Published:Updated:

KDM முதல் பைரசி வாட்டர்மார்க் வரை... Qube நிறுவனம் என்னவெல்லாம் செய்கிறது? #SpotReport

`பொட்டி வந்துருச்சு' என்ற குரலை தியேட்டரின் வாசல் அருகே நின்றுகொண்டு கேட்ட கடைசி தலைமுறையில் நீங்களும் ஒருவராக இருக்கலாம்; இப்போதெல்லாம் எந்த தியேட்டரிலும் இதுபோன்ற குரல்கள் கேட்பதில்லை. காரணம், அப்போது ஃப்லிம் ரீல்களில் உறங்கிக்கொண்டிருந்த சூப்பர் ஸ்டாரின் சினிமாக்கள் இன்று டிஜிட்டல் மயமாகிவிட்டன.

KDM முதல் பைரசி வாட்டர்மார்க் வரை... Qube நிறுவனம் என்னவெல்லாம் செய்கிறது? #SpotReport
KDM முதல் பைரசி வாட்டர்மார்க் வரை... Qube நிறுவனம் என்னவெல்லாம் செய்கிறது? #SpotReport

மீபத்தில் வந்த சீமராஜா திரைப்படத்தின் அதிகாலை காட்சி; அம்பத்தூரில் இருக்கும் திரையரங்கில் 5 மணிக்குப் படம்; 4:30 மணிக்கெல்லாம் திரையரங்கை நெருங்கிவிட்டோம். அந்தச் சமயத்தில் எதேச்சையாக ட்விட்டரைத் திறந்தபோது, டைம்லைனில் வந்தது இப்படி ஒரு செய்தி.

``#Seemaraja Morning shows cancelled! KDM issue"

சிறிதுநேரத்தில் திரையரங்கமும் இதை உறுதிசெய்தது. பல இடங்களிலும் இந்த KDM பிரச்னையால் படம் காலை வெளியாகவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. KDM என்ற பதம் சமீபத்தில் அதிகம் பயன்படுத்தப்பட்டது அன்றைக்காகத்தான் இருக்கும். இன்றைக்கு டிஜிட்டல் ஃபிலிம் புரொஜெக்டரில் படம் அனைத்துத் திரையரங்கங்களுக்கும் இந்த KDM-தான் பாஸ்வேர்டு. இது வந்தால்தான் ஒரு படத்தை திரையிடவே முடியும். தொடக்கத்தில் படச்சுருளுக்காகக் காத்திருக்கும் திரையரங்கங்கள் இன்று KDM-ஐ எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன. இது எப்படி உருவாகிறது?

ஒரு படம் முழுமையாகத் தயாரிக்கப்பட்டு, எடிட் செய்யப்பட்டவுடன் அவை அப்படியே திரையரங்கத்திற்கு அனுப்பப்படுவதில்லை. இடையே முக்கியமாக இன்னொருவருக்குப் பங்கு இருக்கிறது. அவர் Digital Service Provider (DSP). ஒரு படம் திரையரங்கத்தில் திரையிடப்பட வேண்டுமானால் இந்த DSP-களின் உதவி அவசியம். படங்களைத் திரையரங்கங்களில் வெளியிடுவதற்கேற்ப அவற்றை டெக்னிக்கலாக மாற்றுவதும், எந்தெந்தத் திரையரங்குகளில் எந்தெந்தப் படம் ஓடவேண்டும் என்பதை அறிந்து அந்தந்தத் திரையரங்களுக்குப் படத்தை அனுப்புவதும்தான் DSP-களின் பணி. இதுதவிர தற்போது இன்னொரு முக்கியமான பணியும் சேர்ந்திருக்கிறது; அது பைரசி ஒழிப்பு. இன்று வெளியாகும் அனைத்துப் படங்களும் ஏதோ திரையரங்களில் படம்பிடிக்கப்பட்டு, பின்னர் எடிட் செய்யப்பட்டு பைரசி தளங்களில் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. அவற்றைக் கண்காணிப்பதற்கும் உதவி செய்துவருகின்றன இந்த DSP நிறுவனங்கள். இன்றைக்கு உலகளவில் திரையரங்கங்களுக்கான தொழில்நுட்பங்களை வழங்குவதிலும், DSP விஷயத்திலும் முன்னணியில் இருக்கும் ஒரு நிறுவனம் கியூப் (Qube). தமிழ்நாட்டில் பெரும்பாலான திரையரங்கங்களில், படத்தின் சென்சார் சர்டிபிகேட் வருவதற்கு முன்பு கியூப்பின் விளம்பரத்தைப் பார்க்கலாம்.  

