Published:Updated:

திருச்சி வாழைக்கு அமேஸானில் கிராக்கி... ஆன்லைன் பிசினஸில் அசத்தும் 'ஸ்மார்ட்' விவசாயிகள்!

முதலில் இவர்களின் வாழை பொருள்களை விற்பனை செய்ய அமேஸான் ஒப்புக்கொள்ளவில்லை. இதுகுறித்து விளக்கமாக எடுத்துச் சொன்னபிறகுதான் விற்பனை செய்ய அனுமதித்தது. அதன்பின் நடந்ததெல்லாம் விவசாயிகளே எதிர்பாராதது.

திருச்சி வாழைக்கு அமேஸானில் கிராக்கி... ஆன்லைன் பிசினஸில் அசத்தும் 'ஸ்மார்ட்' விவசாயிகள்!
திருச்சி வாழைக்கு அமேஸானில் கிராக்கி... ஆன்லைன் பிசினஸில் அசத்தும் 'ஸ்மார்ட்' விவசாயிகள்!

றட்டி முதல் காய்கறிகள் வரை இப்போது ஆன்லைனில் கிடைக்குமளவுக்கு நமது தொழில்நுட்பம் வளர்ந்திருக்கிறது. தங்களுடைய பொருள்களுக்கு நல்ல விலை கிடைக்கவில்லை என்று கவலைப்படும் விவசாயிகள் மத்தியில், வித்தியாசமான கோணத்தில் தங்களது சிந்தனைகளை செலுத்தி சில விவசாயிகள் தொழில்முனைவோராக மாறி லாபம் பார்த்து வருகிறார்கள். இதனைக் கண்ட விவசாயிகள் அமேசான் போன்ற இணையதளத்தில் பொருள்களை விற்பனை செய்து நல்ல லாபம் பார்க்க துவங்கியுள்ளனர். அவர்களில் சிலர் தாங்களே நேரடியாக இணையதளம் துவங்கியும் பொருட்களை விற்பனை செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். அவர்களில் சிலரை சந்தித்துப் பேசினோம். அதில் இந்தப் புதிய சந்தை வாய்ப்பு குறித்து ஆர்வத்துடன் பகிர்ந்து கொண்டார் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த தொழில்முனைவோரும், காபி விவசாயியுமான செந்தில்குமார்.

“பத்து ஆண்டுகளுக்குமுன் கொடைக்கானல் மலைப்பகுதியில் நிலம் வாங்கினேன். இயற்கை விவசாயம் செய்ய வேண்டும் என்ற குறிக்கோளுடன் விவசாயம் செய்ய ஆரம்பித்தேன். இதுவரையில் நிலத்தில் ‘சில்வர் ஓக்’ என்னும் மரங்கள் 10,000 வரைக்கும் வைத்திருக்கிறேன். மேலும் காபி, எலுமிச்சை நாற்றுகளையும் நானே உருவாக்கி நடவு செய்கிறேன். 

எலுமிச்சை சாறு மதிப்பு கூட்டல்!

வெறும் விவசாயம் செய்வதோடு என்னுடைய ஆசை நின்றுவிடவில்லை. எலுமிச்சைக்குப் பல நேரம் விலையே கிடைக்காது. ஒரு கிலோ பத்து ரூபாய் அளவுக்கு விலை சரிந்துவிடும். அந்த நேரத்தில் காய் எடுக்கும் கூலிகூட கட்டாது. அந்தச் சமயத்தில்தான், மதிப்பு கூட்டி விற்பனை செய்தால் என்ன என்கிற யோசனை உருவானது. இதுகுறித்து பலரிடம் ஆலோசனை கேட்டேன். பல கட்ட சோதனைகளுக்குப்பின், எலுமிச்சைச் சாற்றை எடுத்து கன்டெய்னரில் அடைக்கும் வழியைத் தெரிந்துகொண்டு, விற்பனை செய்து வருகிறேன்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக ஆய்வகத்தில் கொடுத்து இந்தச் சாற்றில் என்னென்ன சத்துகள் இருக்கின்றன, எத்தனை நாளைக்குக் கெடாமல் இருக்கும் என்னும் அறிக்கைகளையும் வாங்கிவிட்டேன். பசுமை விகடனில் சொல்லியிருந்தபடி, தஞ்சாவூரில் இருக்கும் பயிர் பதனீட்டுக் கழகத்திற்குச் சென்று சில தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொண்டேன். பிறகு என் நிலத்தில் விளைந்த விவசாயப் பொருள்களுக்கு மதிப்புக் கூட்டும் நோக்கத்தில் இறங்கினேன். 

இணையம் கொடுத்த சந்தை வாய்ப்பு!

