Published:Updated:

``#MeToo-வுக்கான எங்கள் ஆக்‌ஷன் ஆரம்பம்!” சுதா ரகுநாதன் - ராதிகா கணேஷ்

``#MeToo-வுக்கான எங்கள் ஆக்‌ஷன் ஆரம்பம்!” சுதா ரகுநாதன் - ராதிகா கணேஷ்
``#MeToo-வுக்கான எங்கள் ஆக்‌ஷன் ஆரம்பம்!” சுதா ரகுநாதன் - ராதிகா கணேஷ்

``#metoo என்பது, சமூக வலைதளங்களில் இயங்கும் ஆங்கிலமும் தொழில்நுட்பமும் அறிந்த பெண்களை மட்டுமே எட்டியுள்ளது. இந்த விழிப்புஉணர்வும் வெளிப்படை விவாதங்களும் கிராமப்புறப் பெண்களையும் எட்ட வேண்டும்.”

டந்த சில நாள்களாக #metoo சமூக வலைதளங்களைத் தாண்டி, சட்டரீதியாகவும் ஆக்கபூர்வமான முன்னெடுப்புகளாகவும் மாறிவருவதை பார்த்துக்கொண்டிருக்கிறோம். கலைத்துறையில் கவிஞர் வைரமுத்து, கர்னாடக சங்கீதப் பாடகர் ஓ.எஸ்.தியாகராஜன், மாண்டலின் ராஜேஷ், பின்னணிப் பாடகர் கார்த்திக் ஆகியோர் மீது பாலியல் புகார்கள் எழுந்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதன் தொடர்ச்சியாக, இந்தியா, வட  அமெரிக்கா, கனடாவில் வசிக்கும் இருநூற்றுக்கும் மேற்பட்ட கர்னாடக இசைக் கலைஞர்கள், இசைத்துறையில் இனியும் இதுபோன்று நடக்காத வகையிலும், அனைவருக்கும் பாதுகாப்பான துறையாக இருக்கவும் வழிசெய்ய கூட்டுமனு ஒன்றை வெளியிட்டிருந்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக, பிரபல கர்னாடகப் பாடகர் சுதா ரகுநாதன், தன் முகநூல் பக்கத்தில், `பெண்கள் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை வெளிப்படையாகக் கூறிவருவது மிகவும் துணிச்சலான விஷயம். இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடும் ஆண்களுக்குத் தக்க தண்டனை அளிக்க வேண்டும்' என்று பதிவிட்டுள்ளார். அவரிடம் பேசினேன்.

``இப்போதுதான் பெண்கள் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை வெளிப்படையாகக் கூறிவருகின்றனர். நான் நடத்திவரும் சமுதாய அறக்கட்டளை, இசைத்துறையில் இருக்கும் கலைஞர்கள், அரசு அதிகாரிகள் என அனைவரும் இணைந்து ஒரு விசாரணை ஆணையம் அமைக்கவுள்ளோம். நாங்கள் மிகவும் ஆரம்பகட்டத்தில்தான் இருக்கிறோம். இப்போது நவராத்திரி சீஸன். எல்லாருமே பிஸியா இருக்கிறோம். ஆனால், சீக்கிரமே இதுபற்றிப் பேச ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யவிருக்கிறோம். இது ரொம்ப சென்சிட்டிவான விஷயம். பலரும் புகார் எழுப்பி வருகிறார்கள். அதன் உண்மைத்தன்மையை ஆராய்ந்தே செயல்பட வேண்டும். நிச்சயம் கர்னாடக உலகைப் பெண்களுக்குப் பாதுகாப்பான இடமாக உருவாக்குவதுதான் எங்களின் அடிப்படை நோக்கம்” என்றார்.

பரதநாட்டியக் கலைஞரும் பேராசிரியையுமான ஸ்வர்ணமால்யா கணேஷ் மற்றும் அவரின் சகோதரியும் `காணி நிலம்’ என்ற அமைப்பை நடத்திவரும் ராதிகா கணேஷ், 21-ம் தேதி சென்னையில் இதுதொடர்பான ஆலோசனை பொதுக்கூட்டம் ஒன்றை நடத்துகிறார்கள். இதுகுறித்து ராதிகா கணேஷிடம் பேசினேன்.

