ஆசிரியர் பக்கம்
கார்ஸ்
Published:Updated:

மூன்றாம் தலைமுறை எக்ஸ்-3 - மயக்குதா லக்ஸீரி?!

மூன்றாம் தலைமுறை எக்ஸ்-3 - மயக்குதா லக்ஸீரி?!
பிரீமியம் ஸ்டோரி
News
மூன்றாம் தலைமுறை எக்ஸ்-3 - மயக்குதா லக்ஸீரி?!

ஃபர்ஸ்ட் டிரைவ் / பிஎம்டபிள்யூ X3தொகுப்பு: ராகுல் சிவகுரு

மிட்சைஸ் லக்ஸூரி எஸ்யூவி பிரிவில், பின்தங்கிய நிலையில் இருக்கும் கார் இதுதான். ஆனால், இருந்த குறைகள் அனைத்தையும் முற்றிலும் புதிய, மூன்றாம் தலைமுறை மாடலில் சரிசெய்து விட்டதாக பிஎம்டபிள்யூ சொல்கிறது. ஆடி Q5, மெர்சிடீஸ் பென்ஸ் GLC, லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட், வால்வோ S60 ஆகிய எஸ்யூவிகளுக்குப் போட்டியாக வந்திருக்கும் புதிய X3 எப்படி இருக்கிறது?

டிசைன்

அளவில் பெரிதாக இல்லாவிட்டாலும், பார்ப்பதற்கு மினி X5 போல இருக்கிறது புதிய X3. நீளமான பானெட், பெரிய வீல் ஆர்ச், பின்பக்க டெயில் லைட் மற்றும் பம்பர் ஆகியவை இதற்கான உதாரணம். மேலும், முன்பக்கத்தில் முன்பைவிட அகலமான கிட்னி வடிவ கிரில், இரட்டை குழல் துப்பாக்கியை நினைவுபடுத்தும் LED Ring உடன் கூடிய ஹெட்லைட் எனச் சில மாற்றங்களும் காரில் தென்படுகின்றன. பிஎம்டபிள்யூவின் புதிய CLAR பிளாட்ஃபார்மில் தயாரிக்கப்பட்டிருப்பதால், முந்தைய மாடலைவிட 55 கிலோ எடை குறைந்திருக்கிறது புதிய X3. அலுமினியத்தால் ஆன பானெட் மற்றும் கதவுகளுக்கு, இந்த எடைக் குறைப்பில் பங்குண்டு.

மூன்றாம் தலைமுறை எக்ஸ்-3 - மயக்குதா லக்ஸீரி?!

ஓட்டுதல் அனுபவம்

புதிய பிளாட்ஃபார்மின் பலன்கள், புதிய X3 எஸ்யூவியை ஓட்டத் துவங்கிய உடனேயே தெரிகிறது. விண்ட் ஸ்கிரீனில் Acoustic Glazing பயன்படுத்தபட்டுள்ளதால், வெளிச்சத்தம் காருக்குள்ளே கேட்பது கணிசமாகக் குறைந்திருக்கிறது. மேலும், ஆரம்ப மற்றும் மிதமான வேகத்தில் பயணிக்கும்போது, காருக்குள் இருப்பது பெட்ரோல் இன்ஜினா என்ற சந்தேகம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. ஆனால், புதிய X3-யில் இருப்பது, 190bhp பவர் மற்றும் 40kgm டார்க்கை வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் டீசல் இன்ஜின். டர்போ லேக் இருப்பதால், 2,000 ஆர்பிஎம்மைத் தாண்டிய பிறகு பவர் டெலிவரி அதிரடிக்கிறது. அதுவும் ஸ்போர்ட்ஸ் மோடில் காரை ஓட்டும்போது, பவர் கொப்பளிக்கிறது. இந்நேரத்தில் ஸ்டீயரிங்கின் எடையும் கூடிவிடுகிறது. இன்ஜினுடன் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸின் கூட்டணி அற்புதம். 4,800 ஆர்பிஎம் வரை இன்ஜின் இயங்கினாலும், 4,000 ஆர்பிஎம்முக்குப் பிறகு இன்ஜின் அதிக சத்தம் போடுகிறது.

புதிய X3-யின் ஓட்டுதல் தரத்தை செக் செய்வதற்காக, கம்ஃபர்ட் மோடுக்கு மாறினோம். காரில் அதிக டிராவலுடன் கூடிய காயில் ஸ்பிரிங் மற்றும் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய டேம்பர்கள் இருப்பது பெரிய ப்ளஸ். எனவே, மோசமான சாலைகளில் சென்றாலும், அது ஏற்படுத்தும் அதிர்வுகளை சஸ்பென்ஷன் உள்வாங்கிக்கொள்கிறது. மேலும், அலுமினியத்தால் ஆன ஆன்ட்டி ரோல் பார்கள் இருப்பதால், வீல்களின் மீதான எடை குறைந்திருக்கிறது. கரடுமுரடான சாலைகளிலும் புதிய X3 அசால்ட்டாக சென்றது. இதற்கு காரின் 4 வீல் டிரைவ் அமைப்பு செட் செய்யப்பட்ட விதமே காரணம். பின்பக்க வீல்களுக்கு பெரும்பான்மையான பவர் செல்லும்படி இருப்பதால், ஆரம்பத்தில் கார் கொஞ்சம் குலுங்குவதுபோலத் தெரிந்தாலும், வேகத்தை அதிகரிக்கும்போது அவை காணாமல் போய்விடுகின்றன. திருப்பங்களில் புதிய X3-யைச் செலுத்தும்போது, நாம் ஒரு 1.8 டன் எடையுள்ள காரை ஓட்டுகிறோம் என்ற உணர்வே இல்லை. இதற்கு சூப்பரான  ரோடு க்ரிப் துணைநிற்கிறது.

மூன்றாம் தலைமுறை எக்ஸ்-3 - மயக்குதா லக்ஸீரி?!

கேபின் மற்றும் சிறப்பம்சங்கள்

முன்பைவிட 50 மிமீ வீல்பேஸ் அதிகரித்துள்ளதால், கேபினில் இடவசதி கூடியுள்ளது. 5 சீரிஸ் மற்றும் 7 சீரிஸ் கார்களுக்கு இணையான தரத்தில் டேஷ்போர்டு இருக்கிறது. இதில் இருக்கும் Electro Plated பட்டன்கள், முன்பைவிடப் பயன்படுத்துவது நல்ல அனுபவம். முந்தைய மாடலுடன் ஒப்பிடும்போது, சீட்டிங் பொசிஷன் மற்றும் இருக்கை சொகுசு ஆகியவற்றிலும் முன்னேற்றம் தெரிகிறது. முதுகிற்குப் போதுமான சப்போர்ட் கிடைத்தாலும், தொடைகளுக்கு கிடைக்கும் சப்போர்ட் கொஞ்சம் குறைவுதான். 3 ஸ்போக் M ஸ்போர்ட் ஸ்டீயரிங் வீல், டோர் பேடு - டேஷ்போர்டின் மேல்பகுதியில் செய்யப்பட்டிருக்கும் வேலைப்பாடுகள் மற்றும் Dakota லெதரால் ஆன சீட்கள் உயர் ரகம். டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ஏ.சி கன்ட்ரோல்கள், ஆறாம் தலைமுறை iDrive அமைப்பிற்கு வழங்கப்பட்டிருக்கும் அகலமான டச் ஸ்கிரீன் ஆகியவை, இது லேட்டஸ்ட் கார் என்பதை உணர்த்துகின்றன.

மூன்றாம் தலைமுறை எக்ஸ்-3 - மயக்குதா லக்ஸீரி?!

இதை iDrive கன்ட்ரோல் நாப், டச் ஸ்கிரீன், வாய்ஸ் கன்ட்ரோல் ஆகியவற்றால் இயக்க முடிவது நைஸ். பின்பக்க இருக்கையை 40:20:40 விகிதத்தில் மடிக்க முடிவதுடன், இங்கிருப்பவர்களுக்கு எனப் பிரத்யேகமான கிளைமேட் கன்ட்ரோல் மற்றும் விண்டோ சன்ஷேடு ஆகியவை வழங்கப்பட் டிருக்கின்றன. 550 லிட்டர் பூட் ஸ்பேஸுக்கு கீழே, Space Saver இடம்பெற்றுள்ளது. ஸ்கிரீனுடன் கூடிய டிஸ்ப்ளே சாவி, பெரிய பனரோமிக் சன்ரூஃப், ஸ்மார்ட் போன்களுக்கான வயர்லெஸ் சார்ஜிங் அமைப்பு எனச் சில ஹைடெக் அம்சங்களும், புதிய X3-யில் இருக்கின்றன. டச் ஸ்கிரீனைப் பயன்படுத்துவது நல்ல அனுபவமாக இருந்தாலும், அதில் ஆண்ட்ராய்டு ஆட்டோ - ஆப்பிள் கார் ப்ளே - Gesture கன்ட்ரோல்

மூன்றாம் தலைமுறை எக்ஸ்-3 - மயக்குதா லக்ஸீரி?!

ஆகியவை இல்லாதது மைனஸ்.

சென்னையில் இருக்கும் பிஎம்டபிள்யூவின் தொழிற்சாலையில் அசெம்பிள் செய்யப்படுவதால், Expedition மற்றும் லக்ஸூரி லைன் எனும் இரு வேரியன்ட்களில் கிடைக்கும் புதிய X3 எஸ்யூவியின் எக்ஸ் ஷோரூம் விலை, முறையே 49.99 லட்ச ரூபாய் மற்றும் 56.70 லட்ச ரூபாய் என்றளவில் இருக்கிறது. மிட்சைஸ் லக்ஸூரி எஸ்யூவியின் ‘தல’-யாக வருவதற்கான அனைத்து தகுதிகளையும் தன்னகத்தே கொண்டுள்ள புதிய X3, முந்தைய மாடலைவிட ஓட்டுதல் தரம் மற்றும் கையாளுமை சிறப்பாக இருக்கிறது. கேபினில் இடவசதி கூடியிருப்பதுடன், தரமும் வசதிகளும் பலமடங்கு அதிகரித்துள்ளது. எனவே, டிரைவர்களுக்கான காராக மட்டும் இல்லாமல், பின்பக்க இருக்கையில் உட்கார்ந்து வருபவர்களுக்கான காராகவும் மாறியிருக்கிறது புதிய X3.