Published:Updated:

“தமிழர் என்ற அடையாளத்தைத் தக்க வெச்சுக்கிறோம்!”

“தமிழர் என்ற அடையாளத்தைத் தக்க வெச்சுக்கிறோம்!”
பிரீமியம் ஸ்டோரி
“தமிழர் என்ற அடையாளத்தைத் தக்க வெச்சுக்கிறோம்!”

ஆனந்த கண்ணன் - ராணி தமிழ் எனும் வரம்கு.ஆனந்தராஜ்

“தமிழர் என்ற அடையாளத்தைத் தக்க வெச்சுக்கிறோம்!”

ஆனந்த கண்ணன் - ராணி தமிழ் எனும் வரம்கு.ஆனந்தராஜ்

Published:Updated:
“தமிழர் என்ற அடையாளத்தைத் தக்க வெச்சுக்கிறோம்!”
பிரீமியம் ஸ்டோரி
“தமிழர் என்ற அடையாளத்தைத் தக்க வெச்சுக்கிறோம்!”

“தமிழ் மொழி மற்றும் நம் பாரம்பர்யக் கலைகள் மேல எனக்கும் என் மனைவி ராணிக்கும் நிறைய ஆர்வம். நாங்க சென்னையில் வாழ்ந்த காலம்தான் அதுக்கான நல்ல அடித்தளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. பின்னர் எங்க ஆர்வமே அர்த்தமுள்ள தொழிலா மாறிடுச்சு'' - உற்சாகமாக ஆரம்பிக்கிறார் சன் டி.வி-யின் முன்னாள் நட்சத்திரத் தொகுப்பாளர் ஆனந்த கண்ணன். சிங்கப்பூரில் வசிக்கும் இந்தத் தம்பதி, `ஆக்ட் க்ரியேஷன்ஸ்' (AKT Creations) என்ற நிறுவனத்தின் மூலம் தமிழ் மொழி மற்றும் பாரம்பர்ய தமிழ்க் கலைகளை மேடை நாடகங்கள், கூத்துகள், கதைகள் வாயிலாகப் பயிற்றுவிக்கிறார்கள்.  

“தமிழர் என்ற அடையாளத்தைத் தக்க வெச்சுக்கிறோம்!”

``நானும் என் மனைவியும் சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்த மூன்றாம் தலைமுறைத் தமிழர்கள். ராணுவத்தில் பணியாற்றிய என் அப்பா மூலமாக எனக்கும் தமிழ் ஆர்வம் ஏற்பட்டுச்சு. சின்ன வயசுலேயே நிறைய மேடை நாடகங்கள்ல நடிச்சிருக்கேன். தொடர்ந்து ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்ல படிச்சேன். சிங்கப்பூரிலுள்ள ஒரு சேனல்ல நானும் மனைவியும் தொகுப்பாளரா வொர்க் பண்ணினோம். அப்போ மனைவி ராணி, சிங்கப்பூரில் ரொம்ப ஃபேமஸான மீடியா பர்சன். நண்பர்களான நாங்க, காதலர்களாகி கல்யாணம் செய்துகிட்டோம். மனைவியின் படிப்பு விஷயமா 2001-ம் வருஷம் சென்னைக்கு வந்தோம். ஒருகட்டத்துல குடும்பச் செலவுக்குப் பணமில்லை. ஏதாவது வேலைக்குப் போகலாம்னுதான், சன் டி.வி-யில் தொகுப்பாளரானேன். இந்த இடைப்பட்ட காலத்தில், கலை ஆர்வத்தால் கூத்துப்பட்டறையில் நடிப்புப் பயிற்சி பெற்றேன். நானும் மனைவியும் மதுரை காந்தி கிராமப் பல்கலைக்கழகத்துல கிராமியக் கலைகளைக் கத்துகிட்டோம். பல மேடை நாடகங்கள்ல நடிச்சேன். `பத்மஸ்ரீ' ந.முத்துசாமி ஐயா, `சர்வதேச கதை சொல்லி' ஜீவா ரகுநாத், தொழிலதிபர் குமாரவேல் மூவரும் என் குருக்கள்'' என்னும் ஆனந்த கண்ணன், மனைவி ராணியைப் பேசச் சொல்கிறார்.

``சின்ன வயசுல இருந்தே கதை, கட்டுரை, நாடக நடிப்புனு எனக்குத் தமிழ் ஆர்வம் அதிகம். அது மீடியாவில் சேர்ந்த பிறகு இன்னும் அதிகமாச்சு. இடையில் டீச்சர் ட்ரெயினிங் கோர்ஸ் முடிச்சேன். அப்போ சிங்கப்பூரில் தமிழ் மொழியில டிகிரி படிப்புகள் அறிமுகமாகலை. ஆனா, எனக்குத் தமிழ்ல டிகிரி படிச்சே ஆகணும்னு ஆசை. `அவ்ளோதானே'னு கணவர் என்னைத் தமிழ்நாட்டுக்கு அழைச்சுக்கிட்டுப் போயிட்டார். பி.ஏ மற்றும் எம்.ஏ படிச்சேன். இடைப்பட்ட காலத்துல கணவர் தமிழ்நாட்டு மீடியாவில் ஃபேமஸ் ஆயிட்டார். என் படிப்பு முடிஞ்சதும், சென்னை `நேச்சுரல்ஸ்' நிறுவனத்துல சில காலம் வொர்க் பண்ணினேன். எங்க பொண்ணோட படிப்புக்காக 2011-ம் வருஷம் மீண்டும் சிங்கப்பூருக்கு வந்து செட்டில் ஆகிட்டோம். இருவருக்கும் ஆர்வமுள்ள தமிழ் மொழி மற்றும் தமிழ் மரபு சார்ந்த பணிகளையே இனி தொழிலா செய்யலாம்னு முடிவெடுத்தோம். வருமானம் தாண்டி, நல்ல விஷயத்தை அடுத்தடுத்த தலைமுறைக்குக்  கொண்டு சேர்த்த ஆத்ம திருப்தியும் இதில் கிடைக்குமே? பயிற்சி மையத்தைத் தொடங்கிட்டாலும், உடனடியா வெற்றி கிடைக்கலை. அது, நாங்க எதிர்பார்த்ததுதான். படிச்சவங்க, படிக்காதவங்க, மாணவர்கள்னு பல ஆயிரம் பேரை சந்திச்சு தமிழ் மொழி மற்றும் மரபுக் கலைகள் குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்தினோம். படிப்படியாகப் பலன் கிடைச்சது. கூடவே மேடை நிகழ்ச்சிகள், நாடகங்கள், தெருக்கூத்துகள், குறும்படம் தயாரித்தல்னு அடுத்தடுத்து நிறைய முயற்சிகளை மேற்கொண்டோம்'' என்கிறார் ராணி. இப்போது சிங்கப்பூரில் செயல்படும் இவர்களின் இரு பயிற்சி மையங்களில் இருநூறுக்கும் அதிகமானோர் பயிற்சி பெறுகின்றனர். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“தமிழர் என்ற அடையாளத்தைத் தக்க வெச்சுக்கிறோம்!”

