சமூகம்
Published:Updated:

“திண்டுக்கல் சீனிவாசனையும் விசாரிப்பேன்!”

“திண்டுக்கல் சீனிவாசனையும் விசாரிப்பேன்!”
பிரீமியம் ஸ்டோரி
News
“திண்டுக்கல் சீனிவாசனையும் விசாரிப்பேன்!”

விசாரணை அதிகாரி அதிரடி

‘தேவைப்பட்டால், தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனையும் விசாரிப்பேன்’ என்று கூறியிருக்கிறார், குரங்கணி காட்டுத்தீ விபத்து குறித்து விசாரிப்பதற்கு சிறப்பு விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள அதுல்ய மிஸ்ரா.

“திண்டுக்கல் சீனிவாசனையும் விசாரிப்பேன்!”

தேனி மாவட்டம் போடி அருகே உள்ள குரங்கணி மலைப்பகுதியில், மார்ச் 11-ம் தேதி ட்ரெக்கிங் சென்றவர்கள் காட்டுத்தீயில் சிக்கினர். அதில் 18 பேர் உயிரிழந்தனர், பலர் படுகாயம் அடைந்தனர். தமிழகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்திய இந்த விபத்து குறித்து விசாரிப்பதற்கு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை முதன்மைச் செயலர் அதுல்ய மிஸ்ரா, சிறப்பு விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். அவர், மார்ச் 21-ம் தேதி தேனிக்கு வந்தார். முதல்கட்டமாக, வருவாய்த் துறை, வனத்துறை, ஆம்புலன்ஸ் ஊழியர்கள், தீயணைப்புத் துறை, மலை கிராம மக்கள் என மீட்புப் பணியில் ஈடுபட்ட அனைவருடனும் அவர் ஆய்வுக்கூட்டம் நடத்தினார். அதைத் தொடர்ந்து, பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது, “விபத்து குறித்து ஆவணங்களோ, தகவல்களோ இருந்தால், அவற்றைப் பொதுமக்களும் அரசு அதிகாரிகளும் என்னிடம் தெரிவிக்கலாம். காயமடைந்து சிகிச்சை பெறுபவர்களையும் சந்திக்கிறேன். விசாரணையை விரைவில் முடித்து அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க உள்ளேன்” என்றார்.

மார்ச் 11 அன்று, குரங்கணி மலைப்பகுதியில் ட்ரெக்கிங் சென்றவர்கள் காட்டுத்தீயில் சிக்கினர். அன்றைய தினம்தான், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவியின் முன் முயற்சியில், இளைஞர் இளம்பெண்கள் பாசறை நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கலந்துகொள்வதற்காக வந்த வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனை வரவேற்பதற்காக, வனத்துறையினர் சென்றுவிட்டதாகச் சொல்லப்படுகிறது. விபத்து தொடர்பான செய்தி வனத்துறையினருக்கு எட்டியும்கூட, இதனால் அவர்களால் விபத்து நிகழ்ந்த இடத்துக்கு உடனடியாகச் செல்ல முடியவில்லை என்றும் சொல்லப்படுகிறது. எனவே, “தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனை விசாரிப்பீர்களா?” என்று அதுல்யா மிஸ்ராவிடம் நாம் கேட்டோம். “தேவைப்பட்டால் அவரையும் விசாரிப்பேன்” என்று பதிலளித்தார் அதுல்ய மிஸ்ரா.

“திண்டுக்கல் சீனிவாசனையும் விசாரிப்பேன்!”

காயமடைந்தவர்களை மீட்கும் பணி நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, குரங்கணி ஆரம்ப சுகாதார நிலையத்தில் முகாமிட்டிருந்தார் திண்டுக்கல் சீனிவாசன். “ட்ரெக்கிங் செல்ல அனுமதியற்ற வனப் பகுதிக்குள், வனத்துறை அதிகாரிகள் பணம் வாங்கிக்கொண்டு, சட்டவிரோதமாக அனுமதித்துள்ளனர். இந்தச் சம்பவத்துக்குப் பொறுப்பேற்று நீங்கள் பதவி விலகுவீர்களா?” என அவரிடம் நிருபர்கள் கேட்டபோது, “நீங்கள் விஷயத்தைத் திசைதிருப்பாதீர்கள்” என்று கோபப்பட்டார் அமைச்சர்.

சொன்னபடி, அமைச்சரை விசாரிப்பாரா அதுல்ய மிஸ்ரா?

- எம்.கணேஷ், படங்கள்: வீ.சக்தி அருணகிரி, வி.சிவகுமார்