சமூகம்
Published:Updated:

“இந்தப் படம் சசிக்கு ரொம்பப் பிடிக்கும்!”

“இந்தப் படம் சசிக்கு ரொம்பப் பிடிக்கும்!”
பிரீமியம் ஸ்டோரி
News
“இந்தப் படம் சசிக்கு ரொம்பப் பிடிக்கும்!”

“இந்தப் படம் சசிக்கு ரொம்பப் பிடிக்கும்!”

ப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா இருந்தபோது ம.நடராசனின் அக்கா வனரோஜா, ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு சசிகலாவின் அண்ணன் மகன் மகாதேவன், சசிகலாவின் அண்ணி சந்தானலெட்சுமி, இப்போது சசிகலாவின் கணவர் நடராசன் என அடுத்தடுத்து நிகழ்ந்துவரும் மரணங்கள் சசிகலாவையும் அவரின் குடும்பத்தினரையும் மிகுந்த கவலையில் ஆழ்த்தியுள்ளன.

பரோல் நிமிடங்கள்

‘நடராசனுக்கு உடல்நிலை மோசமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்’ என்ற தகவல் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலாவுக்குத்  தெரிவிக்கப்பட்டது. அதைக் கேட்டுக் கலங்கிய சசிகலா, தன் கணவரை உடனே பார்க்கத் துடித்தார். ஆனால், பரோல் பிரச்னை குறுக்கே நின்றது. ஓர் ஆண்டுக்கு இரு முறை, ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மட்டுமே பரோல் என்பது சிறை விதிமுறை. எனவே, நீதிமன்றத்தை அணுகலாம் என்று முடிவுசெய்துள்ளனர். அதற்குள், நடராசன் இறந்துவிட்டார் என்ற தகவல் மார்ச் 20-ம் தேதி அதிகாலையில் சசிகலாவுக்குத் தெரிவிக்கப்பட்டது. கதறியழுதுள்ளார் சசிகலா. அவருக்கு ஆறுதல் சொல்ல அருகே இருந்த ஒரே நபர், இளவரசிதான்.

வழக்கறிஞர்கள் அசோகனும், சுரேஷ்பாபுவும் சசிகலாவுக்கு 15 நாள் பரோல் கேட்டு, சிறை அதிகாரிகளிடம் மார்ச் 20 காலை 7.15 மணிக்கு மனு அளித்தனர். காலை 9.50-க்கு சசிகலாவின் மனுவை ஆய்வு செய்யத் தொடங்கினார் சிறை கண்காணிப்பாளர் சோமசேகர். தமிழக போலீஸாரிடம் சில விவரங்களை சோமசேகர் உறுதிசெய்துகொண்டார். பிறகு, சசிகலாவிடம் பரோலில் செல்ல விருப்பமனு கேட்டு வாங்கப்பட்டது. கர்நாடக சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி மெகரிக் அனுமதி பெற்று, பகல் 12.30 மணியளவில் சிறை அறையிலிருந்து சிறை கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு சசிகலா சென்றார். அங்கு படிவம் 9-ல் சசிகலாவிடம் கையெழுத்து வாங்கப்பட்டது.

“இந்தப் படம் சசிக்கு ரொம்பப் பிடிக்கும்!”

சலனமில்லா முகம்!

