Published:Updated:

``கவிதாவுக்கும் ரெஹானாவுக்கும் என்ன சம்பந்தம்?’’ சபரிமலை சர்ச்சைக்கு மோஜோ டிவியின் பதில்

தெலங்கானவைச் சேர்ந்த செய்தி நிருபர் கவிதா ஜக்கலா, கேரளாவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ரெஹானா பாத்திமா மற்றும் மேரி ஸ்வீட்டி என்ற கிறிஸ்துவப் பெண்மணி ஆகியோர் சபரிமலை கோயிலுக்குள் செல்ல முயன்றனர்.

``கவிதாவுக்கும் ரெஹானாவுக்கும் என்ன சம்பந்தம்?’’ சபரிமலை சர்ச்சைக்கு மோஜோ டிவியின் பதில்
``கவிதாவுக்கும் ரெஹானாவுக்கும் என்ன சம்பந்தம்?’’ சபரிமலை சர்ச்சைக்கு மோஜோ டிவியின் பதில்

``நான் ஒரு பத்திரிகையாளர். என் கடமையைச் செய்கிறேன். நான் இந்து மதத்தைச் சேர்ந்தவள். உச்ச நீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்துவது பற்றிச் செய்தி சேகரிக்க வந்தேன். ஆனால், நான் கைது செய்யப்பட்டு வலுக்கட்டாயமாக விமான நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டேன். பல்வேறு அழுத்தங்கள் காரணமாக, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு இங்கே நடைமுறைப்படுத்தப்படவில்லை. இந்தச் செய்தியைச் சேகரிக்க எனக்கு எல்லா உரிமைகளும் உண்டு. என்னைப் பாதியில் நிறுத்தியது கண்டனத்துக்குரியது. ஒரு பத்திரிகையாளரை கடமையைச் செய்யவிடாமல் தடுப்பது அரசாங்கத்தின் பலவீனமே தவிர, வேறு ஒன்றுமில்லை. மற்றொரு முறை வாய்ப்புக் கிடைத்தால், நான் சபரிமலைக்குத் திரும்ப வருவேன். என் கடமையைச் செய்வேன்!”

 - தெலுங்குச் செய்தி நிறுவனமான மோஜோ டிவியின் செய்தி நிருபர் கவிதா ஜக்கலா. இவர், நேற்று சபரிமலை கோயிலுக்கு 100 மீட்டர் தொலைவில், போராட்டங்கள் காரணமாகத் திருப்பி அனுப்பப்பட்டார். அதன்பின்னர், இவர் அளித்த அறிக்கைதான் மேலே குறிப்பிடப்பட்டவை.

கடந்த சில நாள்களாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்திவருகிறது, `எல்லா வயதுப் பெண்களையும் சபரிமலை கோயிலுக்குள் அனுமதிக்க வேண்டும்' என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பு. தெலங்கானவைச் சேர்ந்த செய்தி நிருபர் கவிதா ஜக்கலா, கேரளாவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ரெஹானா பாத்திமா, மேரி ஸ்வீட்டி என்ற கிறிஸ்துவப் பெண்மணி ஆகியோர் வியாழக்கிழமை கோயிலுக்குள் செல்ல முயன்றனர். ஆண் பக்தர்களும் சபரிமலை கோயில் நிர்வாகமும் கடும் எதிர்ப்பு தெரிவிக்க, அவர்கள் மூவருமே திருப்பி அனுப்பப்பட்டனர்.

இதுகுறித்து, மொஜோ தொலைக்காட்சி செய்தி நிறுவனத்தின் சி.இ.ஒ ரேவதி போகடாடண்டாவிடம் (Revathi Pogadadanda)

பேசினேன். ``ஒரு நிருபர், கலவரம் அல்லது போர் நடக்கும் இடங்களில் செய்தி சேகரித்தால், அவரை ஹீரோவாகக் கொண்டாடுகிறோம். அதுவே, ஒரு பெண் நிருபர் சபரிமலைக்குச் செய்தி சேகரிக்கச் சென்றால், அதைத் தடுக்க பெரும் களேபரமே நடக்கிறது. அதுவும் உச்ச நீதிமன்றமே தீர்ப்பு அளித்த வழக்கில். விண்வெளிக்குச் செல்லும் பெண்கூட சுதந்திரமாகச் செல்லமுடிகிறது. ஆனால், தன் பணியைச் செய்யும் ஒரு பெண் நிருபர், கோயிலுக்குச் செய்வதற்கு எவ்வளவு தடங்கல்கள்? முன்பெல்லாம் துப்பாக்கிச் சூடு நடக்கும் இடங்களுக்குச் சென்று, செய்தி சேகரிக்கத்தான் துணிச்சல் வேண்டும். இப்போது ஒரு கோயிலுக்குச் செல்லவே அதீதத் துணிச்சல் வேண்டியிருக்கிறது.

நேற்று எங்களின் அலுவலக வளாகத்தில், போராட்டக்காரர்கள் மிரட்டல் விடுத்தனர். பெண் நிருபரை அங்கு அனுப்பியதற்காக எழுத்துபூர்வமான மன்னிப்பு கேட்டு கோஷமிட்டனர். ஆனால், எங்களுக்குக் காவல்துறையினர் பாதுகாப்பு அளித்துள்ளனர். தற்போது, உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் கவிதா மிகவும் சோர்ந்துள்ளார். ஆனால், தன் நிலைப்பாட்டில் மிகவும் உறுதியாக இருக்கிறார். வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் சபரிமலைக்குச் செல்லவும் தயாராக இருக்கிறார்” என்றார் அழுத்தமான குரலில்.

ரெஹானா பாத்திமா மற்றும் கவிதா ஜக்கலா

கவிதாவுடன் கேரளாவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ரெஹானா பாத்திமா சென்றது பற்றிக் கேட்டதற்கு, “அவர் யார் என்றே எங்களுக்குத் தெரியாது. நான்கு பேர்கொண்ட எங்களின் செய்தி குழுவுக்குப் பாதுகாப்பு அளிக்கக் கோரி அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டேன். அதற்கு மறுநாள்தான் எங்களின் குழு அங்குச் சென்றது. அப்போது, ஏற்கனவே ஒருவர் அங்கு வந்திருந்ததைப் பார்த்து அவர்களுக்கு ஆச்சரியமாக இருந்ததாகக் கூறினார்கள். நாங்கள் செய்தி குழுவாக மட்டுமே எங்கள் பணியைச் செய்ய நினைத்தோம். மற்றபடி எங்களுக்கு எந்த நோக்கமும் இல்லை” என்கிறார் ரேவதி.