Published:Updated:

"அவர்களோடு நம்மால் போட்டிபோட முடியாது!" - ஸ்டீபன் ஹாக்கிங்கின் கடைசி எச்சரிக்கை

"அவர்களோடு நம்மால் போட்டிபோட முடியாது!" - ஸ்டீபன் ஹாக்கிங்கின் கடைசி எச்சரிக்கை
"அவர்களோடு நம்மால் போட்டிபோட முடியாது!" - ஸ்டீபன் ஹாக்கிங்கின் கடைசி எச்சரிக்கை

விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் நம் எதிர்காலம் குறித்து கடைசியாக செய்த எச்சரிக்கை இது.

ஸ்டீபன் ஹாக்கிங்கின் இறுதிக் கட்ட ஆராய்ச்சிகள் ஸ்டீவன் ஹாக்கிங் அறக்கட்டளை மற்றும் ஜான் முர்ரே பதிப்பகத்தால் 'ப்ரீப் ஆன்சர்ஸ் டு தி பிக் கொஸ்டின்ஸ் ( Brief Answers To The Big Questions)' எனும் தலைப்பில் புத்தகமாக சமீபத்தில் வெளியாகியுள்ளது. ஸ்டீபன் ஹாக்கிங் உலகின் தலைசிறந்த இயற்பியல் அறிஞர்களுள் ஒருவராவார். 7 மாதங்களுக்கு முன்னர் மார்ச் மாதம் 76-ம் வயதில் மறைந்தார். அவரின் இறுதிக்கட்ட ஆராய்ச்சிப் பணிகள் குறித்த தகவல்கள் மற்றும் அவரது கருத்துகள் இப்போது வெளியாகியிருக்கின்றன. அதில் அணுசக்தி, செயற்கை நுண்ணறிவு, கடவுள், சூப்பர் ஹியூமன்கள் எனப் பல விஷயங்கள் பேசப்பட்டுள்ளன. மரபுப் பொறியியலின் விளைவாக உருவாக்கப்படும் “சூப்பர் ஹ்யூமன்கள்” மனித குலத்தையே வேரோடு அழிக்க வாய்ப்புள்ளது என இந்தப் புத்தகத்தில் எச்சரித்துள்ளார் ஹாக்கிங்.

சூப்பர் ஹ்யூமன்கள் உருவாகிவிட்டால் அவர்களுடன் போட்டி போட முடியாத, சாதாரண மனிதனுக்கு கடும் சவாலாக அமைவார்கள் என்று ஸ்டீபன் ஹாக்கிங் குறிப்பிட்டுள்ளார். அதன் பிறகு மனிதர்கள் இறந்து போவதற்கு அல்லது முக்கியத்துவம் அற்றுப் போவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். அப்போது எப்போதும் இல்லாத அளவு வளர்ச்சியுறும், சுயமாக தன்னைத்தானே வடிவமைத்துக் கொள்ளும் மனிதர்களால் கடும் போட்டி உருவாகும்; அவர்களோடு நம்மால் போட்டிபோட முடியாது என்றும் கூறியுள்ளார். சரி... யார் இந்த சூப்பர் ஹியூமன்கள்? இதற்கான விடை மரபுப்பொறியியலில் இருக்கிறது. மனிதர்களின் டி.என்.ஏ.,க்களின் குறிப்பிட்ட பகுதியை மட்டும் எடிட் செய்வதற்கு ஜீன் எடிட்டிங் என்று பெயர். இதன்மூலம் நம்முடைய மரபு மூலக்கூறுகளில் இருக்கும் குறைபாடுகளைக் களையமுடியும். இது இன்னும் சில ஆண்டுகளில் அதிகளவில் வளர்ச்சியடையும். அப்போது குறைபாடுகள் மட்டுமின்றி, ஜீன்களில் தேவைக்கேற்றபடியும் மாறுதல் செய்யும் அளவுக்கு வளரும். அப்படி ஜீன் எடிட் செய்யப்பட்ட மனிதர்களைத்தான் சூப்பர் ஹியூமன் என்கிறார் ஹாக்கிங். 

