அலசல்
Published:Updated:

தங்கத்தில் ஜொலிக்கும் ஊழல்!

தங்கத்தில் ஜொலிக்கும் ஊழல்!
பிரீமியம் ஸ்டோரி
News
தங்கத்தில் ஜொலிக்கும் ஊழல்!

தங்கத்தில் ஜொலிக்கும் ஊழல்!

‘‘போலியான கணக்கு வழக்கு களைக் காட்டி 14 வங்கி களில் கடன் வாங்கி, 824 கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டார்’’ என்று சென்னை ‘கனிஷ்க் கோல்டு’ நிறுவனம் மீது சி.பி.ஐ-க்குப் புகார் போக, இப்போது அந்த நிறுவனத்தின் இயக்குநர்கள் பூபேஷ் குமார் ஜெயின், நீத்து ஜெயின் ஆகியோர் சி.பி.ஐ-யின் பிடியில் உள்ளனர். இவர்கள்மீது டெல்லி சி.பி.ஐ-யில் புகாரைக் கொடுத்திருப்பது, சென்னை மண்டல பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்.பி.ஐ) பொது மேலாளர் ஜி.டி. சந்திரசேகர்.

தங்கத்தில் ஜொலிக்கும் ஊழல்!

சென்னை சௌகார் பேட்டையைச் சேர்ந்தவர் பூபேஷ் குமார் ஜெயின். இவரைப் பற்றி சௌகார் பேட்டைக்குச் சென்று விசாரித்தோம்.

“சென்னை உஸ்மான் சாலையில் உள்ள ‘கனிஷ்க்’ ஜூவல்லரிக்கு முகமும், முகவரியுமாக மதுராந்தகத்தில் ஒரு நகைக்கூடம் இருந்தது. பெரிய ஜூவல்லரிகளுக்குப் புத்தம் புது மாடல்களில் நகைகளை வடிவமைத்துத் தருவதுதான், ஆரம்பத்தில் பூபேஷ் குமார் ஜெயினின் வேலை. நகை மதிப்பீட்டாளர்கள், நகை வடிவமைப்பாளர்கள் எனத் தங்கம் தொடர்பான மனிதர்களுடனே அதிகமாகச் சுற்றிய பூபேஷ் குமார் ஜெயின், நகை வடிவமைப்பு மற்றும் நகை மதிப்பீடு போன்ற வற்றை நுணுக்கமாகக் கற்றுக்கொண்டார்.  காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நகை வடிவமைப்புப் பட்டறைகளை உருவாக்கினார். பொதுவாக, இந்தப் பட்டறைகளை, ‘கோல்டு ஷாப் பட்டறை’ என்றுதான் அழைப்பார்கள். அதற்கு, ‘க்ரிஷ்’ என்ற பெயர் கொடுத்து, அதையும் ஒரு நிறுவனம் போலவே இவர் மாற்றிவிட்டார்.

இவர், ஜூவல்லரி அதிபர்களிடம் நேராக தங்கம் வாங்கியும், வெளிநாடுகளிலிருந்து தங்கம் இறக்குமதி செய்தும் ஆபரண நகைகளைத் தயாரிப்பார். ஏற்கெனவே இந்தத் தொழிலில் இருந்துவந்த பலருக்கும் இவர் சவாலாக உருவெடுத்தார். மும்பை மாடல் நகைகளை விடவும், பலவித புது மாடல்களில் வடிவமைத்துக் கொடுத்ததால், இவருக்கு ஆர்டர்கள் குவிந்தன. தங்கம் மட்டுமல்ல, வைரங்களையும் இவரிடம் நம்பிக் கொடுக்க ஆரம்பித்தனர். ஆர்டர் நகைகளை வடிவமைத்ததும், அவற்றை ஜூவல்லரி ஷாப்களுக்கு நேரில் போய்க் கொடுக்கும் வழக்கத்தைத் தொடங்கி வைத்தவரே இவர்தான். ஒருமுறை, 2,000 சவரன் நகைகளை இவருடைய ஆள்கள் ஜூவல்லரிக்குக் கொண்டுபோனபோது, யாரோ வழிப்பறி செய்துவிட்டனர். சம்பந்தப்பட்ட நகைக்கடை அதிபரிடம், மூன்று நாள்கள் அவகாசம் கேட்டு, அதே மாடல் நகைகளை மீண்டும் தயாரித்துக் கொடுத்துள்ளார் இவர். அதே வேகத்தில்தான், ‘கனிஷ்க்’ நகைக் கடையையும் இவர் ஆரம்பித்தார். கனிஷ்க் கடையின் விற்பனை வேகம், மார்க்கெட்டில் பலரை உறுத்தியது. ‘கனிஷ்க் தயாரிப்பு நகைகளில் தரம் குறைவு’ என்ற தகவலைப் போட்டியாளர்கள் பரப்பினர்.

