Published:Updated:

சீர்காழி அருகே கோயில் உண்டியல் கொள்ளை; அச்சத்தில் கிராம மக்கள்

சீர்காழி அருகே கோயில் உண்டியல் கொள்ளை; அச்சத்தில் கிராம மக்கள்
சீர்காழி அருகே கோயில் உண்டியல் கொள்ளை; அச்சத்தில் கிராம மக்கள்

village in shock

சீர்காழி அருகேயுள்ள இரண்டு கோயிலில் கொள்ளையடித்த திருடர்கள் பணத்தை எடுத்துக்கொண்டு உண்டியல்களை முட்புதருக்குள் வீசி ஏறிந்து சென்றுள்ளனர்.  கிராமத்துக்குக் காவல் தெய்வங்களாக விளங்கும் கோயிலில் கொள்ளை நடந்திருப்பதால் கிராமத்தினர் அச்சத்தில் உள்ளனர்.  

நாகை மாவட்டம் சீர்காழி அருகே கொள்ளிடக் கரையோரம் அமைந்துள்ளது காவல்மானியம் கிராமம். இங்கு வெள்ளந்தாங்கி அம்மன், ஸ்ரீ வீரஆஞ்சநேயர் ஆகிய இரண்டு கோயில்கள் அருகருகே உள்ளன. கொள்ளிடம் ஆற்றில் எவ்வளவு வெள்ளம் கரைபுரண்டு வந்தாலும் அதைத் தடுத்து கிராமத்தைக் காக்கும் சக்திவாய்ந்த அம்மன் கோயில் என்றும், காவல் தெய்வமாக இருப்பவர் ஆஞ்சநேயர் என்றும் மிகுந்த நம்பிக்கையுடன் இக்கிராமத்து மக்கள் வழிபட்டு வந்துள்ளனர். இக்கோயில்களின் உண்டியல்கள் 6 மாதத்துக்கு ஒருமுறை திறக்கப்பட்டு கோயில் மற்றும் விழா சார்ந்த பணிகளுக்குச் செலவிடுவது வழக்கம். அதன்படி சில தினங்களில் உண்டியல் திறக்க கிராமத்தினர் முடிவு செய்திருந்தனர். இந்த நிலையில், கோயில்களின் வாசல்களில் உள்ள இரும்பு கேட்டின் பூட்டை உடைத்து திருடர்கள் உள்ளே புகுந்துள்ளனர். அங்குள்ள உண்டியல்களை அடியோடு பெயர்த்து அதிலிருந்த காணிக்கை பணம் மற்றும் நகைகளை எடுத்துக்கொண்டு ஆற்றங்கரை ஓரமுள்ள முட்புதருக்குள் உண்டியல்களை வீசி ஏறிந்து சென்றுவிட்டனர். இது குறித்து கோயில் நிர்வாகத் தலைவர் நெடுமாறன் அளித்த புகாரின் பேரில் கொள்ளிடம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

அதே நேரத்தில் பல்லாண்டு காலமாய் பயபக்தியுடன் வணங்கி வந்த கோயில்களில் முதன் முறையாக திருட்டுச் சம்பவம் நடந்துள்ளதால் கிராமத்துக்கு தீங்கு விளைந்திடுமோ என்று கிராமத்தினர் அச்சப்படுகின்றனர். எனவே, பரிகார பூஜைக்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை செய்து வருகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு