தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

மறுபடியும்...

மறுபடியும்...
பிரீமியம் ஸ்டோரி
News
மறுபடியும்...

நினைவோவியம்விக்னா-சுரேஷ் - ஓவியம் : ஷண்முகவேல்

லாக்ஷேத்ராவில் நடைபெற்ற பாரம்பர்யப் பொருள்களின் காட்சியில் நானும் சந்தோஷின் மனைவி ஷர்மியும் ஆஜரானோம். கலம்காரி, போச்சம்பள்ளி, பனாரஸ், மங்கலகிரி, பெங்கால் காட்டன்...இப்படி, இந்தியாவின் அனைத்து மாநிலப் புடவைகளையும் ஒரே இடத்தில் பார்க்கையில், `இது ஒரு நாடு மட்டுமல்ல, பல பாரம்பர்யங்களின் கலைகளின் சங்கமம்' எனப் பெருமிதமாக இருந்தது. 

மறுபடியும்...

‘சிட்டுக்குருவி’ என வித்தியாசமான பெயர்கொண்ட ஒரு கடை ஷர்மியை ஈர்த்ததால், அங்கே போனோம். கலம்காரி மற்றும் போச்சம்பள்ளி துணியாலான விதம்விதமான கைப்பைகள் இருந்தன. மற்றொரு பக்கத்தில் கைவேலைப்பாடுமிக்க எம்ப்ராய்டரி புடவைகள், சுடிதார்கள், டெரகோட்டா நகைகள், பனை ஓலைப் பொருள்கள்  என  கைகளால் பல கலைகளுக்கு உயிரூட்டப்பட்டிருந்தது. நியாயமான விலையில் இருந்ததால், விற்பனை அமோகமாக நடந்துகொண்டிருந்தது.

ஷர்மி, வேண்டியதை வாங்கிக்கொண்டு பணம் செலுத்துகையில்தான் அவரைக் கவனித்தேன். கல்லாவில் இருந்தவர் `மறுபடியும்’ துளசி அல்லவா? அதே கனிவான, தெளிவான முகம். காலம் அவர் மீது கருணையோடு கடந்திருந்தது. நரையை மறைக்க முயலாததால், வயதுக்கான அழகோடு கம்பீரமும் சேர்ந்திருந்தது.

அங்கு இருந்த பெண்கள் ஒவ்வொருவர் முகத்திலும் பெருமிதம். மிகுந்த கனிவோடும் சுறுசுறுப்போடும் இருந்த அந்த அங்காடி, `விரைவில் பெரிய அளவில் பேசப்படும்' என நினைத்துக்கொண்டே வீட்டுக்கு வந்தேன்.

சந்தோஷ் அழைத்தான். ``என்ன... அடுத்து பார்க்கப்போறது துளசியைத்தானே?” என்று அவன் கேட்டதும் துணுக்குற்றேன். `அடடா, அவர் போன் நம்பர் வாங்க மறந்து விட்டதே!' சந்தோஷிடம் `மன்னித்துவிடு' என்று சொல்லி முடிப்பதற்குள், ஷர்மி வாங்கிவந்திருப்பதாகச் சொன்னான். `இருவரும் ஜாடிக்கேற்ற மூடிதான்' என்று 900-மாவது முறையாக நினைத்துக் கொண்டேன்.

பக்கத்தில்தான் வீடு என்பதால், `நீலாங்கரை கடற்கரையில் சந்திக்கலாம்' என்று துளசியிடம் பேசும்போது சொன்னேன். கடற்கரை ஆரம்பிக்கும் சாலையின் ஓரம் நானும் சந்தோஷும் காத்திருக்கும்போது சற்றுத் தொலைவில் துளசி ஒரு `ஹோண்டா ஆக்டிவா'வில் வருவதைப் பார்த்தோம். வண்டி ஓட்டிக்கொண்டு வந்தது, 30 வயது மதிக்கத்தக்க ஒரு பெண். அந்தப் பெண்ணை சந்தோஷ்தான் அடையாளம் கண்டுகொண்டான். ``ஞாபகம் இருக்கா விக்னா, அந்தப் பொண்ணு தான் ரஜினியா இருக்கணும். துளசி தத்தெடுத்துக்கிட்டாங்களே, அந்தப் பொண்ணு” என்றான்.

வண்டியைவிட்டு இறங்கியவர், ``வணக்கம். இது ரஜினி, என் பொண்ணு” என்றார்

பாப் கட் பண்ணிய தலை, மாநிறம், கம்பீரமான தோற்றத்துடன் ரஜினி எங்களை நோக்கிப் புன்னகைத்தாள்.

``நடந்துகிட்டே பேசலாமே!” என்ற துளசி, மணலில் கால் புதைய நடக்க ஆரம்பித்தார். கூடவே நாங்களும்.

``ரஜினி இப்போ என்ன பண்றாங்க?” என்றேன் நான்.

துளசி, ரஜினியின் கைகளைப் பிடித்துக் கொண்டு நடந்தபடி எங்களைப் பார்த்துப் புன்னகைத்தார்.

``அவளை என்னால் முடிஞ்சளவு நல்லா படிக்கவெச்சேன். ஸ்டெல்லா மாரீஸ்ல ஃபைன் ஆர்ட்ஸ் முடிச்சா. கலா க்ஷேத்ராவுல இப்போ ஃபைன் ஆர்ட்ஸ் டிபார்ட்மென்ட்ல லெக்சரர். நிறைய பெயின்ட்டிங் எக்ஸிபிஷன், அது இதுனு நேரத்தோடு போட்டிப்போட்டுக்கிட்டுப் போயிட்டி ருக்கா. `இப்போதைக்கு கல்யாணம் எல்லாம் பண்ணிக்கத் தோணல'னு சொல்றா. நானும் அவளை எதுக்கும் கம்ப்பல் பண்றதில்லை. ” 

மறுபடியும்...

ரஜினி எங்களைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டு சன்னமாகத் தலையாட்டினாள்.

``எனக்கும் இவதான் ஆர்ட் க்ளாஸ் எடுக்குறா” என்று சிரித்தார்.

``என்ன திடீர்னு வியாபாரத்துல இறங்கிட்டீங்க?” என்றேன்.

``ரஜினியோட அம்மா ஜெயிலுக்குப் போனது உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும். அவங்களைப் பார்க்க அடிக்கடி போகும்போது, சிறைச்சாலையில இருந்த மற்ற பெண்களையும் கவனிக்க ஆரம்பிச்சேன். விடுதலையாகிவரும் பெண்களை வெச்சு தொடங்கப்பட்டதுதான் இந்தக் கைவினைப் பொருள்களுக்கான அங்காடி.”

``எப்படி இந்த எண்ணம் வந்தது?” என்று சந்தோஷ் கேட்க...

``சிறையிலிருந்து வெளியே வரும் பெண்களை, இந்தச் சமூகம் திரும்ப ஏத்துக்கிறதேயில்லை. பல குடும்பங்கள்ல சிறையில் இருக்கிறவரை வெளியூர்ல இருப்பதாக அல்லது இறந்துவிட்டதாகவே குழந்தைகளிடம் சொல்லிவைப்பாங்க. வளர்ந்த பிள்ளைகள், சிறையிலிருந்து வர்றவரை ஏத்துக்கத் தயங்குறாங்க. சமூகமும் குடும்பத்தாரும் ஒதுக்கிவைக்கும் நிலையில, அவங்க திரும்பவும் சிறைக்கே போய்விட வேண்டியிருக்கு அல்லது வாழ்வை முடிச்சுக் கிற நிலைக்குத் தள்ளப்படுறாங்க. அதனால, தன்னம்பிக்கையோடு திரும்பவும் வாழ்வை ஏதிர்நோக்கும், சொந்த காலில் நிற்கும் விதத்தில் ஏதாவது ஒரு தொழிலை அமைச்சுத் தரலாம்னு நினைச்சேன். இங்கிருந்து போய் பலர் தனியே கடை ஆரம்பிச்சிருக்காங்க. ஆன்லைன் வர்த்தகமும் செய்றாங்க. அது எனக்கு மிகப்பெரிய மனநிறைவைத் தருது.”

``அமர்க்களம் துளசி மேடம். பெண்கள் விடுதலையான உடனே உங்ககிட்ட வந்துடுவாங்களா?” எனக் கேட்டதும், மென்மையாகச் சிரித்தார். ``எங்ககிட்ட வரும் பெண்களுக்கு முதல்ல கவுன்சலிங் கொடுக்கிறோம். மனதளவுல துவண்டு போயிருக்கும் அவங்களுக்கு, தன்னம்பிகை தர்றதுதான் முதல் வேலை. அதுக்கு அப்புறம் அவங்க விருப்பத்தைக் கண்டறிவோம். ஒரு பெண் மேற்படிப்பு படிக்க விரும்புறதா சொன்னார். பெரும்பாலானோர் சுயதொழில் செய்து வருவாய் ஈட்டி, இழந்த கெளரவத்தை மீட்பதையே விரும்புறாங்க.”

நாங்கள் கிளம்பவேண்டிய நேரம் வந்து விட்டதை உணர்ந்து, மனதில் தேங்கியிருந்த அந்தக் கேள்வியையும் கேட்டுவிட்டேன், ``உங்க கணவர் இப்ப எங்கே இருக்கார்?''