தங்கத்தில் ஜொலிக்கும் ஊழல்!

இரண்டு ஆண்டுகள் வரை லாபம் பொத்துக் கொண்டு கொட்டியது. அடுத்தடுத்த ஆண்டு களில் மளமளவென மார்க்கெட் சரியத் தொடங்கியது. நகைகளை வாங்கியவர்கள் ரிட்டர்ன் செய்யத் தொடங்கினர். ஆர்டர் கொடுப்பதைப் பலர் நிறுத்தினர். அந்த நேரத்தில்தான், ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியில் சொத்து ஆவணங்களைக் கொடுத்துக் கடன் வாங்கினார். ஒழுங்கான முறையில் வட்டியும், அசலும் திருப்பிச் செலுத்தினார். லட்சத்தில் கடன் கொடுத்த ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, கோடிகளில் கடனைக் கொடுத்தது. அப்போதுதான், எஸ்.பி.ஐ உள்ளிட்ட வங்கிகளும் போட்டி போட்டுக் கொண்டு கடன் கொடுத்தன. சில வங்கிகளின் முக்கிய நிர்வாகிகள், ஆவணங்களைச் சரிபார்த்து, ‘இவை அத்தனையும் க்ளியர்’ என்று சான்றளித்தனர்.

குறைந்த லாபத்தை அதிகமாகக் காட்டிய தணிக்கை அறிக்கையும் இவர்களுக்குக் கடன் கொடுக்க உதவியாக இருந்தது. பிரபல கட்டுமான நிறுவனங்களும், ரியல் எஸ்டேட்  நிறுவனங்களும் கைகொடுத்தன. கனிஷ்க் ஜூவல்லரியின் பொய்யான லாபக் கணக்கைக் காட்டி, வங்கிகளில் வாங்கியக் கடன் தொகைகள், கட்டுமான நிறுவனங்கள் மற்றும் ரியல் எஸ்டேட்டுக்கு இடம் மாறின. இறுதியில் இவர் சிக்கிக்கொண்டார்” என்கிறார்கள் சௌகார் பேட்டையின் முக்கியப் புள்ளிகள் சிலர்.

தங்கத்தில் ஜொலிக்கும் ஊழல்!

இறுதியாக, ‘நீங்கள் கட்ட வேண்டிய வட்டித்தொகையான 160 கோடி ரூபாயைக் கழித்து விடுகிறோம்.  வாங்கிய கடனான 824 கோடி ரூபாயை மட்டும் கொடுத்து விடுங்கள்’ என்று வங்கித்தரப்பில் இவரிடம் பேசப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. அதையும் தராத நிலையில்தான், வங்கிகளின் கூட்டமைப்பு சி.பி.ஐ-க்குப் போயிருக்கிறது. பூபேஷ் ஜெயினுக்கு எஸ்.பி.ஐ-தான் ரூ.200 கோடியை முதன்முதலில் கடனாகக் கொடுத்துள்ளது. எஸ்.பி.ஐ-யிடம் பெற்றக் கடனுதவியையே பிற வங்கிகளில், தன் வருமானமாகக் காட்டி, அங்கு இவர் கடன் பெற்றுள்ளார். பின்னர், அந்தக் கடனை வைத்து இன்னொரு வங்கியில் கடன் வாங்கியுள்ளார். ‘வருடம் தவறாமல் கணக்கு வழக்குகளைத் தாக்கல் செய்கிறவர்’ என்று வங்கிகளிடம் பாராட்டுப் பெற்றுள்ளார். இப்போது அவற்றை ஆராய்ந்து பார்த்து விட்டு, அத்தனையும் பொய்க்கணக்கு என்ற முடிவுக்கு வங்கி அதிகாரிகள் வந்துள்ளனர். பூபேஷூக்குக் கடன் கொடுத்த 14 வங்கிகளும், கடனை அடைக்கும்படி அனுப்பிய எந்த நோட்டீஸுக்கும் அவரிடமிருந்து பதில் வரவில்லை. எனவேதான், எஸ்.பி.ஐ கன்சோர்டியம் (கூட்டமைப்பு) மூலமாக ஒரே புகாராகக் கொடுத்துள்ளனர்.

