Published:Updated:

``காதலிக்கிறேன்.. திருமணம் செஞ்சுப்பேனானு தெரியாது..!" - திருநங்கை கிரேஸ் பானு

``காதலிக்கிறேன்.. திருமணம் செஞ்சுப்பேனானு தெரியாது..!" - திருநங்கை கிரேஸ் பானு

``காதலிக்கிறேன்.. திருமணம் செஞ்சுப்பேனானு தெரியாது..!" - திருநங்கை கிரேஸ் பானு

``காதலிக்கிறேன்.. திருமணம் செஞ்சுப்பேனானு தெரியாது..!" - திருநங்கை கிரேஸ் பானு

``காதலிக்கிறேன்.. திருமணம் செஞ்சுப்பேனானு தெரியாது..!" - திருநங்கை கிரேஸ் பானு

Published:Updated:
``காதலிக்கிறேன்.. திருமணம் செஞ்சுப்பேனானு தெரியாது..!" - திருநங்கை கிரேஸ் பானு

மூகப் போராளியாக நமக்கு அறிமுகமானவர் கிரேஸ் பானு. இந்தியாவின் முதல் திருநங்கை பட்டதாரி என்ற பெருமைக்குச் சொந்தக்காரர். தனது சமூகத்துக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்துவருபவர். போராளியான இவருக்குள்ளும் அழகான காதல் புதைந்துள்ளது. அவரது காதல் நினைவுகளை நம்மிடம் பகிர்ந்தார்.

``நான் கிராமத்தைச் சேர்ந்தவள். திருநங்கைகள் பற்றி இப்போ இருக்கும் ஓரளவுக்கான தெளிவுகூட அந்தக் காலகட்டத்தில் யாருக்கும் இல்லே. எனக்குள்ளே நடக்கும் மாற்றங்கள் சரியா தப்பான்னு தெரியாமல் பல நாள் யோசிச்சிருக்கேன். ஸ்கூலில் யாரும் என் உடல் உள்ள மாற்றத்தைக் கண்டுபிடிக்கலை. சராசரி ஆண்கள்போலவே போயிட்டு வந்துட்டிருந்தேன். 12-ம் வகுப்புப் படிக்கும்போது, என்னோடு படிச்ச ஒரு பையன் எப்போ பார்த்தாலும் என்கிட்ட சண்டை போட்டுட்டே இருப்பான். அவனைச் சுத்தமாப் பிடிக்காது. எலியும் பூனையுமாக இருப்போம். திடீர்னு ஒருநாள் என்னைக் காதலிக்கிறதா சொன்னான். அதுவரை, எனக்கு மட்டுமே தெரிஞ்சதா நினைச்சுட்டிருந்த பெண்மையை, ஒருத்தன் விரும்புறான்னு தெரிஞ்சதும் அவ்வளவு சந்தோஷப்பட்டேன். முதல் காதல் தன்னையே மறக்கவெச்சிடும் இல்லியா... நானும் என்னையே மறந்துட்டேன்'' எனத் தன் காதல் கவிதையின் பல்லவியைச் சொல்கிறார்.

``சேர்ந்து ஸ்கூலுக்குப் போறது, கோயிலில் சந்திக்கிறதுன்னு எங்க காதல் அழகா நகர்ந்துச்சு. வேற எந்தப் பசங்களோடும் பேசாதேன்னு என் மேலிருக்கும் பொசசிவ்ல அவன் பேசுறப்பவும் அது எனக்கு ரொம்பவே பிடிச்சிருந்துச்சு. அவனும் நானும் புத்தகங்களில் எழுதித்தான் எங்க காதலைப் பகிர்ந்துப்போம். நான் ஸ்கூலில் பெண் வேஷம் போட்டு டான்ஸ் ஆடினேன். எல்லோரும் என்னைப் பாராட்டினாங்க. ஆனால், எனக்கே தெரியாத என் பெண்மையை அவன் நேசிச்சது எனக்குப் பிடிச்சிருந்துச்சு. என் பெண்மைக்கு உயிர் கொடுத்த அவனை நேசிக்க ஆரம்பிச்சேன். ஒருநாள் அவன் `நான் உன்னைக் காதலிக்கலை. சும்மா விளையாட்டுக்காக அப்ப சொன்னேன். வேற ஒரு பொண்ணை லவ் பண்றேன்'னு சொல்லிட்டான். அந்த வலியிலிருந்து என்னால் மீண்டு வரவே முடியலை.

அவனை மறக்கமுடியாம, ஸ்கூலிலே விஷம் குடிச்சுட்டேன். என்ன ஆச்சுன்னு விசாரிக்க ஆரம்பிச்சு, நாங்க லவ் பண்றதைத் தெரிஞ்சுக்கிட்டாங்க. அப்புறம்தான் எனக்குள்ளே இருக்கும் மாற்றம் எல்லோருக்கும் தெரிய ஆரம்பிச்சது. அதுவரை சுதந்திரப் பட்டாம்பூச்சியா சுத்திட்டிருந்த நான், கூண்டில் அடைப்பட்ட பறவை மாதிரி ஆகிட்டேன். சுற்றியிருந்தவங்க என்னை வெறுக்க ஆரம்பிச்சுட்டாங்க. இனிமே ஸ்கூலுக்கு வரக்கூடாதுன்னு சொல்லிட்டாங்க. நான் என்ன தப்புப் பண்ணினேன்? எனக்கு ஒரு பையனை பிடிச்சிருந்துச்சு அதைச் சொன்னேன். அது தப்பா? 'அது தப்பு இல்லே. நீ ஸ்கூலுக்கு வந்தா மத்த பசங்களையும் உன்னை மாதிரி ஆக்கிடுவே'னு சொன்னாங்க. என்னை மனநோய் மருத்துவமனையிலும் சேர்த்துட்டாங்க'' என்ற கிரேஸ் பானுவின் வார்த்தைகள், நம்மை அதிரவைக்கின்றன.

``ஒரு இருட்டு அறையில் சின்ன லைட் வெளிச்சத்தில் மனநல நோயாளியா இருந்தேன். அங்கிருந்து வெளி வர்றதுக்காக என் பெண்மையைக் கட்டுப்படுத்திட்டேன். கெஞ்சிக் கேட்டதில், யாரும் என்னோடு பேசக் கூடாது; நானும் யாருடனும் பேசக்கூடாதுனு கண்டிஷனுடன் மறுபடியும் ஸ்கூலில் சேர்த்துக்கிட்டாங்க. எல்லாரும் என்னை ஒதுக்கினாங்க. பாத்ரூம்கூட ஸ்கூலில் போகமுடியாது. அப்போ, நான் காதலிச்ச பையனே என்னைப் பார்த்து ஏளனமா சிரிச்சான். என் வீட்டுக்கு வந்து, `நீங்கதான் ஒன்பது புள்ளையைப் பெத்திருக்கீங்களா?'னு அம்மா அப்பாவை அசிங்கப்படுத்தினான். என் உணர்வைப் புரிஞ்சுக்காத காதலன், என்னைப் புறக்கணிக்கும் சமூகம் என எல்லாம் எனக்கு உலகத்தைப் புரியவெச்சது. மனநல மருத்துவமனையில் இருந்தப்போ என்னை மாதிரி பலரின் கஷ்டங்களைத் தெரிஞ்சுக்கிட்டேன். அவங்களுக்காக நான் படிக்கணும், போராடணும்னு முடிவு பண்ணினேன். ஸ்கூலில் கடைசிப் பரீட்சை முடிஞ்சதும் அவன் என்கிட்ட வந்து, `உன்கிட்ட பேசாமல் போனால் உன் வாழ்க்கையை அழிச்சுட்டோம்னு குற்றவுணர்ச்சி இருக்கும்'னு சொன்னான். `வீட்டுக்கு வந்து, ஒன்பது புள்ளையைப் பெத்துவெச்சிருக்கீங்கன்னு கேவலமாப் பேசி என்னை ஒதுக்கினே இல்லே, உன் கண்ணுக்கு முன்னாடியே இந்தச் சமூகத்துல நான் நல்லா வாழ்ந்து காட்டறேன்'னு சொன்னேன்.

அப்புறம் என் கவனம் முழுக்கப் படிப்பிலே இருந்துச்சு. கல்லூரி முடிச்சு வேலைக்குப் போனேன். எங்க சமூகத்துக்கு இட ஒதுக்கீடு தேவையெனப் புரிஞ்சது. எங்க உரிமைகளுக்காகப் போராட ஆரம்பிச்சேன். அந்த நேரத்தில் புதிய காதல் மலர்ந்துச்சு. நான் திருநங்கைன்னு தெரிஞ்சும் என்னைக் காதலிச்சார் ஒருத்தர். அந்தக் காதல் எனக்கும் ரொம்பப் பிடிச்சிருந்துச்சு. `நீயும் நானும் பக்கத்தில் இல்லே. வேற வேற இடத்துல இருக்கோம். ஆனா, நம்ம ரெண்டு பேருக்குமான அன்பை மட்டுமே தினமும் பரிமாறிட்டிருக்கோம்'னு பேசிப்போம். சின்னச் சின்னச் சண்டைகள், சமாதானங்கள் எங்களுக்குள்ளே நிறையவே இருக்கு. அதையெல்லாத்தையும் நான் ரசிக்கிறேன். அதேநேரம், அந்தக் காதலில் என்னை முழுசாவும் ஈடுபடுத்திக்கலை. திருமணமாகி செட்டில் ஆவேன்னு சொல்ல மாட்டேன். என் உணர்வுகளைப் பகிர்ந்துக்க அவர், அவர் உணர்வுகளைப் பகிர்ந்துக்க நான். அவ்வளவுதான் எங்க காதல். ஓர் ஆணுக்கு ஒரு பெண்கிட்ட தேடல் இருக்கும். ஒரு பெண்ணுக்கு ஆணிடம் தேடல் இருக்கும். அந்தத் தேடல் நிறைவேறிட்டால், அவங்க வேற ஒரு நபரிடம் அதைத் தேட ஆரம்பிப்பாங்க. அதனால், எனக்கு இந்த அன்பு கடைசி வரைக்கும் இருந்தால் போதும். அதைத் தாண்டி எனக்கு நிறைய பொறுப்பு இருக்கு. அதையெல்லாம் பார்க்கணும்'' என்கிறார் கிரேஸ் பானு.

ஒவ்வோர் உயிருக்குள்ளும் மறைக்கப்பட்ட, மறுக்கப்பட்ட காதல் இருக்கவே செய்கிறது..!

`காதலே காதலே

தனிப்பெருந்துணையே..

கூடவா கூடவா

போதும் போதும்..!'