Published:Updated:

அப்துல்கலாம் நினைவிடத்தில் கேக் வெட்டி அஞ்சலி செலுத்திய மாணவ - மாணவிகள்!

இரா.மோகன்
அப்துல்கலாம் நினைவிடத்தில் கேக் வெட்டி அஞ்சலி செலுத்திய மாணவ - மாணவிகள்!
அப்துல்கலாம் நினைவிடத்தில் கேக் வெட்டி அஞ்சலி செலுத்திய மாணவ - மாணவிகள்!

மக்கள் ஜனாதிபதியாகப் போற்றப்படும் மறைந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல்கலாம் பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாணவ - மாணவிகள் அஞ்சலி செலுத்தினர்.

நாட்டின் கடைக்கோடியான ராமேஸ்வரத்தில் பிறந்து தனது உழைப்பினாலும், கல்வித் திறனாலும் உலகின் மிகச் சிறந்த விஞ்ஞானியாகத் திகழ்ந்தவர் டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம். தனது ஆராய்ச்சிப் பணியில் இருந்து ஓய்வுபெற்ற காலத்துக்குப் பின்னர் இந்திய மாணவர்களின் நலனுக்காக பல்வேறு பதவிகளை வகித்து வந்தவர். இதைத் தொடர்ந்து நாட்டின் உச்சபட்ச பதவியான ஜனாதிபதியாகவும் பணியாற்றி நாட்டுக்குப் பெருமை சேர்த்தவர். அவரது பெருமையைப் போற்றும் வகையில் ராமேஸ்வரம் அருகே உள்ள பேய்க்கரும்பில் `அப்துல்கலாம் தேசிய நினைவகம்' ஒன்றை இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு அமைத்துள்ளது.

காலமெல்லாம் மாணவர்களின் வளர்ச்சிக்காக அவர்களிடையே அறிவியல், சமூக, விழிப்பு உணர்வு உரைகளை ஆற்றிச் சென்ற டாக்டர் கலாமின் 87-வது பிறந்த தினம் இன்று. இதையொட்டி பேய்க்கரும்பில் உள்ள அவரது நினைவிடத்தில் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். இன்று காலையில் கலாமின் மூத்த சகோதரர் முத்து முகம்மது மீரா மரைக்காயர் தனது குடும்பத்தினருடன் கலாம் நினைவிடத்துக்கு வந்து மலர்களைத் தூவி அஞ்சலி செலுத்தினார். இதைத் தொடர்ந்து ஜமாத்தார்கள் சிறப்பு துவா செய்தனர். இந்நிகழ்ச்சிகளில் கலாமின் நண்பர் டாக்டர் விஜயராகவன், நகைச்சுவை நடிகர் தாமு மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகி நாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.

தமிழக அரசின் சார்பில் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் கலாம் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இந்நிகழ்ச்சியின்போது விருதுநகர் பகுதியில் இருந்து வந்திருந்த ஏராளமான பள்ளி மாணவ- மாணவிகளும் கலாமுக்கு அஞ்சலி செலுத்தினர். இதைத் தொடர்ந்து திருச்சி மாவட்டம், மாடக்குடி பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் மாணவ- மாணவிகள் கலாம் நினைவிடம் முன்பாக கேக் வெட்டி கலாமின் பிறந்த தினத்தைக் கொண்டாடினர்.