
அஞ்சறைப் பெட்டிடாக்டர் வி.விக்ரம்குமார்
நறுமணப் பொருள்களின் ராஜ்ஜியத்தில், `மிளகு’ ராஜாவாக வீறுநடைப் போடுவதைப் போல, ராணியாக (Queen of Spices) வலம்வருகிறது மணமும் குணமும்மிக்க ஏலக்காய். பதினைந்தாம் நூற்றாண்டில் நறுமணமூட்டிகளின் விலை உச்சத்தில் இருந்தபோது மற்றவற்றைப் பின்னுக்குத்தள்ளி உச்ச நட்சத்திரமாக இருந்தது ஏலக்காய். வரைமுறையின்றி விளைந்து கிடக்கும் ஏலக்காயைத் தேடிப் பல்வேறு நாட்டு வணிகர்கள், நமது மேற்குத்தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியான ஏலமலையில் அலைந்து திரிந்த வரலாறு உண்டு.

ஏலக்காயின் மீது மிகுந்த மோகம்கொண்ட ரோமானியர், அவற்றை அதிகளவில் இறக்குமதி செய்தனர். நமது நாட்டில் ஏலக்காயைப் பயன்படுத்துபவர்களுக்கு நிகராக, ரோமானியரும் ஏலக்காயைப் பயன்படுத்தியிருக்கின்றனர். ராஜாவான மிளகை அள்ளிச்செல்ல வந்த ஐரோப்பியர், கூடவே ராணியான ஏலக்காயையும் அள்ளிச் சென்றுவிட்டார்களாம்.
பஞ்சாப் மாநிலத்தில் குழந்தை பிரசவித்த தாய்க்கு, அடுத்த சில மாதங்களில் கொஞ்சம் ஏலக்காயை நீர்விட்டுக் கொதிக்கவைத்து நீரை வடிகட்டிக் கொடுக்கிறார்கள். இது கருப்பையில் தேங்கிய அழுக்கை வெளியேற்று வதுடன், தாய்ப்பால் மூலம் குழந்தையின் குடல் பகுதிகளைக் கிருமிகள் தாக்காமல் பாதுகாக்கும். இது அவர்கள் பின்பற்றும் பாரம்பர்ய மருத்துவ ரகசியங்களில் ஒன்று.
ஏலக்காயின் வரலாறு இப்படியிருக்க, சிறிதளவு ஏலத்தைச் சிதைத்துப்போடுவதால், அதில் உள்ள நறுமண எண்ணெய்கள் உணவில் கலந்து நறுமணத்துடன் மருத்துவக் குணங்களையும் வெளிப்படுத்தும் என்பதால்தான் ஏலக்காயைச் சமையலில் பயன்படுத்தினர். சினியோல் (Cineol), லிமோனின் (Limonene), சபினின் (Sabinene), டெர்பினின் (Terpinene) என ஏறக்குறைய 25 வேதிப்பொருள்கள் ஏலக்காயில் உள்ளன.
வலி நிவாரணி மருந்துகளை நீண்ட நாள்கள் எடுத்துக்கொள்வதால் உண்டாகும் வயிற்றுப் புண்களை ஏலக்காயில் உள்ள சினியோல் என்ற வேதிப்பொருள் குறைக்கிறது. ஏலக் காயிலிருந்து பிரித்தெடுக்கப்படும் நறுமண எண்ணெய் மன அழுத்தத்தைக் குறைக்கும். ஏலக்காய், தோல் சீவிய சுக்கு, சீரகம், ஓமம், லவங்கம் போன்றவற்றை வறுத்துப் பொடித்துச் சாதத்தில் கலந்து சாப்பிடுவதால் செரிமானக் கோளாறுகள் சரியாகும். வாந்தி, மயக்கம், கை கால் எரிச்சல் இருந்தால் ஏலக்காயுடன் பனைவெல்லம் சேர்த்து நீர் விட்டுக் காய்ச்சிக் குடிப்பது பயன்தரும்.
