Published:Updated:

"பாலு மகேந்திரா சார் மட்டும் இல்லேன்னா மன அழுத்தத்துல செத்திருப்பேன்...!" - இயக்குநர் மீரா கதிரவன் #LetsRelieveStress

‘தீனா’, ‘காதலர் தினம்’ போன்ற படங்களோட பாட்டுகள் வரும்போதெல்லாம் ஓடிப்போய் எட்டிப்பார்த்துட்டு திரும்பி வந்து, மறுபடியும் பழைய இடத்திலேயே நின்னு செக்யூரிட்டி வேலையைப் பார்ப்பேன்

"பாலு மகேந்திரா சார் மட்டும் இல்லேன்னா மன அழுத்தத்துல செத்திருப்பேன்...!" - இயக்குநர் மீரா கதிரவன் #LetsRelieveStress
"பாலு மகேந்திரா சார் மட்டும் இல்லேன்னா மன அழுத்தத்துல செத்திருப்பேன்...!" - இயக்குநர் மீரா கதிரவன் #LetsRelieveStress

`அவள் பெயர் தமிழரசி’, `விழித்திரு’ படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர் மீரா கதிரவன்.  இலக்கியம், எழுத்து, சினிமா எனத் தொடர்ந்து பயணிப்பவர். தன்னுடைய வாழ்க்கையில் மன அழுத்தம் தந்த தருணங்களைக் கடந்து வந்த ரகசியத்தை இங்கே பகிர்கிறார். 

``ஒரு பின்தங்கிய கிராமத்துல பிறந்தவன் நான். எங்க அப்பா தலைமை ஆசிரியர்.  பத்திரிகைகள் படிக்கணும்னா எட்டு கிலோ மீட்டர்  தள்ளியிருக்கிற கடையநல்லூருக்குப் போகணும். அங்கிருந்து 1998-ல் சென்னைக்கு நண்பர் ஒருத்தர் மூலமாக வந்தேன். அவர் அறையிலேயே தங்கியிருந்தேன். சந்தர்ப்பச் சூழல் காரணமாக, திடீர்ன்னு அவர் அறையிலிருந்து வெளியேற வேண்டிய சூழல். எங்கே போறதுன்னு தெரியல. ஏன்னா, ஊருக்குப் போனா திரும்பி சென்னைக்கு அனுப்ப மாட்டாங்க. `போன உடனேயே திரும்பி வந்துட்டான்'னு சொல்வாங்க. அதனால, சென்னையில இருந்து சாதிக்கணும்னு நினைச்சேன். அப்போதான் நண்பர் ஒருத்தர் `செக்யூரிட்டி வேலைக்கு ஆட்கள் தேவை... தங்குமிடம் இலவசம்'னு சொன்னாரு. அதனால, அந்த வேலையில் சேர்ந்தேன். இரவு முழுக்க செக்யூரிட்டியா வேலைப் பார்த்துட்டு விடிந்ததும் உதவி இயக்குநர் வாய்ப்பு தேடி அலைவேன். அப்படி, அபிராமி தியேட்டரில் செக்யூரிட்டியா வேலைப் பார்த்திருக்கேன்!

அப்படி வேலைப்பார்க்கும்போது ‘தீனா’, ‘காதலர் தினம்’ போன்ற படங்களோட பாட்டுகள் வரும்போதெல்லாம் ஓடிப்போய் எட்டிப்பார்த்துட்டு திரும்பி வந்து, மறுபடியும் பழைய இடத்திலேயே நின்னு செக்யூரிட்டி வேலையைப் பார்ப்பேன். கொஞ்ச நாளையிலேயே அந்த வேலையை விட்டுட்டு, ஹோட்டலில் வெயிட்டரா வேலைப் பார்த்தேன். அப்போ எனக்கு டிப்ஸ் நிறைய கிடைக்கும். அப்போ, அறிமுகமான நண்பர் ஒருத்தர், எனக்கு புத்தக வாசிப்பைக் கத்துக்கொடுத்தார். அந்த சமயத்துல இயக்குநர் விக்ரமன் சார்கிட்ட உதவியாளரா சேர முயற்சி பண்ணிக்கிட்டிருந்தேன். சென்னையில் அப்போ `ஹிக்கிம் பாதம்ஸ்' மட்டும்தான் புத்தகக் கடை. ஹோட்டல்ல பகல் 12 மணியிலிருந்து இரவு 12 மணிக்கு வரைக்கும் போகும். இடையில மூணு மணிநேரம் ஓய்வு கிடைக்கும். அப்போ, கிடைச்ச டிப்ஸ் காசை வச்சு புத்தகங்கள் வாங்கிட்டு வந்து படிப்பேன். அப்படி நான் வாங்கிய முதல் புத்தகம், கி.ராஜநாராயணன் எழுதிய ‘கரிசல்காட்டு கடிதாசி’!

அந்தப் புத்தகத்தைத் தொடர்ந்து அவருடைய எல்லா புத்தகங்களையும் தேடிப் பிடித்து வாசித்தேன். வாசிப்புதான் என்னுடைய வாழ்க்கையில பெரிய திருப்புமுனையை கொண்டு வந்துச்சு. வெறிப்பிடிச்ச வேட்டைநாய் போல விடாமல் பல புத்தகங்களை வாசித்தேன். அப்படிதான் எழுத ஆரம்பிச்சேன். 

இயக்குநர் கவுதமன் சார் மூலமா இயக்குநர் தங்கர் பச்சான் சார்கிட்ட அறிமுகமானேன். என்னை உதவி இயக்குநரா சேர்த்துக்கிட்டாரு. அப்போல்லாம் உலக சினிமா ஈஸியா பார்க்க முடியாது. அதே மாதிரி அது சார்ந்த புத்தகங்களும் குறைவாக இருக்கும். எனக்கு மலையாளம் நல்லா தெரியும்ங்கிறதால அந்த மொழியில வெளியான இயக்குநர்கள் அடூர் கோபாலகிருஷ்ணனின் `எலிப்பத்தாயம்’, எம்.டி.வாசுதேவன்நாயரின் `நிர்மால்யம்’ போன்ற படங்களின் திரைக்கதைகளை தமிழில் மொழிப் பெயர்த்தேன். அந்த சமயத்தில் மலையாள திரையுலகின் முக்கிய திரைக்கதையாசிரியர்களில் ஒருவரான லோகிததாஸ் தமிழில் படம் இயக்க இருந்தார். அவருடன் அறிமுகமாகி, அவருடைய `கஸ்தூரிமான்’ படத்தில் உதவி இயக்குநராக வேலைப் பார்த்தேன். எழுதறதையும் நிறுத்தல.  கல்கியில `மழைவாசம்’னு ஒரு சிறுகதையை படிச்சுட்டு இயக்குநர் பாலுமகேந்திரா கூப்பிட்டாரு. `ஒரு இயக்குநருக்கான எல்லா சாத்தியங்களோட உங்க சிறுகதை இருக்கு. இதை என்னோட `கதைநேரம்' தொடர்ல பயன்படுத்திக்கிட்டும்மா’ன்னு சொல்லி, கேட்டாரு. அவருடைய வார்த்தைகள் எனக்கு பெரிய உத்வேகத்தை தந்துச்சு!

 பிறகு, அடிக்கடி அவரைப் போய் பார்ப்பேன். அவரு இயக்கத்தில் படமாக இருந்த `அனல்காற்று' படத்தில் உதவி இயக்குநரா வேலைப் பார்த்தேன். இதற்கிடையே என்னுடைய படத்துக்கான திரைக்கதையையும் எழுத ஆரம்பிச்சுட்டேன். 

அப்படி, சினிமாவுல உதவி இயக்குநராகி முதலில் நான் கதை சொன்னது `மெட்ராஸ் டாக்கீஸ்' பட நிறுவனத்துக்குத்தான். அங்கே மணிரத்னம் சாரோட பிரதர் ஜி.சீனிவாசன் தயாரிப்புகளை கவனிச்சிக்கிட்டு இருந்தாரு. `படத்தோட கதையை சுருக்கமாக மணி சார் புரிஞ்சிக்கிற மாதிரி தரமுடியுமா?'ன்னு கேட்டாரு. அவருக்காக ஒரு பைலட் ஃபிலிம் ரெடி பண்ணலாம்னு முடிவெடுத்து பரபரன்னு அதுக்கான வேலைகள்ல இறங்கினேன். லொகேஷன், ஆர்ட்டிஸ்ட் எல்லாம் பார்த்து முதல் நாள் ஷுட்டிங் சரியா போச்சு. இரண்டாவது நாள் ஷுட்டிங்காக அதிகாலை சுமார் இரண்டரை மணிக்கு பைக்கில் போகும்போது எனக்கு ஆக்ஸிடென்ட் ஆயிடுச்சு. ரொம்ப நேரம் மயக்கத்திலேயே கிடந்திருக்கேன். காலையில நடைப்பயிற்சி போனவங்க பார்த்துட்டு என்னை ஆஸ்பத்திரியில கொண்டுபோய் சேர்த்தாங்க. மூணு நாள் கழிச்சுதான் கண்ணு முழிச்சேன். டாக்டர், `ஆறு மாசம் வரைக்கும் எந்த வேலையும் செய்யக்கூடாது'ன்னு சொல்லிட்டாரு. 

ஆனால், பத்து நாள்களுக்குள்ளே மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்துக்கு நான் பைலட் பிலிம் கொடுத்தாகணும்னு சூழல் இருந்துச்சு. டாக்டர் சொன்னதை காதுல வாங்கிக்காம ஷுட்டிங்கான வேலைகளை ஆரம்பிச்சுட்டேன். இப்போ இருக்கிற மாதிரியெல்லாம் அப்போ போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் எளிமையானது இல்லை. இன்னைக்கு நடிகரா இருக்கிற ராம்ஸ் என்கிற ராமச்சந்திரன் என்கிட்ட உதவி இயக்குநராக வேலைப் பார்த்தவரு. அவருதான் முருகேசன் என்கிற எடிட்டரை பார்க்க அழைச்சிக்கிட்டுப் போனாரு. அவர் வீடு மணி சார் வீட்டை தாண்டிதான் போகணும். அப்படிப் போகும்போது அவர் வீட்டு முன்னாடி ஆம்புலன்ஸ்.. ஸ்ட்ரெச்சர்லாம் தள்ளிட்டுப் போனாங்க. அதைப் பற்றி விசாரிக்கலை. முருகேசன் சாரை போய் பார்த்தேன்.. பைலட் ஃபிலிமை பார்த்துட்டு பாராட்டினாரு. அப்போ என்னுடைய நண்பர் ஜே.பி.சாணக்யாகிட்ட இருந்த ஒரு போன்கால் வந்துக்கிட்டே இருந்துச்சு. முருகேசன் சாருக்கிட்ட பேசிக்கிட்டு இருந்ததால போனை எடுக்கல.  கொஞ்ச நேரம் கழித்து ஒரு எஸ்.எம்.எஸ். வந்துச்சு. `ஜி.எஸ்.பாஸ்டு அவே!'

குலுமணாலியில் விபத்தில் சிக்கி அவர் உயிரிழந்துவிட்ட செய்தியை கேட்டு, நான் உறைஞ்சே போயிட்டேன். பிறகு, பெசன்ட் நகரில்தான் அவருடைய இறுதிச்சடங்கு நடந்துச்சு. அதுல கலந்துக்கிட்டேன். அப்போ பக்கத்துல பாலுமகேந்திரா சார் நின்னுக்கிட்டு இருந்தார். அவருக்கு மெட்ராஸ் டாக்கீஸில் நான் கதை சொல்லியிருந்தது தெரியும். அப்போ, முதுகுல தட்டிக்கொடுத்து, ``தைரியமா இரு. இப்போதான் நீ உறுதியா இருக்கணும்’’னு சொன்னாரு. ஒருவேளை, என்னுடைய முதல் படம் மெட்ராஸ் டாக்கீஸில் வெளியாகியிருந்தா எனக்கு பெரிய வெளிச்சம் கிடைச்சிருக்கலாம். ஆனால், பல தடைகளை தாண்டி வரணும்ங்கிற அனுபவம் கிடைச்சிருக்குமான்னு தெரியல. 

பாலுமகேந்திரா சாரோட அந்த நம்பிக்கையான வார்த்தைகள்தான் என்னுடைய மன இறுக்கங்களில் இருந்தும் மன அழுத்தத்திலிருந்தும் என்னை வெளியே கொண்டு வந்துச்சு.  `அவள் பெயர் தமிழரசி', `விழித்திரு'ன்னு இரண்டு படங்கள் பண்ணியிருக்கேன். அந்தப் படங்களை எடுக்கும்போதும் நிறைய பிரச்னைகளை சந்திச்சிருக்கேன். எல்லாமே இயல்பா நடக்குதுன்னு நினைச்சுக்குவேன். 

இப்பவும் மனஅழுத்தம் தரக்கூடிய சூழல்கள் ஏற்பட்டுச்சுன்னா பாலுமகேந்திரா சாரின் வார்த்தைகளை மனசுல நினைச்சுப்பேன். அப்புறம், புத்தகங்களை தேடித்தான் போவேன். என்னோட வீடு முழுக்க நிறைஞ்சிருக்கும் புத்தகங்களே உங்களுக்கு அதைச் சொல்லும்!’’ என்று இறுக்கமான கைக்குலுக்கலுடன் விடைகொடுக்கிறார் மீரா கதிரவன்.