இன்றைக்கு ஒரு படம் திரையரங்கத்திற்கு வருவதற்கு முன்பு அதில் டெக்னிக்கலாக என்னவெல்லாம் நடக்கிறது, எப்படி அனைத்து திரையரங்களுக்கும் படம் டிஜிட்டல் முறையில் விநியோகிக்கப்படுகிறது, பைரசி படங்களை எப்படிக் கண்டுபிடிக்கிறார்கள் என்பதையெல்லாம் விரிவாகத் தெரிந்துகொள்வதற்காக கியூப் நிறுவனத்துக்கு விசிட் அடித்தோம். 

ந்த நிறுவனம் தொடங்கப்பட்ட கதையே சுவாரஸ்யமானது. 1990-களில் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த நெடுந்தொடர் `பைபிள் கி கஹானியே'. அதன் இயக்குநர் ஜீஜோ. அப்போதெல்லாம் திரைப்படமானாலும் நெடுந்தொடர் ஆனாலும் அனைத்துமே ஃபிலிம்களில்தாம் படம்பிடிக்கப்பட்டன. அதற்குப் பிறகு எடிட் செய்யப்பட்ட போதும் அந்த ஃபிலிம்களை வைத்துத்தான் எடிட் செய்துகொண்டிருந்தனர். உதாரணமாகத் திரைப்படத்தில் இரண்டு காட்சிகளுக்கு இடையே இருக்கும் ஏதேனும் ஒரு பகுதியை நீக்கவேண்டுமேன்றால் அந்த ஃபிலிம்மின் பகுதியை வெட்டி, ஒட்டிவிடுவர். இப்போது அந்தக் காட்சி படத்தில் நீக்கப்பட்டிருக்கும். இப்படி லீனியர் எடிட்டிங் மட்டுமே நடந்துகொண்டிருந்த காலத்தில், நான்-லீனியர் (Non-linear) முறையில் எடிட் செய்வதற்கான தொழில்நுட்பம் எதுவும் இந்தியாவில் இல்லை. அப்போது தூர்தர்ஷன் நெடுந்தொடரை இயக்கிக்கொண்டிருந்த ஜீஜோ, ராஜஸ்தானில் படப்பிடிப்பில் இருந்தார். அப்போது தமிழகத்தில் இருந்த ஜெயேந்திரா என்னும் நண்பரைத் தொடர்புகொண்டு பேசுகிறார். 

``முழுப் படப்பிடிப்பும் நடந்து முடிந்தபின்பு எடிட் செய்யும் வசதிக்குப் பதிலாக, உடனே உடனே இங்கிருந்தே எடிட் செய்வதற்கு ஏதேனும் வழியிருக்கிறதா?" எனக் கேட்கிறார். ஜெயேந்திரா அவரின் மற்றொரு நண்பரான செந்திலிடம் இதைக் கூறுகிறார். அவர் ஏற்கெனவே சினிமாத் தொழில்நுட்பங்கள் குறித்துப் படித்துக்கொண்டிருப்பவர். அப்போது செந்தில் சொன்ன பதில் `Avid'. உடனே மூவரும் வெளிநாட்டிலிருந்து சாஃப்ட்வேரை வாங்குகிறார்கள். அதில் இருக்கும் குறிப்புகளை வைத்தே அதை இயக்கக் கற்றுக்கொள்கிறார்கள். இந்நிலையில், வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்கு வருகிறது Avid குழு. சாஃப்ட்வேர் வாங்கிய இவர்களுக்கு அதைப் பயன்படுத்துவதற்கான பயிற்சிகளை அளிப்பதற்காகத்தான் அது இந்தியாவுக்கு வந்தது. ஆனால், அதற்கு அப்போது அவசியமே இருக்கவில்லை. ஏனெனில், அதற்கு முன்பாகவே மூவரும் Avid-ஐ பயன்படுத்தக் கற்றுக்கொண்டதோடு, மூன்று எபிசோடுகளை Avid-ல் எடிட் செய்து தூர்தர்ஷனில் ஒளிபரப்பியே முடித்துவிட்டிருந்தனர். இவர்களின் ஆர்வத்தைப் பார்த்த Avid-கு சட்டென ஒரு ஐடியா தோன்றியது. ``இவர்களையே ஏன் Avid-ன் இந்தியப் பிரிவைப் பார்த்துக்கொள்ளச் சொல்லக் கூடாது?"

