Published:Updated:

``ஐயப்பன் பேர்ல நம்பிக்கை இல்லாம, டூரிஸ்ட்டாயிட்டு வரலாமா?'' - குமுறும் கேரளக் குடும்பம்

``ஐயப்பன் பேர்ல நம்பிக்கை இல்லாம, டூரிஸ்ட்டாயிட்டு வரலாமா?'' - குமுறும் கேரளக் குடும்பம்
``ஐயப்பன் பேர்ல நம்பிக்கை இல்லாம, டூரிஸ்ட்டாயிட்டு வரலாமா?'' - குமுறும் கேரளக் குடும்பம்

பரிமலை ஐயப்பன் கோவிலை வழிபட எல்லா வயதுப் பெண்களும் செல்லலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பிறகு,  ஆந்திராவைச் சேர்ந்த மாதவி என்கிற 40 வயதுப் பெண் இரண்டு நாள்களுக்கு முன்னால் சபரிமலைக்குச் சென்றிருந்தார். ஐயப்பன் பக்தர்கள் அவர் காலில் விழுந்து தடுத்ததால், அவர் பாதியிலேயே திரும்பிச் சென்றார். இவரைத் தொடர்ந்து, சேர்த்தலையைச் சேர்ந்த லிபி என்ற செய்தியாளர் இருமுடி கட்டுகளுடன் சபரிமலைக்குப் போனார். பத்தணம்திட்டாவில் அவரைப் பக்தர்கள் வழிமறித்ததால், அவராலும் ஐயப்பன் சன்னிதானத்துக்குச் செல்ல முடியவில்லை. இவருக்கு அடுத்தபடியாக, லக்னோவைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் சுகாசினிராஜ் காவல்துறை பாதுகாப்புடன் சபரிமலையில் ஏற ஆரம்பித்தார். அவருடைய வருகைக்கும் பக்தர்கள் எதிர்ப்பு தெரிவிக்க, பக்தர்களின் மனதைப் புண்படுத்த விரும்பவில்லை எனத் திரும்பிச் சென்றுவிட்டார். நிலைமை இப்படி இருக்க, இன்று ஆந்திராவைச் சேர்ந்த தொலைக்காட்சி பெண் செய்தியாளர் கவிதா உட்பட இரண்டு பெண்கள் காவல்துறை பாதுகாப்புடன் சபரிமலை செல்ல ஆரம்பிக்க, போராட்டம் மிகப் பெரிய அளவில் எழும்ப ஆரம்பித்தது. இதனால், கேரள அரசு, சபரிமலைக்கு வந்த இரண்டு பெண்களையும் திருப்பி அனுப்ப உத்தரவிட்டது. 

இந்த நிலையில், கேரளாவைச் சேர்ந்தவர்களின் மனநிலை எப்படி இருக்கிறது என்று தெரிந்துகொள்வதற்காக சபரிமலைக்கு அருகில் வசித்து வரும் அஜீத் மற்றும் அவருடைய அம்மா லதா ஆகியோரிடம் பேசினேன். அஜீத், ``எண்டே அம்மே கிட்ட முதல்ல பேசுங்க மேடம்'' என்றார். 

``இப்படிச் செய்றது கஷ்டமாயிருக்கு மோளே. ரொம்ப மோசமான விஷயம் இது. இவிட கொச்சுக் குட்டிகளும், 50 வயசுக் குட்டிகளும் வரலாம். இவிட, 48 நாள் விரதம் பிடிச்சு ஐயப்ப பக்தர்கள் வர்றாங்க. பெண்களால அப்படி விரதம் பிடிக்கான் முடியாது. சபரிமலையில் ஸ்தீரிகளுக்கு செளகரியமும் இல்லா. பட்ச, 50 வயசு மோளுட்டு இருந்தா எல்லா ஸ்தீரிகளும் இங்க வரலாமே. அப்படி வாங்க'' என்றார்.   