ஆரம்பத்தில் சந்தைவாய்ப்பை ஏற்படுத்திக்கொள்ள சற்றுக் கடினமாகவே இருந்தது. இதற்குக் காரணம், நம் ஊரில் எலுமிச்சை அதிக அளவில் கிடைப்பதுதான். எளிதில் கிடைக்கும் ஒன்றை நாம் மதிப்பு கூட்டுவது தவறு என்று அப்போதுதான் உணர்ந்துகொண்டேன்.   
அடுத்தடுத்து எனக்குத் தோல்விகள் வந்தாலும், நான் மனம் வெறுத்து ஒதுங்கிவிடவில்லை. இங்கே விலை கிடைக்காமல், ஒதுக்கப்படும் என்னுடைய பொருள்களை இணையதளம் மூலமாக விற்பனை செய்தபோது, வட மாநிலங்களில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இது தவிர, வெளிநாடுகளுக்கும் என் தயாரிப்புகளை ஏற்றுமதி செய்து வருகிறேன். உள்ளூரில் விலைபோகாத ஒரு பொருள், இணையத்தின் உதவியால் கண்டம் விட்டு கண்டம் தாவி விற்பனையாகிறது.

எலுமிச்சையை அடுத்து, என்னுடைய நிலத்தில் விளையும் காபியை மதிப்புக் கூட்டல் செய்ய நினைத்தேன். எல்லோரும் காபியை மதிப்புக் கூட்டித்தான் விற்பனை செய்கிறார்கள். நாம் எந்த வகையில் விற்பனை செய்யலாம் என்று மாற்றி யோசித்தேன். அதன் விளைவாகக் கிடைத்த பொருள்தான் கிரீன் காபி என்னும் மதிப்புக் கூட்டல். கிரீன் காபியை பெங்களூரில் உள்ள காபி போர்டு தலைமையகத்தின் உதவியோடும், இணையதளத்தின் உதவியுடனும் நாடு முழுவதும் சந்தைப்படுத்துகிறோம். அதைத் தொடர்ந்து காய்கனி, பழங்கள் ஆகியவற்றைக் கழுவும் கிரீன்வாஷ் (GREEN WASH) என்னும் முற்றிலும் இயற்கை முறையில் உருவாக்கப்பட்ட லிக்யூட் ஒன்றையும் தயாரித்துச் சந்தைப்படுத்தினோம். இணையத்தில் ஒரு பொருளை விற்கப்போய் இன்று பல பொருள்களை விற்பனை செய்து வருகிறேன். 

இத்தகைய இணையதள விற்பனை மூலம், வருங்காலத்தில் என் தோட்டத்தில் விளையும் பொருள்கள் மட்டுமல்லாது, எனது நிலத்துக்கு அருகில் உள்ள இயற்கை விவசாயிகளின் பொருள்களுக்கும் தகுந்த வருமானத்தை ஏற்படுத்தித் தரமுடியும் என்ற நம்பிக்கையை எனக்குள் உருவாக்கி, என்னை இன்னும் உத்வேக உழைக்க வைத்திருக்கிறது. மதிப்புக் கூட்டல் தொழிலில் முதலில் உள்ளூர், மாவட்டம், மாநிலம், நாடு எனப் படிப்படியாகக் கவனித்து, சந்தையில் அதற்கான தேவையும் இருக்கிறதா என்பதைத் தெரிந்து கொண்டு, முறையாகப் பயிற்சி பெற்றுக்கொண்ட பின்னர் இறங்கினால் வெற்றி நிச்சயம்” என பாசிட்டிவாக முடித்தார், செந்தில்குமார்.

அமேசானில் திருச்சி வாழை!

முக்கனிகளில் ஒன்றான வாழை அதிகம் விளையும் மாவட்டங்களில் முக்கிய இடம் திருச்சிக்கு உண்டு. வாழைக்குத் தனியாக ஆராய்ச்சி நிறுவனமும் இங்குதான் உள்ளது. இந்த மாவட்டத்தில் அமைந்துள்ள தொட்டியத்தில், 13 விவசாயிகள் சேர்ந்து வாழைப்பழங்களை மதிப்புக் கூட்டி விற்பனை செய்து வருகின்றனர். இந்தக் கூட்டு முயற்சியில் இருக்கும் விவசாயிகளில் ஒருவரான சுப்ரமணியத்திடம் பேசினோம். 

“வாழைப்பழம் அதிகபட்சம் மூன்று நாள்களுக்குமேல் தாங்காது. எனவே, ஆறு மாதங்கள், ஒரு வருடம் என வைத்திருந்து சாப்பிடும் அளவுக்கு வாழைப்பழத்தை மதிப்புக்கூட்டி பல பொருள்களைத் தயார் செய்து வருகிறோம். இதற்கு முக்கியமான இன்னொரு காரணமும் உண்டு. வாழைக்கு நிலையான விலை கிடையாது. அப்படியே விலை இருந்தாலும் விவசாயிக்கு லாபம் கிடைக்காது. இதற்காக விவசாயிகள் சந்தையில் நேரடியாக விற்பனை செய்தாலும், விற்ற பழங்கள் போக மீதமுள்ளப் பழங்கள் வீண்தான். இவற்றையெல்லாம் தவிர்க்கத்தான் வாழையில் மதிப்பு கூட்டல் தொழிலைத் துவங்கினோம்.