அந்த வாய்ப்பை ஏற்றுத்தான் செந்திலும், ஜெயேந்திரா பஞ்சாபிகேசனும் ரியல் இமேஜிங் டெக்னாலாஜிஸ் என்னும் நிறுவனத்தைத் தொடங்குகின்றனர். இன்று திரையரங்கங்களில் பார்க்கும் கியூப் நிறுவனத்துக்கு இந்தச் சம்பவமும், நிறுவனமும்தான் விதை. அதற்குப் பின் Avid மென்பொருளை இந்திய சினிமாவில் பயன்படுத்துவதற்கான முயற்சிகளைத் தொடங்கினர். முதன்முதலில் Avid-ஐ முழுமையாக ஏற்றுக்கொண்டவர் கமல்ஹாசன். ஹாலிவுட்டிற்கு வெளியே முதன்முதலில் Avid-ல் எடிட் செய்யப்பட்ட படம் மகாநதி. இதையடுத்து தொடர்ச்சியாக அனைத்து எடிட்டர்களிடமும் Avid-ஐ கொண்டுசெல்கிறது கியூப். அதுவரைக்கும் ஃபிலிம்மில் எடிட் செய்துகொண்டிருந்த தமிழ்சினிமா கியூபின் முயற்சிக்குப் பிறகு முழுமையாக சாஃப்ட்வேர் எடிட்டிங்கிற்கு மாறியது. இதேபோல DTS சவுண்டு தொழில்நுட்பத்தைத் தமிழகத் திரையரங்குகளில் ஒலிக்கச்செய்ததிலும் இந்நிறுவனத்துக்குப் பங்குண்டு. 

``DTS வருவதற்கு முன்புவரை திரையரங்கங்களில் மோனோ ஸ்டீரியோ சவுண்ட்தான் இருந்தது. இந்த சவுண்ட்டானது திரைப்படத்தின் ஃபிலிம்மோடு இணைந்தது. அதாவது, ஒரு படத்தின் ஃபிலிம்மின் மேற்புறம் ஒளிப்படங்களும், கீழே அதற்கான ஒலிக்குறிப்புகளும் இருக்கும். இதில் இருக்கும் முக்கியச் சிக்கல் என்னவென்றால் ஒரு படம் 100 நாள்களைக் கடந்தும் ஓடுகிறது என்றால், அதன் ஃபிலிம்மில் நிறைய கீறல்கள் விழுந்திருக்கும்; முன்பை விடத் தரம் குறைந்திருக்கும். எனவே 100 நாள்கள் கழித்து தியேட்டருக்குப் போனால் படத்தின் சவுண்டே தெளிவாக இருக்காது. ஆனால், DTS அப்படியல்ல; இது டிஜிட்டல் சவுண்ட் என்பதால் இந்தத் தேய்ந்துபோகும் பிரச்னையெல்லாம் இல்லை. மேலும், இதில் சவுண்டு ஃபிலிம்மோடு சேர்ந்து இல்லாமல், தனி CD-யாக வரும். அதிலிருந்து சவுண்டானது ஃபிலிம்மோடு இணைந்து திரையில் ஒளிபரப்பாகும். களையிழந்த தியேட்டர்களுக்குப் புதுப்பொலிவூட்டியதில் இந்த DTS தொழில்நுட்பத்துக்கு முக்கியப் பங்குண்டு. DTS சவுண்டு மெதுவாகத் திரையரங்கங்களை ஆக்கிரமிக்கத் தொடங்கியதும் மீண்டும் திரையரங்கங்களுக்கு மக்கள் அதிகளவில் வந்ததாகச் சொல்வார்கள். Avid எடிட்டிங் போலவே, DTS சவுண்டு தொழில்நுட்பத்தையும் தமிழகத்தில் பரவலாகக் கொண்டுசென்றோம். இதற்காக எப்படிப் பிரத்தியேகமாக சவுண்டு மிக்ஸிங் செய்யவேண்டும் என்பதையும் பலருக்கும் கற்றுக்கொடுத்தோம். DTS சவுண்டு தொழில்நுட்பத்தை முதல்முதலில் முழுமையாகப் பயன்படுத்திய படம் ஆபாவாணனின் 'கறுப்பு ரோஜா'. அதேபோல கமலின் 'மும்பை எக்ஸ்பிரஸ்' மற்றும் ரஜினியின் 'சந்திரமுகி' படங்கள்தான் முதன்முதலில் டிஜிட்டல் ஃபிலிம் புரொஜக்ஷனில் வெளியான படம்" என்கிறார் கியூப்பின் நிறுவனர்களுள் ஒருவரான ஜெயேந்திரா பஞ்சாபிகேசன். 

