
முளைகட்டிய கோதுமை இனிப்புப் புட்டு
தேவை: கோதுமை - ஒரு கப் நாட்டுச் சர்க்கரை - தேவையான அளவு நெய் - சிறிதளவு தேங்காய்த் துருவல் - தேவையான அளவு.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
செய்முறை: கோதுமையை 10 மணி நேரம் ஊறவைத்து முளைகட்டவும். முளைத்த கோதுமையைச் சுத்தமான துணியில் பரப்பி வெயிலில் நன்கு காயவிடவும். வெறும் வாணலியில் கோதுமையைச் சிறிது சிறிதாகப் போட்டு, படபடவென வெடிக்கும் வரை வறுத்தெடுக்கவும். ஆறிய பிறகு மிக்ஸியில் சேர்த்துப் புட்டு மாவுப் பதத்துக்கு அரைத்தெடுக்கவும். அதில் லேசாக தண்ணீர் தெளித்துப் பிசிறி ஆவியில் வேகவிட்டு எடுக்கவும். அதனுடன் தேங்காய்த் துருவல், நெய், நாட்டுச் சர்க்கரை சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

புதினா பொடி புலாவ்
தேவை: புதினா பொடி செய்ய: புதினா - ஒரு கட்டு கறுப்பு உளுத்தம்பருப்பு - 100 கிராம் பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை காய்ந்த மிளகாய் – தேவையான அளவு எண்ணெய் - 2 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு. புலாவ் செய்ய: பாசுமதி அரிசி சாதம் - ஒரு கப் வேகவைத்த பச்சைப் பட்டாணி - ஒரு கைப்பிடி அளவு நெய் - ஒரு டேபிள்ஸ்பூன் பூண்டு - 5 பல் (பொடியாக நறுக்கவும்) பெரிய வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்) உப்பு - தேவையான அளவு.
செய்முறை: புதினாவை நன்கு அலசி ஒரு துணியில் பரப்பி ஈரம் போக உலரவிடவும். வாணலியில் கறுப்பு உளுந்தைச் சேர்த்து வாசனை வரும்வரை வறுக்கவும். அதனுடன் பெருங்காயத்தூள், உப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்துப் புரட்டி இறக்கவும். அதே வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெய்விட்டு புதினா சேர்த்து, அடுப்பை சிறு தீயில் வைத்து இரண்டு நிமிடங்கள் வதக்கி எடுக்கவும். ஆறியதும் உளுந்து கலவையுடன் சேர்த்து மிக்ஸியில் பொடியாக அரைத்தெடுக்கவும். புதினா பொடி ரெடி. அதே வாணலியில் சிறிதளவு நெய்விட்டு பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கவும். அதனுடன் வேகவைத்த பட்டாணி சேர்த்து இறக்கவும். இதை ஆறிய சாதத்துடன் சேர்த்து உப்பு, புதினா பொடி சேர்த்து சாதம் உடையாமல் நன்கு புரட்டிவிடவும்.
குறிப்பு: பொடியில் உப்பு இருப்பதால் சாதத்துடன் உப்பைக் கவனமாகச் சேர்க்கவும். பொடியை அவரவர் விருப்பத்துக்கேற்ப சேர்த்துக்கொள்ளலாம்.

முருங்கைக்கீரை சூப்
தேவை: சுத்தம் செய்த முருங்கைக்கீரை - ஒரு கப் சீரகம் - ஒரு டீஸ்பூன் பூண்டு - 5 பல்
தோலுரித்த சின்ன வெங்காயம் - 6 தக்காளி - ஒன்று (பொடியாக நறுக்கவும்) கறிவேப்பிலை, மஞ்சள்தூள் - சிறிதளவு தேங்காய்ப்பால் - ஒரு கப் மிளகுத்தூள், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வெங்காயம், சீரகம், பூண்டு, தக்காளி, கறிவேப்பிலை ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்துத் தண்ணீர் தெளித்து நைஸாக அரைத்தெடுக்கவும். குக்கரில் கழுவிய முருங்கைக்கீரை, அரைத்த விழுது, தேவையான அளவு தண்ணீர், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து மூடி ஆறு விசில்விட்டு இறக்கவும். ஆவி அடங்கியதும் குக்கரின் மூடியைத் திறந்து நன்கு மசித்து வடிகட்டவும். அதனுடன் தேங்காய்ப்பால், மிளகுத்தூள் சேர்த்துச் சூடாக்கி ஒரு கொதிவிட்டு இறக்கிப் பரிமாறவும்.

