Published:Updated:

``இன்னும் சாதிக்கணும்” - ஆசிய பாரா போட்டிகளில் பதக்கம் வென்றவர்களுக்கு உற்சாகமளித்த மோடி!

``இன்னும் சாதிக்கணும்” - ஆசிய பாரா போட்டிகளில் பதக்கம் வென்றவர்களுக்கு உற்சாகமளித்த மோடி!
``இன்னும் சாதிக்கணும்” - ஆசிய பாரா போட்டிகளில் பதக்கம் வென்றவர்களுக்கு உற்சாகமளித்த மோடி!

நடந்து முடிந்த ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா சார்பாக பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் இந்திய பிரதமர் மோடி. 

ஆசியப் போட்டிகளைத் தொடர்ந்து ஆசிய பாரா போட்டிகள் இந்தோனேசியாவின் ஜகார்த்தா நகரில் கடந்த 6-ம் தேதி தொடங்கி 13-ம் தேதி வரை நடைபெற்றது. இதில் சுமார் 43 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் கலந்துகொண்டனர். இந்தத் தொடரில் இந்தியா 15 தங்கம், 24 வெள்ளி மற்றும் 33 வெண்கலம் என மொத்தம் 72 பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் 9-வது இடம் பிடித்தது.

இந்த நிலையில், பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்களை நேற்று நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி. ‘ஆசிய பாரா போட்டியில் நம் நாட்டு வீரர்கள் பதக்கம் வென்றது மிகவும் பெருமைக்குரியது. உங்களின் மனவலிமைதான் வெற்றிக்கான முக்கிய காரணம். நம்பிக்கையுடனும் விடா முயற்சியுடனும் நீங்கள் இன்னும் பல உயரத்தை எட்ட வேண்டும்’ என மோடி வாழ்த்து தெரிவித்தார். 

இதைத்தொடர்ந்து தட்டு எரிதல், ஈட்டி எரிதல் பிரிவுகளில் வெண்கலம் வென்ற இந்திய வீராங்கனை தீபா மாலிக் இது குறித்துப் பேசும்போது, ``பதக்கம் வென்ற 70-க்கும் மேற்பட்ட வீரர்களை வரவழைத்து, தனியாக நேரம் ஒதுக்கி பிரதமர் எங்களைச் சந்தித்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இது பதக்கம் வென்ற வீரர்களின் மன உறுதியை இன்னும் அதிகரிக்கும்” எனக் கூறினார்.