Published:Updated:

கீழடியில் அடுத்தகட்ட அகழாய்வு எப்போது தெரியுமா..?

இ.லோகேஷ்வரி
கீழடியில் அடுத்தகட்ட அகழாய்வு எப்போது தெரியுமா..?
கீழடியில் அடுத்தகட்ட அகழாய்வு எப்போது தெரியுமா..?

 மதுரைக்கு அருகிலுள்ள கீழடியில், நான்காம் கட்ட அகழாய்வுப் பணிகள் முடிவடைந்ததையடுத்து,  ஐந்தாம் கட்ட அகழாய்வுப்பணிகள் வரும் ஜனவரி மாதம் தொடங்கப்பட இருப்பதாகத் தெரியவருகிறது.


  வைகை நதி நாகரிகத்தின் அடையாளமாக கீழடி அகழாய்வு இருந்துவருகிறது. கீழடியில் நடந்த அகழ்வாராய்ச்சியில, மிகவும் தொன்மையான பொருள்கள் கிடைத்திருக்கின்றன. ஆதித்தமிழன் பயன்படுத்திய பொருள்களை ஆய்வுக்கு உட்படுத்தியபோது, அவை கி.மு 2-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்று கண்டறியப்பட்டது. இதுவரை கீழடியில் மூன்று கட்ட அகழாய்வு முழுமையாக நடந்து முடிந்திருக்கிறது. நான்காம் கட்ட அகழாய்வு கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி செப்டம்பர் 30ம் தேதி வரை நடைபெற்றது. நான்காம் கட்ட அகழாய்வுக்காகத் தோண்டப்பட்ட குழிகள் இன்று (15.10.18) முதல் மூடப்பட்டுவருகின்றன. 

 நான்காம் கட்ட அகழாய்வு தமிழக தொல்லியல் துறையின் சார்பில்,  அதன் கண்காணிப்பாளர் சிவானந்தம் தலைமையில் நடைபெற்றது. இதற்கான  முதற்கட்ட ஆய்வறிக்கையைத் தயாரிக்கும் பணியில் தொல்லியல் துறையினர் ஈடுபட்டுவருகின்றனர். நான்காம்கட்ட அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருள்களில் சிலவற்றை கார்பன் பகுப்பாய்வுக்காக வெளிநாட்டுக்கு அனுப்பப்பட இருக்கின்றன.

இதையடுத்து, ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று தெரியவருகிறது. கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பொருள்களைக் கொண்டு அங்கேயே அருங்காட்சியகம் அமைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருப்பதாக தொல்லியல்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்திருக்கிறார். இந்நிலையில், மழைக்காலம் முடிந்ததும், கீழடியில் மொத்தம் உள்ள நான்கு ஏக்கர் பரப்பளவுள்ள இடத்தில், ஐந்தாம்கட்ட அகழாய்வு 2019 ஜனவரி மாதம் தொடங்கப்பட இருப்பதாகத் தெரியவருகிறது.