முருங்கைக்காய் சூப்
தேவை: முருங்கைக்காய் - 4 (சிறிய துண்டுகளாக்கவும்) பெரிய வெங்காயம், தக்காளி - தலா ஒன்று (பொடியாக நறுக்கவும்) சீரகம் - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன் (ஒன்றிரண்டாக அரைத்தது) சாம்பார் பொடி - கால் டீஸ்பூன் மஞ்சள்தூள் - 2 சிட்டிகை தேங்காய்ப்பால் (ஒரு மூடியில் எடுத்தது) - ஒரு கப் மிளகுத்தூள், கொத்தமல்லித்தழை - சிறிதளவு தேங்காய் எண்ணெய் - 3 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு.
செய்முறை: முருங்கைக்காயை நன்கு வேகவிட்டு, சதைப்பகுதியை மட்டும் தனியாக எடுத்து நன்றாக மசிக்கவும். வாணலியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சீரகம் - பூண்டு விழுது, வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். அதனுடன் மஞ்சள்தூள், சாம்பார் பொடி சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு முருங்கைக்காயின் சதைப்பகுதி, உப்பு சேர்த்து வேகவிடவும். இதனுடன் தேங்காய்ப்பால் சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கவும். மேலே கொத்தமல்லித்தழை, மிளகுத்தூள் சேர்த்துக் கலந்தால் இரும்புச் சத்து நிறைந்த முருங்கைக்காய் சூப் ரெடி.

காலிஃப்ளவர் - புதினா ரைஸ்
தேவை: ஆய்ந்த காலிஃப்ளவர், சாதம் - தலா ஒரு கப் பெரிய வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்) பச்சை மிளகாய் - தேவையான அளவு இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன் புதினா - ஒரு கைப்பிடி அளவு எண்ணெய், நெய் - தலா 2 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு.
செய்முறை: காலிஃப்ளவரை உப்பு கலந்த வெந்நீரில் போட்டு எடுக்கவும். புதினாவுடன் பச்சை மிளகாய் சேர்த்துத் தண்ணீர் தெளித்து விழுதாக அரைத்தெடுக்கவும். வாணலியில் எண்ணெய், நெய் ஊற்றி வெங்காயம், இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். அதனுடன் அரைத்த புதினா விழுது, உப்பு சேர்த்து நன்கு சுருள வதக்கவும். பிறகு காலிஃப்ளவரைச் சேர்த்து வேகவிட்டு இறக்கவும். இதனுடன் சாதம் சேர்த்து நன்கு புரட்டி எடுத்தால், காலிஃப்ளவர் - புதினா ரைஸ் ரெடி.

முள்ளங்கி - சீரக சாதம்
தேவை: முள்ளங்கி - ஒன்று (தோல் சீவி, சதுர துண்டுகளாக்கவும்) சாதம் - ஒரு கப் சீரகம் - ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிதளவு பூண்டு - 5 பல் (வட்டமாக நறுக்கவும்) மிளகுத்தூள், உப்பு - தேவையான அளவு
எண்ணெய், நெய் - தலா ஒரு டீஸ்பூன்.
செய்முறை: முள்ளங்கியுடன் சிறிதளவு தண்ணீர் தெளித்துத் தனியாக வேகவைத்து எடுக்கவும். சாதத்தை உதிர் உதிராக வேகவிட்டு ஆறவைக்கவும். வாணலியில் நெய் - எண்ணெய் ஊற்றி சீரகம், கறிவேப்பிலை தாளிக்கவும். அதனுடன் பூண்டு, முள்ளங்கி, உப்பு சேர்த்துக் கிளறி இறக்கவும். பிறகு சாதம், மிளகுத்தூள் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

சிவப்பரிசி ஆப்பம்
தேவை: சிவப்பரிசி, பச்சரிசி - தலா 200 கிராம் உளுத்தம்பருப்பு - ஒரு கைப்பிடி அளவு வெந்தயம் - 2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் உப்பு - தேவையான அளவு.
செய்முறை: சிவப்பரிசி, பச்சரிசி, உளுத்தம்பருப்பு, வெந்தயம் ஆகியவற்றைச் சேர்த்து மூன்று மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு களைந்து அவற்றுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கிரைண்டரில் நைஸாக அரைத்தெடுக்கவும். பிறகு உப்பு சேர்த்துக் கரைத்து ஆறு மணி நேரம் புளிக்கவிடவும். ஆப்பக்கல்லைச் சூடாக்கி மாவை ஆப்பங்களாக ஊற்றி, சிறிதளவு தேங்காய் எண்ணெய்விட்டு வேகவிட்டு எடுக்கவும்.
குறிப்பு: சிவப்பரிசி சேர்ப்பதால் ஆப்ப சோடா தேவையில்லை. நன்கு மிருதுவாக வரும். ருசியாகவும் இருக்கும். சிவப்பரிசியில் சத்துகள் பல அடங்கியுள்ளன.

பசும் மஞ்சள் சூப்
தேவை: பசும் மஞ்சள் - ஒன்றரை இன்ச் அளவு துண்டு ஓமவல்லி இலைகள் - 4 துளசி இலைகள் - 10 சீரகம் - அரை டீஸ்பூன் மிளகு - 4 பூண்டு - 2 பல் தோலுரித்த சின்ன வெங்காயம் - 3 தண்ணீர் - ஒரு லிட்டர் உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பசும் மஞ்சளைத் தோல் சீவி, பொடியாக நறுக்கவும். அதனுடன் ஓமவல்லி, துளசி, மிளகு, சீரகம், பூண்டு, வெங்காயம் ஆகியவற்றைச் சேர்த்து மிக்ஸியில் போட்டுச் சிறிதளவு தண்ணீர்விட்டு அரைத்தெடுக்கவும். பாத்திரத்தில் ஒரு லிட்டர் தண்ணீருடன் அரைத்த விழுது சேர்த்துக் கலந்து கொதிக்கவிடவும். தண்ணீர் கொதித்து முக்கால் லிட்டர் ஆன பிறகு இறக்கவும். தேவையானபோது லேசாக சூடாக்கி உப்பு சேர்த்துப் பருகலாம்.
குறிப்பு: இந்த சூப் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். தொடர்ந்து எடுத்துக்கொள்ளலாம்.