கியூப்பின் மற்றுமொரு முக்கியமான பங்களிப்பு இந்த டிஜிட்டல் ஃபிலிம் புரொஜெக்ஷன். 2004-ல் இருந்து தொடங்கிய இந்தப் பயணம் இன்று 42 நாடுகளுக்கு விரிந்து நிற்கிறது. தற்போது இந்தியாவில் இருக்கும் திரைகளில் சுமார் 40 சதவிகிதம் கியூப் வசம்தான். கியூப் போலவே உலகெங்கும் நிறைய DSP-க்கள் இருக்கிறார்கள். இவர்கள் அனைவருக்கும் வேதமாக இருப்பது ஹாலிவுட்டில் வகுக்கப்பட்ட DCI விதிமுறைகள்தாம். இன்று திரையரங்கங்களுக்கு விநியோகம் செய்யப்படும் படங்கள் எந்த ஃபார்மட்டில் இருக்கவேண்டும், எந்தளவுக்குப் பாதுகாப்பான அம்சங்களைக் கொண்டிருக்க வேண்டும், எப்படி விநியோகம் செய்யவேண்டும் உட்பட அனைத்து அம்சங்களுக்கும் விதிமுறைகள் உண்டு. அதன்படிதான் DSP-க்கள் செயல்படவேண்டும். திரைப்படங்களின் தரம், பாதுகாப்பு ஆகிய இரண்டுக்கும் சமஅளவுக்கு முக்கியத்துவம் இதில் இருக்கும். தற்போது சென்னை கியூப் அலுவலகத்திலிருந்து `மாஸ்டரிங்' (Mastering) செய்து அனுப்பப்படும் அனைத்துப் படங்களும் இந்த விதிமுறைகளின் படியே அனுப்பப்படுகின்றன. 

இங்கே திரைப்படங்களுக்கான மாஸ்டரிங் மட்டுமல்ல; திரையரங்கங்களில் ஒளிபரப்பப்படும் டீசர், ட்ரெய்லர், சென்சார் போர்டிற்கு செல்லும் படங்கள், உலகத் திரைப்பட விழாக்களில் திரையிடப்படும் படங்கள் போன்ற அத்தனைக்கும் மாஸ்டரிங் பணிகள் நடக்கின்றன. ஒரு திரைப்படம் கியூப்பிறகு அனுப்பப்படுவதிலிருந்து, அங்கிருந்து திரையங்கத்துக்கு அனுப்பப்படும் வரை இடையில் நடக்கும் டெக்னிக்கல் விஷயங்களுக்குப் பெயர்தான் மாஸ்டரிங். இந்த மாஸ்டரிங் பணி எப்படி நடக்கிறது என்பதை A டு Z வரை விளக்குவதற்காக கியூப்பின் துணைத் தலைவர் பிரபு நம்மோடு இணைந்தார். 

