Published:Updated:

மிந்த்ரா முதல் ஆஜியோ வரை... டாப் 5 ஆன்லைன் ஷாப்பிங் இணையதளங்கள்!

மிந்த்ரா முதல் ஆஜியோ வரை... டாப் 5 ஆன்லைன் ஷாப்பிங் இணையதளங்கள்!
மிந்த்ரா முதல் ஆஜியோ வரை... டாப் 5 ஆன்லைன் ஷாப்பிங் இணையதளங்கள்!

தீபாவளி ஷாப்பிங் ஆரம்பமாகிவிட்டது. `அதிரடி தள்ளுபடி', `மெகா சேல்' போன்ற வார்த்தைகள் அவ்வப்போது நம் காதுகளைக் கிள்ளுவதால், சும்மா இருப்பவர்கள் `மைண்ட்'கூட டிஸ்டர்ப்பாகிறது. கடைகளுக்குச் சென்றால், அது என்ன மாயமோ தெரியாது, நமக்குப் பிடிச்ச பொருள்களின் விலை மட்டும் அதிகமாக இருக்கும். `இதுக்கா இவ்ளோ அலைஞ்சோம்!'னு இருக்கும். ஆனா, ஆன்லைன் ஷாப்பிங் வந்ததும்போதும், அதுல இருக்கிற `விஷ்லிஸ்ட்' எண்ணிக்கை, விசேஷ லிஸ்ட் கணக்காக இருக்கிறது.

நேரம் கிடைக்கும்போதெல்லாம் தங்களுக்குப் பிடித்தமான பொருள்களைத் தேர்வுசெய்து, பெருமளவு குறைந்த விலையில் உடனடியாக ஆன்லைனில் ஷாப்பிங் செய்யும் பழக்கம் மக்களிடையே பெருகிவருகிறது. தரமான ஆடை ஆபரணங்கள் வாங்குவதற்கு டாப் 5 ஆன்லைன் தளங்கள் இங்கே...

மிந்த்ரா:

`ஆன்லைனில் ஆடைகள்' என்றதுமே பெரும்பாலான இந்திய மக்களுக்கு சட்டென நினைவுக்குவருவது, `மிந்த்ரா'. இதன் தலைமை அலுவலகம் பெங்களூரில் உள்ளது. 2007-ம் ஆண்டு, டி-ஷர்ட், Mugs போன்ற பொருள்களை, மக்களின் விருப்பத்துக்கேற்ப வடிவமைத்துக்கொள்ளும் `Personalised Gift' ஸ்டோராக ஆரம்பிக்கப்பட்டு, பின்னாளில் ஆடை, ஆபரணம் போன்ற ஃபேஷன் பொருள்களை விற்க ஆரம்பித்தது. ஆண், பெண் மற்றும் குழந்தைகளுக்கென்று ஏராளமான வகைகளில் தரமான ஆடைகளை வழங்கிக்கொண்டிருக்கிறது மிந்த்ரா. இந்தியப் பாரம்பர்ய உடைகள், வெஸ்டர்ன் உடைகள், அவற்றுக்கு ஏற்ற காலணிகள் என அதிக வெரைட்டிகளைக் கொண்டுள்ளது. ஆடை, வீட்டு அலங்காரப் பொருள்கள், அழகு சாதனப் பொருள்கள், சமையலறைப் பொருள்கள் என 300-க்கும் மேற்பட்ட இந்திய மற்றும் சர்வதேச பிராண்ட் பொருள்களை அனைத்து விலைப் பட்டியலிலும் தற்போது விற்றுக்கொண்டிருக்கிறது. மக்களிடையே அதிக வரவேற்பைப் பெற்றிருந்தாலும், 2016-ம் ஆண்டு அங்கு பணிபுரிந்த ஊழியர் ஒருவர், மிகவும் குறைந்த ஊதியத்துக்காகவும், மோசமான அடிப்படை வசதிகளுக்காகவும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டார். ரன்வீர் சிங், ஹ்ருத்திக் ரோஷன், லிசா ஹெய்டன் போன்றோர் மிந்த்ரா பிராண்டின் அம்பாஸடராக இருந்துள்ளனர்.​​​​​​​

கூவ்ஸ்:

Koovs.com முழுக்க முழுக்க `வெஸ்டர்ன்' உடைகளின் ராஜ்ஜியம். லண்டனில் உள்ள ஃபேஷன் ஆய்வுக்கூடத்தில்தான் கூவ்ஸ் உடைகள் தயாராகின்றன. இதனால், இவர்களின் ஆடைகள் அனைத்தும் தனித்தன்மைபெற்றிருக்கும். மேற்கத்திய ஸ்டைல் மற்றும் இந்தியக் கலாசாரக் கோட்பாடுகள் இரண்டும் கலந்தபடி உருவாகும் இவர்களின் டிசைன், மக்களிடையே பெரும் வரவேற்பைப்பெற்றிருக்கிறது.  2017-ம் ஆண்டின் சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் தளங்கள் சர்வேயில், ஃப்ளிப்கார்ட், Snapdeal போன்ற தளங்களை கூவ்ஸ் பின்னுக்குத் தள்ளியுள்ளது. 100 ரூபாயிலிருந்து 5,000 ரூபாய் வரை தரமான கூவ்ஸ் பொருள்களை வாங்கலாம். இதோடு, மற்ற பிராண்டுகளின் பொருள்களும் இங்கு கிடைக்கும். ஆண், பெண் உடைகளோடு, ஆபரணங்கள், ஷூ போன்றவையும் உள்ளன. மொத்தத்தில் ஃபேஷன் விரும்பிகளின் ஃபேவரைட் தளம் `கூவ்ஸ்'.​​​​​​​