முளைகட்டிய பயறு கொழுக்கட்டை
தேவை: கொழுக்கட்டை மாவு - 200 கிராம் முளைகட்டிய பச்சைப் பயறு - ஒரு கைப்பிடி அளவு பெரிய வெங்காயம் பச்சை மிளகாய் - தலா 2 (பொடியாக நறுக்கவும்) கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன் கடலைப்பருப்பு - 4 டீஸ்பூன் கறிவேப்பிலை, நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு தேங்காய்த் துருவல் (அ) பல்லு பல்லாகக் கீறிய தேங்காய்த் துண்டுகள் - ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு தாளிக்கவும். வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். அதனுடன் முளைகட்டிய பயறு சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி இறக்கவும். மேலே கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, தேங்காய்த் துருவல் சேர்த்துக் கலக்கவும். கொழுக்கட்டை மாவுடன் வதக்கிய பயறு, உப்பு சேர்த்துக் கலக்கவும். அதனுடன் சிறிதளவு தண்ணீர் தெளித்துப் பிசையவும். பிறகு மாவைக் கொழுக்கட்டைகளாகப் பிடித்து, ஆவியில் வேகவிட்டு எடுக்கவும். சத்தான பயறு கொழுக்கட்டை ரெடி.
குறிப்பு: இடியாப்ப மாவு (அ) சிவப்பரிசி புட்டு மாவிலும் தயாரிக்கலாம்.

சிவப்பரிசிக் கஞ்சி
தேவை: சிவப்பரிசி - 100 கிராம் பாசிப்பருப்பு - ஒரு கைப்பிடி அளவு பெரிய வெங்காயம் பச்சை மிளகாய், தக்காளி - தலா ஒன்று (பொடியாக நறுக்கவும்) இஞ்சி - பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன் கொத்தமல்லித்தழை - சிறிதளவு வெந்தயம், சீரகம் - தலா அரை டீஸ்பூன் தேங்காய்த் துருவல் - 2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வெறும் வாணலியில் சிவப்பரிசியை லேசாக வறுத்தெடுக்கவும். ஆறிய பிறகு மிக்ஸியில் சன்ன ரவையாக உடைத்தெடுக்கவும். பாசிப்பருப்பை அரை மணி நேரம் ஊறவிடவும். குக்கரில் தேங்காய் எண்ணெய்விட்டு வெந்தயம், சீரகம் தாளிக்கவும். அதனுடன் இஞ்சி - பூண்டு விழுது, பச்சை மிளகாய், வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். பிறகு அரை லிட்டர் தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடவும். அதனுடன் அரிசி ரவை, பாசிப்பருப்பு, உப்பு சேர்த்து குக்கரை மூடி ஐந்து விசில்விட்டு இறக்கவும். குக்கரில் ஆவி அடங்கியதும் மூடியைத் திறந்து தேங்காய்த் துருவல், கொத்தமல்லித்தழை சேர்த்துக் கலந்து பரிமாறவும்.
குறிப்பு: விரும்பினால் தேங்காய்ப்பால் சேர்க்கலாம்.

மொசுமொசு அவரைக் கறி
தேவை: மொசுமொசு அவரை - கால் கிலோ (பொடியாக நறுக்கவும்) தோலுரித்த சின்ன வெங்காயம் - ஒரு கைப்பிடி அளவு (வட்டமாக நறுக்கவும்) பூண்டு - 5 பல் (வட்டமாக நறுக்கவும்) சாம்பார் பொடி - தேவையான அளவு மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிதளவு தேங்காய்த் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் தாளிக்கவும். அதனுடன் வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும். பிறகு அவரைக்காய், சாம்பார் பொடி, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். அதனுடன் சிறிதளவு தண்ணீர் தெளித்து மூடி போட்டு வேகவிடவும். காய் வெந்ததும் தேங்காய்த் துருவல் சேர்த்துப் புரட்டி இறக்கவும்.
குறிப்பு: மொசுமொசு அவரை மருத்துவக் குணம் கொண்டது. இந்த அவரைக்காய் கிடைக்காதவர்கள் சாதாரண அவரைக்காயிலும் இதேபோல் செய்யலாம்.

