Published:Updated:

‘மிரட்டிய இம்ருல் காயஸ்; அசத்திய சுழல்பந்துவீச்சாளர்கள்’- வங்கதேசத்திடம் பணிந்தது ஜிம்பாப்வே

‘மிரட்டிய இம்ருல் காயஸ்; அசத்திய சுழல்பந்துவீச்சாளர்கள்’- வங்கதேசத்திடம் பணிந்தது ஜிம்பாப்வே
‘மிரட்டிய இம்ருல் காயஸ்; அசத்திய சுழல்பந்துவீச்சாளர்கள்’- வங்கதேசத்திடம் பணிந்தது ஜிம்பாப்வே

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில், இம்ருல் காயஸின் அதிரடி சதத்தால் வங்கதேசம் அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

Photo Credit: ICC

வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி, 3 ஒருநாள் போட்டிகள், 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒரு நாள் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வங்கதேசம் அணி, பேட்டிங்கைத் தேர்வுசெய்தது. அதன்படி, தொடக்க ஆட்டக்காரர்களாக லித்தன் தாஸ் - இம்ருல் காயேஸ் களமிறங்கினர். 5-வது ஓவரில் லித்தன் தாஸ் அவுட் ஆகி வெளியேறினார். முஷ்பிகுர் ரஹிம், முகமது மிதுன் ஆகியோர் இம்ருல் காயேஸுக்கு நன்கு ஒத்துழைப்பு அளித்தனர். ஒரு பக்கம் விக்கெட்டுகள் சரிந்தாலும் இம்ருல் தனி ஆளாகப் போராடினார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இம்ருல் சதத்தைப் பதிவுசெய்தார். இறுதிக்கட்டத்தில் அதிரடிகாட்டிய இம்ருல், 144 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆகி வெளியேறினார். 50 ஓவர் முடிவில், வங்கதேசம் அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 271 ரன்கள் எடுத்தது. ஜிம்பாப்வே சார்பில் கைல் ஜார்விஸ் 4 விக்கெட்டும், சதாரா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்துக் களமிறங்கிய ஜிம்பாப்வே அணிக்கு ஹாமில்டன் மசகட்சா - ஷூவோவ் இணை நல்ல தொடக்கத்தை ஏற்படுத்திக்கொடுத்தனர். ஆனால், பின்வரிசை வீரர்கள் சரியாக ஆடாததால், அந்த அணி 100 ரன்களை எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளைப் பறிகொடுத்தது. இருப்பினும் சீன் வில்லியம்ஸ் தனியாளாக போராடினார். முடிவில் அந்த அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்து 243 ரன்கள் மட்டுமே எடுத்து. இதன்மூலம் வங்கதேசம் 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. வங்கதேசம் அணி சார்பில் மெஹிடி ஹசன் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.  இம்ருல் காயஸ் ஆட்ட நாயகனாகத் தேர்வுசெய்யப்பட்டார்.