாக தொடங்கப்பட்ட இந்த ரத யாத்திரை உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், மகாராஷ்ட்ரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களைக் கடந்து தமிழகம் வழியாகச் சென்று, திருவனந்தபுரத்தில் முடிவடையும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த ரத யாத்திரைக்கு, பிற மாநிலங்களில் எந்த எதிர்ப்பும் கிடையாது. மார்ச் 20-ம் தேதி கேரளாவிலிருந்து தமிழக எல்லையான நெல்லை மாவட்டம் புளியரை, கோட்டை வாசல் பகுதி வழியாக ரத யாத்திரை தமிழகத்துக்குள் செல்லும் என அறிவிக்கப்பட்டபோது, எதிர்ப்பு எழுந்தது.

ரத யாத்திரைக்காக 144 - சர்ச்சையில் கலெக்டர்

ரத யாத்திரையை அனுமதிக்கக் கூடாது எனப் பல்வேறு அரசியல் கட்சியினரும், அமைப்பினரும் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்தனர். தமிழ்தேச மக்கள் முன்னணியின் தலைவரான மீ.த.பாண்டியன் தலைமையில், ‘காவி பயங்கரவாத எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு’ என்கிற அமைப்பு உருவாக்கப்பட்டது. பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்புகளின் நிர்வாகிகள் பங்கேற்ற கூட்டத்தை நடத்தி, ரதத்தைத் தமிழகத்துக்குள் அனுமதிக்கக் கூடாது என முடிவெடுத்தனர். பதற்றம் தொற்றியச் சூழலில், நெல்லை மாவட்டத்தில் 19-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பித்து உத்தரவிட்டார், நெல்லை கலெக்டர் சந்தீப் நந்தூரி.

இது தொடர்பாகக் கருத்து தெரிவித்த தி.மு.க எம்.பி-யான கனிமொழி, ‘‘பாரபட்சமற்று செயல்பட்டு, அரசியல் அமைப்புச் சட்டத்தையும், அடிப்படை உரிமைகளையும் காப்பாற்ற வேண்டிய ஐ.ஏ.எஸ் அதிகாரியான சந்தீப் நந்தூரி, மத உணர்வுடன், ஒரு மதத்துக்கு ஆதரவாகவும் கலவரத்தைத் தூண்டுவோருக்கு ஊக்கமளிக்கும் வகையிலும் பிறப்பித்துள்ள 144 தடை உத்தரவு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. நடத்தை விதிகளை மீறிச் செயல்பட்டுள்ள அவர்மீது, அகில இந்திய அதிகாரிகள் நடத்தை விதிகளின்படி, தமிழக அரசு ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

ரத யாத்திரைக்கு எதிர்ப்புத் தெரிவிக்க நெல்லை மாவட்டத்துக்கு வந்த தொல்.திருமாவளவன், வேல்முருகன், ஜவாஹிருல்லா, கோவை ராமகிருட்டிணன், கொளத்தூர் மணி உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்தப் போராட்டத்தின் ஒருங்கிணைப்பாளரான மீ.த.பாண்டியன், நாம் தமிழர் கட்சியின் சீமான் ஆகியோரை போலீஸார் தேடினர். போலீஸாரின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு பைக்கில் செங்கோட்டைக்கு வந்தார் சீமான். ரத யாத்திரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தொண்டர்களுடன் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட சீமான், ‘‘மத்திய அரசு, தமிழகத்தில் வன்முறையைத் தூண்டிவிட்டு அதன் மூலமாக அரசியல் லாபம் அடைய முயற்சி செய்கிறது. நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக நடத்தப்படும் இதுபோன்ற யாத்திரைகளைத் தடை செய்ய வேண்டும்’’ என்றார் சூடாக.

ரத யாத்திரைக்காக 144 - சர்ச்சையில் கலெக்டர்

மீ.த.பாண்டியன், ‘‘அயோத்தி நிலம் தொடர்பாக ஒரு சர்ச்சையை உருவாக்கி, சிறுபான்மையினர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே இந்த ரத யாத்திரையின் நோக்கம். இதை எதிர்க்கா விட்டால், அவர்களின் அந்த நோக்கங்களையும், அதற்கு ஆதரவான கருத்துகளையும் தமிழகம் ஏற்றுக்கொண்டதாகிவிடும். அதனாலேயே நாங்கள் எதிர்க்கிறோம்’’ என்றார்.

இந்த ரத யாத்திரையை வழிநடத்தும் ஸ்ரீசக்தி சதானந்த மகரிஷி, ‘‘நாங்கள் கடந்த 27 ஆண்டுகளாக ராம ராஜ்ஜிய ரத யாத்திரையை நடத்தி வருகிறோம். இந்த ஆண்டு அயோத்தியில் புறப்பட்ட இந்த யாத்திரை, 6,000 கிலோமீட்டர் தூரத்தைக் கடந்து அடுத்ததாக திருவனந்தபுரம் செல்கிறது. இந்தியாவில் ராம ராஜ்ஜியத்தை அமைக்கவும், அயோத்தியில் ராமர் கோயிலைக் கட்டவும், இந்த யாத்திரையை நடத்துகிறோம். தமிழகத்தைத் தவிர எங்கும் எங்களுக்கு எதிர்ப்பு வரவில்லை’’ என்று முடித்துக்கொண்டார்.

- பி.ஆண்டனிராஜ்
படங்கள்: எல்.ராஜேந்திரன்