``இந்த அலுவலகத்தில் இமெயில் பார்ப்பதற்குத் தவிர வேறு எதற்கும் இன்டர்நெட்டே கிடையாது. உள்ளே பணிபுரிபவர்கள் யாருக்கும் ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்தவும் அனுமதி கிடையாது; எல்லாருக்குமே பேஸிக் மாடல் மொபைல்கள் மட்டும்தான். இந்தப் பிரிவுக்குள் அனுமதிக்கப்பட்ட நபர்களைத் தவிர வேறு யாருக்கும் உள்ளே அனுமதியும் கிடையாது. முழு அலுவலகமும் சி.சி.டிவியில் கண்காணிக்கப்பட்டுக் கொண்டேதான் இருக்கும். இந்தப் பதிவுகளை 60 நாள்களுக்கு அழிக்காமல் பாதுகாப்போம். இந்தப் பிரிவுக்குள் யார் செல்கிறார்கள்/வருகிறார்கள் என்ற விவரமும் பாதுகாக்கப்படும்" என அலுவலகத்தின் பாதுகாப்பு அம்சங்களை விலக்கியபடியே மாஸ்டரிங் பிரிவுக்குள் நம்மை அழைத்துச்செல்கிறார் பிரபு. 

முதலில் இருப்பது பதிவேடுகள் பராமரிக்கும் பிரிவு. எந்தப் படம், எந்த ட்ரெய்லர் வந்தாலும் இங்கேதான் முதலில் கொண்டுவந்து கொடுக்கப்படும். படங்கள் ஹார்ட்டிஸ்க்கில் பதிவுசெய்யப்பட்டு இங்கே கொடுக்கப்படும். எந்தப் படம், எந்தத் தேதியில் பெறப்பட்டது போன்ற விவரங்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்ட பின்பு, தயாரிப்பு நிறுவனத்துக்கு அதற்கான ஒப்புதல் மின்னஞ்சல் அனுப்பப்படும். அதற்குப் பின்புதான் மாஸ்டரிங்கிற்கான பணிகளே தொடங்கும். 

முதலில் படத்தின் ஹார்ட்டிஸ்க் இங்கிருக்கும் இன்ஜினீயர்கள் மூலம், ரீல்ரிலாகப் பிரிக்கப்பட்டு அடுத்து என்கோடிங் (Encoding) செய்வதற்காக அனுப்பப்படும். ஒரு படம் சராசரியாக 8 முதல் 10 ரீல்களுக்குள் இருக்கும். இவை தனித்தனியாகப் பிரிக்கப்பட்டு, பின்னர் திரையங்கங்களுக்குத் தேவையான ஃபார்மேட்டிற்கு மாற்றப்பட்டு பின்னர் இறுதியாக என்கோடர்களுக்கு அனுப்பப்படும். என்கோடிங் செய்வதற்கு முன்னரே படத்தில் சேர்க்கப்படுவதற்கு சப்டைட்டில்கள் ஏதேனும் இருப்பின் அவையும் சேர்க்கப்பட்டுவிடும். 

இந்த என்கோடர்களின் (Encoder) பணி, திரைப்படங்களை 128 பிட் என்கிரிப்ட் செய்வதே. இதற்காக வரிசையாக என்கோடர்கள் இங்கே அமைக்கப்பட்டிருக்கின்றன. இவற்றுள் படம் என்கோடிங் செய்யப்பட்ட பின்பு, அடுத்து Civolution பகுதிக்குச் செல்லும். பைரசி விஷயங்களைத் தடுப்பதில் இந்த Civolution-தான் உதவி செய்கிறது.