முள்ளங்கி பருப்புப் பச்சடி
தேவை: முள்ளங்கி - 2 (தோல் சீவி, சதுர துண்டுகளாக்கவும்) துவரம்பருப்பு - 100 கிராம் தக்காளி, பச்சை மிளகாய் - தலா ஒன்று (பொடியாக நறுக்கவும்) சீரகம் - ஒரு டீஸ்பூன் சாம்பார் பொடி – தேவையான அளவு கறிவேப்பிலை - சிறிதளவு கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன் பெருங்காயத்தூள் - 2 சிட்டிகை மஞ்சள்தூள் - சிறிதளவு எண்ணெய் - 3 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு.
செய்முறை: குக்கரில் துவரம்பருப்புடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி, இரண்டு விசில்விட்டு இறக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, சீரகம் தாளிக்கவும். அதனுடன் முள்ளங்கி, தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து லேசாக வதக்கவும். பிறகு வேகவைத்த பருப்பு, சாம்பார் பொடி, மஞ்சள்தூள், உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து நன்கு வேகவிட்டு இறக்கவும்.
குறிப்பு: இது சாதம், டிபனுக்கு ஏற்ற சைடிஷ்.

பீட்ரூட் ஜூஸ்
தேவை: பீட்ரூட், நெல்லிக்காய் - தலா ஒன்று தோல் சீவிய இஞ்சி - சிறிய துண்டு (துருவவும்) மிளகுத்தூள், உப்பு - சிறிதளவு.
செய்முறை: பீட்ரூட்டைத் தோல் சீவி, பொடியாக நறுக்கவும். நெல்லிக்காயின் கொட்டையை நீக்கி, பொடியாக நறுக்கவும். பீட்ரூட்டுடன் நெல்லிக்காய் துண்டுகள், இஞ்சித் துருவல், கொஞ்சம் தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைத்து வடிகட்டவும் (வடிகட்டும்போது சிறிதளவு மட்டும் தண்ணீர் சேர்க்கவும்). அதனுடன் சிறிதளவு உப்பு, மிளகுத்தூள் சேர்த்துப் பருகலாம்.
குறிப்பு: இதை அருந்துவதால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.

செங்கீரைக் கூட்டு
தேவை: நறுக்கிய சிவப்பு தண்டுக்கீரை - ஒரு கப் பாசிப்பருப்பு - 100 கிராம் (வேகவைக்கவும்) சீரகம் - ஒரு டீஸ்பூன் பூண்டு - 4 பல் தோலுரித்த சின்ன வெங்காயம் - 10 தக்காளி - ஒன்று (பொடியாக நறுக்கவும்) சாம்பார் பொடி - தேவையான அளவு மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் - தலா ஒரு சிட்டிகை கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிதளவு எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பூண்டுடன் சீரகம் சேர்த்து ஒன்றிரண்டாக அரைத்தெடுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் தாளிக்கவும். அதனுடன் வெங்காயம், தக்காளி, பூண்டு - சீரக விழுது சேர்த்து வதக்கவும். பிறகு, கீரை சேர்த்து நன்கு வதக்கி சாம்பார் பொடி, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர்விட்டு நன்றாக வேகவிடவும். அதனுடன் வேகவைத்த பாசிப்பருப்பு சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கவும். சத்தான கீரைக் கூட்டு ரெடி.
குறிப்பு: சாதத்துடன் பிசைந்து சாப்பிட ருசியாக இருக்கும். மற்ற கீரைகளிலும் இதேபோல் செய்யலாம்.

குடமிளகாய் சம்பல்
தேவை: குடமிளகாய், பெரிய வெங்காயம் - தலா 2 (சதுர துண்டுகளாக நறுக்கவும்) பூண்டு - 10 பல் (ஒன்றிரண்டாகத் தட்டவும்) சீரகத்தூள் - கால் டீஸ்பூன் மிளகாய்த்தூள் - தேவையான அளவு மஞ்சள்தூள் - 2 சிட்டிகை கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிதளவு எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: வாணலியில் எண்ணெய்விட்டு கறிவேப்பிலை, பூண்டு தாளிக்கவும். அதனுடன் வெங்காயம் சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கவும். பிறகு குடமிளகாய், சீரகத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கி மூடி போட்டு, அடுப்பை சிறு தீயில் வைத்து நன்கு வேகவிடவும். மேலே கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.
குறிப்பு: தக்காளி சேர்த்தும் செய்யலாம். தண்ணீர் தேவையில்லை. நன்கு சுருள வதக்குவதிலேயே வெந்துவிடும்.

பூண்டு - வெங்காய வதக்கல்
தேவை: பூண்டு - 100 கிராம் (தோலுரித்து, வட்டமாக நறுக்கவும்) தோலுரித்த சின்ன வெங்காயம் - 200 கிராம் (நீளவாக்கில் நறுக்கவும்) மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை மிளகாய்த்தூள், சீரகத்தூள் - தேவையான அளவு
கடுகு - ஒரு டீஸ்பூன் உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிதளவு நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளிக்கவும். அதனுடன் வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும். பிறகு உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள் சேர்த்து நன்கு வதக்கி, கலவை சுருண்டு வந்த பிறகு இறக்கவும்.
குறிப்பு: இது தயிர் சாதத்துக்குத் தொட்டுக்கொள்ள ஏற்றது. நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்.

