அலசல்
Published:Updated:

கொடைக்கானல் போறீங்களா? - குப்பைத் தொட்டியாக வரவேற்கும் மலைகளின் இளவரசி!

கொடைக்கானல் போறீங்களா? - குப்பைத் தொட்டியாக வரவேற்கும் மலைகளின் இளவரசி!
பிரீமியம் ஸ்டோரி
News
கொடைக்கானல் போறீங்களா? - குப்பைத் தொட்டியாக வரவேற்கும் மலைகளின் இளவரசி!

கொடைக்கானல் போறீங்களா? - குப்பைத் தொட்டியாக வரவேற்கும் மலைகளின் இளவரசி!

ஸ்கூலுக்கு விட்டாச்சு லீவு. ‘குளுகுளு’ கொடைக்கானலை நோக்கி வெளிநாட்டினர் உள்ளிட்ட சுற்றுலாப் பயணிகள் படையெடுக்க ஆரம்பித்துவிட்டனர். சீஸன் நேரத்தில் வாரத்துக்கு சுமார் 30 ஆயிரம் பேர் வந்துசெல்லும் கொடைக்கானலுக்கு, கோடை சீஸன் காலத்தில் வருபவர்களின் எண்ணிக்கை பல லட்சம். வரும் பலரும் தாங்கள் செல்லும் அத்தனை இடங்களையும் குப்பையாகிவிட்டு, மனத்தை சுத்தமாக்கிக்கொண்டு திரும்பிப் போகிறார்கள். சுற்றுலாப் பயணிகளுக்கும் இதனால் அவஸ்தை; கொடைக்கானல் மக்களுக்கோ நிரந்தரத் துன்பம். மலைகளின் இளவரசியான கொடைக்கானல், உங்களைக் கொஞ்சி வரவேற்பதற்கு பதில், குப்பை நாற்றத்தால் விரட்டியடிக்கும் அவலநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

கொடைக்கானல் பஸ் நிலையத்துக்குள் நுழையும்போதே, அங்கிருக்கும் கழிவறையிலிருந்து வெளியாகும் துர்நாற்றம்தான், உங்களை வரவேற்கும் ‘வரவேற்பாளர்’. சமீபத்தில் கொடைக்கானல் வந்த சென்னையைச் சேர்ந்த ஓர் இளம் ஜோடியிடம் பேசியபோது, “பஸ் நிலையத்தில் ஒரே ஒரு கழிவறைதான் உள்ளது. அதன் துர்நாற்றம் அந்தப் பகுதியையே மூச்சுமுட்ட வைக்கிறது. 24 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட கொடைக்கானல் ஏரியைச் சுற்றி, இரண்டு கழிப்பிடங்கள் மட்டுமே உள்ளன. பிரையண்ட் பூங்காவில் ஒரே ஒரு கழிப்பிடம்தான் இருக்கிறது. பூங்காவைச் சுற்றி வைக்கப்பட்டுள்ள இரண்டு பயோ டாய்லெட்டுகளும் பயனற்ற நிலையில் உள்ளன. பெரும்பாலான பயோ டாய்லெட்களின் நிலையும் இதுதான். குணா குகை உள்ளிட்ட முக்கிய இடங்களில் கழிவறைகளே இல்லை. மற்ற இடங்களில் தனியார் பராமரிப்பில் உள்ள கழிப்பறைகளும்கூட சுத்தமாக இல்லை” என்று நொந்துபோய்ச் சொன்னார்கள்.

கொடைக்கானல் போறீங்களா? - குப்பைத் தொட்டியாக வரவேற்கும் மலைகளின் இளவரசி!

கொடைக்கானலில் 80 சதவிகிதமான குப்பைகளைப் போடுவது அங்குள்ள கடைகள், உணவு விடுதிகள், தங்கும் விடுதிகள் மற்றும் ரிசார்ட்கள்தான். அதிக அளவுக்குக் குப்பைகளை உருவாக்கும் ஹோட்டல்களும், ரிசார்ட்களும் அவர்களின் குப்பைகளை நகராட்சிக் குப்பைத் தொட்டிகளில் கொட்டக்கூடாது. அவர்களின் குப்பைகளை அவர்களே அப்புறப்படுத்த வேண்டும். அந்த விதிமுறையை யாரும் கடைப்பிடிப்பதில்லை. நகராட்சிக்குச் சொந்தமான குப்பை லாரி, வணிக நிறுவனங்களுக்குச் சேவை செய்கிறது. இதனால், தெருக்களில் குப்பைகள் தேங்கிவிடுகின்றன.