“தி சன்டே டைம்ஸ்” எனும் இதழின் கூற்றுப்படி, தனது புத்தகத்தில் “விரைவில், நலமுடன் இருக்கும் மனிதர்கள் தங்கள் மற்றும் தங்கள் குழந்தைகளின் டி.என்.ஏ. வை மாற்றியமைத்து சூப்பர் ஹ்யூமன்களை உருவாக்குவார்கள்” என்று கணித்துள்ளார். அந்த சூப்பர் ஹ்யூமன்கள் மேம்படுத்தப்பட்ட ஞாபகத்திறன், அதிக நோய் எதிர்ப்பு திறன், அறிவுக்கூர்மை, நீடித்த ஆயுள் ஆகியவற்றை உடையவர்களாக இருப்பார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

“இந்த நூற்றாண்டில் நிச்சயமாக அறிவுக்கூர்மையையும் உள்ளுணர்வுகளையும் மாற்றியமைக்கும் வழியை மனிதர்கள் கண்டறிவார்கள்” என்றும் குறிப்பிட்டுள்ளார். “மரபுப் பொறியியலுக்கு எதிராக சட்டங்கள் கூட மனிதர்களால் இயற்றப்படும் வாய்ப்பு உள்ளது. ஆனால் சில மனிதர்கள் ஞாபகசக்தி, நோய் எதிர்ப்புத்திறன், வாழ்நாள் ஆகிய மனித பண்புகளை மேம்படுத்த நினைப்பார்கள்” என்றும் கூறியுள்ளார் ஹாக்கிங்.

ஹாக்கிங்கின் கருத்துக்கள் ஜீன்களை மாற்றி அமைப்பது அல்லது புதிய ஜீன்களை இணைப்பது உள்ளிட்ட CRISPR மற்றும் டிஎன்ஏ தொகுப்பாகும் முறை உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களை ஒத்துள்ளதாக அறிவியல் அறிஞர்கள் தெரிவிக்கிறார்கள். ஆறு வருடங்களுக்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்ட இவை, உலகின் பல இடங்களில் தற்போது புழக்கத்தில் இருக்கின்றன. பல அறிவியல் அறிஞர்கள் ‘அழிவிலிருந்து உலகைக் காப்பாற்ற வேண்டும்’ என்ற ஹாக்கிங்கின் கருத்தை வெகுவாக வரவேற்று உள்ளனர். அடுத்த 1000 ஆண்டுகளில் அணுஆயுத மோதல் அல்லது சூழலியல் மாற்றம் ஆகிய இரண்டில் ஒன்று நிச்சயம் உலகைப் பெரியளவில் பாதிக்கும் என்றும் ஹாக்கிங் கணித்திருக்கிறார். கடவுள் இருக்கிறாரா என்ற கேள்விக்கு ஹாக்கிங்கின் பதில், "இல்லை"

ஹாக்கிங்கின் இந்தக் கருத்துகள் குறித்து விஞ்ஞானிகள் பல்வேறு கருத்துகளை முன்வைக்கின்றனர். லண்டன் பல்கலைக்கழகத்தின் அறிவியல் பேராசிரியர் கிறிஸ் ராப்லே, "மனிதர்கள் தற்போது நெருக்கடியான நிலையை அடைந்திருக்கிறார்கள். இயற்கையின் அளவில் உலகத்தைப் பாதித்து வந்த நாம், தற்பொழுது உலகளவில் இயற்கையின் வளர்சிதை மாற்றத்திலும் குறுக்கிடும் நிலைக்கு நகர்ந்து இருக்கிறோம். நம் மூளையின் செயல்பாடு தனியாகவும் கூட்டாகவும் ஓர் எல்லைக்கு உட்பட்டதாகவே இருக்கிறது. அதனால் வரும் காலத்தில் கடும் சவால்களை எதிர்கொள்வதற்கு முடியாமலும் போகலாம். இதையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது நமது எதிர்காலம் நம்பிக்கையற்று, இருண்டே காணப்படுகிறது” எனக் கூறியிருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு