அலசல்
Published:Updated:

முதலில் வந்த விஜய்... ஆப்சென்ட் ஆன அஜித்!

முதலில் வந்த விஜய்... ஆப்சென்ட் ஆன அஜித்!
பிரீமியம் ஸ்டோரி
News
முதலில் வந்த விஜய்... ஆப்சென்ட் ஆன அஜித்!

முதலில் வந்த விஜய்... ஆப்சென்ட் ஆன அஜித்!

மிழ்த் திரையுலகம் ஒரு மாதத்துக்கும் மேலாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளது. புதிய திரைப்படங்கள் எதுவும் வெளிவரவில்லை. படப்பிடிப்புகளும் நடைபெறவில்லை. இந்தநிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி பல்வேறு தரப்பினரும் நடத்தும் போராட்டங் களில், தமிழ்த் திரையுலகமும் தன்னை இணைத்துக்கொண்டது. கூடுதலாக, ஸ்டெர்லைட் ஆலையை மூடவும் கோரிக்கை வைத்தது. நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம், ஃபெப்சி ஆகிய அமைப்புகளின் சார்பில் கண்டனப் போராட்டம் ஏப்ரல் 8-ம் தேதி வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெற்றது. அரை நாள் போராட்டத்துக்கு மட்டுமே காவல்துறை அனுமதி வழங்கியிருந்தது.

முதலில் வந்த விஜய்... ஆப்சென்ட் ஆன அஜித்!

• சென்றமுறை, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடிகர் சங்க வளாகத்தில் நடைபெற்ற உண்ணாவிரதத்தை விஜய் தவிர்த்தார். இந்தப் போராட்டத்தையும் தவிர்ப்பாரோ என்று பலரும் நினைத்தனர். அதைப் பொய்யாக்கும் வகையில், முதல் ஆளாக வந்தவர் அவர்தான். ரோல்ஸ்ராய்ஸ் கார் வைத்திருக்கும் விஜய், ஸ்விஃப்ட் காரில் வந்திறங்கினார். விஜய்-விஷால் இருவருக்கும் பனிப்போர் என்ற கருத்து சினிமா உலகில் உண்டு. ஆனால், போராட்ட மேடையில் இருவரும் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தனர்.

• இந்தப் போராட்டம் குறித்துப் பேசிய நடிகர் சங்கத் தலைவர் நாசர், தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்தையும் பாடிப் போராட்டத்தைத் தொடங்கிவைத்தார்.

• கவிஞர் வைரமுத்து வந்த சிறிது நேரத்தில் கமல்ஹாசன் வந்தார். அவரை வைரமுத்துவுக்குப் பக்கத்தில் அமரவைத்தனர். சிறிது நேரம் கழித்து இசையமைப்பாளர் இளையராஜா வர, எல்லோர் முகங்களிலும் பதற்றம். கருத்துவேற்றுமை காரணமாக ‘புன்னகை மன்னன்’ படத்துக்குப் பிறகு பொதுமேடையில் இளையராஜாவும் வைரமுத்துவும் சந்தித்தது இல்லை. அப்படி விலகியிருந்த இருவரும், ஒரே மேடையைப் பகிர்ந்துகொண்டது போராட்டத்தை அர்த்தமுள்ளதாக்கியது. இளையராஜா புறப்படத் தயாரானபோது விஜய், ரஜினி, இளையராஜா, கமல், வைரமுத்து எல்லோரையும் ஒன்றாக நிறுத்தி போட்டோ எடுக்க வைத்தார் விஷால். 

முதலில் வந்த விஜய்... ஆப்சென்ட் ஆன அஜித்!

• தனுஷ்தான் சிவகார்த்திகேயனை முன்னணி ஹீரோவாக்கினார். பிறகு, இருவருக்கும் இடையில் மனஸ்தாபம் என்று செய்திகள் வந்தன. இந்தச் சூழலில், போராட்டத்துக்கு வந்த தனுஷ், முதல் வரிசையில் அமர்ந்திருந்த சிவகார்த்திகேயனைக் கட்டியணைத்துக் கொண்டார்.

• விக்ரமும் பிரசாந்தும் நெருங்கிய உறவினர்கள். ஆனால், இரு குடும்பத்தாருக்கும் இடையே சுமுகமான உறவு இல்லை என்று சொல்லப்படுவதுண்டு. இந்த மேடையில் ஏறிய விக்ரமை பிரசாந்த் கட்டிப்பிடித்து நெகிழ்ந்தார்.

• ரஜினி தன் போயஸ் கார்டன் வீட்டைவிட்டுப் புறப்பட்டபோதே பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். ‘‘கமல் எனக்கு எதிரியல்ல, என்றுமே நண்பர். வறுமை, வேலையில்லா திண்டாட்டம் போன்றவைதான் என் எதிரிகள்’’ என்றார். போராட்ட மேடையில் கமலுக்குப் பக்கத்து சீட்டில் ரஜினி அமரவைக்கப்பட்டார். இருவரும் பேசிக்கொள்வார்களா என்று பலரும் சந்தேகத்துடன் பார்க்க, இருவரும் எப்போதும்போல் பேசிச் சிரித்தபடி இருந்தனர்.

முதலில் வந்த விஜய்... ஆப்சென்ட் ஆன அஜித்!

• அஜித் வழக்கம்போல ஆப்சென்ட். செல்வராகவன் இயக்கும் படத்துக்காக, தாடி கெட்டப்பில் இருக்கும் சூர்யா, அதே தோற்றத்துடன் போராட்ட மேடைக்கு வந்திருந்தார்.

• முன்னணி நடிகைகளில் ஒருவர்கூட வரவில்லை. இறுதியாகப் பார்வையாளர்கள் வரிசையில் இருந்த சிலர், சத்யராஜைப் பேசச் சொல்லிச் சத்தம் போட்டனர். ‘‘இது மௌனப் போராட்டம். ஒருவரை மட்டும் பேசவைத்தால் நன்றாக இருக்காது’’ என்று தயங்கிய சத்யராஜ், ‘‘ராணுவமே வந்தாலும் அஞ்ச மாட்டோம். தைரியம் இருப்பவர்கள் முன்னால் வந்து குரல் கொடுங்கள். தைரியம் இல்லாதவர்கள் ஓடிவிடுங்கள்’’ என்றார் உரத்த குரலில். இறுதியாக, விவசாயிகளின் வேதனைகளைப் பகிர்ந்தவாறு, போராட்டத்தை நிறைவு செய்து வைத்தார் விஷால்.

முதலில் வந்த விஜய்... ஆப்சென்ட் ஆன அஜித்!

• சிம்பு புது ரூட் பிடித்து, தன் வீட்டு வாசலிலேயே பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். ‘‘மௌனமாக ஏன் இருக்க வேண்டும்? எனக்கு அந்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கவில்லை’’ என்றார்.

- எம்.குணா
படங்கள்: வி.ஸ்ரீனிவாசுலு