ஸ்வீட் பொட்டேட்டோ - நட்ஸ் மில்க் ஷேக்
தேவை: சர்க்கரைவள்ளிக் கிழங்கு - ஒன்று பாதாம், பிஸ்தா, முந்திரி, வால்நட் - தேவையான அளவு காய்ச்சி ஆறவைத்த பால் - 200 மில்லி நாட்டுச் சர்க்கரை - தேவையான அளவு ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.
செய்முறை: சர்க்கரைவள்ளிக் கிழங்கை வேகவைத்துத் தோல் நீக்கி துருவவும். பாதாம், பிஸ்தா, முந்திரி, வால்நட் ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்துப் பொடிக்கவும். அதனுடன் துருவிய சர்க்கரைவள்ளிக் கிழங்கு சேர்த்து அரைத்தெடுக்கவும். அதில் பால், நாட்டுச் சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்த்து மிக்ஸியில் நுரை பொங்க அடித்துப் பரிமாறவும்.
குறிப்பு: இதைக் குளிரவைத்தும் பரிமாறலாம்.

சிவப்பரிசி கார சேவை
தேவை: சிவப்பரிசி - 250 கிராம் தக்காளி - 6 (பொடியாக நறுக்கவும்) பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கவும்) மிளகாய்த்தூள் - தேவையான அளவு மஞ்சள்தூள் - சிறிதளவு இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன் கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிதளவு சோம்பு - கால் டீஸ்பூன் எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன் உப்பு - தேவையான அளவு.
செய்முறை: சிவப்பரிசியை மூன்று மணி நேரம் ஊறவைத்துக் களைந்து கிரைண்டரில் இட்லி மாவு பதத்துக்கு நைஸாக அரைத்தெடுக்கவும். பிறகு மாவை இட்லித் தட்டில் ஊற்றி, ஆவியில் வேகவைத்து எடுக்கவும். இட்லிகள் சூடாக இருக்கும்போதே சேவை அச்சில் போட்டுப் பிழிந்தெடுத்து ஆறவிடவும். வாணலியில் எண்ணெய்விட்டு சோம்பு தாளிக்கவும். அதனுடன் வெங்காயம், கறிவேப்பிலை, இஞ்சி - பூண்டு விழுது, தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்கு சுருள வதக்கவும். பிறகு, அடுப்பை சிறு தீயில் வைத்து ஆறிய சேவை சேர்த்து நன்கு புரட்டி, கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும். மிகவும் சத்தான டிபன் ரெடி.
குறிப்பு: தேங்காய்த் துருவல், நெய், நாட்டுச் சர்க்கரை சேர்த்து இனிப்பு சேவையும் செய்யலாம். இந்த சேவையைச் ‘சந்தவை’ என்றும் சொல்வார்கள்.

பீட்ரூட் தயிர்ப் பச்சடி
தேவை: பீட்ரூட் - 200 கிராம் (தோல் சீவி, சதுர துண்டுகளாக நறுக்கவும்) தயிர் - 200 மில்லி கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன் பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்) கொத்தமல்லித்தழை - சிறிதளவு எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பீட்ரூட் துண்டுகளுடன் சிறிதளவு தண்ணீர், சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு வேகவைத்து எடுக்கவும். ஆறியதும் அதனுடன் தயிர், சிறிதளவு உப்பு சேர்த்துக் கலக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளிக்கவும். அதனுடன் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, தயிர்க்கலவையுடன் சேர்க்கவும். மேலே கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

தானிய தோசை
தேவை: ராகி, கம்பு, கோதுமை, வரகு - தலா 100 கிராம் கொள்ளு - 50 கிராம் கறுப்பு கொண்டைக்கடலை - ஒரு கைப்பிடி அளவு கறுப்பு உளுந்து - 100 கிராம் வெந்தயம் - ஒரு டீஸ்பூன் எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கறுப்பு கொண்டைக்கடலையை முதல் நாள் இரவே ஊறவைக்கவும். ராகி, கம்பு, கோதுமை, வரகு, கொள்ளு, உளுத்தம்பருப்பு, வெந்தயம் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து நான்கு மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு அதனுடன் கொண்டைக்கடலை சேர்த்துக் களைந்து தோசை மாவுப் பதத்துக்கு அரைத்தெடுக்கவும். உப்பு சேர்த்துக் கரைத்து மூன்று மணி நேரம் புளிக்கவிடவும். தோசைக்கல்லைக் காயவைத்து, மாவைத் தோசைகளாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய்விட்டு இருபுறமும் வேகவைத்து எடுக்கவும்.
குறிப்பு: மாவைச் சிறிய ஊத்தப்பமாக ஊற்றி, மேலே வெங்காயம் தூவி சுட்டெடுக்கலாம்.