நமது பாரம்பர்ய இனிப்புகளில் ஏலக்காய் இருப்பதைக் கவனித்திருக்கிறீர்களா? திருப்பதி லட்டு, பழனி பஞ்சாமிர்தம் போன்றவற்றை ஆசை தீர அள்ளி அள்ளிச்சாப்பிட்டாலும், பிரச்னை ஏற்படாமல் பாதுகாப்பது ஏலக்காயே. இனிப்புச் சுவையுள்ள பொருள்களைச் சாப்பிடும் போது கபம் தலைதூக்கவிடாமல் அமைதிப் படுத்தவே இனிப்புகளில் ஏலக்காய் சேர்க்கப் படுகிறது.
தலைபாரம், சைனஸ் தொந்தரவுகளை இதிலுள்ள வேதிப்பொருள்கள் கட்டுப்படுத்து வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இருமல், தொண்டைக்கட்டுக்கு ஏலக்காய் சிறந்த மருந்து. மிளகுடன் ஏலம் சேர்த்து லேசாக வறுத்துப் பொடியாக்கி ஐந்து சிட்டிகை அளவு வாயில் அடக்கிக்கொண்டால் வறட்டு இருமல் குணமாகும். ஆஸ்துமா நோயாளிகளின் சுவாசப்பாதையை விரிவடையச் செய்து, மூச்சுவிடுவதில் ஏற்படும் சிரமத்தையும் இது குறைக்கும்.
பற்களில் உள்ள பாக்டீரியாக்களை அழிக்கும் சக்தி ஏலக்காயின் உட்கூறுகளுக்கு உண்டு. பற்களைத் தூய்மைப்படுத்தவும் வாய்நாற்றம் போக்கவும் பண்டைய எகிப்தியர், சாப்பிட்டு முடித்தவுடன் ஏலக்காயை மென்று சாப்பிடுவார்கள். ஏலக்காயின் விதைகளை, புதினா இலைகளுடன் சேர்த்து மென்று சாப்பிட்டால் வாய்நாற்றத்தைத் தடுக்கலாம். இறந்த உடல்களைப் பதப்படுத்த (Mummification), எகிப்தியர் அதிகம் சேர்த்த நறுமணமூட்டி ஏலக்காயே.
சித்த மருத்துவத்தில் பயன்படும் `ஏலாதி சூரணம்’ வயிற்றுவலி முதல் சரும நோய் வரை குணப்படுத்தும். பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றுக்கு, ‘ஏலாதி’ என்று பெயரிடும் அளவுக்கு ஏலக்காய் உயர்வாகக் கருதப்பட்டது. மலம் வெளியேறாமல், வயிறு உப்புசத்துடன் வலி வரும்போது, அரை டீஸ்பூன் ஏலாதி சூரணத்தை வெதுவெதுப்பான நீரில் கலந்து காலையும் மாலையும் பருகினால் பிரச்னை தீரும்.
ரத்தக்குழாய்களில் உண்டாகும் ரத்தம் உறைதலைத் தடுக்கும் தன்மையும் ஏலக்காய்க்கு உண்டு. புகைபிடிப்பதால் பாதிக்கப் பட்ட ரத்தக்குழாய்களை சீர்செய்யும் குணம் ஏலக்காய்க்கு உண்டு. அதிக ரத்த அழுத்தத்தை ஏலக்காய் கட்டுப்படுத்துவதாக `ஜர்னல் ஆஃப் எத்னோபார்மகாலஜி' ஆய்விதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒழுங்கற்ற இதயத்துடிப்பை ஏலக்காய் முறைப்படுத்துவதாகவும் அந்த ஆய்வு முடிவில் சொல்லப்பட்டிருக்கிறது. அதிக அளவு கஃபைன் உட்கொள்வதால் ஏற்படும் பாதிப்புகளை ஏலக்காய் தடுக்கும். அமுக்கரா சூரணத்துடன் அரை டீஸ்பூன் ஏலக்காய்ப் பொடி சேர்த்துப் பாலுடன் கலந்து குடித்துவர, நிம்மதியான உறக்கம் வரும். விந்தணுக்களின் எண்ணிக்கையைப் பெருக்கவும் இது உதவும்.
