சமூகம்
Published:Updated:

பைசா செலவில்லாமல் வேலை!

பைசா செலவில்லாமல் வேலை!
பிரீமியம் ஸ்டோரி
News
பைசா செலவில்லாமல் வேலை!

இது வேலை தேடுவோருக்கான அரசின் இணையதளம்

வேலைவாங்கித் தருவதாகப் பல ரக மோசடிகள் நடப்பது உண்டு. ‘வேலைவாய்ப்பு தரும் இணையதளம்’ என வாட்ஸ்அப் தகவலில் வரும் இணைப்புகளைச் சொடுக்கினால், அவை நம்மை வேறு எங்கோ பணம் பிடுங்கும் தளத்துக்கு இழுத்துச் செல்லும். அதுபோன்ற மோசடிகளில் மாட்டிக்கொள்ளத் தேவையில்லை; பணம் செலவழிக்க வேண்டிய அவசியமும் இல்லை. ஒரு பைசா செலவு இல்லாமல் வேலை கிடைக்கும். https://www.ncs.gov.in/Pages/default.aspx என்ற ‘தேசிய வேலைவாய்ப்பு சேவை’ இணையதளத்தை மத்திய அரசின் தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் தொடங்கியுள்ளது. இதில் வேலை தேடும் இளைஞர்கள் தங்களைப் பற்றிய தகவல்களைக் கட்டணம் ஏதுமின்றி இலவசமாகப் பதிவு செய்யலாம். வேலை தரும் நிறுவனங்களும் இந்த இணையதளத்தில் பதிவு செய்யலாம். வேலை தேடுவோரையும், வேலை தரும் நிறுவனங்களையும் இணைக்கும் பாலமாக இந்த இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.

பைசா செலவில்லாமல் வேலை!

எப்படிப் பதிவு செய்வது?

வேலை தேடுவோர் மேற்குறிப்பிட்ட தளத்துக்குச் சென்று புதிய பதிவர் (New User? Sign up) என்பதைத் தேர்வு செய்ய வேண்டும். பின்னர் உள்ளே சென்று ‘வேலை தேடுபவர்’ என்ற பிரிவைத் தேர்வு செய்ய வேண்டும். அதில் வரும் படிவத்தில், பெயர், முகவரி, கல்வித்தகுதி போன்றவற்றைப் பதிவு செய்ய வேண்டும். ஆதார் எண், பான் கார்டு எண் அல்லது அரசின் அங்கீகரிக்கப்பட்ட ஓர் அடையாள அட்டையின் எண்ணைப் பதிவுசெய்ய வேண்டும். உங்களுக்கான லாக் இன் ஐ.டி., பாஸ்வேர்டு ஆகியவற்றை நீங்களே உருவாக்க வேண்டும். அதைப் பயன்படுத்தியே மீண்டும் இந்த இணையதளத்துக்குள் செல்ல முடியும். உங்களுடைய தகுதிக்கு ஏற்ற பணிகள் இருந்தால், மின்னஞ்சலில் தகவல் அனுப்பப்படும்.

யாரெல்லாம் பதிவு செய்யலாம்?

வேலை தேடுவோர் தவிர, வேலை கொடுக்கும் நிறுவனங்கள், உள்ளூர் சேவை அளிப்பவர்கள், (கார்பென்டர், கம்ப்யூட்டர் ரிப்பேர் செய்பவர், அழகுக்கலை நிபுணர், எலெக்ட்ரீஷியன் உள்ளிட்டோர்), திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிப்பவர்கள், வேலைவாய்ப்பு ஆலோசனைகள் வழங்குவோர், தனியார் நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள் என வேலைவாய்ப்பு தரும் அனைவருமே பதிவு செய்யலாம். அவர்கள் தேடும் தகுதியுள்ள நபர்கள் பற்றிய விவரங்கள் அவர்களுக்கு அளிக்கப்படும். தொழில் நிறுவனங்கள் பதிவுசெய்யும்போது நிறுவனத்தின் பெயர், லைசென்ஸ், மின்னஞ்சல் முகவரி, நிறுவனத்தின் இணையதளம் போன்றவற்றைக் குறிப்பிட வேண்டும்.

பைசா செலவில்லாமல் வேலை!

இணையதள வசதி இல்லாதவர்கள் என்ன செய்வது?

கம்ப்யூட்டர் மற்றும் இணையதள வசதி இல்லாதவர்களும் இதில் பதிவுசெய்து பலன் பெறலாம். இதற்காக, நாடு முழுவதும் உள்ள 811 தலைமைத் தபால் நிலையங்களில் குறைந்த கட்டணத்தில் பதிவுசெய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மண்டல அஞ்சல் துறைத் தலைவர் ஆனந்திடம் பேசினோம். ‘‘தேசிய வேலைவாய்ப்பு சேவை இணையதளத்தில் பதிவு செய்யும் வசதி, முதல் கட்டமாக 2017-ம் ஆண்டு பிப்ரவரியில் ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் நகரங்களில் உள்ள தலைமைத் தபால் நிலையங்களில் தொடங்கப்பட்டது. அது, அங்கு வெற்றி பெற்றதையடுத்து, 2017 டிசம்பர் முதல் நாடு முழுவதும் உள்ள 811 தலைமைத் தபால் நிலையங்களில் அதை அறிமுகம் செய்திருக்கிறோம்.

அதன்படி, ஒவ்வொரு தலைமைத் தபால் நிலையத்தின் சார்பிலும் இந்த இணையதளத்துக் குள் செல்வதற்கு, தனியாக லாக் இன் ஐடி, பாஸ்வேர்ட் உருவாக்கப்பட்டுள்ளன. அதை வைத்து, எங்களை அணுகும் வேலை தேடுவோர் பற்றிய தகவல்களைப் பதிவுசெய்து தருகிறோம். பதிவு செய்வதற்கு 15 ரூபாய் கட்டணம். ஏற்கெனவே பதிவுசெய்யப்பட்ட தகவல்களை அப்டேட் செய்ய வேண்டுமென்றால், ரூ. 5 கட்டணம் வசூலிக்கப்படும். பதிவு செய்த விவரங்களைப் பிரின்ட் அவுட் எடுக்க 10 ரூபாய் வசூலிக்கிறோம். 

தமிழகத்தில் உள்ள 94 தலைமைத் தபால் நிலையங்களிலும் இந்த வசதி உள்ளது. மதுரை, தேனி மாவட்டங்க ளில் உள்ள தலைமைத் தபால் நிலையங்களில் அதிகம் பேர் பதிவு செய்திருக்கின்றனர். இது பற்றிய தகவல்கள் சரியாகத் தெரியாததால், மற்ற பகுதிகளில் பதிவுசெய்வோர் எண்ணிக்கை குறைவாகவே இருக்கிறது. வேலை தேடும் இளைஞர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளலாம்’’ என்றார்.

வேலைவாய்ப்புத் தகவல்கள்

வேலை தேடுவோர் இந்தத் தளத்தில் பதிவு செய்தால், அவர்களைப் பற்றிய தகவல்கள் வேலை கொடுப்பவர்களுக்கு உடனடியாகப் பரிமாறப்படுகின்றன. தினமும் இந்த இணையதளத்தில் இந்தியா முழுவதும் உள்ள வேலைவாய்ப்புகள் பற்றிய தகவல்கள் அப்டேட் செய்யப்படுகின்றன. அதில் தொடர்பு கொள்வதற்கான முகவரி, தொடர்பு கொள்ள வேண்டிய நபர், மொபைல் எண் உள்ளிட்டவையும் இடம் பெற்றிருக்கின்றன.  எனவே, இந்த வழியிலும் வேலை தேடுவோர் பயன்பெறலாம். இந்தியா முழுக்க அரசு அல்லது தனியார் சார்பில் நடைபெறும் வேலைவாய்ப்பு முகாம்கள், வேலைவாய்ப்புப் பயிற்சிகள் குறித்த தகவல்களையும் இதில் பார்க்கலாம்.

பைசா செலவில்லாமல் வேலை!

சந்தேகங்களுக்கு...

இந்த இணையதளத்தின் சேவை தொடர்பான தகவல்களைத் தெரிந்து கொள்ள 1800-425-1514 என்ற கட்டண மில்லா தொலைபேசி சேவையைப் பயன் படுத்தலாம். அதில் தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் பேசலாம். 

- கே.பாலசுப்பிரமணி
படங்கள்: ப.சரவணகுமார்