Published:Updated:

`சுயதரிசனம் கிடைத்தவனுக்குத் தெய்வதரிசனம் தேவையில்லை' - கவியரசு கண்ணதாசன் நினைவுநாள் பகிர்வு!

`சுயதரிசனம் கிடைத்தவனுக்குத் தெய்வதரிசனம் தேவையில்லை' - கவியரசு கண்ணதாசன் நினைவுநாள் பகிர்வு!
`சுயதரிசனம் கிடைத்தவனுக்குத் தெய்வதரிசனம் தேவையில்லை' - கவியரசு கண்ணதாசன் நினைவுநாள் பகிர்வு!

`சுயதரிசனம் கிடைத்தவனுக்குத் தெய்வதரிசனம் தேவையில்லை' - கவியரசு கண்ணதாசன் நினைவுநாள் பகிர்வு!

விஞர் கண்ணதாசன் நாத்திகராக தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கியவர், காஞ்சிப்பெரியவர் சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள் கூறியதற்கு இணங்க 'அர்த்தமுள்ள இந்து மதம்' எனும் அற்புதமான ஆன்மிகப் படைப்பை வழங்கினார். எட்டாம் வகுப்பு வரை மட்டுமே பள்ளிப் படிப்பைப் படித்திருந்த அவர், தன் வாழ்க்கை அனுபவங்களில் இருந்து ஏராளமான கருத்துகளைத் தனது படைப்புகளில் பதிவு செய்திருக்கிறார். 

'இந்திய ஜனாதிபதியைப் போல் சம்பளம் பெறுகிறேன். ஆனால், இந்தியாவைப்போல் கடன்பட்டு இருக்கிறேன்' என்று குறிப்பிடுவார். காந்தியின் சுயசரிதையைப் போலவே தனது வாழ்க்கை வரலாற்றை உண்மையுடனும் நேர்மையுடனும்  'வனவாசம்' மற்றும் 'மனவாசம்' ஆகிய நூல்களில் பதிவு செய்தார்.

'ஒரு மனிதன் எப்படி வாழக்கூடாது என்பதற்கு என்னை விடச் சிறந்த உதாரணம் இருக்காது. அதனால் எனது சரிதம் மற்றவர்களுக்குப் பாடமாக அமையட்டும்' என முன்னுரையிலேயே குறிப்பிட்டிருப்பார். மனித மனத்தின் லௌகீக ஆசைகளுக்கும், இறைவன் குறித்த தேடலுக்குமான ஆகச்சிறந்த உதாரணம் என்றால், முத்தையா எனும் கண்ணதாசனின் வாழ்க்கைதான். 

வெறும் ஏட்டுச்சுரைக்காயாகப் படித்து மட்டுமே வார்த்தைகளாகவும் வாக்கியங்களாகவும் கோத்து எழுதாமல், தனது அனுபவத்தின் சாறாகவே தனது படைப்புகளை வழங்கினார்.  

`சுயதரிசனம் கிடைத்துவிட்டவனுக்கு தெய்வதரிசனம் தேவையில்லை' என்று கூறுவார். இதையே மற்றொரு இடத்தில், நீ நினைப்பதெல்லாம் இந்த உலகில் நடந்துவிட்டால் ஆண்டவனை நீ நினைக்கத் தேவையில்லை என்று வேறுவிதமாகக் கூறுவார்.

அவரது வாழ்க்கையே இறைவனைத் துணைக்கு அழைத்துக்கொண்டு சாத்தானைத் தேடிய பயணமாகத்தான் இருந்திருக்கிறது. வாழ்க்கையின் சகலவிதமான முண்டு முடுக்குகளையெல்லாம் அவர் சுற்றி வந்ததனால்தான் அவரளவுக்கு உன்னதமான வாழ்வியல் தத்துவங்களை, சித்தாந்தங்களை வேறு எவராலும் சொல்ல முடியவில்லை. 

1927-ம் ஆண்டு ஜூன் மாதம் 24-ம் தேதி பிறந்த கண்ணதாசன், இந்தப் பூமியில் 55 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்திருந்தாலும், பல ஆயுள்கள் சேர்த்து வாழ்ந்து பெற வேண்டிய அனுபவத்தைப் பெற்றிருக்கிறார். அதற்கு, குழந்தையைப் போன்ற அவருடைய மனமும் ஞானியைப்போன்ற பேச்சும்தான் காரணம். 