ஏலக்காய், அதிமதுரம், வெட்டிவேர், சந்தன சிராய், நன்னாரி வேர், சீரகம் போன்றவற்றை நீர் சேர்த்து நன்றாகக் கொதிக்கவைத்து மண்பானையில் ஊற்றி அதன் நீரைக் குடிக்கலாம். இதனால் கோடைக்காலத்தில் உண்டாகும் சிறுநீர் எரிச்சல், நாவறட்சி, கண்ணெரிச்சல் போன்றவை எட்டிப் பார்க்காது. வாழைப்பழத்தை மசித்து, ஏலக்காய்த்தூள், பனங்கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டால் அதன் ருசிக்கு மயங்காதவர்கள் இருக்க முடியாது. அரிசி வேகவைக்கும் நீரில், சிறிது ஏலக்காய் தூவுவதால் உணவுக்கு நல்ல வாசனை கொடுக்கும்.
ஏலக்காயைப் பொறுத்தவரை தரமற்ற நறுமணம் குறைந்த ரகங்கள் கலப்படம் செய்யப்படுகின்றன. காபி நிறத்தில் வரும் ஏலக்காய், ஜாவா நாட்டு ஏலக்காய், நேபாளத்தின் பெரிய ஏலக்காய் போன்றவை உண்மையான ஏலக்காய்கள் அல்ல. பசுமையான தோல் போர்த்திய நம் சேர நாட்டு ஏலக்காய்தான் தரத்தில் உயர்ந்தது.
பப்புட்டு - பரோட்டா!
துருவிய தேங்காயுடன் பச்சரிசி சேர்த்துத் தண்ணீர் மற்றும் பாலில் ஒரு மணி நேரம் ஊறவைக்க வேண்டும். இதனுடன் பொடித்த ஏலக்காய், நாட்டுச் சர்க்கரை சேர்த்து நன்றாகப் பிசைந்து, புட்டு செய்வதுபோல ஆவியில் வேகவைத்துச் சாப்பிட்டால், அற்புதமான சுவையுடன் இருக்கும். குடகு மலைவாசிகளின் ஏலக்காய் கலந்த இந்த ரெசிப்பிக்கு ‘பப்புட்டு’ என்று பெயர். புட்டு ரசிகர்கள் இனி ஏலக்காயின் இந்த நறுமணம் கமழும் உணவு ரகத்தை முயற்சி செய்யலாம்.
கோதுமை மாவுடன் சர்க்கரை (சீனி), பொடித்த ஏலக்காய் சேர்த்துச் செய்யப்படும் பரோட்டா போன்ற டிபன் வகை, கர்நாடகாவின் பழைமையான உணவு. இந்த ஏலக்காய் பரோட்டாவை `மண்டிகே' (Mandige) என்று அழைக்கின்றனர். மைதாவின் வரவையடுத்து இப்போது பல்வேறு வடிவங்களில் `மண்டிகே' தயாரிக்கப்படுகிறது.
ஏல வடகம்!

ஏலக்காயின் மேல் தோலை நீக்கிவிட்டு அதன் உள்ளே இருக்கும் ஏல அரிசி, லவங்கப்பட்டை, திப்பிலி, முந்திரி தலா 200 கிராம் எடுத்துக்கொள்ளுங்கள். இவற்றுடன் நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும் அதிமதுரம், பேரீச்சம்பழம், நாட்டுச்சர்க்கரை தலா 100 கிராம் சேர்த்து நன்றாக இடித்து, அதன் சூடு இறங்கும் முன்பே சிறிய நெல்லிக்காய் அளவு வடகங்களாகச் செய்து வைத்துக்கொள்ளுங்கள். இந்த வடகங்களை உணவுடன் கலந்து சாப்பிட்டுவந்தால் செரியாமை, வாந்தி, கழிச்சல் ஏற்படாது. குழந்தைகளுக்குப் பசியை அதிகரிக்க, வாரத்தில் இரண்டு நாள்கள், ஓர் ஏல வடகத்தைச் சாதத்தில் கலந்து கொடுக்கலாம்.