சசிகலா கிளம்பும்போது சுதாகரனும் இளவரசியும் கதறியழுதுள்ளனர். ‘தனக்கு பரோல் கிடைக்காதே’ என்று மிகவும் வருத்தப்பட்டுள்ளார் இளவரசி. சிறை வளாகத்தை விட்டு வெளியே வந்த சசிகலாவின் முகத்தில் எந்தச் சலனமும் இல்லை. ஜெயலலிதாவின் பர்சனல் பி.ஏ-வாக இருந்த கார்த்திக், ஸ்ரீபெரும்புதூர் முன்னாள் எம்.எல்.ஏ-வான பெருமாள் ஆகியோர், ஜெ. பயன்படுத்திய காரை பெங்களூருக்குக் கொண்டுவந்தனர். அதில் ஏறி தஞ்சாவூருக்குப் புறப்பட்டார் சசிகலா. தர்மபுரியை அடுத்த தொப்பூர் டோல்கேட் வந்தபோது, முன்னாள் அமைச்சர்கள் பழனியப்பனும் செந்தில்பாலாஜியும் சசிகலாவைச் சந்தித்தனர். பழனியப்பனுக்குச் சில உத்தரவுகளைச் சசிகலா பிறப்பித்துள்ளார். மதிய உணவு பார்சலை, காரின் பின் சீட்டில் அமர்ந்திருந்த கார்த்திக்கிடம் கொடுத்தார், பழனியப்பனின் மகன் எழில் மறவன். சசிகலாவுக்காக முசிறியில் காத்திருந்த தினகரன், சசிகலா கார் வந்தவுடன் அதில் ஏறிக்கொண்டார்.

தள்ளுமுள்ளு!


சென்னை பெசன்ட் நகரில் உள்ள நடராசனின் இல்லத்தில் அவருடைய உடல், அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின், ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உள்பட ஏராளமான அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். மதியம் அவரது உடல் தஞ்சாவூருக்கு எடுத்துச்செல்லப்பட்டது. அவரை அடக்கம் செய்ய, சொந்த ஊரான விளாரிலும், தஞ்சாவூரில் முள்ளிவாய்க்கால் முற்றத்துக்கு எதிரேயும் இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, சுத்தம் செய்யப்பட்டன. சசிகலா வருகிறார் என்றவுடன், அந்தப் பகுதி முழுவதையும் நகராட்சி ஊழியர்கள் சுத்தம் செய்து, கொசு மருந்து அடித்தனர். விளார் செல்லும் சாலையின் இருபுறங்களிலும் மண்டியிருந்த காட்டுச் செடிகளை நெடுஞ்சாலைத் துறையினர் வெட்டிச் சுத்தம் செய்தனர். குண்டும் குழியுமாக இருந்த அந்தச் சாலை உடனடியாக சரிசெய்யப்பட்டது.

ஒதுங்கிய விவேக்!

இந்த நிலையில், விளாருக்குச்செல்லாமல், தஞ்சாவூர் பரிசுத்தம் நகர் 2-வது தெருவில் இருக்கும் நடராசனின் வீட்டுக்கு இரவு 7.15 மணிக்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டது. ஏராளமானோர் திரண்டதால், அந்தப் பகுதி கூச்சலும் குழப்பமுமாக இருந்தது. எனவே, கூட்டத்தை ஒழுங்குபடுத்துமாறு காவல்துறை உயரதிகாரிகளிடம் சசிகலா உறவினர்கள் கேட்டுக்கொண்டனர். அதன்பிறகு, தடுப்புகள் அமைத்துக் கூட்டத்தை போலீஸார் ஒழுங்குபடுத்தினர்.

“சின்னம்மா எப்போ வருவார்?’’ என ஆதரவாளர் ஒருவர் கேட்டபோது, ‘‘நானா கார் ஓட்டிக்கிட்டு வர்றேன்? இல்லை, நான்தான் அழைச்சுட்டு வர்றேனா? என்கிட்ட போய் கேட்கிற...” என அவரிடம் திவாகரன் கடுகடுத்தார். திவாகரனுக்கு அருகிலேயே அவருடைய மகன் ஜெயானந்த் நின்றுகொண்டிருந்தார். இளவரசியின் மகன் விவேக், எதிலும் கலந்துகொள்ளாமல் ஒதுங்கியே இருந்தார்.

கோபப்படுத்திய கோஷம்!