``கவிதாவுக்கு அப்புறம் வேறு ஒரு பெண்ணோடு ரிலேஷன்ஷிப்ல இருந்தார். அப்புறம் அதுவும் சரிவராம, தனியாத்தான் இருக்கார். அடிப்படையில் நிறைவடையாத மனசு அவருடையது. ஒரு கலைஞனா அதுதான் அவரை அடுத்தடுத்த படைப்புகளை நோக்கி நகரவெச்சுது. பர்சனல் வாழ்க்கையில் அதுவே அவருக்கு எதிரியாவும் அமைஞ்சுடுச்சு.”

`கெளரிஷங்கர் பற்றிக் கேட்கலாமா வேண்டாமா?' எனத் தோன்றியது. `சரி, வாழ்க்கையில் எல்லாவற்றுக்கும் விடை தெரிஞ்சு என்ன ஆகப்போகிறது?' என நினைத்தேன்.

துளசி முகம் லேசாக வாடுவதைப் பார்த்து, சந்தோஷ் பேச்சை மாற்றினான்.

``அதென்ன மேடம், உங்க கடைக்குப் பேரு `சிட்டுக்குருவி'?”

``ஓ, அதுவா... பாரதியார் பாடல் வரிதான். `விட்டு விடுதலை ஆகி நிற்பாய் இந்தச் சிட்டுக்குருவியைப் போலே...' '' - மெள்ளப் பாடினார்.

`நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வை யும், நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும், திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால் செம்மை மாதர் திறம்புவதில்லையாம்' என்று வழியில் முணுமுணுத்துக்கொண்டோம்.

மறுபடியும்... வெளியான ஆண்டு: 1993
நடிப்பு: நிழல்கள் ரவி, ரேவதி, ரோகிணி
இயக்கம்: பாலு மகேந்திரா

தெளிவோடு எடுத்த முடிவு! 

டிகை ரோகிணியிடம் `மறுபடியும்...' நினைவோவியம் குறித்துப் பேசினோம். அவரே கவிதாவாக மாறி நினைவலை களில் மூழ்கிப் பேசினார். 

மறுபடியும்...

``வாழ்க்கை எப்படிப் போகுது மேடம்?''

``கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கு மேல் ஆகுது. கவிதா தெளிவோடு எடுத்த முடிவு அது. அதன்பிறகு ஒரு மனநல மருத்துவரைப் பார்த்து மனதளவிலும் உடலளவிலும் தேற்றிக்கொண்டேன். முரளியைவிட்டுப் பிரிந்ததற்காக நான் கொஞ்சம்கூட வருத்தப்படலை. எங்க அம்மா சொன்ன மாதிரி நான் அதிசயமா எடுத்த ஒரு நல்ல முடிவாகத்தான் அதைப் பார்க்கிறேன்.''

``முரளி கிருஷ்ணா, துளசி... இவங்களைப் பார்த்தீங்களா?''

``யாரையும் நான் சமீபத்தில் பார்க்கவில்லை. அம்மாவின் அன்பிலும் அரவணைப்பிலும் வாழ்க்கை ரொம்பவே நிதானமாகச் செல்கிறது. அதன் பிறகும் பல படங்களில் நடித்து என் கரியரோட உச்சத்தில் இருந்தேன். எனக்காக துளசியிடமிருந்து சட்டபூர்வமா பிரிஞ்சு வந்த முரளியை, ‘நாளைக்கு வேறொரு பெண்ணுக்காக என்னையும் பிரிய மாட்டீங்கனு என்ன நிச்சயம்?’னு கேட்டு நானும் பிரிந்துவிட்டேன். பிறகு, முரளி போய் துளசியைப் சந்தித்தார். அவர்களும் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. மீண்டும் என்னை வந்து சந்தித்தார். ஆனால், ‘உன்னை மாதிரியான ஆள்கள்கூட வாழ முடியாது’னு நான் என் முடிவில் தீர்க்கமா இருந்துவிட்டேன். அதன் பிறகு துளசியை நான் பார்க்கவில்லை. பிறகு, ஒரு நல்ல மனுஷனைப் பார்த்துக் கல்யாணம் செய்துகொண்டு வாழ்ந்துவருகிறேன். சமுதாயப் பணிகளைச் செய்துவருகிறேன்.''

``நீங்க ஒரு உச்ச நட்சத்திரம், மூத்த கலைஞர். இப்ப நடந்துட்டிருக்கிற ஸ்டிரைக்கை எப்படிப் பார்க்கிறீங்க?''

``தயாரிப்பாளர்களின் இந்த வேலைநிறுத்தத்தை ஒரு நடிகை என்ற முறையில் நான் ஆதரிக்கிறேன். சினிமா  வியாபாரம் என்பது, பல நபர்கள் சம்பந்தப்பட்ட சங்கிலி. இந்தச் சங்கிலிப் பிணைப்பில் உள்ள எல்லாருக்கும் நன்மைபயக்கிற வகையில் ஒரு தீர்வு கிடைக்கும் என நம்புகிறேன்.''

- அலாவுதீன் ஹுசைன்