Published:Updated:

உங்களுக்குத் தெரியாமல்... உங்களைப் பற்றி...

உங்களுக்குத் தெரியாமல்... உங்களைப் பற்றி...
பிரீமியம் ஸ்டோரி
உங்களுக்குத் தெரியாமல்... உங்களைப் பற்றி...

கார்க்கிபவா, ஓவியம்: கார்த்திகேயன் மேடி

உங்களுக்குத் தெரியாமல்... உங்களைப் பற்றி...

கார்க்கிபவா, ஓவியம்: கார்த்திகேயன் மேடி

Published:Updated:
உங்களுக்குத் தெரியாமல்... உங்களைப் பற்றி...
பிரீமியம் ஸ்டோரி
உங்களுக்குத் தெரியாமல்... உங்களைப் பற்றி...

சென்ற வாரம் ஃபேஸ்புக்குக்குத் தலைவலி. ‘கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா’ என்ற நிறுவனம் ஃபேஸ்புக் மூலம் சேகரித்த வாடிக்கையாளர்கள் பற்றிய டேட்டாவைத் தவறாகப்  பயன்படுத்தியது. அது தொடர்பாக எழுந்த சர்ச்சையில் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் அமெரிக்க செனட் சபை முன் ஆஜராக வேண்டியிருந்தது. 500க்கும் மேற்பட்ட கேள்விகளால்  5 மணி நேரத்துக்கு மார்க்கின் கோட்டைப் பிடித்து உலுக்கி விட்டார்கள். அப்போது கேட்கப்பட்ட முக்கியமான கேள்விகளுக்கு ஃபேஸ்புக் தனது பிளாக்கில் பதில் சொல்லி வருகிறது. அதில் சொல்லப்பட்ட முக்கியமான ஒரு விஷயம்தான் “ஆமாம்... எங்கள் வாடிக்கையாளர்கள் ஃபேஸ்புக்கில் இல்லாவிட்டாலும் அவர்களை நாங்கள் கண்காணிப்பது உண்மை” என்பது. 

நாம் ஃபேஸ்புக்கில் லாக் இன் செய்யாதபோது எப்படி நம்மைக்  கண்காணிக்க முடியும்? அதற்கான நான்கு வழிகளை விவரித்திருக்கிறது ஃபேஸ்புக்.

1) சில இணையதளங்களுக்குச்  சென்றால் “எங்களை லைக் செய்யுங்கள்” என ஒரு பேனர் வருமே, அந்த பேனர் போதும்!  ஃபேஸ்புக் உங்கள் கைகளைப் பிடித்துக்கொண்டிருக்கிறது என்று பொருள்.

2) சில இணையதளங்களுக்கு லாக் இன் ஐடியாகவே நாம் ஃபேஸ்புக்  ஐடியைப் பயன்படுத்துகிறோம். அப்படி இருந்தாலும் ஃபேஸ்புக் ரேடாரில் நாம் வந்துவிடுவோம்.

3) ‘ஃபேஸ்புக் அனலிட்டிக்ஸ்’ என்ற டூல் மூலம் தகவல்கள் சேகரிக்கப்படும்.

4) ஃபேஸ்புக் விளம்பரங்கள் மூலமும் டேட்டா  கிடைக்கும்.

உங்களுக்குத் தெரியாமல்... உங்களைப் பற்றி...

முதல் இரண்டு விஷயங்களில் கூட ஃபேஸ்புக் ஐகான் நம் கண்களில்படும். அடுத்த இரண்டும் அதிர்ச்சியான விஷயம். இதைப் புரிந்துகொள்ள ஓர் இணையதளம் எப்படி செயல்படுகிறது என்பதைத் தெரிந்துகொள்வோம். நமது கணினியிலிருந்து amazon.com தளத்துக்குச் செல்ல பிரவுசரில் முகவரியை உள்ளீடு செய்வோம். உடனே, பிரவுசர் நமது ஐ.பி எண், நாம் எந்த பிரவுசர் பயன்படுத்துகிறோம், இதற்கு முன் நாம் என்னவெல்லாம் இணையத்தில் பார்த்திருக்கிறோம் என்ற ‘குக்கீஸ்’ ஆகிய விஷயங்களுடன் அமேசானின் சர்வர் கதவுகளைத் தட்டும். உடனே, அமேசான் தகவல்களைப் பெற்றுக்கொண்டு அவர்கள் தளத்தின் கண்டெண்ட்களை திருப்பிக்  கொடுக்கும். கூடவே இன்னொரு கட்டளையும் தரும். அமேசான் எந்த நிறுவனங்களின் சேவைகளை எல்லாம் பயன்படுத்துகிறதோ, அவர்களுக்கும் நம்மைப் பற்றிய தகவல்களை அனுப்பச் சொல்லும். நமது பிரவுசரும் அனுப்பிவிடும். அமேசான் மட்டுமல்ல; ஃபேஸ்புக்கின் சேவைகளைப் பயன்படுத்தும் பல இணையதளங்கள் உள்ளன. அந்த   இணையதளங்கள் மூலம், உங்கள் டேட்டா பைசா செலவில்லாமல் ஃபேஸ்புக்குக்குப் போகும். அதுதான் அந்தக்  கடைசி இரண்டு பாய்ண்ட்ஸ்.

