Published:Updated:

தகவல்கள் ஜாக்கிரதை!

தகவல்கள் ஜாக்கிரதை!
பிரீமியம் ஸ்டோரி
தகவல்கள் ஜாக்கிரதை!

மது ஸ்ரீதரன், ஓவியம்: பிரேம் டாவின்ஸி

தகவல்கள் ஜாக்கிரதை!

மது ஸ்ரீதரன், ஓவியம்: பிரேம் டாவின்ஸி

Published:Updated:
தகவல்கள் ஜாக்கிரதை!
பிரீமியம் ஸ்டோரி
தகவல்கள் ஜாக்கிரதை!

நீங்கள் ரயிலில் போய்க்கொண்டிருக்கிறீர்கள். அருகில் வந்து  ஒருவர் அமர்கிறார். நன்றாக உடையணிந்த, நாகரிக மனிதர். மெதுவாக  உங்களிடம் பேச்சுக்கொடுக்கிறார்.

“வணக்கம், எந்த ஊர் சார் நீங்க?”

................

“எங்க வேலை பார்க்கிறீங்க?”

............

(தயக்கத்துடன் சொல்கிறீர்கள் )

“உங்க பிறந்தநாள் எப்ப சார்?”

உங்களுக்கு இந்தக் கேள்வி பிடிக்கவில்லை.

``எனக்கு ஒரு நல்ல பழக்கம் இருக்கு சார், நான் சந்தித்த ஒவ்வொருவரின் பிறந்த நாளையும் குறிச்சுக்கிட்டு அந்த நாள்ல கோயிலுக்குப் போய்  அவங்க பேர்ல அர்ச்சனை பண்ணுவேன்.”

தயங்கியபடியே சொல்கிறீர்கள். பிறகு  அவர் உங்கள் நண்பர்கள், மனைவி பற்றியெல்லாம் கேட்க ஆரம்பிக்கிறார். அசெளகரியமாக உணர்ந்த நீங்கள், உடனே அவரை விட்டு விலகி வேறு சீட்டுக்கு நகர்ந்து விடுகிறீர்கள்.

பொதுவெளியில், நம்மைப் பற்றி அந்நியர்களிடம் தகவல்களைப் பகிர்வதற்கு நாம் தயங்குகிறோம். ஆனால் இணையம் என்னும் மாயவெளியில் நமக்கு எந்தத் தயக்கமும் இருப்பதில்லை. நாம் மிகவும் பாதுகாப்பாக இருக்கிறோம், நம்மைப் பற்றிய தகவல்களும் ஏழடுக்குப் பாதுகாப்பில் பத்திரமாக இருக்கின்றன என்று உறுதியாக நம்புகிறோம். ஆனால் உண்மைதானா அது?

தகவல்கள் ஜாக்கிரதை!

ஃபேஸ்புக்கோ, ஒரு மொபைல் செயலியோ நம் பெயர், பிறந்தநாள், பள்ளி, அலுவலகம் பற்றிய தகவல்களைக் கேட்டால் அதைத் தருவதில் நமக்கு எந்தச் சிக்கலும் இருப்பதில்லை. நம்மைப் பொறுத்தவரை பாதுகாக்கப்படவேண்டிய தகவல் என்றால் நம் வங்கிக்கணக்கு போன்ற விவரங்கள்தான். இந்த நினைப்பு எவ்வளவு தவறானது என்று நிரூபிக்கும் ஒரு சம்பவம் சமீபத்தில் அரங்கேறியிருக்கிறது. அதுவும் நம் அனைவருக்கும் பிடித்த ஃபேஸ்புக்கில்...

 இணையம் நமக்குப் போலியான ஒரு மாயக் கம்பளத்தை வழங்குகிறது. “தைரியமாக அணிந்துகொள்ளுங்கள், அதன் பிறகு நீங்கள் விரும்பியதைச் செய்யலாம், யார் கண்ணுக்கும் தெரியமாட்டீர்கள்” என்கிறது. நீங்களும் நம்பி அதை அணிந்துகொள்கிறீர்கள். மாயக் கம்பளத்தின் ஆயிரக்கணக்கான ஓட்டைகள் வழியே உங்களை, உங்கள் செயல்களை லட்சக்கணக்கான கண்கள் கவனிக்க ஆரம்பிக்கின்றன.

பொதுவெளியில் பழகுவதற்குக் கூச்சப்படும் பெரும்பாலான ஆசாமிகள்கூட இணையத்தில் தங்களை, தங்கள் குணாதிசயங்களை வெளிப்படுத்தத் தயங்குவதே இல்லை. அதுதான் பாஸ்வேர்டு கொடுத்துவிட்டோமே எனத் தன்னைத்தானே சமாதானம் செய்துகொள்கிறார்கள். இதெல்லாம் கண்ணாடி அறைக்குள் அமர்ந்து கொண்டு கதவின் சாவித் துவாரத்தை  அடைக்க முயல்வதுபோலத்தான்.