``இதுவரை 25 ஆயிரம் மாணவர்களுக்குப் பயிற்சி கொடுத்திருக்கோம். வில்லுப்பாட்டு, ஆனந்தக் கூத்து, ஒயிலாட்டம், மயிலாட்டம், களியாட்டம், பொய்க்கால் குதிரை, கரகம், சிலம்பாட்டம், பறை உள்ளிட்ட ஏராளமான கலைகளைச் சொல்லிக்கொடுக்கிறதுடன், அவற்றில் ஆய்வுகளும் மேற்கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு கலையும் தோன்றிய விதம், அதன் பலன்கள், அதனால் நம் மரபு எப்படி வாழும்கிற எல்லா விஷயங்களையும் குழந்தைகள் ஆர்வமா கத்துக்கிறாங்க. ஒரு மையத்தில் கற்றல் குறைபாடுடைய குழந்தைகள் மற்றும் சீனியர் சிட்டிசன்களுக்குக் கதை சொல்லல், கிராமியக் கலைகள் கற்றுக்கொடுப்பது உள்ளிட்ட பல விஷயங்களைச் செய்றோம்.  நடிப்புப் பயிற்சி மற்றும் பேச்சுப் பயிற்சிகளைக் கொடுப்பது என் பணி. தமிழ் மொழியைக் கதைகள், நாடகங்கள் மற்றும் வில்லுப்பாட்டு, பறை உள்ளிட்ட கலைகள் வாயிலாகச் சொல்லிக்கொடுப்பது ராணியின் வேலை'' என்று சொல்லும் ஆனந்த கண்ணனின் பயிற்சிப் பட்டறைகளில், 21 முழுநேர ஆசிரியர்கள், ஏராளமான பகுதிநேர ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள். சென்னையில் சில நண்பர்களுடன் இணைந்து `ஆனந்தக் கூத்து டிரஸ்ட்' என்ற பெயரில் பயிற்சி மையத்தை நடத்திவருவதுடன், அமெரிக்காவிலும் பயிற்சி வகுப்புகளை எடுக்கிறார்.  

“தமிழர் என்ற அடையாளத்தைத் தக்க வெச்சுக்கிறோம்!”

``சிங்கப்பூரில் வாழும் எங்க குடும்பத்தில், இப்போது பத்தாம் வகுப்பு படிக்கும் எங்க பொண்ணு அவா கண்ணன் நான்காம் தலைமுறை. இந்த நாட்டில் மலாய், தமிழ், சீனா, ஆங்கிலம்னு நாலு தேசிய மொழிகள் இருக்கு. இங்கே 6 சதவிகிதத்தினர் மட்டுமே தமிழர்கள்.  ஒவ்வொரு பள்ளி வகுப்பறையிலேயும் சராசரியா 2-3 மாணவர்கள் மட்டுமே தமிழர்கள். தமிழுக்குத் தொடர்ந்து உயிரூட்டலைன்னா, அடுத்த சில தலைமுறைகளில் இந்த நாட்டில் தமிழ் பேசுவோரின் எண்ணிக்கையும் தமிழ்ப் பாரம்பர்யமும் கணிசமாகக் குறையலாம் அல்லது இல்லாமலே போகலாம். அதனால, தமிழர் என்ற அடையாளத்தை தக்கவெச்சுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கோம். அதுக்காகத்தான் பல சிரமங்களையும் கடந்து தமிழ் மொழி மற்றும் மரபுக் கலைகள் வளர்ச்சிக்குக் கூட்டு முயற்சியுடன் பணி செய்றோம். நம் தமிழ் மொழியையும், கலைகளையும் இன்றைய இளைய தலைமுறையினர் கத்துக்கிறதால அவை இந்த நாட்டில் இன்னும் பல தலைமுறைக்கு உயிர்ப்போடு இருக்கும். அதில் எங்களின் பங்கும் இருக்கும் என்பதைவிட, பெரிய வரம் எதுவும் இல்லை இந்த வாழ்வில். தமிழர் அல்லாதவங்களும் எங்ககிட்ட பயிற்சி பெறுவது கூடுதல் மகிழ்ச்சி'' - ராணி பெரும் உவகையுடன் சொல்ல, அவர் கரம் பற்றிச் சிரிக்கிறார் ஆனந்த கண்ணன்.