அலசல்
Published:Updated:

ஓர் உயிர் போனபிறகு சுவர் இடிப்பு!

ஓர் உயிர் போனபிறகு சுவர் இடிப்பு!
பிரீமியம் ஸ்டோரி
News
ஓர் உயிர் போனபிறகு சுவர் இடிப்பு!

சந்தையூரில் சமாதானம்!

துரை மாவட்டம் பேரையூர் தாலுகாவில் உள்ள சந்தையூர் இந்திரா நகரில் தலித் சமூகத்தைச் சேர்ந்த இரு தரப்பு மக்களிடையே பிரச்னை வருவதற்குக் காரணமாக இருந்த சுவர் இடிக்கப்பட்டுள்ளது.

தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒரு தரப்பினரால் எழுப்பப்பட்ட ஒரு சுவரை, தலித் சமூகத்தைச் சேர்ந்த மற்றொரு தரப்பினர் ‘தீண்டாமைச்சுவர்’ என்று குற்றம் சாட்டினர். அதை இடிக்க வலியுறுத்தினர். அதனால், அங்கு பதற்றம் நீடித்துவந்தது. ஆதித்தமிழர் பேரவை, ஆதித்தமிழர் கட்சி, நீலப்புலிகள் அமைப்பு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி உள்பட பல்வேறு கட்சிகளும் அமைப்புகளும் களத்தில் இறங்கின. அதனால், பரபரப்பு அதிகரித்தது. இரு தரப்பினரும் நீதிமன்றத்தை நாடினர்.

ஓர் உயிர் போனபிறகு சுவர் இடிப்பு!

மேலும், இந்தச் சுவருக்கு எதிர்ப்பு தெரிவித்து அருகேயுள்ள ஒரு மலைமீது ஒரு தரப்பினர் குடியேறினர். மலையில் தங்கியிருந்து, இரு மாதங்களுக்குமேல் அவர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது, பழனிமுருகன் என்பவர் மாரடைப்பால் மரணமடைந்தார். அதன்பின் பிரச்னையை உடனே தீர்த்து வைக்கும்படி மதுரை கலெக்டர் வீரராகவ ராவுக்கு தலைமைச் செயலகத்திலிருந்து உத்தரவு வந்துள்ளது. அதையடுத்து, இரு தரப்பினரையும் அழைத்து அவர் பேச்சுவார்த்தை நடத்தினார். சர்ச்சைக்குரிய சுவரில் கிழக்கு மற்றும் மேற்குப் பக்கம் இடிப்பது, இடையிலுள்ள புறம்போக்கு நிலத்தில் அனைவரும் பயன்பெறும் வகையில் அங்கன்வாடிக் கட்டடம் கட்டுவது, புறம்போக்கு நிலத்தில் இருக்கும் ராஜகாளியம்மன் கோயிலில் இரு தரப்பும் வழிபாடு நடத்துவது என்று பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டது.  ஏப்ரல் 6-ம் தேதி அதிகாரிகள் சந்தையூரில் முகாமிட்டனர். சர்ச்சைக்குரிய சுவரில் இரண்டு மீட்டர் நீளத்துக்கு உடைக்கப்பட்டு, பாதை ஏற்படுத்தப்பட்டது. தற்போது அங்கு, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அந்தச் சுவருக்கு எதிர்ப்பு தெரிவித்துப் போராடிய ஆதித் தமிழர் கட்சியின் தலைவர் ஜக்கையன், “இந்தப் பிரச்னை, ஒரு வழியாக முடிவுக்கு வந்துள்ளது. இதைத்தான் ஆரம்பத்திலிருந்தே சொல்லிவந்தோம். ஓர் உயிர்போன பிறகு, இந்தத் தீர்வு கிடைத்துள்ளது” என்றார்.

இந்தப் பிரச்னையைத் தொடர்ந்து கவனித்துவரும் சோஷியல் ஜஸ்டிஸ் அமைப்பின் ஆறுமுகம், “இரு தரப்பு மக்களும் இணக்கமாக வாழும் வகையில், மிகுந்த கவனத்துடன் இந்த நடவடிக்கையை கலெக்டர் எடுத்துள்ளார். இந்தத் தீர்வு பாராட்டுக்குரியது” என்றார்

கலெக்டர் வீரராகவ ராவ், “சந்தையூர் மக்கள் அமைதியாக வாழும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்குத் தேவையான அரசுத் திட்டங்கள் அங்கு செயல்படுத்தப்படும். மீண்டும் பிரச்னைகள் வராமல் இருக்கத் தொடர்ந்து கண்காணிக்கப்படும்” என்றார்.

“இந்த நடவடிக்கையை ஆரம்பத்திலேயே எடுத்திருந்தால், தேவையற்ற டென்ஷன் ஏற்பட்டிருக்காது; ஓர் உயிர் போயிருக்காது” என்கிறார்கள் சந்தையூர் மக்கள்.

- செ.சல்மான்
படம்: வீ.சதீஷ்குமார்