Published:Updated:

டிஃபண்டர்கள் ஸ்மார்ட்... மிகானி, விஷால் உடும்புப் பிடியில் வீழ்ந்த பாட்னா பைரேட்ஸ்..!

வழக்கமாக ரெய்டர்கள் மட்டுமே மேட்ச் வின்னர்களாக விளங்கும் ப்ரோ கபடித் தொடரில், இப்போது டிஃபண்டர்களின் ஆதிக்கம் தலைதூக்கியுள்ளது.

டிஃபண்டர்கள் ஸ்மார்ட்... மிகானி, விஷால் உடும்புப் பிடியில் வீழ்ந்த பாட்னா பைரேட்ஸ்..!
டிஃபண்டர்கள் ஸ்மார்ட்... மிகானி, விஷால் உடும்புப் பிடியில் வீழ்ந்த பாட்னா பைரேட்ஸ்..!

படியில் எப்போதும் ரெய்டர்கள்தாம் ஹீரோவாகத் தெரிவார்கள். கடைசி நிமிடங்கள், நொடிகள் என எந்த நேரத்திலும் போனஸ் பாய்ன்ட்டோடு இரண்டு மூன்று புள்ளிகள் எடுத்து ஆட்டத்தில் திருப்புமுனை ஏற்படுத்துவார்கள். அந்த வகையான வாய்ப்புகளும் அவர்களுக்கு அதிகமாகவே கிடைக்கும். ஆனால், டிஃபண்டிங் யூனிட் அப்படி இல்லை. ரெய்டர்களைப் போல் திடீரென ஆட்டத்தை மாற்றும் வாய்ப்பும் குறைவு. ஆட்டத்தை மாற்றுவதும் சிரமம். அதற்கு அவர்களது டேக்கில் ஐடியாலஜி ஒத்துவர வேண்டும். சக டிஃபண்டரின் டேக்கில் சப்போட் இருக்க வேண்டும். அதேபோல, அவர்கள் இருவரும் கண்களில் பேசிக்கொள்ளும் ஸ்மார்ட்னஸ் இருக்க வேண்டும். வழக்கமாக ரெய்டர்கள் மட்டுமே மேட்ச் வின்னர்களாக விளங்கும் ப்ரோ கபடித் தொடரில், இப்போது டிஃபண்டர்களின் ஆதிக்கம் தலைதூக்கியுள்ளது.

நேற்றைய போட்டியில் பாட்னா பைரேட்ஸ், தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதின. பர்தீப் நார்வால் கலக்குவாரா, ராகுல் சவுத்ரி தெறிக்க விடுவாரா என ரசிகர்கள் எதிர்பார்க்க, தெலுங்கு டைட்டன்ஸ் கார்னர் டிபண்டர்கள் மிகானியும் கேப்டன் விஷால் பரத்வாஜ் இருவரும் எதிர்பாராத திருப்பத்தை ஏற்படுத்தினர். பெங்கால் வாரியர்ஸ்க்கு எதிரான கடந்த போட்டியில் ராகுல் சவுத்ரி பாய்ன்ட் எடுக்க திணறியதைப் போல நேற்றும் தடுமாறினார். இதனால் ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்து பாட்னா பைரேட்ஸ் சற்று முன்னிலை வகித்தது.