கொத்தமல்லி - புதினாத் தொக்கு
தேவை: கொத்தமல்லித்தழை, புதினா, கறிவேப்பிலை, பச்சைப் பட்டாணி - தலா 2 கைப்பிடி அளவு குடமிளகாய் - ஒன்று (பொடியாக நறுக்கவும்) பச்சை மிளகாய் – தேவையான அளவு பெருங்காயத்தூள் - 2 சிட்டிகை கடுகு - ஒரு டீஸ்பூன் புளி - சிறிதளவு நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கொத்தமல்லித்தழையுடன் புதினா, கறிவேப்பிலை, குடமிளகாய், பச்சைப் பட்டாணி, பச்சை மிளகாய், புளி, சிறிதளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைத்தெடுக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, பெருங்காயத்தூள் தாளிக்கவும். அதனுடன் அரைத்த விழுது, உப்பு சேர்த்து நன்கு சுருள வதக்கி இறக்கவும். இதை சாதத்துடன் சாப்பிடலாம். இட்லி, தோசைக்குத் தொட்டுக்கொள்ளலாம்.
குறிப்பு: புளிக்குப் பதிலாக எலுமிச்சைச் சாறு சேர்க்கலாம்.

சிவப்பு அவல் - நட்ஸ் மசாலா
தேவை: சுத்தம் செய்த சிவப்பு அவல் - ஒரு கப் கொத்தமல்லித்தழை - சிறிதளவு இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் - சிறிதளவு உப்பு - தேவையான அளவு.
தாளிக்க: பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கவும்) தக்காளி, பச்சை மிளகாய் - தலா ஒன்று (பொடியாக நறுக்கவும்) பொடியாக நறுக்கிய வால்நட், பாதாம், பிஸ்தா, முந்திரி - தலா ஒரு டீஸ்பூன் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிதளவு நெய் - ஒரு டீஸ்பூன் எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்.
செய்முறை: வாணலியில் நெய்விட்டு வால்நட், பாதாம், பிஸ்தா, முந்திரி ஆகியவற்றைச் சேர்த்து வறுத்துத் தனியாக எடுத்து வைக்கவும். அதே வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை தாளிக்கவும். அதனுடன் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பிறகு இஞ்சி - பூண்டு விழுது, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். அதனுடன் ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடவும். பிறகு அவல் சேர்த்து இரண்டு நிமிடங்கள் கழித்து, அடுப்பை சிறு தீயில் வைத்து மூடி போட்டு வேகவிடவும். மேலே கொத்தமல்லித்தழை, வறுத்த நட்ஸ் சேர்த்துக் கலந்து இறக்கிப் பரிமாறவும்.

வரகு - கொள்ளு பொங்கல்
தேவை: வரகு அரிசி - 200 கிராம் கொள்ளு - 50 கிராம் சீரகம் - 2 டீஸ்பூன் மிளகு - 15 நெய் - 3 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் - 3 டீஸ்பூன் தோல் சீவிய இஞ்சி - சிறிய துண்டு பச்சை மிளகாய் - ஒன்று கொத்தமல்லித்தழை - சிறிதளவு கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கொள்ளுப் பயறை இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும். வரகரிசியை அரை மணி நேரம் ஊறவைக்கவும். இஞ்சியுடன் பச்சை மிளகாய் சேர்த்து ஒன்றிரண்டாக அரைத்தெடுக்கவும். கறிவேப்பிலையுடன் சிறிதளவு தண்ணீர்விட்டு விழுதாக அரைத்தெடுக்கவும். குக்கரில் நெய், எண்ணெய் ஊற்றி சீரகம், மிளகு தாளித்து, கறிவேப்பிலை விழுது சேர்த்துக் கிளறவும். அதனுடன் இஞ்சி - பச்சை மிளகாய் விழுது, கொத்தமல்லித்தழை சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும். அதனுடன் கொள்ளு, வரகு சேர்த்து குக்கரை மூடி ஆறு விசில்விட்டு இறக்கவும். குக்கரில் ஆவி அடங்கியதும் மூடியைத் திறந்து கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.
குறிப்பு: விரும்பினால் முந்திரி சேர்க்கலாம். சாதாரண அரிசியைவிட சிறுதானி யங்கள் இறுகும் தன்மையுடையதால் தண்ணீர் அதிகமாகச் சேர்க்கவும்.

ராகி - பருப்பு அடை
தேவை: ராகி (கேழ்வரகு) - 100 கிராம் துவரம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 50 கிராம் சோம்பு - ஒரு டீஸ்பூன் பூண்டு - 4 பல் காய்ந்த மிளகாய், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
தாளிக்க: பெரிய வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்) கடுகு - ஒரு டீஸ்பூன் உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 2 டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிதளவு எண்ணெய் - சிறிதளவு முருங்கை இலை - சிறிதளவு. மேலே தூவ: வறுத்து ஒன்றிரண்டாகப் பொடித்த வேர்க்கடலை, கொத்தமல்லித்தழை – சிறிதளவு
செய்முறை: ராகி, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து மூன்று மணி நேரம் ஊறவைக்கவும். அதனுடன் சோம்பு, பூண்டு, காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்துக் கெட்டியாக அரைத்தெடுக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றித் தாளிக்கக்கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்துத் தாளித்து மாவுடன் சேர்த்துக் கலக்கவும். தோசைக்கல்லைக் காயவைத்து மாவை அடைகளாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய்விட்டு இருபுறமும் வேகவிடவும். மேலே வேர்க்கடலைப் பொடி, கொத்தமல்லித்தழை தூவி எடுத்துப் பரிமாறவும்.