``ஒவ்வொரு திரைப்படத்தையும் இந்த Civolution மெஷினில் ஏற்றும்போது, அது வீடியோ மற்றும் ஆடியோ இரண்டிலும் ஒரு வாட்டர்மார்க்கைச் சேர்க்கும். இதன்மூலம் ஒரு திரைப்படத்தை ஏதேனும் திரையரங்கில் ரகசியமாக ஷூட் செய்தால், அதை எந்தத் திரையரங்கம் என்பதை எளிதில் கண்டறிந்துவிடலாம். இந்த வாட்டர்மார்க்கை வெறும் கண்களால் நம்மால் பார்க்க முடியாது. ஆனால், Civolution மென்பொருள் மூலம் கண்டறிந்துவிடலாம். ஒரு படத்தின் பைரசி காப்பியில் 12 - 15 நிமிடங்கள் வரையிலான வீடியோ அல்லது ஆடியோவைக் கொடுத்தாலே போதும்; அது எந்த தியேட்டரில் ரெக்கார்டு செய்யப்பட்டது எனக் கண்டறிந்துவிடலாம். இதை அனைத்துப் படங்களுக்குமே செய்கிறோம். ஒவ்வொரு படம் வந்தபின்பும், அதன் தயாரிப்பு நிறுவனங்கள் எங்களை அணுகி, இந்த பைரசி ரிப்போர்ட்டை கேட்பார்கள். அவர்களுக்கு உதவி செய்வோம். 'பாகுபலி' படம் வந்தபின்பு அதன் தயாரிப்பு நிறுவனம் ஹைகுவாலிட்டி வீடியோ, லோ குவாலிட்டி வீடியோ என இரண்டு வீடியோக்களைக் கொடுத்து எந்தத் திரையரங்கில் இது பதிவு செய்யப்பட்டது என்பதைக் கண்டறிந்து தரச்சொன்னார்கள். செய்துகொடுத்தோம். சமீபத்தில் 10 திரையரங்கங்கள் பைரசி சர்ச்சையில் சிக்கியதல்லவா... அதற்காக ரிப்போர்ட்டையும் நாங்கள்தான் தயாரித்துக் கொடுத்தோம்." என்கிறார் பிரபு.

இவ்வளவு தொழில்நுட்பம் இருந்தும்கூட ஏன் இன்னும் பைரசி வீடியோ வெளியிடுபவர்களைத் தடுக்க முடிவதில்லை என ஜெயேந்திராவிடம் கேட்டோம்.

``ஆரம்பத்தில் சர்வர்களில் இருந்தெல்லாம் படம் திருடப்பட்டதாகக் கூறுவார்கள். ஆனால், அதற்கான வாய்ப்பே இப்போது இல்லை. தற்போது திரையரங்கத்திற்கு நாங்கள் அனுப்பும் ஹார்ட்டிஸ்க்கை உங்கள் கைகளில் கொடுத்தால்கூட அதைவைத்து உங்களால் ஒன்றும் செய்யமுடியாது. அதைத் திரையரங்கில் மட்டுமே டிகோடு செய்யமுடியும். இப்படியாக தொடக்கத்திலிருந்து இப்போது வரை அனைத்து பைரசி வழிகளையும் கொஞ்சம் கொஞ்சமாக அடைத்துவிட்டோம். எனவே திரையரங்க உரிமையாளர்கள் யாரும் நேரடியாக பைரசி நபர்களுக்கு உதவுவதில்லை. இப்போதைக்குப் படங்கள் வெளியாக ஒரே வழி, ரசிகர்களின் மொபைல்களில் இருந்துதான். அதனையும் கண்டுபிடிக்கத்தான் வாட்டர்மார்க் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்துகிறோம். திரையரங்கங்களில் கண்காணிப்பை அதிகப்படுத்துவதன் மூலம் மட்டும்தான் இதைத் தடுக்கமுடியும் என நினைக்கிறேன். முதலில் ரசிகர்களின் மொபைல் கேமரா சுமாரான குவாலிட்டியில் இருந்தது. எனவே ரெக்கார்டு செய்பவர்களுக்கு சுமாரான வீடியோதான் கிடைத்தது. ஆனால், இப்போது அவர்களின் கேமராவும் அப்டேட் ஆகிக்கொண்டே வருகிறது. இது அவர்களுக்கு வசதியாகிவிட்டது" என்கிறார் அவர்.