கண்ணதாசனின் ஆளுமை என்பது, அவரது சாகாவரம் பெற்ற இலக்கியங்களில்தான் நிலைகொண்டுள்ளது. நான்காயிரத்துக்கும் மேற்பட்ட கவிதைகள், ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்பட பாடல்கள், அற்புதமான துள்ளுதமிழ் நடையுடன் கூடிய நூல்கள், கட்டுரைகள், சிறு காப்பியங்கள், நவீனங்களை எழுதியது கண்ணதாசனின் சாதனை. பத்திரிகையாளர், அரசியல்வாதி, திரைப்பட பாடலாசிரியர், கவிஞர், வசனகர்த்தா, எழுத்தாளர், நடிகர், படத் தயாரிப்பாளர் என்ற பல அவதாரங்களை எடுத்தவர்.

அர்த்தமுள்ள இந்து மதம் (பத்து பாகங்கள்), வனவாசம், ஸ்ரீகிருஷ்ண கவசம், பஜகோவிந்தம், கிருஷ்ண அந்தாதி, கிருஷ்ண கானம், அத்வைத ரகசியம், கடைசிப்பக்கம், ராகமாலிகா, புஷ்பமாலிகா, ஞானமாலிகா, தோட்டத்து மலர்கள், ஏசு காவியம் ஆகியவற்றுடன் பகவத் கீதைக்கும் அபிராமி அந்தாதிக்கும் சௌந்தர்யா லகரிக்கும் கண்ணதாசன் விளக்கம் எழுதி இருக்கிறார். 

இவற்றில் அர்த்தமுள்ள இந்து மதம் 5-ம் பாகம் 'ஞானம் பிறந்த கதை' என்னும் தலைப்பில் பட்டினத்தாரின் வாழ்க்கையை முழுமையாகப் பதிவு செய்த ஒன்றாகும். 

அதில் ஒரு காட்சி, பட்டினத்தார் துறவியாக சந்நியாசம் ஏற்றுத் தன் தாயிடம் விடை பெறச் செல்கிறார். 

`` `தாயே போய் வருகிறேன்' என்கிறார். தாய் கேட்கிறார்... 'துறவியானவன் போய் விட்டு எங்காவது வருவானா?'  எனக்கு முதல் ஞானம் பிறந்தது. `சரி நான் போகிறேன்' என்கிறார். 'சுய கர்மத்தை முடிக்காதவன் எங்காவது போகமுடியுமா?' என்று மறுபடியும் வினவுகிறார். எனக்கு இரண்டாவது ஞானம் பிறந்தது. 'பிறகென்னதான் அம்மா சொல்ல வேண்டும்?' என்றார். 'வருகிறேன் என்று சொல்' என்று கூறுகிறார். எனக்கு மூன்றாவது ஞானம் பிறந்தது" என்று குறிப்பிடுகிறார்.  இப்படியாகப் பட்டினத்தாராக தன்னையேப் பாவித்து பட்டினத்தாரின் வாழ்க்கையை மிகவும் நேர்த்தியாகப் பதிவு செய்திருக்கிறார். 

அவரது ஆன்மிகப் படைப்புகளில் 'கடைசிப்பக்கம்' நூலில் 'சந்திர மண்டலத்துக்குப் போனவர்களே, கிளம்புவதற்கு முன் சர்ச்சுக்குத்தான் போனார்கள்' என்று குறிப்பிட்டிருப்பார்.  அதே நூலில், முதுமையில் மரணத்தை எதிர்நோக்கியிருக்கும் மனிதனைப் பற்றிக் குறிப்பிடும்போது, 'வண்டியில் ஏற்றுவதற்குச் சரக்கு ஸ்டேஷனுக்கு வந்து விட்டது' எனக் குறிப்பிடுவார்.  

திரைப்படப் பாடல்களில் 'சட்டி சுட்டதடா கை விட்டதடா?',  'வீடு வரை உறவு வீதி வரை மனைவி' போன்ற தத்துவப் பாடல்களை எழுதியபோது அவருக்கு 35 வயதுதான். வயதுக்கு மீறிய வாழ்க்கைச் சம்பவங்கள் அவரைக் கவிஞர் என்கிற நிலையில் இருந்து ஞான நிலைக்கு உயர்த்தின. அவைதாம் சாகாவரம் பெற்ற அவரின் படைப்புகள் உருவாகக் காரணமாயின. 

காலப்பெட்டகத்தின் ஞானப்பேழை கண்ணதாசன்!

அடுத்த கட்டுரைக்கு