மிக்ஸட் வெஜ் புர்ஜி
தேவை: நறுக்கிய காய்கறி கலவை (கேரட், பீன்ஸ், கோஸ், பச்சைப் பட்டாணி, குடமிளகாய், காலிஃப்ளவர்) - ஒரு கப் பூண்டு - 10 பல் (பொடியாக நறுக்கவும்) தோல் சீவிய இஞ்சி - சிறிய துண்டு (பொடியாக நறுக்கவும்)
கரம் மசாலாத்தூள் - சிறிதளவு பெரிய வெங்காயம், தக்காளி - தலா 2 (பொடியாக நறுக்கவும்) மிளகாய்த்தூள் - தேவையான அளவு தனியாத்தூள் (மல்லித்தூள்) - ஒரு டீஸ்பூன் மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன் உப்பு - தேவையான அளவு.
செய்முறை: காலிஃப்ளவரை உப்பு கலந்த வெந்நீரில் போட்டு எடுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு, கறிவேப்பிலை தாளிக்கவும். அதனுடன் வெங்காயம், இஞ்சி, பூண்டு, தக்காளி சேர்த்து வதக்கவும். பிறகு காய்கறிகள், மல்லித்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கி, சிறிதளவு தண்ணீர் தெளித்து மூடி போட்டு வேகவிடவும். மேலே கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.

தினை - கேரட் ரைஸ்
தேவை: தினை - 200 கிராம் கேரட் - 4 (துருவவும்) பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - ஒரு கப் பூண்டு - 6 பல் (பொடியாக நறுக்கவும்) பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - தேவையான அளவு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன் தேங்காய்த் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன் கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிதளவு எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன் உப்பு - தேவையான அளவு.
செய்முறை: தினையை நன்கு களைந்து ஒரு பங்குக்கு இரண்டரை பங்கு தண்ணீர்விட்டு குக்கரில் சேர்த்து மூன்று விசில்விட்டு இறக்கி ஆறவிடவும். பிறகு வாணலியை அடுப்பில் ஏற்றி எண்ணெய்விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன் கேரட் துருவல் சேர்த்துக் கலந்து, ஒரு நிமிடத்துக்குப் பிறகு ஆறிய தினை சாதம், உப்பு, தேங்காய்த் துருவல் சேர்த்து உடையாமல் புரட்டி, நன்கு சூடேறியதும் கொத்தமல்லித்தழை தூவி இறக்கிப் பரிமாறவும்.

காராமணி - தேங்காய் - மாங்காய் சுண்டல்
தேவை: காராமணி - 200 கிராம் தேங்காய் - ஒரு டேபிள்ஸ்பூன் (பொடியாக நறுக்கியது) மாங்காய் - 2 டேபிள்ஸ்பூன் (பொடியாக நறுக்கியது) சீரகத்தூள் - கால் டீஸ்பூன் இஞ்சித் துருவல் - சிறிதளவு பெரிய வெங்காயம் - ஒன்று பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்) மிளகுத்தூள் - சிறிதளவு, கொத்தமல்லித்தழை, பெருங்காயத்தூள் - சிறிதளவு எண்ணெய், உப்பு - தேவையான அளவு. தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிதளவு.
செய்முறை: காராமணியை ஒரு மணி நேரம் ஊறவைத்துச் சிறிதளவு உப்பு சேர்த்து குக்கரில் வேகவிட்டு எடுத்து வைக்கவும். பிறகு வாணலியில் எண்ணெய்விட்டுத் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன் இஞ்சித் துருவல் சேர்த்துக் கிளறி, காராமணி, சீரகத்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு புரட்டி உப்பு, மிளகுத்தூள் சேர்த்துக் கலக்கவும். பிறகு, ஐந்து நிமிடங்கள் அடுப்பை சிம்மில் வைத்து, இறுதியாக தேங்காய், மாங்காய் துண்டுகளைப் போட்டு நன்கு புரட்டி, கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.

முப்பருப்புப் பாயசம்
தேவை: பாசிப்பருப்பு - 100 கிராம் கடலைப்பருப்பு - 50 கிராம் துவரம்பருப்பு - 50 கிராம் வெல்லம் - 200 கிராம் தேங்காய்த் துருவல் - 4 டேபிள்ஸ்பூன் ஏலக்காய் - 3 முந்திரி, திராட்சை - தேவையான அளவு நெய் - 2 டீஸ்பூன் பச்சரிசி - ஒரு டேபிள்ஸ்பூன்.
செய்முறை: பச்சரிசியை அரை மணி நேரம் ஊறவைத்து ஏலக்காய் சேர்த்து நைஸாக அரைத்து, தேங்காய்த் துருவலை இறுதியாகச் சேர்த்து ஒன்றிரண்டாக அரைத்து வைக்கவும். பருப்பு வகைகளை அரை மணி நேரம் ஊறவைத்து தேவையான தண்ணீர்விட்டு குக்கரில் சேர்த்து வேகவைத்து எடுத்து வைக்கவும். வெல்லத்தைப் பொடித்துச் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவைத்து வடிகட்டி வைக்கவும். பிறகு வேகவைத்த பருப்புக் கலவையை அடுப்பில் ஏற்றி தேங்காய் - அரிசிக் கலவை மற்றும் வெல்லக் கரைசல் சேர்த்து நன்கு கரண்டியால் கலக்கி ஐந்து நிமிடங்கள் கொதிக்கவிட்டு, இறுதியாக நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து இறக்கவும். விருப்பப்பட்டால் சிறிதளவு பால் சேர்க்கலாம்.