கடந்த 2014-ம் ஆண்டு மதிப்பு கூட்டல் தொழிலைத் தொடங்கினோம். வாழை விவசாயம் அதிகமான தொல்லை தரக்கூடியது. சரியான பருவத்திலும் பக்குவத்திலும் காய்களை வெட்டி, சந்தைக்கு அனுப்ப வேண்டும். அப்படி அனுப்பாததால், பல விவசாயிகள் வாழையால் அதிகமாகக் கடன்பட்டிருந்தனர். காற்று பலமாக அடித்தால்கூட வாழை மரங்கள் அதிகமாகச் சேதமாகிவிடும். இதனால் பல நேரங்களில் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படுகிறது. இதனைத் தவிர்க்க நாங்கள் 13 பேர் ஒன்றிணைந்து ‘மதூர் ஃப்ரூட்ஸ்’ என்ற நிறுவனத்தைத் தொடங்கினோம். இதனை ஆரம்பிக்க, விவசாயம் சார்ந்த தொழில்நுட்ப நிறுவனங்களின் உதவி பெரிதும் தேவைப்பட்டது. இங்கு இருக்கும் இயந்திரங்கள் தாய்லாந்து நாட்டில் பயன்படுத்தக்கூடியவை. 

சூரிய ஒளியில் பொருள்களை உலர்த்துதல்!

வாழைப்பழம் மதிப்பு கூட்டலில் முக்கியமான முதல் வேலை, வாழைப்பழங்களைச் சூரிய ஒளி டிரையரில் உலர்த்துவது. உலர்த்தும் வாழைப்பழம் அப்படியே பாக்கெட் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இதுதவிர வாழைப்பழப் பொடி, பிஸ்கட், சாக்லேட், வாழைக்காய் மிட்டாய் ஆகிய பொருள்களைத் தயார் செய்து வருகிறோம்.

இந்தத் தொழிலை ஆரம்பித்தபின், சந்தை வாய்ப்பை அமைத்துக்கொள்வதில் சறுக்கலைச் சந்தித்தோம். பழங்கள் கொள்முதல் செய்த விலையையும், விற்பனை செய்த விலையையும் ஒப்பிட்டால் நஷ்டம் வருவதைக் கண்கூடாகப் பார்க்க முடிந்தது. ஆனால், அதைக் கண்டு நாங்கள் துவண்டு போய்விடவில்லை. நாங்கள் தயாரிக்கும் பொருள்களைப் பெரும்பாலான கண்காட்சிகளில் ஸ்டால் போட்டு, பலருக்கும் அறிமுகம் செய்தோம். நாங்கள் தயார் செய்த பொருள்களை இலவசமாகத் தந்த காலமும் உண்டு. இப்படித்தான் பொருள்களை மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்த்தோம்.

அமேசானில் திருச்சி வாழை!

நாங்கள் தயாரிக்கும் பொருள்களுக்கு மவுசு உருவாவதைத் தெளிவாகப் புரிந்துகொள்ள முடிந்தது. அதன்பின் படிப்படியாகப் பெரிய கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகள் என எங்களின் சந்தையை விரிவுபடுத்தினோம். அந்த விற்பனை விரிவாக்கம் இப்போது இணையத்தில் விற்கிற வரை போய் நிற்கிறது. எங்கள் நிறுவனத் தயாரிப்புகளை விற்றுத்தர அமேசான் நிறுவனம் முதலில் ஒப்புக்கொள்ளவில்லை. நாங்கள் முழுமையாக எல்லா விஷயங்களையும் எடுத்துச் சொன்னபின்புதான் எங்கள் பொருள்களை அமேசானில் விற்பனை செய்ய ஒப்புக்கொண்டனர். அதனால் இப்போது அமேசான் மூலமாக எங்கள் பொருட்கள் அமெரிக்கா வரை படுஜோராக விற்பனையாகிறது" என்று தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறார், சுப்ரமணியம்.

இவர்கள் மட்டுமல்ல... இவர்களோடு இது நிற்கப்போவதும் இல்லை. இவர்களைப் போல பல விவசாயிகள் ஆன்லைனில் பொருட்களை விற்பனை செய்ய ஆரம்பித்து தொழில்முனைவோராக மாறி இருக்கிறார்கள். மாற்றி யோசித்தால் மகத்தான லாபம் நிச்சயம் என்பதற்கு இவர்கள்தான் உதாரணம்.