இந்த பைரசி வாட்டர்மார்க்கிற்கு அடுத்து திரைப்படம் செல்வது டூப்ளிகேஷன் பிரிவுக்கு. எப்படி ஒரு சி.டி.யை காப்பி செய்து 100 சி.டி.க்களாக மாற்றுகிறோமோ, அதேபோல்தான் இங்கும். முழுமையாக என்கோடு செய்யப்பட்ட ஹார்ட்டிஸ்க்கானது இங்கே பிரதியெடுக்கப்படும். தயாரிப்பு நிறுவனங்கள் எத்தனை காப்பிகள் கேட்கின்றனவோ, அத்தனை காப்பிகள் உருவாக்கப்படும். ஆனால், இந்த டூப்ளிகேஷன் செய்வதற்கு முன்னால் இன்னொரு பகுதி இருக்கிறது. அது ப்ரிவ்யூ. 

ஒரே ஒரு ஹார்ட் டிஸ்க் முழுமையாகத் தயார் ஆனதும், கியூப் நிறுவனத்தின் குவாலிட்டி கன்ட்ரோல் இன்ஜினீயர்கள், திரைப்படத்தின் எடிட்டர்கள் ஆகியோருக்கு முதலில் திரையிட்டுக்காட்டப்படும். அவர்கள் `ஓகே' சொன்னால்தான் டூப்ளிகேஷனுக்குச் செல்லும். இவையெல்லாம் முடிந்தபிறகு இறுதியிலும் படத்தின் எடிட்டர், ஒளிப்பதிவாளர், சப்டைட்டில் நிறுவனத்தினர் போன்றவர்களுக்குப் படம் திரையிட்டுக் காட்டப்படும். இதெல்லாம் முடிந்தபின்புதான் KDM பணிகளுக்குச் செல்லும்.

ஒரு படம் டெக்னிக்கலாக முழுமையாகத் தயாரானதும், அதற்கான ஹார்ட் டிஸ்க்குகள் தயாராகும். அதன்பின்பு எப்போது படம் வெளியாகவேண்டும் என்பதைத் தயாரிப்பு நிறுவனங்கள் முடிவுசெய்து, அதன்பின்பு திரையரங்கங்கள் முடிவான பின்பு அந்தப் பட்டியல் கியூபிற்கு அனுப்பப்படும். அந்தந்தத் திரையரங்களுக்கு ஏற்ற ஃபார்மேட்டில் ஹார்ட்டிஸ்க் தயார் செய்யப்பட்டு, Centralized Serverகளுக்கு KDM அனுப்பப்படும். இந்த KDM என்பதன் விரிவாக்கம் Key Delivery Message. எந்தெந்தத் திரையரங்களில் படம் வெளியாக வேண்டுமோ, அவற்றிற்கு மட்டுமே KDM அனுப்பப்படும். OTP போலவே, இந்த KDM-களுக்கும் வேலிடிட்டி டைம் உண்டு. ஒரு KDM-க்கான வேலிடிட்டி எவ்வளவு என்பதை பெரும்பாலும் தயாரிப்பு நிறுவனங்களே முடிவு செய்கின்றன. சராசரியாக KDM-களுக்கு ஒருவாரம் வரை வேலிடிட்டி நிர்ணயிக்கப்படுகிறது. அதற்குப் பின்பு புது KDM வரவேண்டும். 

உதாரணமாக நாளை காலை 7 மணிக்கு ஒரு திரைப்படம் வெளியாகிறது எனில், இன்று இரவே அனைத்து திரையரங்கங்களுக்கும் ஹார்ட்டிஸ்க்குகள் அனுப்பப்பட்டுவிடும். உடனே திரையரங்கங்கள் படத்தைத் திரையிட தயாராகிவிடலாம். ஆனால், பார்க்க முடியாது. அந்தப் படத்தின் வர்த்தகம் அனைத்தும் முடிவாகி, தயாரிப்பு நிறுவனம் ஓகே சொல்லிவிட்டால் இரவே KDM-களும் அனுப்பப்பட்டுவிடும். KDM வந்துவிட்டால் படத்தைத் திரையிட்டுவிடலாம். ``டெக்னிக்கலாக எப்போதும் முதல்நாளே KDM-கள் தயாராகிவிடும். வேறு பிசினஸ் காரணங்களால்தாம் KDM அனுப்புவதில் தாமதம் ஏற்படும்" என்கிறார் பிரபு.