`கேம்பிரிட்ஜ் அனலடிக்கா’ (CA) என்பது லண்டனில் இயங்கி வரும் ஒரு டேட்டா மைனிங் நிறுவனம். `டேட்டா மைனிங்’ என்றால் சுரங்கங்களிலிருந்து தாதுக்களை அகழ்ந்து எடுப்பதுபோல இணையத்திலிருந்து தகவல்களைத் தோண்டி எடுப்பது! இணையத்தில் கோடிக்கணக்கான தகவல்கள் எண்களாகவும் எழுத்துகளாகவும் கொட்டிக் கிடக்கும். இதிலிருந்து நமக்குப் பயன்படும் தகவலை வடிகட்டி எடுத்து, அந்தத் தகவலைக் கொண்டு வாடிக்கையாளருக்குத் தேவையான காரியங்களைச் செய்வதில் இந்த நிறுவனம் அசகாய சூரன். 

நீங்கள் அமேசானில் ஒரு பொருளைத்  தேடினால் அதனுடன் தொடர்புடைய நூறு பொருள்கள் உங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் காட்டப்படுவது இப்படித்தான்! இந்த டேட்டா மைனிங் மூலம் எத்தனை பேர் ஒரு குறிப்பிட்ட தயாரிப்பை விரும்புகிறார்கள் என்பதில் இருந்து எத்தனை பேர் ஒரு குறிப்பிட்ட அரசியல் தலைவருக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்பது வரை ரகசியமாகத் தோண்டி எடுக்க முடியும்.

இந்த CA நிறுவனம் தன் பணிகளை அரசியல்சார் களங்களில் பெரும்பாலும் மேற்கொண்டிருந்தது. இந்த நிறுவனத்துக்கு ஸ்டீவ் பன்னன் மற்றும் ராபர்ட் மெர்சர் என இரண்டு பேர் நிதியுதவி தந்திருக்கிறார்கள். இவர்கள் இருவருமே டிரம்ப்பின் தோஸ்துகள்.

டெட் க்ரூஸ், டொனால்டு ட்ரம்ப் இவர்களின் தேர்தல் பிரசாரங்களுக்கு, அகழ்வாராய்ச்சி செய்து ரகசியத் தகவல்களைத் திரட்டித் தந்தது CA தான். ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் விலகிக்கொண்ட Brexit நிகழ்வுக்கு ஆதரவாக நிகழ்த்தப்பட்ட  இணையப் பிரசாரங்களிலும் இதன் பங்கு குறிப்பிடத்தக்கது. இந்த நிறுவனம் சட்டத்துக்குப் புறம்பான திரைமறைவுச் செயல்களில் ஈடுபடுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆனால் இதை CA அழுத்தமாக மறுத்து வந்தது. விதிகளுக்கு உட்பட்டே தங்கள் தகவல் சுரங்கங்கள் இயங்குவதாகக் கூறி வந்தது.

சில நாள்களுக்கு முன்பு ‘தி நியூயார்க் டைம்ஸ்’, ‘தி அப்சர்வர்’ போன்ற பத்திரிகைகள்  இந்த நிறுவனத்துக்கு எதிராக பகிரங்கமாகப் போர்க்கொடி உயர்த்தின. `கேம்பிரிட்ஜ் அனலடிக்கா’ நிறுவனம் சுமார் 5 கோடி ஃபேஸ்புக் பயனாளிகளின் தனிப்பட்ட தகவல்களை அவர்கள் அனுமதியின்றித் திருடிவிட்டது என்ற குற்றச்சாட்டை முன் வைத்தன. இதைத் தொடர்ந்து ஃபேஸ்புக்கின் சந்தைப் பங்குகள் வீழ்ச்சி கண்டன. மார்க் தாமாகவே முன்வந்து இந்தச் செயலுக்கு வருத்தம் தெரிவித்தார். உடனடியாக CA வின் ஃபேஸ்புக் தொடர்புகள் தடை செய்யப்பட்டன.

ஃபேஸ்புக்கில்  நாம் அடிக்கடி சில விளையாட்டுச் செயலிகளைப் பார்த்திருப்போம், “உங்கள் ரகசியக் காதலரை அறிந்துகொள்ளுங்கள்”, “உங்கள் பர்சனாலிட்டிக்குப் பொருந்தும் நடிகர் யார்?”, “எந்த நடிகை உங்களுடன் டின்னர் சாப்பிட விரும்புகிறார்?” என்றெல்லாம். நாமும் அப்பாவியாக அதைக் கிளிக் செய்து ‘விளையாட்டுதானே’ என்று ஜாலியாக விளையாடுவோம். விளையாட்டு வினையாகும் என்பது இப்போது உறுதியாகியிருக்கிறது.

அலெக்ஸ் கோகன் என்பவர்  கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உளவியல் துறைப் பேராசிரியர். இவரை அணுகிய CA நிறுவனம் ஃபேஸ்புக்கிற்காக ஒரு செயலியை வடிவமைத்துத் தரக் கோரியது. இந்தச் செயலியை  ஃபேஸ்புக் பயனாளிகள் கிளிக் செய்து சில பல கேள்விகளுக்கு விடையளித்தால் அவர்களின் குணாதிசயங்களை ஊகிக்கும். இந்தச் செயலி இலவசமன்று. காசு கொடுக்க வேண்டும். அதாவது இந்தச் செயலியை வடிவமைத்தவர்கள் விளையாடுபவர்களுக்குக் காசு கொடுப்பார்கள். சும்மாவே ஃபேஸ்புக்கில் உள்ள எல்லா இணைப்பையும் கிளிக் செய்து கொண்டிருப்பவர்கள் காசு என்றால் விடுவார்களா? மக்கள் உற்சாகமாகி குளுக்கோஸ் ஏற்றிக்கொண்டு விளையாட ஆரம்பித்தார்கள்.

தகவல்கள் ஜாக்கிரதை!

5 கோடிப் பேர் இந்தப் பொறியில் விழுந்தார்கள். இந்தச் செயலி, பயனாளர் ஒருவரிடமிருந்து தகவலைத் திரட்டியதுடன் அவர்களின் நண்பர்கள் பட்டியலிலெல்லாம் புகுந்து சங்கிலித் தொடராகத் தகவல்களைத் திருட ஆரம்பிக்கும். முழுக்க முழுக்க ஆராய்ச்சி விஷயங்களுக்குதான் இந்தத் தகவல்களைத் திரட்டுகிறோம், கசியவிடமாட்டோம் என்று ஃபேஸ்புக்கிடம் சத்தியம் செய்துவிட்டு, இன்னொரு பக்கம் இந்தத் தகவல்களைக் கணிசமான தொகைக்கு விற்றுக் கொழுத்த லாபம் சம்பாதித்து விட்டது CA. சரி,  என்னைப் பற்றிய தகவலால் யாருக்கு என்ன பயன் என்று நீங்கள் கேட்கலாம்.

தற்போது தேர்தல் பிரசாரங்கள் எப்படி நடக்கின்றன? ஆயிரக்கணக்கில் மக்கள் திரள்கிறார்கள், வேட்பாளர் ஒரு திறந்த வாகனத்தில் நின்று கை அசைக்கிறார், வாக்குறுதிகளின் பட்டியலை வாசிக்கிறார், போய்விடுகிறார். இந்த முறையில் வேட்பாளர் மீது வாக்காளர்களுக்கு மிகப்பெரிய ஈர்ப்பு ஏற்படுவதில்லை. ஆனால், வேட்பாளர் வீட்டுக்கே வந்து உங்களுடன் அமர்ந்து கொண்டு,காபி குடித்துக்கொண்டு, உங்கள் பிரத்யேகப் பிரச்னைகள் என்ன என்று கேட்டறிந்து, “அவற்றைத் தீர்க்க நடவடிக்கை எடுப்பேன், எனக்கு ஓட்டு போடுவதைப்பற்றிச் சிந்திக்க லாமே...” என்றால்? டிஜிட்டல் பிரசாரம் இப்படித்தான் நடக்கிறது. உதாரணமாக, நீங்கள்  நுழைந்த செயலி உங்களிடம் கேள்விகள் கேட்டு, உங்களுக்கு நாட்டுப்புறக் கலைகள் மேல் பெருவிருப்பம் என்று அறிந்துகொள்கிறது. இரண்டொரு  நாள்களில் உங்கள் மின்னஞ்சலுக்கு ஒரு செய்தி வருகிறது. குறிப்பிட்ட வேட்பாளர் ஆட்சிக்கு வந்ததும் நாட்டுப்புறக் கலைகள் ஊக்குவிக்கப்படும் என்று. அது உங்களுக்காகவே செய்யப் பட்ட ஒரு பிரத்யேக வாக்குறுதி. உங்களுக்கு வீசப்பட்ட வலையில் மெள்ள மெள்ள விழ ஆரம்பிக்கி றீர்கள்.

‘டேட்டாதான் புதிய எண்ணெய்’  என்றார் அம்பானி. அவ்வளவு மதிப்புமிக்கது டேட்டா. எண்ணெயைக் கடலுக்குள் குழாய் போட்டு உறிஞ்சிவிடலாம். ஆனால், டேட்டா என்பது தனி மனிதர் களிடமிருந்து எடுத்தாக வேண்டும். அதனால் எப்படியாவது நம்மை உறிஞ்சியெடுக்கத்தான் நினைப் பார்கள். நாம்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.