பிறகு பேசிய அஜீத்துக்கு தமிழ் கிட்டத்தட்ட சரளமாகவே வருகிறது.

``உச்ச நீதிமன்ற தீர்ப்பு வந்ததுக்கு அப்புறம் எல்லாப் பெண்களுமா சபரிமலைக்கு வந்தாங்க... நீங்களே பார்த்தீங்கள்ல... சில பெண்கள்தானே வந்தாங்க. அதுவும் டூரிஸ்ட்டாயிட்டு வந்தாங்க. நிலாவுக்குப் போகணும்னு ஆசைப்படுவாங்க இல்லையா, அந்த மாதிரி வர்றாங்க. ஐயப்பன் மேலே உள்ள நம்பிக்கையில அவங்க வரலை. ஒரு பெண்குட்டி, 100 போலீஸ்காரங்க பாதுகாப்போட சபரிமலைக்கு வர்றதெல்லாம் தேவையில்லாத விஷயம். இங்க இருக்கிற எங்க பெண்கள் யாரும் சபரிமலைக்குப் போக மாட்டாங்க. அது ஒரு ஆசாரம். இவ்ளோ காலமாயிட்டு அந்த ஆசாரம் எப்படியிருக்கோ அப்படியேதான் இருக்கணும். எங்க வீட்டுப் பாட்டிகள் எல்லாம்  கவர்ன்மென்ட்டைதான் திட்டறாங்க. கோர்ட் அனுமதி கொடுத்தாலும் கவர்ன்மென்ட் அனுமதி கொடுத்திருக்கக் கூடாது.    

இது உங்களோட ஜல்லிக்கட்டு மாதிரிதான். அது உங்க கலாசாரம், பண்பாடு. அரசு அதைத் தொட்டப்போ நீங்கள்லாம் போராடினீங்க இல்லையா? அப்படித்தான் இதுவும். குறைச்ச வயசுல இருக்கிற பெண்கள் சபரிமலைக்கு வரக் கூடாது. அது எங்க ஆசாரம். காலங்காலமா இருந்துட்டு வர்ற எங்க நம்பிக்கை இது. அதை பிரேக் பண்ணா... பார்த்துட்டு இருக்க நாங்க முட்டாளா? 

சபரிமலையால யாருக்கு என்ன பிரச்னை வந்தது?  மக்களுக்குப் பிரச்னை தருகிற பார், ஒயின் ஷாப் இதையெல்லாம் கவர்ன்மென்ட் மூடணும். அதுக்கு கோர்ட் ரூல் போடட்டும். 

சபரிமலைக்கு வர, ஈக்குவாலிட்டி கேட்கிற பெண்களுக்கு ஒண்ணு சொல்லணும். எங்களோட ஆசாரம், நம்பிக்கையில உங்க ஈக்குவாலிட்டிக்கு எங்க இடம் இருக்குது சொல்லுங்க? சபரிமலைக்கு எங்க வீட்டுப் பெண்களையும் போக விடமாட்டோம். மற்றப் பெண்களை மலை ஏறவும் விட மாட்டோம்'' என்று முடித்தார் அஜீத். 

இந்த சமூகம் ஒவ்வொரு முறையும் , அதன் அடுத்தக்கட்ட பாய்ச்சலை நோக்கி  நகரும் போது, பல்வேறு இடையூறுகள் எழத்தான் செய்யும். அதையெல்லாம் கடந்துதான் ஒவ்வொருமுறையும் பெண்களுக்கான சம உரிமையை, பல்வேறு விஷயங்களில் நீதிமன்றமும், சமூக செயல்பாட்டாளர்களும் பெற்றுத் தந்து இருக்கின்றனர். விரைவில் சர்ச்சைகள் கலைந்து, சபரிமலைக்கு அனைவரும் செல்லக்கூடிய  சூழல் உருவாகும் என நம்பலாம்.