கொடைக்கானல் குப்பைகளை முறையாக அப்புறப்படுத்துவது தொடர்பான ஓர் ஆய்வை இராஜமாணிக்கம் என்பவர் மேற்கொண்டார். 23 பள்ளிகள் மற்றும் 13 ஹோட்டல்களில் குப்பைகள் மறுசுழற்சி செய்யப்படுகின்றன என்பது அப்போது தெரிந்தது. இதே முறையை மற்ற வணிக நிறுவனங்களும் மேற்கொள்ள வேண்டும் என்று கொடைக்கானல் மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

கொடைக்கானல் நகராட்சிப் பகுதியில் குவியும் குப்பைகளை அப்புறப்படுத்துவதில் உள்ள சிரமங்களை நம்மிடம் விவரித்தார், கொடைக்கானல் துப்புரவுத் தொழிலாளர்கள் சங்கத் தலைவரான ஜகந்நாதன். ‘‘இங்கு சராசரியாக ஒரு நாளைக்கு 20 டன் குப்பைகள் சேருகின்றன. ஒரு சதுர கிலோமீட்டருக்குக் குறைந்தது மூன்று துப்புரவுத் தொழிலாளர்கள் வேண்டும். ஆனால், ஒருவர்கூட இப்போது இல்லை. 2006-ல் 120 துப்புரவுப் பணியாளர்கள் இருந்தார்கள். அவர்களில் பலர் ஓய்வுபெற்றுவிட்டார்கள். காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. குப்பைகளை அப்புறப்படுத்த நான்கு லாரிகள் வேண்டும். ஆனால், இருப்பதோ இரண்டு லாரிகள். அதிலும் ஒரு லாரி கடந்த 10 மாதங்களாகப் பழுதாகிக் கிடக்கிறது” என்கிறார் வருத்தத்துடன்.

“துப்புரவுத் தொழிலாளர்களுக்குக் கையுறைகள், பூட்ஸ், கோட் உள்ளிட்ட பாதுகாப்பு கவசங்கள் வழங்கப்பட வேண்டும். அவற்றை முறையாக வழங்காததால், அவர்கள் வெறும் கையாலேயே அனைத்துக் கழிவுகளையும் அப்புறப்படுத்துகிறார்கள்” என்றார் ‘எஃபெக்ட் கொடைக்கானல்’ என்ற தன்னார்வ அமைப்பைச் சேர்ந்த வீரா. துப்புரவுத் தொழிலாளி ஒருவரிடம் நாம் பேசியபோது, “வெறும் கையால்தான் குப்பைகளை அள்ளுறோம். எங்களுக்கு ரெண்டு மாதங்களுக்கு ஒருமுறை மருத்துவப் பரிசோதனை செய்யணும். அதுவும் நடப்பதில்லை. குப்பைகளைப் பிரித்துப்போடும் வசதி இல்லாததால் எல்லாக் குப்பைகளையும் ஒரே இடத்தில் போடுறாங்க. ஒரு கண்ணாடித்துண்டு என் கையைக் கிழிச்சிருச்சு. அதோட வேலை செய்யறேன்” என்றார் வேதனையுடன்.

கொடைக்கானல் போறீங்களா? - குப்பைத் தொட்டியாக வரவேற்கும் மலைகளின் இளவரசி!

ஃபான்சா (Freshwater Action Network South Asia) என்ற தன்னார்வ அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளரான அண்ணாதுரை, “எங்கு அதிகமான குப்பைகள் சேரும், அவற்றை எப்படிக் கையாள வேண்டும், எப்படி அப்புறப்படுத்த வேண்டும் என்ற திட்டமிடுதலே இங்கு இல்லை. 30 பேரை வேலைக்கு வைத்துவிட்டு 70 பேர் எனக் கணக்குக் காட்டுகிறார்கள்” என்றார்.

“நகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை பிரகாசபுரம், செண்பகனூர் பகுதிகளில் கொட்டுகிறார்கள். பிரகாசபுரம் பகுதிக்குக் கீழே பெரியகுளம் உள்ளிட்ட ஊர்களுக்குப் போகும் நீராதாரம் இருக்கிறது. அங்கே கொட்டப்படும் மின்னணுக் குப்பைகள், ரசாயனம் கலந்த அபாயகரமான குப்பைகள், நாப்கின் கழிவுகள் போன்றவை நீராதாரத்தைப் பாழ்படுத்துகின்றன. குப்பைகள் கொட்டப்படும் இரண்டு பகுதிகளும் பசுமைக்காடுகள் சூழ்ந்த பகுதிகளாக இருந்தன. இப்போது அதைக் கெடுத்துவிட்டார்கள். குப்பைகள் மறுசுழற்சி செய்யப்படாமல், மழைக்காலங்களில் ஆறுகளில் கலந்துவிடுகிறது” என்று குற்றம்சாட்டுகிறார் சமூக ஆர்வலர் வீரா.

இது பற்றி கொடைக்கானல் நகராட்சியின் இளநிலைப் பொறியாளர் சேகரிடம் கேட்டோம். “ஓர் ஆண்டுக்கு முன்பு, மூன்று கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து குப்பைகளைத் தரம் பிரித்து மறுசுழற்சி செய்து உரமாக்கும் திட்டம் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, 14 இயந்திரங்களை நிறுவியிருக்கிறோம். 80 சதவிகிதப் பணிகள் முடிந்து விட்டன. இன்னும் ஓரிரு மாதங்களில் செயல்பாட்டுக்கு வந்துவிடும்” என்றார்.

கொடைக்கானல் போறீங்களா? - குப்பைத் தொட்டியாக வரவேற்கும் மலைகளின் இளவரசி!

கொடைக்கானல் குப்பை பிரச்னை தொடர்பாக ஆறு மாதங்களுக்கு முன்பு, 20 பேரைக் கொண்ட குழுவை திண்டுக்கல் ஆட்சியர் வினய் அமைத்தார். குழுவைத் தொடங்க உந்துதலாக இருந்த சாந்த சதீஸைத் தொடர்புகொண்டோம், “குழுவுக்கு தலைமை மாவட்ட ஆட்சியர். செயலாளராக இருந்து செயல்படுத்த வேண்டியது நகராட்சி கமிஷனர். ஏழு மாதங்களுக்கு முன் இரண்டு கூட்டங்கள் நடந்தன. அதன் பிறகு எந்தக் கூட்டமும் நடக்கவில்லை. இப்போதும்கூட நாங்கள் இதில் நகராட்சி நிர்வாகத்துக்குத் தேவையான உதவிகளை வழங்கத் தயாராக இருக்கிறோம். ஆனால் அதைப் பயன்படுத்திக்கொள்ள அவர்கள் தயாராக இல்லை” என்கிறார்.

இதைப்பற்றிக் கொடைக்கானல் நகராட்சி கமிஷனர் முருகேசனிடம் பேசினோம். “நான் இங்கு மாற்றலாகி வந்து இரண்டு மாதங்கள்தான் ஆகின்றன. அந்தக் குழு பற்றி எனக்குத் தெரியவில்லை. இரண்டு மாதங்களுக்கு முன்பு வரை சுகாதாரப் பிரச்னைகள் இருந்தன. இப்போது அப்படி எதுவும் இல்லை. கட்டணக் கழிவறைகள் பராமரிப்பு தனியாருக்குத் தரப்பட்டிருந்தாலும், எங்கள் கண்காணிப்புக்கு உட்பட்டுதான் இருக்கின்றன. பணியாளர் பற்றாக்குறையைப் போக்கத் தனியார் ஒப்பந்தத் தொழிலாளர்கள் 80 பேர் அமர்த்தப்பட்டுள்ளனர்” என்றார்.

சுற்றுலா மூலம் பெரும் வருவாயை ஈட்டக்கூடிய கொடைக்கானல் போன்ற சுற்றுலாத் தளங்களில் தூய்மையைப் பராமரிப்பது முக்கியம் என்ற எண்ணமும் அக்கறையும் ஏன் ஆட்சியாளர்களுக்கு வருவதில்லை? இந்தச் சுற்றுலாத்தலமே ஒரு மாபெரும் குப்பைத் தொட்டியாகக் காட்சியளிக்கிறது. இப்போதாவது விழித்துக்கொண்டு ஆட்சியாளர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே கொடைக்கானல் பகுதி மக்களின் விருப்பம்.

- க.சுபகுணம்
படங்கள்: வீ.சிவக்குமார்