வெளிநாடுகளில் இருக்கும் திரையரங்கங்களுக்கும் இதே கண்டிஷன்தான். ஆனால், ஒரே வேறுபாடு என்னவென்றால் ஹார்ட் டிஸ்க் அனுப்புவது மட்டுமே. இங்கிருந்து நேரடியாக ஹார்ட் டிஸ்க் அனுப்பாமல், வெளிநாடுகளில் இருக்கும் சர்வர்களில் படம் டவுன்லோடு செய்யப்பட்டு பின்னர் ஹார்ட் டிஸ்க்குகளில் பதிவுசெய்யப்பட்டு பின்னர் அங்கிருந்து திரையரங்கங்களுக்கு விநியோகிக்கப்படும். சராசரியாக ஒரு படம் ஹார்ட்டிஸ்க்கில் 200 GB அளவுக்கு இருக்கும். 

இதேபோல திரையரங்களில் வெளியாகும் டீசர், ட்ரெய்லர், சென்சார் போர்டிற்கு திரையிட்டுக் காட்டப்படும் திரையங்கத்திற்கான KDM போன்றவையும் இங்கிருந்துதான் அனுப்பப்படுகின்றன. சமீபத்தில் எந்தப் படத்துக்கு மாஸ்டரிங் செய்தீர்கள் எனப் பிரபுவிடம் கேட்டேன்.

``சர்கார்; முழுமையாகத் தயார் செய்துவைத்துவிட்டோம். இனி சென்சாரிற்கான KDM அனுப்புவது மட்டும்தான் பாக்கி" 

``அட... இப்படிப் பெரிய பெரிய படங்கள் உங்கள் அலுவலகத்திற்கு முதல்முறையாக வரும்போது பரபரப்பாக இருக்காதா?"

``இங்கே இருக்கும் எல்லாருமே இன்ஜினீயர்கள்தான். எப்பவும் கோடிங், மாஸ்டரிங்னே இருந்துட்டோம். அதனால எல்லாப் படங்களுக்கும் எங்களுக்கு ஒண்ணுதான். இங்கே யார் எந்தப் படத்துக்கு மாஸ்டரிங் பண்ணிட்டு இருக்காங்கன்னே வெளிய தெரியாது. அதேமாதிரி ஒரு டிபார்ட்மென்ட், இன்னொரு டிபார்ட்மென்ட்கிட்ட இதுபோன்ற விஷயங்களைப் பகிர்ந்துக்க மாட்டாங்க. அப்படி எதுவும் ஷேர் பண்றது தெரிஞ்சா நடவடிக்கை எடுத்துருவோம்ன்றதுதான் அதற்குக் காரணம். இப்போ கிட்டத்தட்ட 400 படங்களுக்கும் மேலே எல்லா வேலையும் முடிச்சு ரெடியா வெச்சிருக்கோம். இதுல பெரிய படம், சின்ன படம் எல்லாமே அடக்கம்; இதெல்லாம் எப்போ ரிலீஸ் ஆகி முடியும்னே தெரியலையே!" எனச் சிரித்தபடி விடைகொடுக்கிறார் பிரபு.

இப்படியாக 2004-ல் இருந்து தற்போது மாஸ்டரிங் செய்த படங்கள் வரைக்கும் சுமார் 14,000 படங்கள் இப்போது கியூபின் ஹார்ட் டிஸ்க் லைப்ரரியில் இருக்கின்றன. திரையிடப்படும் படங்கள் உருவாக்கப்படும் உருவாகும் விதத்தைப் பார்த்திருப்போம். அவை திரையிடப்படுவதிலேயே டெக்னிக்கலாக இவ்வளவு விஷயங்கள் இருப்பது திரைப்படம் தாண்டிய சுவாரஸ்யமே!