Published:Updated:

#Metoo புகார் கூறியவர் மீது அவதூறு வழக்கு! - அமைச்சர் எம்.ஜே.அக்பர் தாக்கல்

ஜெனிஃபர்.ம.ஆ
#Metoo புகார் கூறியவர் மீது அவதூறு வழக்கு! - அமைச்சர் எம்.ஜே.அக்பர் தாக்கல்
#Metoo புகார் கூறியவர் மீது அவதூறு வழக்கு! - அமைச்சர் எம்.ஜே.அக்பர் தாக்கல்

பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்து புகழுக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாகக் கூறி, தன்மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்த பத்திரிகையாளர்மீது, மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் எம்.ஜே. அக்பர் டெல்லி நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல்செய்துள்ளார். 

நாடு முழுவதும் பல்வேறு துறைகளில் பணியாற்றும் பெண்கள், தாங்கள் சந்தித்த பாலியல் சீண்டல்கள் தொடர்பாக #metoo என்னும் ஹேஷ்டேக் மூலம் வெளிப்படையாகத் தெரியப்படுத்திவந்தனர். திரைப்படம், அரசியல் எனப் பல உயர்ந்த இடத்தில் இருந்தவர்களின் பெயர்களும் இந்தப் பட்டியலில் இடம்பெற்று அதிர்ச்சி அளித்துவந்தது. இந்த நிலையில், கடந்த சில நாள்களாக மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் எம்.ஜே அக்பர் மீதும் புகார்கள் வந்தது. அவர் பத்திரிகையாளராக இருந்தபோது, தன்னுடன் பணியாற்றிய சக பெண் ஊழியர்களிடம் தவறாக நடக்க முயன்றதாகப் பலர் புகார் தெரிவித்தனர்.

இதில், அமைச்சர் எம்.ஜே அக்பர் மீது மிகக் காட்டமாக புகார் தெரிவித்த பெண் பத்திரிகையாளர், பிரியா ரமணி மீது அமைச்சர் எம்.ஜே அக்பர் தரப்பிலிருந்து, அவதூறு வழக்கு போடப்பட்டிருக்கிறது. மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் எம்.ஜே அக்பரின் வழக்கறிஞர்கள்  வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், இதை உறுதிசெய்திருக்கின்றனர். பத்திரிகையாளர் பிரியா ரமணி மீது ஐபிசி பிரிவு 499  மற்றும் 500-ன் கீழ் புகார் பதியப்பட்டுள்ளது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரியா ரமணி கடந்த ஆண்டு பிரபல பத்திரிகையில் ஹாலிவுட் உலகை #metoo  உலுக்கிக்கொண்டிருந்தபோது, தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமை பற்றி எழுதினார்.அதில் பெயர் குறிப்பிடவில்லை எனினும் மறைமுகமாக,'இந்திய இதழியலை மாற்றியவர்' என மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் எம்.ஜே அக்பரைப் பற்றி குறிப்பிட்டிருந்தார். ஏன் பெயர் வெளியிடவில்லை என்ற கேள்விக்கு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், `எதுவும் நடக்கவில்லை. அதனால் பெயர் வெளியிடவில்லை’ என்று அவர் பதில் அளித்திருந்தார்.

தற்போது இதையே சுட்டிக் காட்டியுள்ள அமைச்சர் எம்.ஜே.அக்பர் தரப்பு, `எதுவும் நடக்கவில்லை என்ற அவரது பதிலே, அவரது குற்றச்சாட்டை பொய்யாக்குகிறது. அவரது குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றது. இதனால் அமைச்சரின் நற்பெயருக்கு பொது வெளியிலும், குடும்ப நண்பர்கள் மத்தியிலும் களங்கம் ஏற்பட்டுள்ளது. இது, அவருக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பையும், மன உளைச்சலையும் அளித்துள்ளது’ என்று கூறி நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளது.

இந்த வழக்கு, எம்.ஜே.அக்பர் தரப்பில் தனிப்பட்ட முறையில் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகக் கூறியுள்ள பா.ஜ.க, `அமைச்சரின் வாதத்தை ஏற்றுக்கொள்ளவோ அல்லது மறுக்கவோ இல்லை. அவர், தனது தரப்பு வாதத்தை முன்வைத்திருக்கிறார்’ என்று கூறியிருக்கிறது.