5வது நிமிடத்தில் விஷால் பரத்வாஜிடம் டேக்கில் ஆன பர்தீப் நர்வால், 11-வது நிமிடத்தில் இரு புள்ளிகளை எடுத்து தெலுங்கு டைட்டன்ஸை ஆல் அவுட் செய்தார். இதுதான் இந்த மேட்ச்சில் ஒரே ரெய்டில் பர்தீப் எடுத்த அதிகபட்ச ரெய்டு புள்ளி. 16-வது நிமிடத்தில் மிகானியிடமும் ஒருமுறை பர்தீப் நர்வால் டேக்கில் ஆனார். மறுபுறம் ராகுல் சவுத்ரி தடுமாறியதால் சக ரெய்டர் நிலேஷ் சாலுங்கி பொறுப்பாக ஆடினார். ஆட்டத்தின் 2 வது நிமிடம் மற்றும் 17-வது நிமிடத்தில், அவர் இரு பாய்ன்ட் எடுத்து வந்ததால் புள்ளி இடைவெளியில் பின்வாங்கவில்லை. முதல் பாதியில் 17-14 என பாட்னா பைரேட்ஸ் என முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதியில் 3 சூப்பர் டேக்கில்கள், பல்க் லைனில் வைத்தே பதறாத ஸ்ட்ராங் டிபண்டிங் எனத் தெலுங்கு டைட்டன்ஸ் மிரட்டியது. விஷால் பரத்வாஜ் - மிகானி கூட்டணி மிரள வைத்தது. இரண்டாவது பாதியின் 3 வது நிமிடத்தில் மிகானி பர்தீப்பை ஆங்கில் பிடியில் மடக்கியதும் அடுத்த இரு ரெய்டிலேயே பாட்னா பைரேட்ஸ் ஆல் அவுட். இதுதான் ஸ்மார்ட்னஸ். எதிராளியின் பலத்தை உடைத்தால் அவர்கள் தானாகச் சரணடைந்து விடுவார்கள். இதுவே எதிராளி நம்மை கவிழ்க்க முற்பட்டால் விடாப்பிடியாக முட்டி மோத வேண்டும். இதைத்தான் மிகானியும் விஷாலும் வெளிக்காட்டினர்.

ஆட்டத்தின் 33-வது நிமிடம் பாட்னா பைரேட்ஸ் இரண்டு புள்ளிகள் முன்னிலையில் இருந்தது. ரெய்டு சென்ற பர்தீப் அவரின் எனர்ஜிக்கு ஆல் அவுட் செய்திருக்க முடியும். ஆனால், விஷால் பரத்வாஜ் பின்னோக்கி ஏறுவதைப் போல் பாய்ந்து மடக்கி, கால் பிடியில் சூப்பர் டேக்கில் ஆனதால் தெலுங்கு டைட்டன்ஸ் சமநிலைக்கு வந்தது. இந்தச் சமநிலையை உடைத்து பாய்ன்ட் எடுத்து லீடிங் வைப்பார் என நினைத்த ராகுல் சவுத்ரியும் டூ ஆர் டை ரெய்டில் அவுட்.

என்ன நடக்கிறது, யார் ஹீரோ, ரெய்டு மெஷின்கள் செயலிழந்து விட்டனரா என நினைத்திருந்த அனைவருக்கும் மீண்டும் வில்லன்கள் எழுந்தார்கள். ஆட்டத்தின் கடைசி 2 நிமிடம். இரு டிபண்டர்கள் உள்ளே.ரெய்டு செல்வது பர்தீப். டுப்கி கிங் எல்லை கோட்டைத் தொட்டுத் தாண்டுவார் என நினைத்திருப்போம். நடக்கவில்லை. மீண்டும் ஒரு ஆங்கிள் பிடி. இரான் அணியிடம் ஏன் இந்தியா ஆசிய விளையாட்டில் தோற்றது என மிகானியின் டேக்கிலில் தெரிந்திருக்கும். ஏறி வந்த பர்தீப்பை கண்களிலேயே பேசி மிகானியும் விஷாலும் உடும்புப் பிடியாக சூப்பர் டேக்கில் செய்தனர். இதுதான் கேம் சேஞ்சிங் மொமன்ட். அடுத்து ரெய்டு வந்த மஞ்சீத்தையும் டேக்கில் செய்து ஒரு புள்ளி பின்தங்கியிருந்த அணியை 35-31 என 4 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வைத்தது டைட்டன்ஸின் டிஃபன்ஸிவ் யூனிட்.