அலசல்
Published:Updated:

மின்பாதையா... மயானப் பாதையா? - அச்சத்தில் 16 மாவட்ட விவசாயிகள்!

மின்பாதையா... மயானப் பாதையா? - அச்சத்தில் 16 மாவட்ட விவசாயிகள்!
பிரீமியம் ஸ்டோரி
News
மின்பாதையா... மயானப் பாதையா? - அச்சத்தில் 16 மாவட்ட விவசாயிகள்!

மின்பாதையா... மயானப் பாதையா? - அச்சத்தில் 16 மாவட்ட விவசாயிகள்!

‘‘டெல்டாவுக்கு மீத்தேன், ஹைட்ரோகார்பன், மேற்கு மண்டலத்துக்கு கெயில் என விவசாயத்தையும் விவசாயிகளையும் புதைகுழியில் தள்ளுவதற்குத் துடிக்கும் ஆட்சியாளர்கள், இப்போது தமிழ்நாட்டின் மேற்கு, தெற்கு, வடக்கு மாவட்டங்களில் ‘மின்பாதை’ என்ற பெயரில் விவசாயத்துக்கு ‘மயானப் பாதை’ அமைக்கத் திட்டமிடுகிறார்கள்’’ என்று கொந்தளிக்கிறார்கள் விவசாயிகள்.

கூடங்குளத்தில் உற்பத்தியாகும் அணு மின்சாரத்தையும் திருநெல்வேலி, ராமநாதபுரம், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் உற்பத்தி செய்யப்படும் சூரிய மின்சாரம் மற்றும் காற்றாலை மின்சாரத்தையும் வெளிமாநிலங்களுக்குக் கொண்டுசெல்ல அரசு திட்டமிட்டுள்ளது. மத்திய அரசின் பவர்கிரிட் கார்ப்பரேஷன் மூலம் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தில், மத்திய அரசு 53 சதவிகிதமும் அதானி குழுமம் உள்ளிட்ட கார்ப்பரேட் கம்பெனிகள் 47 சதவிகிதமும் முதலீடு செய்கின்றன. இந்தத் திட்டத்துக்காகத் திருநெல்வேலி, தூத்துக்குடி, திண்டுக்கல், தேனி, கரூர், ஈரோடு, கோவை, திருப்பூர், நாமக்கல், சேலம், திருவண்ணாமலை, வேலூர் உள்பட தமிழகத்தின் 16 மாவட்டங்களில் 2,014 கி.மீ தூரத்துக்குப் புதிதாக உயர் அழுத்த மின்பாதைகள் அமைக்கப்படுகின்றன.

இதற்கு விவசாயிகள் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதுகுறித்து, தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தின் தலைவர் ராஜாமணியிடம் பேசினோம். ‘‘இந்தத் திட்டத்துக்கு 2013-ல் மத்திய அரசின் மரபுசாரா எரிசக்தித்துறை அனுமதி அளித்தது. அதையடுத்து, தமிழ்நாட்டில் 30 உயர் அழுத்த மின்பாதைகள் அமைக்க மத்திய, மாநில அரசுகள் 2015-ல் அனுமதி அளித்தன. முதல்கட்டமாக, ஒன்பது மின்பாதைகளை அமைப்பதற்கான பணியை மத்திய அரசின் பவர்கிரிட் கார்ப்பரேஷனும் தமிழக மின்சார வாரியமும் இணைந்து தொடங்கியுள்ளன. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டத்தில் உள்ள புகளூரில் 130 ஏக்கரில் ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய மின்நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. அங்கிருந்து 5 கி.மீ தொலைவில் இடையார்பாளையத்தில் மற்றொரு மின்நிலையம் அமைக்கப்படுகிறது. தேனி உள்ளிட்ட தென் மாவட்டங்களிலிருந்து உயர் அழுத்த மின்கோபுரங்கள் மற்றும் மின்பாதைகள் அமைக்கப்பட்டு இவற்றுடன் இணைக்கப்படும். இங்கிருந்து கர்நாடகா மற்றும் கேரளாவுக்கும் ஆந்திரா வழியாகச் சத்தீஸ்கருக்கும் மின்சாரம் கொண்டுசெல்லப்பட உள்ளது.

மின்பாதையா... மயானப் பாதையா? - அச்சத்தில் 16 மாவட்ட விவசாயிகள்!

புகளூர் முதல் சத்தீஸ்கர் வரை செல்லும் மின்பாதைமூலம் 6,000 மெகாவாட் மின்சாரம் கொண்டுசெல்லப்படவுள்ளது. மேலும், தர்மபுரி வழியாகக் கர்நாடகாவுக்கு இரண்டு மின்பாதைகள் அமைக்கப்படவுள்ளன. எந்த ஒரு திட்டத்துக்கு நிலம் எடுப்பதாக இருந்தாலும் யாருடைய நிலம், பரப்பளவு, சர்வே எண், அதற்கான இழப்பீடு போன்ற விவரங்களை அரசு வெளியிடுவது நடைமுறை. ஆனால், இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதில் வெளிப்படைத்தன்மையே இல்லை’’ என்று குற்றம் சாட்டினார் அவர்.

தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார், ‘‘திட்டங்களுக்கு நிலம் எடுக்கும்போது சம்பந்தப்பட்ட விவசாயிகளிடம் கருத்துக் கேட்புக் கூட்டங்களை நடத்தி, அவர்களின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்பது விதி. அத்தகைய கருத்துக்கேட்புக் கூட்டங்களை மாவட்ட கலெக்டர்கள் நடத்தவில்லை. மாறாக, இந்தத் திட்டம் செயல்படுத்தப்படாத பகுதிகளில், நூறு நாள் வேலைத்திட்டத்தில் பணிக்கு வந்த பெண்களை வைத்துக் கருத்துக் கேட்புக் கூட்டங்கள் நடத்தி, முறைகேடாக ஒப்புதல் பெற்றுள்ளனர். நிலம் கையகப்படுத்துவதற்கு முன்பு, அந்தத் திட்டம் சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து ஆய்வுசெய்யப்பட வேண்டும். கையகப்படுத்தும் நிலம் நகர்ப்புறத்தில் இருந்தால், சந்தை மதிப்பில் இரு மடங்கும் கிராமப் பகுதிகள் என்றால் நான்கு மடங்கும் இழப்பீடாகத் தர வேண்டும். மாற்று நிலம் தர முயற்சி செய்ய வேண்டும். இந்த விதிமுறைகள் எதையும் இதில் கடைபிடிக்கவில்லை. மத்திய எரிசக்தித்துறை அளித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகள்படி, மின்கோபுரங்கள் அமைக்கும் இடத்துக்கு 85 சதவிகிதமும் மின்கம்பி வழித்தட நிலங்களுக்கு 15 சதவிகிதமும் வழிகாட்டு மதிப்பின்படி இழப்பீடு தர வேண்டும். இதையும் தமிழக அரசு மதிக்கவில்லை. ஆனால், ‘மத்திய அரசின் திட்டத்தைத் தடுத்தால், நாங்களே உங்கள் நிலங்களை எடுத்துக்கொள்வோம்’ என அதானி உள்ளிட்ட கம்பெனிகள் விவசாயிகளை மிரட்டிப் பணிய வைக்கப் பார்க்கின்றன. பூமிக்கடியில் கேபிள் அமைத்து மின்பாதையைக்கொண்டு போகும்படி கோரிக்கை வைத்துள்ளோம். இந்த மின்கோபுரம் அமைத்து மின்சாரம் கொண்டுபோகும் திட்டம் செயல்படுத்தப் பட்டால், 5,000-க்கும் மேற்பட்ட கிராமங்களும் 50,000 ஏக்கர் நிலங்களும் பாதிக்கப்படும். லட்சக்கணக்கான விவசாயிகள் நில உரிமையை இழப்பார்கள். எங்கள் எதிர்ப்பை மீறித் திட்டத்தைச் செயல்படுத்த நினைத்தால், 16 மாவட்டங்களிலும் போராட்டம் வெடிக்கும்’’ என்றார் ஆவேசத்துடன்.

மின்பாதையா... மயானப் பாதையா? - அச்சத்தில் 16 மாவட்ட விவசாயிகள்!

இந்தத் திட்டத்தால், கரூர் மாவட்டம் க.பரமத்தி ஒன்றியத்தில் உள்ள காட்டுமுன்னூர் என்ற கிராமம் முற்றிலும் பாதிக்கப்படும் என்று சொல்லப்படுகிறது. இந்தக் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கந்தசாமி, ‘‘எங்கள் ஊர் வழியாக ஏற்கெனவே ஐந்து உயர் அழுத்த மின்பாதைகள் செல்கின்றன. புதிதாக இரண்டு மின்பாதைகளை இங்கு அமைக்கப்போகிறார்கள். மின்கோபுரங்கள் அமைப்பதற்காகக் குழி வெட்டினார்கள். அதை விவசாயிகள் தற்காலிகமாகத் தடுத்து நிறுத்தியுள்ளனர். எங்கள் நிலம் வழியாக இத்திட்டத்தை நிறைவேற்றினால், சோற்றுக்கு நாங்கள் பிச்சையெடுக்க வேண்டிய நிலை வரும்’’ என்றார் வேதனையுடன்.

‘‘எங்களுக்கு 6 ஏக்கர் நிலமிருக்கு. மின்பாதைகள் எங்க ஊர் வழியாக வந்தால், அந்த நிலம் மலடாகும். நாங்க குடியிருக்கிற பகுதி வழியாகவும் மின்பாதை போகுது. நிலம், வீடு, ஊருனு சகலத்தையும் விட்டுட்டு, அசலூருக்குப் போய் அகதிகளாகக் குடியிருக்கிற சூழல் வரும். அதனால், எங்க உசிரைக் கொடுத்தாவது இந்தத் திட்டத்தைத் தடுத்து நிறுத்துவோம்’’ என்றார் காட்டுமுன்னூரைச் சேர்ந்த ஜானகி.

தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கக் கரூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார், ‘‘மின்பாதை எத்தனை கிலோ வாட் மின்சாரத்துக்கானது என்பதைப் பொறுத்து அதன் இருபுறமும் 40 மீட்டர் முதல் 90 மீட்டர் அகலத்துக்கு இடைவெளிவிட வேண்டும். டிராக்டர்களைக் கொண்டு உழ முடியாது. மின்பாதையின் இருபுறமும் 100 மீட்டர் தூரத்துக்கு விவசாயம் செய்ய முடியாது. நிலங்களின் மதிப்பு குறைந்துவிடும். நிலங்களை விற்க முடியாது. ஆழ்குழாய் பராமரிப்புப் பணிகளைச் செய்ய முடியாது. புதிதாக ஆழ்துளைக் குழாய்கள் அமைக்கவும் முடியாது. தமிழக எல்லையிலிருந்து கேரளா வரை காட்டுவழியில் 30 கி.மீ தூரத்துக்குத் தரைக்கு அடியில் கேபிள் வழியேதான் மின்சாரம் கொண்டுபோகிறார்கள். அதையே இந்த மின்பாதைகளில் செயல்படுத்த வேண்டும்’’ என்றார்.

மின்பாதையா... மயானப் பாதையா? - அச்சத்தில் 16 மாவட்ட விவசாயிகள்!

விவசாயிகள் தெரிவித்த கருத்துக்களை, க.பரமத்தியில் உள்ள பவர்கிரிட் கார்ப்பரேஷன் மின்நிலைய தலைமைப் பொதுமேலாளர் குணசேகர் முன்பாக வைத்தோம். ‘‘நாட்டின் வளர்ச்சிக்கு மிக முக்கியமானது மின்சாரம். அதை எதிர்த்தால் எப்படி? நெய்வேலியிலிருந்து மின்பாதை மூலமாகக் கொண்டுவரப்படும் மின்சாரம்தான், கரூர் மாவட்டத்தில் உள்ள காகித ஆலை, ஜவுளி ஆலைகள் உள்பட பல தொழிற்சாலைகளுக்கும் பயன்படுகிறது. கூடங்குளம் மின்சாரம்தான், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பனியன் கம்பெனிகளுக்குப் பயன்படுகிறது. அதுபோலத்தான் இதுவும். திருப்பூர், கோவை, ஈரோடு, கரூர் ஆகிய மாவட்டங்கள் எல்லாம் தொழில்கள் நிறைந்தவை. அதனால் ரியல் எஸ்டேட் வளர்ச்சியடைந்து, நிலங்களின் மதிப்பு உயர்ந்துள்ளது. இப்படி மின்பாதைகள் அமைப்பதால், நிலங்களின் மதிப்பு குறைந்துவிடும் என்ற அச்சத்தில்தான், கோடீஸ்வர விவசாயிகள் இதை எதிர்க்கிறார்கள். எங்கேயும் விவசாயிகள் விவசாயம் செய்யவில்லை. குடிப்பதற்கே தண்ணீர் கிடைக்கவில்லை. பிறகு எங்கே அவர்கள் விவசாயம் செய்வார்கள்?

100 மெகாவாட், 200 மெகாவாட் என்றால், கேபிள்மூலம் பூமிக்கடியில் கொண்டுபோகலாம். உயர் அழுத்த மின்சாரத்தை கேபிள் அமைத்துக் கொண்டுபோவது சாத்தியமே இல்லை. நீர்த்தேக்கம் அமைப்பது, தொழிற்சாலை அமைப்பது என்றால், விவசாயிகளிடம் கருத்துக்கேட்புக் கூட்டத்தை அரசு நடத்தும். ஆனால், மின்பாதைகள் அமைப்பதற்கு ஓர் அறிவிக்கை வெளியிட்டால் போதும். இந்தத் திட்டத்தால் மரங்களுக்கோ, கோழிப்பண்ணைகளுக்கோ, விவசாயத்துக்கோ எந்தப் பாதிப்பும் இல்லை. ஆனாலும்கூட, தென்னை மரங்கள் உள்ளிட்டவற்றுக்கு நஷ்டஈடு கொடுக்கிறோம். பல இடங்களில் விவசாயிகள் ஒத்துழைப்பு தருகிறார்கள். சிலர், விவசாயிகளைத் தவறாகப் புரிந்துகொள்ள வைத்து இந்த திட்டத்துக்கு எதிராகச் செயல்பட வைக்கிறார்கள். இந்தத் திட்டம், தடைகளை மீறிச் செயல்படுத்தப்படும்’’ என்றார் அவர்.

வளர்ச்சி தேவைதான். ஆனால், விவசாயத்தை அழிக்கும் வளர்ச்சி தேவையா என்ற கேள்வி எழுகிறது.

- துரை.வேம்பையன்
படங்கள்: நா.ராஜமுருகன்