சமூகம்
Published:Updated:

தேனாம்பேட்டைக்கு ரூ.5 கோடி... வேளச்சேரிக்கு ரூ.2 கோடி!

தேனாம்பேட்டைக்கு ரூ.5 கோடி... வேளச்சேரிக்கு ரூ.2 கோடி!
பிரீமியம் ஸ்டோரி
News
தேனாம்பேட்டைக்கு ரூ.5 கோடி... வேளச்சேரிக்கு ரூ.2 கோடி!

துப்பாக்கிகளோடு திரியும் கூலிப்படைகள்

சென்னையில் ஒரு ரவுடி கோஷ்டிக்கும்,  ஒரு தாதா கோஷ்டிக்கும் இடையே நடந்துவரும் மோதலின் க்ளைமாக்ஸாக, அந்த ‘கேங்’ லீடர்களின் தலைகளுக்குக் கோடிக்கணக்கில் கூலிப் படையினரிடம் விலை பேசப்பட்டுள்ளது. இந்தத் தகவலால் இரு தரப்பினர் மத்தியிலும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னையை அடுத்த மாங்காடு அருகே மலையம்பாக்கம் கிராமத்தில் பிரபல ரவுடி பினு, தன் கூட்டாளிகளுடன் பிறந்த நாள் கொண்டாடி பரபரப்பைப் பற்றவைத்த பிறகு தமிழக போலீஸாருக்குத் தூக்கம் இல்லை. அந்தச் சம்பவத்துக்குப் பிறகு, நீண்ட காலமாகத் தலைமறைவாக இருக்கும் ரவுடிகளைப் பிடிக்க வியூகம் அமைக்கப் பட்டுள்ளது. ஒருங்கிணைந்த குற்றப் புலனாய்வுப் பிரிவும் (ஓ.சி.ஐ.யூ), சென்னை மத்திய குற்றப்பிரிவில் செயல்படும் ரவுடிகளைக் கண்காணிக்கும் பிரிவும் இதற்காகக் களத்தில் இறங்கியுள்ளன. நுண்ணறிவுப் பிரிவும் உளவுப்பிரிவும் இதற்கு உதவுகின்றன. தமிழகம் முழுவதும் ரவுடிகள் பட்டியலில் உள்ளவர்களின் விவரங்களைத் தூசி தட்டி எடுத்த போலீஸார், அவர்களைப் பிடிப்பதில் தீவிரம் காட்டிவருகின்றனர்.

ஆனால், கேங் லீடர்கள், பிரபல தாதாக்கள், ரவுடிகள் பலர் போலீஸாருக்குப் போக்குக் காட்டி வருகின்ற னர். இந்த லிஸ்ட்டில் இருக்கும் சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்த பிரபல ரவுடிக்கும், வேளச்சேரியைச் சேர்ந்த பிரபல தாதாவுக்கும் நீறுபூத்த நெருப்பாக விரோதம் இருந்துவருகிறது. இவர்களை போலீஸ்  தேடும் நிலையில், இருவருமே ஒருவரை ஒருவர் ‘எலிமினேட்’ செய்ய எக்கச்சக்க பிளான் போட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

தேனாம்பேட்டைக்கு ரூ.5 கோடி... வேளச்சேரிக்கு ரூ.2 கோடி!

இவர்கள் இருவரின் கதைகளை விவரித்தனர் ஒருங்கிணைந்த குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸார். ‘‘அண்டை மாநில ஆண்டவரின் பெயர் கொண்ட வேளச்சேரி தாதா, அந்தப் பகுதியில் உள்ள செக்போஸ்ட் அருகே ஒரு பிஸ்கட் கம்பெனியில் கூலித் தொழிலாளியாக வேலை செய்தார். அப்போது, ஒரு செயின்பறிப்பில்  சிக்கிச் சிறை சென்றார். வெளியில் வந்தபிறகு நடைபாதை வியாபாரிகளை மிரட்டிப் பணம் பறித்தார். பிறகு ரியல் எஸ்டேட், கட்டப்பஞ்சாயத்து என அவரின் கிராஃப் எகிறியது. பல ஐ.டி கம்பெனிகளுக்கு அடாவடியாக இடம் வாங்கிக் கொடுத்து, கோடிகளில் கொழித்தார். கிழக்குக் கடற்கரைச் சாலையிலும், ஓ.எம்.ஆர் சாலையிலும் பெரிய லெவல் டீலிங்குகளில் வேளச்சேரி தாதாவைத் தாண்டி யாரும் உள்ளே நுழையமுடியாது. அவரது கட்டுப்பாட்டில்தான், ரியல் எஸ்டேட் பிசினஸ் நடந்தது. ரியல் எஸ்டேட் தொழிலுக்குள் முழுமையாக நுழைவதற்கு முன்பு, ஓர் இரட்டைக் கொலை உள்ளிட்ட பல வழக்குகளில் அடுத்தடுத்துச் சிக்கினார் வேளச்சேரி தாதா. ஒருமுறை குண்டர் சட்டத்திலும் உள்ளே போனார். இதனால், இந்த தாதாவின் பெயர், ரவுடிகள் சரித்திரப் பதிவேட்டிலும் இடம் பிடித்தது.