இரவு 7.45 மணியளவில் சசிகலா வந்தார். அவர் வந்த கார், போர்டிகோவில் நிறுத்தப்பட்டது. காரைச் சுற்றி ஏராளமான தொண்டர்கள் கூடினர். முன் சீட்டில் அமர்ந்திருந்த சசிகலா, அழுதவாறே இருந்தார். அவருடன் காருக்குள் டி.டி.வி.தினகரனும் இருந்தார். கூட்ட நெரிசல் காரணமாக, சசிகலாவால் காரைவிட்டு இறங்க முடியவில்லை. சுமார் கால் மணி நேரம் காருக்குள்ளேயே சசிகலா இருந்தார். கண்களில் கண்ணீர் வழிந்தோட, கண்ணீரைத் துடைக்காமலே அவர் அமர்ந்திருந்தார். கூட்டத்தை அப்புறப்படுத்த முடியாமல், போலீஸார் திணறினர். ‘தியாகத் தலைவி சின்னம்மா’ என்பது போன்ற கோஷங்களைத் தொண்டர்கள் எழுப்பினர். இதனால் டென்ஷனான சசிகலா, தினகரனை முறைத்துப் பார்த்தார். உடனே காரை விட்டு இறங்கிய தினகரன், தானே கூட்டத்தை விலக்கிவிட்டு, சசிகலாவை வீட்டுக்குள் அழைத்துச் சென்றார். நடராசன் உடல் அருகே நின்று தேம்பி அழுத சசிகலா, பிறகு யாரிடமும் பேசாமல் மாடிக்குச் சென்றுவிட்டார். அவருடன், சில பெண்கள் துணைக்குச் சென்றனர்.

முசிறியிலிருந்து சசிகலாவும், தினகரனும் ஒரே காரில் வந்தபோதிலும், அவர்கள் இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லையாம். பெரும் சோகத்தில் இறுக்கமாக இருந்த சசிகலா, கண்ணீர் சிந்தியபடியே வந்தாராம். செய்தியாளர்களிடம் தினகரன் பேசியபோதுகூட, “சின்னம்மா என்னிடம் எதுவும் பேசவில்லை. அவர் எத்தனை நாள் பரோலில் வந்திருக்கிறார் என்றுகூட எனக்குத் தெரியாது” என்றார்.

“இந்தப் படம் சசிக்கு ரொம்பப் பிடிக்கும்!”

சசிகலா வாழாத வீடு!

உறவினர்களில் பலர் தங்கள் ஆதங்கத்தை அழுகையுடன் சேர்த்து வெளிப்படுத்தினர். “அண்ணி ஜெயிலுக்குப் போய்விட்ட கவலையிலேயே அண்ணனுக்கு உடல்நிலை மோசமாயிருச்சு” என உறவினர் ஒருவர் கவலையுடன் புலம்பினார். சசிகலாவின் உறவுக்காரப் பெண் ஒருவர், “அரண்மனை போன்ற இந்த வீட்டை சசிகலாவுக்காக ஆசை ஆசையாக நடராசன் கட்டினார். விலையுயர்ந்த பளிங்குக் கற்களால் இந்த வீடு கட்டப்பட்டது குறித்துப் பெரும் சர்ச்சைகூட எழுந்தது. இந்த வீட்டில், சசிகலாவுடன் சேர்ந்து வாழ வேண்டுமென நடராசன் ஆசைப்பட்டார். ஆனால், ஒரு நாள்கூட இந்த வீட்டில் சசிகலா தங்கியதில்லை. தஞ்சாவூரில் இளவரசியின் மகன் விவேக்குக்குத் திருமண வரவேற்பு நடந்தபோதுகூட, சசிகலா இந்த வீட்டில் தங்கவில்லை. மகாதேவன் வீட்டில் தங்கிதான் விழாவுக்கு அவர் வந்தார். நடராசனைப்போல அவருடைய ஆசையும் இங்கு செத்துக்கிடக்கிறது. இப்போதுதான், 15 நாள் இந்த வீட்டில் சசிகலா தங்குவதற்கு காலம் அனுமதித்துள்ளது” என்று வேதனையுடன் கதறினர்.

சசிக்கு பிடித்த போட்டோ!


அந்த வீட்டில் எங்கு திரும்பினாலும் சசிகலாவும் நடராசனும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களே காட்சியளித்தன. நாய்க்குட்டி ஒன்றை இருவரும் வைத்துக்கொண்டிருக்கும் ஒரு புகைப்படமும் சுவரில் மாட்டப்பட்டுள்ளது. ‘‘இந்தப் படம் சசிக்கு ரொம்பப் பிடிக்கும்’’ என நடராசன் தனக்கு நெருக்கமானவர்களிடம் அடிக்கடி சொல்வாராம்.

அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பலர் நடராசன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். ஆனால், முதல்வர் எடப்பாடி பழனிசாமியோ, துணை முதல்வர் பன்னீர்செல்வமோ ஓர் இரங்கல் அறிக்கைகூட வெளியிடவில்லை என்று உறவினர்கள் சிலர் ஆதங்கப்பட்டனர். செய்தியாளர்களைச் சந்தித்த திவாகரன், “அ.தி.மு.க-வுக்கு இக்கட்டான சூழல் ஏற்பட்டபோதெல்லாம், அந்தக் கட்சியை மீட்பதற்குப் பாடுபட்டவர் நடராசன். இன்றைக்கு அந்தக் கட்சி சுக்குநூறாக உடைந்துகிடக்கிறது. அதைத் தாங்கிகொள்ள முடியாமல்தான், அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்துவிட்டார். அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் என நிறையபேர் எங்களிடம் போனில் தொடர்புகொண்டு துக்கம் விசாரித்தார்கள்” என்றார்.

‘‘நடராசனும் சசிகலாவும் சேர்ந்து வாழவில்லை என்றாலும், எங்கள் குடும்பங்களையெல்லாம் உயர்த்திவிட்ட புண்ணியத்தைச் செய்திருக்கிறார்கள். அதற்காக அவர்களுக்கு நன்றிக்கடன்பட்டிருக்கிறோம்’’ என்று சோகத்திலும் வாழ்த்தினார்கள் சசிகலாவின் உறவினர்கள்.

- கே.குணசீலன், எம்.வடிவேல்
படங்கள்: ம.அரவிந்த், வி.ஸ்ரீனிவாசுலு , க.மணிவண்ணன்

“இந்தப் படம் சசிக்கு ரொம்பப் பிடிக்கும்!”

மாறிய முகவரி!

‘பெ
ங்களூரு மத்திய சிறைக் கைதி எண்: 9234 சசிகலா w/o நடராஜ். 20-3-2018 அன்று சசிகலாவின் கணவர் நடராஜ் இறந்துவிட்டார். அவரது இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள 20-3-2018 அன்றிலிருந்து 03-4-2018 வரையிலான 15 தினங்கள் பரோல் விடுமுறையில் செல்ல அனுமதிக்கப்படுகிறார்’ எனக் கடிதம் கொடுத்துள்ளது பரப்பன அக்ரஹாரா. சசிகலாவுக்கு பரோல் கேட்டுச் சிறை நிர்வாகத்திடம் அளிக்கப்பட்ட மனுவில், நடராசனின் வீட்டு முகவரியாக, ‘12-வது தெரு, பரிசுத்தம் நகர்’ என இருந்துள்ளது. ஆனால், மனுவுடன் அளித்த ஆவணங்களில், ‘2-வது தெரு, பரிசுத்தம் நகர்’ என இருந்துள்ளது. இது தொடர்பாக, தமிழக போலீஸாரைப் பெங்களூரு சிறை அதிகாரிகள் தொடர்புகொண்டு, சரியான முகவரி உள்ள ஆவணத்தின் நகலை அனுப்புமாறு கேட்டுள்ளனர். உடனே, நடராசன் வீட்டுக்கு வந்த போலீஸார், தொலைபேசி கட்டணம் செலுத்திய பில்லை போட்டோ எடுத்து வாட்ஸ்அப் மூலம் அனுப்பினர். அதன் பிறகுதான், பரோல் மனு ஏற்கப்பட்டுள்ளது. இதனால்தான் சசிகலா வெளியே வருவதில் தாமதம் ஏற்பட்டது.