``எங்க # metoo செயல்பாட்டை நடனத்துறையில் நடப்பவை என்று மட்டும் சுருக்கிக்கொள்ளவில்லை. எல்லாத் துறையிலும் இருக்கும் பெண்களுக்கும் உதவத் தயாராகவே இருக்கிறோம். இந்த #metoo என்பது,  சமூக வலைதளங்களில் இயங்கும் ஆங்கிலமும் தொழில்நுட்பமும் அறிந்த பெண்களை மட்டுமே எட்டியுள்ளது. இந்த விழிப்புஉணர்வும் வெளிப்படை விவாதங்களும் கிராமப்புறப் பெண்களையும் எட்ட வேண்டும். சொல்லப்போனால், கிராமப்புறப் பெண்ணுக்கு, ஆண்கள் தன்னை எப்படிப் பார்ப்பார்கள், எப்படி அணுகுவார்கள் என்ற விழிப்புஉணர்வு பரவலாகவே இருக்கிறது. அதேசமயம், இதைப் பொறுத்துப்போக வேண்டும் என்ற சமுதாயக் கற்பிதங்களை பின்பற்றுகின்றனர். அந்தப் பெண்களுக்கு இந்த விஷயத்தை எப்படி எதிர்கொள்வது, வெளிப்படையாகப் பேசுவது என்பன போன்ற விவரங்கள் தெரியாது. `காணி நிலம்' சார்பாக, கிராமப்புறங்களில் வேலை செய்த அனுபவத்தில் இதைச் சொல்கிறேன். இந்த விழிப்புஉணர்வையே நாங்கள் அவர்களுக்குக் கொடுக்க விரும்புகிறோம்.

வரும் ஞாயிற்றுக்கிழமை (21.10.18) நடக்கவிருக்கும் கூட்டத்திலும், அதன் பிறகும் நாங்கள் இதுகுறித்த `கேஸ் ஸ்டடி’ உருவாக்கி, அதன்மூலம் சட்டரீதியாகவும் சமூகரீதியாகவும் எத்தகைய வழிமுறைகள் வேண்டும் என்பதை அரசுடன் பேசுவோம். இந்தக் குழுவில், எம்.பி.நிர்மலா ஐ.ஏ.எஸ் தலைமையில், கலை, இலக்கியம், மனநலம் ஆகிய தளங்களில் இருக்கும் நபர்களை நியமிப்போம். அவர்களுக்கு வந்த பாலியல் தொல்லை புகார்களை ஆய்வுசெய்து, அதுதொடர்பான ஆய்வறிக்கை ஒன்றை உருவாக்கவுள்ளோம். இதை அரசுடன் சேர்ந்து சட்டத்திட்டங்களுக்குள் எப்படிக் கொண்டுவரலாம் என்பதுதான் நோக்கம். இந்தக் கூட்டத்தில்,  பாலியல் தொல்லை குறித்து முழு விவரங்கள் அடங்கிய கையேடு ஒன்றையும் வெளியிடவிருக்கிறோம்.

மேலும், கிராமப்புறப் பெண்களுக்குத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, தங்களின் சிக்கல்களை எப்படி அணுகலாம் என்பதையும் கற்றுத்தரத் திட்டமிட்டுள்ளோம் இவை அனைத்துமே ஒரே நாளில் நடந்துவிடாது. சின்னச் சின்ன மாற்றங்கள் மூலமே பாலியல் தொல்லை இல்லாச் சமூகத்தை உருவாக்க முடியும். உதாரணமாக, நவராத்திரி சீஸனில் நிறைய கச்சேரிகள், இசை நிகழ்ச்சிகள் நடக்கும். இதில் கலந்துகொள்ளும் பெண் கலைஞர்களுக்கும், பெண் பார்வையாளர்களுக்கும் ஏதாவது பாலியல் தொல்லை ஏற்பட்டால், குறிப்பிட்ட எண்ணுக்குத் தெரிவிக்கவும் என்று ஓர் அறிவிப்பை ஒவ்வொரு நிகழ்ச்சி நடக்கும் இடங்களிலும் வைக்கலாம். இத்தகைய முன்னெடுப்புகளே சமூகத்தின் இன்றைய தேவை" எனத் தெளிவான குரலில் அழுத்தமாகச் சொல்கிறார் ராதிகா.

அடுத்த கட்டுரைக்கு