2017 மே மாதத்தில், சென்னை உஸ்மான் சாலையில் இருந்த கனிஷ்க் ஜூவல்லரியைக் காலி செய்து, சத்தமில்லாமல் பூபேஷ் எஸ்கேப் ஆகியிருக்கிறார். எஸ்.பி.ஐ நிர்வாகம், இதையும் தாமதமாகத்தான் கண்டு பிடித்துள்ளது. பின்னர்தான், சென்னை பொருளாதாரக் குற்றப்பிரிவில்  புகார் கொடுத்துள்ளனர்.

மதுராந்தகத்தில் நான்கரை ஏக்கர் பரப்பில் நகை தயாரிப்புக் கூடம், நுங்கம்பாக்கத்தில் உள்ள இரண்டு பிளாட்கள் ஆகியவற்றை மட்டும்தான் எஸ்.பி.ஐ-யால் பறிமுதல் செய்ய முடிந்திருக்கிறது. இவை, 824 கோடி ரூபாய்க்கு ஈடாகுமா என்பதை வங்கி அதிகாரிகள்தான் மதிப்பிட்டுச் சொல்ல முடியும்.

தங்கத்தில் ஜொலிக்கும் ஊழல்!

ரூ.20 கோடி கலால் வரியைச் செலுத்தவில்லை என்ற புகாரின் பேரில், 2017 அக்டோபரில் பூபேஷ் குமார் ஜெயின் கைதாகியிருக்கிறார். மே மாதமே கனிஷ்க்  ஜூவல்லரி மூடப்பட்டு விட்டது. கடன் வாங்கிய 14 வங்கிகளுக்கும் 2017 ஏப்ரலிலிருந்து வட்டி கட்டுவதை பூபேஷ் குமார் ஜெயின் நிறுத்தி விட்டார். ஆளில்லாத கனிஷ்க் கார்ப்பரேட் அலுவலகம், இயங்காத தொழிற்சாலை, ஸ்டாக் இல்லாத உஸ்மான் சாலை கனிஷ்க் ஜூவல்லரி, கனிஷ்க்கின் ஜூவல்லரி கிளைகள் ஆகியவற்றைப் பார்வையிட்ட பின்னர்தான், இனி கைப்பற்ற ஒன்றுமில்லை என்ற முடிவுக்கு வங்கி அதிகாரிகள் வந்துள்ளனர். முதன் முதலாக, கனிஷ்க் ஜூவல்லரிக்கு உலோக தங்க நகைக்கடன் என்ற முறையில் எஸ்.பி.ஐ-தான் அங்கீகாரம் அளித்துள்ளது. இதன் மூலம், வங்கிகள் கூட்டமைப்பிடமோ, சந்தையிலோ கனிஷ்க் நிறுவனத்தால் தங்கத்தை வாங்க முடியும். இப்படி எல்லா வகையிலும், பூபேஷ் குமார் ஜெயின் வளர்ச்சியில் எஸ்.பி.ஐ-யின் ஆதரவு கணிசமாக இருந்துள்ளது.

கண்ணை மூடிக்கொண்டு கடன் கொடுப்பதும், பிறகு கண்ணைக் கசக்கிக்கொண்டு புகார் கொடுப்பதும் வங்கிகளின் வழக்கமாகிவிட்டது. தங்க மகன்களோ, தங்க மீன்களாக நழுவிக்கொண்டிருக்கிறார்கள்.

- ந.பா.சேதுராமன்

நகைச் சீட்டு மோசடி: தப்பிக்க என்ன வழி?

நா
தெள்ள சம்பத் செட்டி நகைக்கடை மொத்தமாக மூடப்பட்டுள்ளது. இது,  தங்க நகை சேமிப்புத் திட்டத்தைச் செயல்படுத்தியது. 2017 அக்டோபரில் இந்தக் கடை, நகைச் சீட்டு கட்டியவர்களுக்கு நகை தராமலும், பணத்தைத் திருப்பித் தராமலும் ஏமாற்றியது. சென்னையில் உள்ள தங்கள் அனைத்துக் கடைகளையும் இவர்கள் மூடி விட்டனர். இது குறித்து, நகை நகைச்சீட்டில் பணம் கட்டியவர்கள், பொருளாதாரக் குற்றத் தடுப்பு பிரிவு போலீஸில் புகார் கொடுத்தனர்.

தங்கத்தில் ஜொலிக்கும் ஊழல்!

போலீஸ் விசாரணையில், நாதெள்ள சம்பத் செட்டி நிறுவனம் , நகைச்சீட்டுகள் மூலம், 21 ஆயிரம் பேரிடம் சுமார் ரூ.75 கோடி வசூலித்தது தெரிய வந்தது. சுமார் ஆயிரம் பேர் போலீஸில் புகார் செய்துள்ளனர்.

நகைச்சீட்டு மோசடியிலிருந்து மக்கள் தப்பிக்க என்ன வழி என்று முதலீட்டு ஆலோசகர்  வ.நாகப்பனிடம் கேட்டோம்.  

‘’தங்க நகைச்சீட்டுகளில் சிறுகச் சிறுக தங்கம் சேர்ப்பதை லாபமான சேமிப்பாகவும், எதிர்காலத்தில் குழந்தைகளின் திருமணத் தேவையைக் கணக்கில்கொண்டும் பொதுமக்கள் பணத்தைப் போடுகிறார்கள். நகைச்சீட்டு கட்டுவது, ஒரு முறைப்படுத்தப்பட்ட திட்டம் என்றுதான் சொல்கிறார்கள். அதையும் தாண்டித் தவறுகள் நடக்கும்போது, வேறு எந்த வகையில் சேமிப்பது என்பதைச் சிந்தித்தாக வேண்டும்.

தங்கம் சேமிப்பதற்கு, கடந்த காலங்களில் வேறு வாய்ப்புகள் இல்லாத சூழல் இருந்தது. ஆனால், தற்போது வேறு பல வழிகள் வந்துவிட்டன.

கோல்ட் இ.டி.எஃப் (Gold Exchange Traded Funds) என்ற திட்டம் இருக்கிறது. ஒரு கிராம் தங்கத்துக்குச் சமமாக ஒரு யூனிட் கிடைக்கும். தங்கம் விலை ஏறும்போது, இதுவும் ஏறும். விலை இறங்கும்போது, இதுவும் இறங்கும். நமக்கு எப்போது தங்கம் தேவையோ, அப்போது இதை விற்றுவிட்டுத் தங்கத்தை வாங்கிக்கொள்ளலாம். இதில், மோசடி நடக்காதா என்ற சந்தேகம் எழலாம். ஆனால், இதனை ‘செபி’ என்கிற அமைப்பு முறைப்படுத்தியுள்ளது.அவர்கள், தொடர்ச்சியாகக் கண்காணிக்கிறார்கள். இந்த இ.டி.எஃப்-பில் போடுவதற்கு தயக்கம் இருந்தால், மத்திய அரசாங்கம் ரிசர்வ் வங்கியின் மூலமாகத் தங்கப் பத்திரங்கள் கொடுக்கிறது. அதில், சேமிப்பது மிகவும் பாதுகாப்பானதாக இருக்கும். மத்திய அரசு உத்தரவாதமுள்ள ஏதேனும் ஒரு தங்கப் பத்திரத்தில் சேமிக்கலாம். இதற்கு வட்டியாகவும் வருடத்துக்கு 2.5% கொடுக்கிறார்கள். இதனை ஒரு கிராம் அளவில்  கூட வாங்கலாம். 

தங்கத்தில் ஜொலிக்கும் ஊழல்!

நகைச்சீட்டில் பணம் போட்டால், சீட்டு முடிந்த பிறகுதான் நகை வாங்க முடியும். அதேபோல, இந்த தங்கப் பத்திரத்திலும் பணத்தை முதலீடு செய்துகொண்டே கொஞ்சம் கொஞ்சமாக தங்கத்தைச் சேமிக்கலாம். இதற்கான விண்ணப்பத்தை ரிசர்வ் வங்கியில் மட்டுமல்லாமல் அருகிலுள்ள வங்கிகளிலும் பெற்றுக்கொள்ளலாம்.  பங்கு வர்த்தகர்களிடம் கேட்டாலும் கிடைக்கும். இதன் மூலம் சான்றிதழ்களாகவோ, டீமேட் கணக்காகவோ சேர்த்து வைக்கலாம். அதன்பின் இரண்டு அல்லது மூன்றாண்டுகள் கழித்து இவற்றைக் கொடுத்தால், அன்றைய தேதியில் தங்கம் என்ன விலையில் இருக்கிறதோ, அந்த மதிப்பில் நமக்குப் பணத்தைத் திருப்பித் தருவார்கள். அத்துடன், 2.5% வட்டியும் கொடுப்பார்கள். அந்தத் தங்கத்தை வைத்து, நகைக்கடைக்குச்சென்று,நகை வாங்கிக்கொள்ளலாம். மக்கள் மெள்ள மெள்ள நகைச்சீட்டிலிருந்து மாறி இவற்றை நோக்கி நகரத் தொடங்கினால், நகைச் சீட்டு மோசடிகளிலிருந்து ஓரளவு தப்பலாம்.” என்றார்.

- தெ.சு.கவுதமன்