Published:Updated:

இப்படியொரு கல்யாணமா? -உறவினர்களுக்கு ஷாக் கொடுத்து அசத்திய இளைஞர்!

இப்படியொரு கல்யாணமா? -உறவினர்களுக்கு ஷாக் கொடுத்து அசத்திய இளைஞர்!
இப்படியொரு கல்யாணமா? -உறவினர்களுக்கு ஷாக் கொடுத்து அசத்திய இளைஞர்!

இப்படியொரு கல்யாணமா? -உறவினர்களுக்கு ஷாக் கொடுத்து அசத்திய இளைஞர்!

விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற இளைஞர் ஒருவரது திருமணத்தில், கூழுக்கு 5 வகை சைடு டிஷ் கொடுத்து, தனது திருமண விருந்தை அசத்தியிருக்கிறார். இது, அப்பகுதி மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

திருமணம் முடிவுசெய்யப்பட்டதும் அடுத்து எழும் பேச்சு, உணவு பற்றியதுதான். எந்த சமையல்காரரைப் பார்க்கலாம், இலையில் எத்தனை வகை பரிமாறலாம் என்று குடும்பத்தினர் அனைவரும் அமர்ந்து அலசத் தொடங்குவார்கள். அந்த அளவுக்கு திருமணத்துக்கு வைக்கும் விருந்து முக்கியத்துவம் வாய்ந்தது. இது, எல்லா நாட்டு மக்களுக்கும் பொருந்தும். ஆனால், இப்படி எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் பாரம்பர்ய முறையில் தனது திருமண விருந்தை வைத்து அசத்தியிருக்கிறார்  அந்த இளைஞர்.

விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டையை அடுத்த களமருதூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஆறுமுகத்தின் மகன், தினேஷ். போட்டோகிராஃபரான இவருக்கும்,  மீனா என்ற பெண்ணுக்கும் நேற்று முன் தினம், அதே ஊரில் திருமணம் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்திருந்த உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும், திருமண விருந்தாக கம்பு மற்றும் கேழ்வரகுக் கூழ் கொடுத்து அசத்தினார். வழக்கமான இட்லி, பொங்கல், பூரி, தோசைதான் சாப்பிட இருக்கும் என்று  நினைத்து விருந்துக்குச் சென்ற உறவினர்கள், பாரம்பர்ய உணவான கூழும் அதற்கு சைடு டிஷ்ஷாக மாங்காய், இஞ்சி மற்றும் பூண்டு ஊறுகாய், பச்சைமிளகாய், அரிசி வத்தல் போன்றவை அளிக்கப்பட்டதைப் பார்த்து அசந்துபோனார்கள். பெரியவர்கள் மட்டுமல்லாமல், சிறியவர்களும் அதை விரும்பிக் குடித்து ருசித்தார்கள்.

இந்தப் புதுவித முயற்சிகுறித்து மாப்பிள்ளை தினேஷிடம் பேசினோம், “நாகரிகம் என்ற பெயரில் அனைத்தையும் இழந்துவிட்ட நாம், நமது பாரம்பர்ய உணவு முறையையும் கைகழுவிவிட்டோம். 'உணவே மருந்து' என்ற நம் முன்னோரின் வாழ்க்கை முறையை நாம் இழந்த தால்தான், நீரிழிவு, ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு நோய்களைப் பரிசாகப் பெற்றிருக்கிறோம். தற்போது, அதற்கு மாற்று என்று சொல்லிக்கொண்டு, நமது பாரம்பர்ய உணவையே டப்பாக்களில் அடைத்து விற்க ஆரம்பித்துவிட்டார்கள். விவசாயப் பின்னணியில் இருந்து வந்தவன் என்பதால், என் திருமணத்துக்கு நமது பாரம்பர்ய உணவான கூழையே விருந்தாக வைக்க முடிவுசெய்தேன். எனது நண்பர்கள் மற்றும் உறவினர்களும் எனது முடிவை வரவேற்றார்கள்.  அதைப் போலவே, வந்திருந்த உறவினர்களும் அதை விரும்பிக் குடித்தனர். குறைந்த செலவில் ஆரோக்கியமான உணவை எனது உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் வழங்கியிருக்கிறேன். எனது சக நண்பர்களும் அவர்களது இல்ல நிகழ்ச்சிகளில் இதைக் கடைப்பிடிப்பதாகக் கூறியிருப்பதுதான் எனது முயற்சிக்குக் கிடைத்த வெற்றி. இதை அனைவரும் கடைப்பிடித்தால், நமது பாரம்பர்ய உணவை மீட்டெடுப்பது மட்டுமல்லாமல், நலிவடைந்து வரும் விவசாயத்தையும் நாம் நிமிரச் செய்யலாம்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு