Published:Updated:

`நீதிமன்றத்தில் நடந்தவை அனைத்தும் நாடகம்!’- கேரள கன்னியாஸ்திரி வழக்கில் போராடும் ஷைஜூ ஆண்டனி

எம்.ஆர்.ஷோபனா

ஃபிரான்கோ முளக்கல் தன்னை 13 முறை பாலியல் வன்மகொடுமை செய்ததாக, ஜூன் மாதம் புகார் அளித்தார், குருவிளங்காடு பகுதியில் உள்ள தேவாலயத்தைச் சேர்ந்த கன்னியாஸ்திரீ ஒருவர்.

`நீதிமன்றத்தில் நடந்தவை அனைத்தும் நாடகம்!’- கேரள கன்னியாஸ்திரி வழக்கில் போராடும் ஷைஜூ ஆண்டனி
`நீதிமன்றத்தில் நடந்தவை அனைத்தும் நாடகம்!’- கேரள கன்னியாஸ்திரி வழக்கில் போராடும் ஷைஜூ ஆண்டனி

பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கேரளாவைச் சேர்ந்த பாதிரியார் ஃப்ரான்கோ முலக்கல். இவருக்குக் கேரளா உயர் நீதிமன்றம் இன்று (திங்கள்கிழமை) நிபந்தனை ஜாமீன் வழங்கியிருப்பது, கன்னியாஸ்திரிகள் மத்தியில் பெரும் அதிருப்தியையும் பல சந்தேகங்களையும் எழுப்பியுள்ளது.

கோட்டயத்துக்கு அருகே குருவிளங்காடு பகுதியில் உள்ள தேவாலயத்தில் பாதிரியாராக இருந்தவர், ஃபிரான்கோ முளக்கல். இவர், தன்னை 13 முறை பாலியல் வன்கொடுமை செய்ததாக, ஜூன் மாதம் புகார் அளித்தார், அந்தத் தேவாலயத்தைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர். பதவி பலமும் அரசியல் பின்புலமும் கொண்ட ஃப்ரான்கோவை கைது செய்யுமாறு கன்னியாஸ்திரிகள் போராட்டத்தில் இறங்கினர். அதைத் தொடர்ந்து, செப்டம்பர் 21-ம் தேதி கைது செய்யப்பட்டார் ஃப்ரான்கோ. அவர் கோரிய ஜாமீன் மனுவை, கீழ் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தொடர்ந்து, உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இதை விசாரித்த உயர் நீதிமன்றம், நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.

கேரளா கன்னியாஸ்திரியர்களுக்கு ஆதரவாகப் போராட்டக் களத்தில் இயங்கிவரும் 'Save Our Sisters Action Council'

உறுப்பினரான ஷைஜூ ஆண்டனியிடம் பேசினோம். “இன்று நீதிமன்றத்தில் நடந்தவை அனைத்தும் நாடகம். டைரக்டர் ஜெனரல் பிராஸிக்யூடர் வரவே இல்லை. ஜூனியர் பிராஸிக்யூடர்கள் மட்டுமே இருந்தனர். அரசு அவரின் பக்கம் இருக்கிறது. சில நாள்கள் முன்னதாகவே, பாதிரியாருக்கு ஜாமீன் கிடைத்துவிடும் என்று சமூக வலைதளங்களில் பதிவுகள் வந்தவண்ணம் இருந்தன. அதுவே நடந்துள்ளது. இந்த நிலை தொடர்ந்தால், நாங்கள் அனைவரும் நிச்சயம் மிகப்பெரிய போராட்டத்தில் இறங்குவோம். தொடக்கம் முதலே, அரசு அவருக்கு ஆதரவாக இருக்கிறது என்று கூறிவருகிறோம். எங்களின் முந்தைய போராட்டத்தாலே அவர் கைது செய்யப்பட்டார். பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரிக்கு எந்தவிதமான பண பலமோ, அதிகார பலமோ இல்லை. இதுகுறித்து இன்று ஒரு கூட்டம் ஏற்பாடு செய்திருக்கிறோம். இந்த விவகாரத்தில் அடுத்த என்ன செய்யலாம் என்பது பற்றி கூட்டத்தில் முடிவெடுப்போம்” என்றார்.