டேட்டாவை வைத்து என்ன செய்ய முடியும்?

ஆப்பிள் போன் விளம்பரத்துக்கு எப்போதோ லைக் இட்டிருப்பீர்கள். சம்பளம் வந்த நாளில்  ‘அந்தத் தெரு என்ன விலை?’ என்று  ஸ்டேட்டஸ் போட்டிருப்பீர்கள். ஃபேஸ்புக் இரண்டையும்  கனெக்ட் செய்து கொள்ளும். அடுத்த சம்பள நாளில்  வரிசையாக ஆப்பிள் விளம்பரங்களைக் காட்டும். நீங்கள் எங்கு சென்றாலும் ஆப்பிள் விளம்பரம் உங்களைத் துரத்தும். விளம்பரங்களின் வேலையே நம் ஆழ்மனதில் அந்த பிராண்டைப் பதிய வைப்பதுதானே? அதைக்  கச்சிதமாகச் செய்ய டேட்டா உதவும்.

அரசியல் உதாரணம் ஒன்றைப் பார்ப்போம். மூன்று விதமான ஃபேஸ்புக் பயனர்களை எடுத்துக்கொள்ளலாம். ஆளுங்கட்சியின் தீவிர ஆதரவாளர், எதிர்க்கட்சியின் தீவிர ஆதரவாளர், கட்சி சாராதவர். தேர்தல் வந்தால் முதல் வகை எப்படியும் ஆளுங்கட்சிக்கு வாக்களிக்கும். மூன்றாம் வகை எப்படியும் வாக்களிக்காது. இரண்டாம் வகையினரைக்  கொஞ்சம் கூடுதலாகக்  கவனித்து அவர்களிடம் பிரசாரம்  செய்தால், அவர்கள் விரும்பும் விஷயத்தை வாக்குறுதியாகத் தந்தால் அவரது வாக்கு ஆளுங்கட்சிக்குக்  கிடைக்கும்.

அவருக்கு என்ன தேவை, என்ன பிடிக்கும் என்பது தெரியவேண்டும். அதையும் ஃபேஸ்புக்கிடமே கேட்கலாம். அவரது சம்பளம் ஆண்டுக்கு  5 லட்சம். ஆக, வருமான வரியில் சலுகை தந்தால் அவரைக் கவரலாம். அவரது சொந்த ஊர் அவினாசி. அப்படியென்றால், ‘அத்திக்கடவு திட்டம் நிறைவேற்றப்படும்’ என்றால் அவர் மசியலாம். இதையெல்லாம் வைத்து அவருக்கென ஒரு பிரத்யேக வாக்குறுதிகள் பட்டியல் தயாரிக்கலாம். அதை அவருக்கு மின்னஞ்சல் செய்யலாம். அப்போது அவர் மனம் மாற வாய்ப்புண்டு. அவரது ஃபேஸ்புக் டைம்லைனில் ஆளுங்கட்சியின் சாதனைகளை அடிக்கடி விளம்பரமாகக் காட்டலாம். இதை ஃபேஸ்புக் உதவியுடன் எளிதில் செய்யலாம். உலகம் முழுவதும் பலர் செய்திருக்கிறார்கள்.

இதில் என்ன தவறு?

ஃபேஸ்புக் பயனாளர்களின் தகவல்களை எடுப்பதைப் பற்றி செனட்டர்களில் ஒருவர் இப்படிக் கேட்டார்.

“ஃபேஸ்புக் எனது தகவலை யாருடன் பகிரும் என்பதை என்னால் முடிவு செய்ய முடியுமா?”

“நீங்கள் விருப்பப்பட்டால் மட்டுமே ஃபேஸ்புக் உங்கள் தகவலை எடுக்கும். வேண்டாமென்றால் நீங்கள் சொல்லலாம்”

“அது தெரியும். நான் கேட்பது, எடுக்கப்பட்ட தகவலை யாருடன் பகிரலாம் என்ற  கண்ட்ரோல் வாடிக்கையாளர்கள் வசம்  இருக்கிறதா?”

இதைக் கேட்டதும் தமிழ் சினிமா வில்லன் போல மார்க்கின் நெற்றி வியர்த்துவிட்டது. உலக இளைஞர்களின் ஆதர்சமாக இருந்த மார்க்கின் மார்க்கெட் சரிந்திருக்கிறது. நம்மைப் பற்றிய டேட்டாவை ஃபேஸ்புக் மட்டும் எடுக்கவில்லை. கூகுளில் தொடங்கி பல சிறிய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் வரை இதைத்தான் செய்கின்றன. இன்னும் நமக்கு எது நமது பிரைவசி, எது நமது பொது விவரங்கள் என்பதில் தெளிவு வரவில்லை. அந்த விழிப்புஉணர்வு  விரைவில் வரும். அப்போது “என் டேட்டா என் உரிமை” என ஒரு டிஜிட்டல் போராட்டத்தையே நிகழ்த்த வேண்டியிருக்கும். அதுவரை, ஃபேஸ்புக்கும் கூகுளும் நம்மைச் சுரண்டி டாலர்களைக் குவித்துக்கொண்டுதானிருப்பார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism