Published:Updated:

`இன்ஸ்பெக்டர் திட்டுகிறார்; தற்கொலை செய்கிறேன்!'- சக காவலர்களை பதறவைத்த ரைட்டர் நோட்டீஸ்

ஆர்.குமரேசன்
`இன்ஸ்பெக்டர் திட்டுகிறார்; தற்கொலை செய்கிறேன்!'- சக காவலர்களை பதறவைத்த ரைட்டர் நோட்டீஸ்
`இன்ஸ்பெக்டர் திட்டுகிறார்; தற்கொலை செய்கிறேன்!'- சக காவலர்களை பதறவைத்த ரைட்டர் நோட்டீஸ்

திண்டுக்கல்லில் காவல் ஆய்வாளர் மோசமான வார்த்தைகளால் திட்டியதால் காவல்நிலையத்தில் எழுத்தர் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திண்டுக்கல் மாவட்டம், தாண்டிக்குடி காவல்நிலையத்தில் ஆய்வாளராகப் பணிபுரிபவர் சுப குமார். இவர் தாண்டிக்குடி காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பொறுப்பேற்று ஒன்றரை ஆண்டுகள் ஆகின்றன. இன்ஸ்பெக்டராகப் பொறுப்பேற்றுக் கொண்ட போது உதவி ஆய்வாளர், தலைமைக் காவலர் உட்பட 31 நபர்கள் பணியில் இருந்தனர். சுப குமார் தனக்குக் கீழ் பணியாற்றும் காவலர்களை மரியாதை குறைவாகவும் அசிங்கமான வார்த்தைகளிலும் அர்ச்சனை செய்வாராம். இதனால் பல காவலர்கள் இடமாறுதல் வாங்கிக் கொண்டு சென்று விட்டார்கள். புகார் கொடுக்க வரும் பொதுமக்களையும் மிகவும் கேவலமாக நடத்துவதுடன் அசிங்கமாகவும் திட்டுவாராம். பெண்களை மிகவும் மோசமாகப் பேசுவதால் புகார் கொடுக்க போவதற்கே பொதுமக்கள் தயங்கும் சூழ்நிலை நிலவுவதாகச் சொல்லப்படுகிறது. அச்சில் ஏற்ற முடியாத ஆபாசமான பேச்சு காரணமாகப் பல காவலர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார்களாம். 

சில மாதங்களுக்கு முன்பு ஓர் உதவி ஆய்வாளர் இவரது வசைச் சொற்களால் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். அதன்பிறகு வேலையே வேண்டாம் என விஆர்எஸ் கொடுத்துவிட்டு சென்றுவிட்டார். இப்படி இவரது அர்ச்சனை தாங்காமல் அனைவரும் இடமாறுதல் வாங்கிச் சென்று விட தற்போது 9 காவலர்கள் மட்டுமே இங்குப் பணியாற்றுகிறார்கள். இந்த நிலையில் வழக்கம் போல நேற்று மிகவும் மோசமான வார்த்தைகளால் காவலர்களை திட்டியிருக்கிறார். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான காவல் நிலைய எழுத்தர் முருகேசன் காவல் நிலையத்திலேயே தூக்குப் போட்டு தற்கொலைக்கு முயற்சி செய்திருக்கிறார்.

சக காவலர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். காவல் நிலையத்தில் உள்ள அறிவிப்பு பலகையில் ஆய்வாளர் திட்டியதால் மனம் உடைந்து தற்கொலை செய்கிறேன் எனக் காவலர் எழுதிவைத்துவிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் திண்டுக்கல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்படி சம்பவம் குறித்து மாவட்ட எஸ்பி சக்திவேல் விசாரணை செய்து வருகிறார்.