நேரடியாகக் களத்தில் இறங்காமல் ‘ஸ்கெட்ச்’ போட்டுக் காரியத்தைக் கச்சிதமாக முடிப்பதில் இவர் கில்லி. தன் மனம் குளிரும் அளவுக்கு சாகசம் செய்யும் அல்லக்கைகளுக்கு, தங்க மோதிரத்தைப் பரிசளித்து அழகு பார்ப்பது இவரது ஸ்டைல். சாதாரண கூலித் தொழிலாளியாக இருந்த இவர் வசம் இப்போதுள்ள சொத்துகளின் மதிப்பு பல கோடியைத் தாண்டும். பழைய வழக்குகள் பலவற்றிலிருந்து அவரை நீதிமன்றம் விடுவித்தது. ரியல் எஸ்டேட் திரைமறைவுப் பஞ்சாயத்துகளில் ஆதிக்கம் செலுத்தினாலும், கடந்த ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக இவர்மீது எந்த வழக்கும் புதிதாகப் பதிவுசெய்யப்படவில்லை.

வளர வளர எதிரிகளும் எக்கச்சக்கமாகப் பெருகிவிட்டனர். இதனால், போலீஸாரின் நடவடிக்கைகள், எதிரிகளின் நடமாட்டம் என எல்லாவற்றையும் கண்காணித்தபிறகே வேளச்சேரி தாதா வெளியில் செல்வார். முதலமைச்சர் கான்வாய் போல இதற்காக அவரின் ஆட்களால் தனி கான்வாய் போடப்படுகிறது. வேளச்சேரி தாதா, வீட்டிலிருந்து புறப்படுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பே அவரின் ஆதரவாளர்கள் காரில் சென்று ‘ரூட் கிளியர்’ என்று சிக்னல் கொடுத்தபிறகே அவரது கார் புறப்படும்.

இப்படி இவர் பாதுகாப்பாகத் தொழில் செய்த நேரத்தில்தான், திருட்டு சி.டி-களை விற்றுவந்த தேனாம்பேட்டையைச் சேர்ந்த ‘கரன்சி’ பெயருள்ள மனிதர் ஒருவர், பெரிய ரவுடியாக உருவெடுத்தார். இவரும் ரியல் எஸ்டேட் தொழிலில் கால்பதித்தார். இது, வேளச்சேரி தாதா தரப்பினருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. வேளச்சேரி தாதாவின் ஆதரவாளரான சைதாப்பேட்டை ரவுடியும், தேனாம்பேட்டை ரவுடி தரப்பும் துப்பாக்கிகளால் மோதிக் கொண்டனர்.குண்டுகள் பாய்ந்தாலும் சைதாப்பேட்டை ரவுடி உயிர்தப்பினார். ரியல் எஸ்டேட் டீலிங், வில்லங்க இடங்கள் தொடர்பான பஞ்சாயத்துகள் என இரு தரப்பினருக்கும் மோதல் தொடர்ந்தது. தேனாம்பேட்டை ரவுடிமீது நான்கு கொலை வழக்குகள் உள்பட 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. சில வழக்குகளிலிருந்து அவரை நீதிமன்றம் விடுதலை செய்தாலும், சைதாப்பேட்டை வழக்கில் தலைமறைவாகவே இருந்துவருகிறார்.

தன் ஆதரவாளரைத் துப்பாக்கியால் சுட்டதற்குப் பழிவாங்கவே, தேனாம்பேட்டை ரவுடிக்கு வேளச்சேரி தாதா தரப்பு ‘ஸ்கெட்ச்’ போட்டுள்ளது. இதற்காக, தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து ஆறு கூலிப்படைகள் களமிறக்கப்பட்டுள்ளன. இவர்களில் யார் தேனாம்பேட்டை ரவுடியைப் போட்டுத்தள்ளினாலும் ரூ.5 கோடி கிடைக்கும் என ரேட் பேசப்பட்டுள்ளது. காரியத்தை முடித்ததும் சிறப்பு கவனிப்பும் இருக்கும் என்று வேளச்சேரி தாதா ஆசை காட்டியுள்ளார். இந்தக் கூலிப்படைகள், கள்ளத் துப்பாக்கிகளுடன் சென்னையில் வலம்வருகின்றன. இந்தத் தகவல் கிடைத்ததும் தேனாம்பேட்டை ரவுடியும், வேளச்சேரி தாதாவின் தலைக்கு ரூ. 2 கோடி வரை விலைபேசி கூலிப்படையைக் களமிறக்கியுள்ளார்’’ என்கிறார்கள் போலீஸார்.

துப்பாக்கிகளிலிருந்து தோட்டாக்கள் பாய்வதற்கு முன்பு, போலீஸ் நடவடிக்கை எடுக்குமா?

- நமது நிருபர்