ஆஜியோ:

ரிலையன்ஸ் நிறுவனத்தின் முதல் ஆன்லைன் பிளாட்ஃபார்ம் இந்த `ஆஜியோ'. 2006-ம் ஆண்டு பெரிய எதிர்பார்ப்புடன் ஆரம்பிக்கப்பட்ட இந்தத் தளம், தற்போது அதிக வருமானம் பெறும் `நம்பர் 1' தளமாய் இருக்கிறது. பார்ட்டி, கேஷுவல், ஆபீஸ், வெட்டிங் என எல்லா தருணங்களுக்கும் ஏற்ற லேட்டஸ்ட் ஆடைகள் இந்தத் தளத்தில் அப்டேட் ஆகியிருக்கும். இவர்களிடம் வெஸ்டர்ன், இண்டோ-வெஸ்டர்ன், பாரம்பர்ய உடைகள், அதற்குத் தேவையான அனைத்து இணை ஆடைகள் என எல்லாமே டாப் க்ளாஸில் கிடைக்கும். குறையில்லா இவர்களின் `பேக்கிங்'குக்கு நிகர் இவர்கள் மட்டுமே. 400-க்கும் மேற்பட்ட பிராண்டுகளைக்கொண்டிருக்கும் ஆஜியோ, மற்ற தளங்களைவிட விலையில் கொஞ்சம் `காஸ்ட்லிதான்'. இவர்கள் ஆன்லைனில் மட்டுமல்ல, 750 நகரங்களில் சுமார் 3,800 நேரடி ஸ்டோர்களையும் கொண்டுள்ளனர்.

ஜபாங்:

பெண்கள் அதிகம் விரும்பும் ஆன்லைன் ஷாப்பிங் தளம், ஜபாங். ஆடை, ஆபரணம், அழகு சாதனப் பொருள்கள் போன்றவற்றை ஆன்லைன் மூலம் விற்றுவந்த இந்தத் தளம், 2013-ம் ஆண்டு நாள் ஒன்றுக்கு சுமார் 6,000 ஆர்டர்களை டெஸ்பேட்ச் செய்தது. 1000 பிராண்டுகள், 90,000 பொருள்கள் என இந்தியாவின் படு பிஸியான தளமான ஜபாங், Jabongworld.com எனும் சர்வதேசத் தளத்தையும் ஆரம்பித்தது. ஆரம்பித்த வேகத்தோடு 2016-ம் ஆண்டு மூடப்பட்டது. 2012-ம் ஆண்டு, இந்தியாவில், கூகுளில் அதிகம் தேடப்பட்ட வார்த்தைகளில் 10-ம் இடத்தை ஜபாங் பெற்றது. இப்படி பல்வேறு கேட்டகரியில் டாப் ரேங்கில் இருந்த ஜபாங்கை, 2016-ம் ஆண்டு 70 மில்லியன் டாலருக்கு ஃப்ளிப்கார்ட் கைப்பற்றியது. ஆனாலும், அதன் தனித்தன்மை இன்றும் குறையவில்லை.

ரஸ்ட் ஆரஞ்:

`பளபளக்கும் வேலைப்பாடுகள் ஏதுமின்றி, `சிம்பிள் அண்ட் நீட்'தான் என்னுடைய சாய்ஸ்' என்பவர்களுக்கான `நம்பர் 1' ஆன்லைன் தளம், rustorange.com. ஃபேஷனோடு க்ளாசிக் டச் கலந்திருக்கும் இந்தத் தளத்தில், பெண்களுக்கான ஆடைகள் மட்டுமே கிடைக்கும். அத்தனையும் தேர்ந்தெடுக்கப்பட்ட கைத்தறி ஆடைகள் என்பது கூடுதல் சிறப்பு. புடைவை, குர்த்தி, லாங் டிரெஸ், டாப்ஸ் என வெரைட்டிகள் அத்தனையிலும் புதுமை கலந்திருக்கும். பிரத்தியேகத் துணி வகையைத் தேர்ந்தெடுத்திருப்பதால், அளவான பொருள்களை மட்டுமே இந்தத் தளம் கொண்டுள்ளது.

இவற்றோடு அமேசான், ஃப்ளிப்கார்ட், ஸ்நாப்டீல், உட்சவ் ஃபேஷன் போன்ற தளங்களும் அதிகப்படியான ஆடைகளை விற்றுவருகின்றன. இவை அனைத்தும் `Multi-Brand Outlet' எனப்படும் வெவ்வேறு பிராண்டுகளைக்கொண்டிருக்கும் தளங்கள். 

இதுல உங்க ஃபேவரைட் எது?