பச்சைப் பயறு - கொத்தமல்லி பெசரட்
தேவை: பச்சைப் பயறு - 100 கிராம் பச்சரிசி - ஒரு கைப்பிடி அளவு கொத்தமல்லித்தழை - தேவையான அளவு சீரகம் - 2 சிட்டிகை பச்சை மிளகாய் - ஒன்று எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பச்சைப் பயறு, பச்சரிசி இரண்டையும் இரண்டு மணி நேரம் ஊறவைத்து, கொத்தமல்லித்தழை, பச்சை மிளகாய், உப்பு, சீரகம் சேர்த்து மிக்ஸியில் சற்று கொரகொரப்பாக அரைத்து, தோசை மாவைக் காட்டிலும் சிறிது தண்ணீர் அதிகம் சேர்த்துக் கரைக்கவும். தோசைக்கல்லை அடுப்பில் ஏற்றி மாவைத் தோசைகளாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய்விட்டு இரண்டு பக்கமும் சிவந்ததும் எடுக்கவும்.

வேர்க்கடலை - அவல் உப்புமா
தேவை: கெட்டி அவல் - 200 கிராம் பெரிய வெங்காயம் - 2 (நறுக்கியது) வேர்க்கடலை - ஒரு கைப்பிடி அளவு (வேகவைக்கவும்) பச்சை மிளகாய் - 2 சீரகத்தூள் - 2 சிட்டிகை தேங்காய்த் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன் மஞ்சள்தூள் - சிறிதளவு எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன் எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன் உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வேர்க்கடலையை 12 மணி நேரம் ஊறவைத்து வேகவைக்கவும். அவலை நன்கு அலசி தண்ணீரை வடியவிடவும். பிறகு வாணலியை அடுப்பில் ஏற்றி எண்ணெய் ஊற்றி கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன் அவலைச் சேர்த்து மஞ்சள்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து நன்கு புரட்டி, லேசாக தண்ணீர் தெளித்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து, மூடி போட்டு ஐந்து நிமிடங்கள் வேகவிடவும். பிறகு வேகவைத்த வேர்க்கடலை, எலுமிச்சைச் சாறு சேர்த்து, கொத்தமல்லித்தழை தூவி, தேங்காய்த் துருவலையும் சேர்த்து நன்கு புரட்டி இறக்கிப் பரிமாறவும்.
தினம் தினம் வித்தியாசம்!
காலையில் வழக்கமான சில டிபன் வகைகள் அல்லது பிரெட் ஜாம்; மதியம் சாதம், சாம்பார், ரசம், பொரியல்; இரவில் சாதம் அல்லது சாப்பாத்தி... இதுதான் நம்மில் பெரும்பாலானவர்கள் வீட்டு மெனு கார்டில் இடம்பெறும் உணவு அயிட்டங்கள். சாய்ஸா... மூச்!

என்னதான் மெனக்கெட்டுச் சமைத்தாலும், ருசியாக இருந்தாலும்... ‘நிரந்தர மெனுதான் சாத்தியம்’ என்ற சமையலறைக் கொள்கை, குடும்ப உறுப்பினர்களை சில நேரங்களில் சலிப்படைய வைத்துவிடுகிறது; சாப்பாடு மீதான ஆர்வத்தைக் குறைக்கிறது.
``இதற்காக, இத்தாலியன், அமெரிக்கன், மெக்ஸிகன், சைனீஸ் என அகில உலக டிஷ்களைச் செய்து குவிக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. நம்மிடம் கைவசம் உள்ள மளிகைப் பொருள்கள், அருகிலேயே கிடைக்கும் காய்கறிகள், ஆரோக்கியத்துக்கு உறுதுணை புரியும் சில தானியங்கள் ஆகியவற்றைக்கொண்டு சற்று வித்தியாசமான ரெசிப்பிகளைச் செய்து பரிமாறலாம்’’ என்று சொல்லும் சமையல் கலைஞர் சரஸ்வதி அசோகன்...
காலிஃப்ளவர் - புதினா ரைஸ், சிவப்பரிசி ஆப்பம், முளைகட்டிய கோதுமை இனிப்புப் புட்டு, பீட்ரூட் ஜூஸ், பசும் மஞ்சள் சூப், ஸ்வீட் பொட்டேட்டோ - நட்ஸ் மில்க் ஷேக், மிக்ஸ்டு வெஜ் புர்ஜி, கொத்தமல்லி - புதினாத் தொக்கு எனப் பல்வேறு சுவையான, சத்தான ரெசிப்பிகளை இங்கே வழங்குகிறார்.
படங்கள்: நா.ராஜமுருகன்