தசரா திருவிழா வடமாநிலங்களில் விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வரும் வேளையில் ‘மனைவிகளால் பாதிக்கப்பட்ட ஆண்கள்’ ராவணின் தங்கை சூர்ப்பணகையின் கொடும்பாவியை எரித்துக் கொண்டாடியுள்ளனர்.
Photo Credit: PTI
தசரா திருவிழா வடமாநிலங்களில் விமரிசையாக கொண்டாடப்படும். இந்த நாளில் ராவணின் கொடும்பாவிகள் எரிக்கப்படும். பல வருடங்களாக இந்தப்பாரம்பர்யம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மகாராஷ்ட்ரா மாநிலம் அவுரங்காபாத்தில் உள்ள கரோலி (Karoli) கிராமத்தில் அங்கு ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. மனைவிகளின் தொல்லையால் பாதிக்கப்பட்ட கணவன்மார்கள் ஒன்று சேர்ந்து பத்னி பிடிட் புருஷ் சங்கடான (Patni Pidit Purush Sanghatana) என்ற அமைப்பை உருவாக்கியுள்ளனர். அந்த அமைப்பைச் சேர்ந்த கணவன்மார்கள் தான் தசராவில் ராவணின் தங்கை சூர்ப்பணகையின் கொடும்பாவியை எரித்துக்கொண்டாடியுள்ளனர்.
இதுகுறித்து பேசியுள்ள அந்த அமைப்பினர், `` இந்தியாவில் அனைத்து சட்டங்களும் ஆண்களுக்கு எதிராகவும் பெண்களுக்கு சாதகமாகவும் உள்ளன. சின்னச் சின்ன விஷயங்களுக்கு எல்லாம் சட்டத்தைப் பயன்படுத்தி ஆண்களைத் துன்புறுத்துகின்றனர். நாட்டில் ஆண்களுக்கு நடக்கும் இதுபோன்ற சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவிக்கிறோம். இதன் வெளிப்பாடாகவே தசரா நிகழ்ச்சியின் மாலையில் சூர்ப்பணகையின் கொடும்பாவியை எரித்து எங்களது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளோம்” என்றனர்.