ஆசிரியர் பக்கம்
கார்ஸ்
Published:Updated:

பூப்போன்ற சொகுசு; தீப்போன்ற பர்ஃபாமென்ஸ்!

பூப்போன்ற சொகுசு; தீப்போன்ற பர்ஃபாமென்ஸ்!
பிரீமியம் ஸ்டோரி
News
பூப்போன்ற சொகுசு; தீப்போன்ற பர்ஃபாமென்ஸ்!

ஃபர்ஸ்ட் டிரைவ் / மஹிந்திரா XUV500தொகுப்பு: தமிழ்

கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள் இருக்கும். செடான் கார்கள் போரடித்துப் போய், எஸ்யூவிகளின் மேல் வாடிக்கையாளர்கள் காதல்கொள்ள ஆரம்பித்த காலம் அது. மஹிந்திராவில் இருந்து XUV500 எனும் பெயரில் அந்த எஸ்யூவி வெளிவந்தது. மஹிந்திராவின் கேம் சேஞ்சர் என்று பெயர் எடுத்ததுடன், மக்கள் XUV-ஐ தேடித் தேடி புக் செய்தார்கள். ஆம்! XUV 500 எஸ்யூவி காருக்கு இப்போது ஏழு வயது நிறைவடைகிறது. இந்த ஏழு ஆண்டுகளில் பல மாற்றங்களைச் சந்தித்துவிட்டது XUV.

கடைசியாக 2015-ல் வந்தது XUV-ன் முதல் ஃபேஸ்லிஃப்ட். இப்போது 2018-ல் பிரீமியம் லுக்கில் அசத்தலாக அப்கிரேட் ஆகி வந்திருக்கிறது. வெளிப்புறத்தைப் பொறுத்தவரை கிரில்தான் பெரிய மாற்றம். அங்கங்கே குரோம் ஸ்டட்கள் மற்றும் பட்டைகள் என்று நளினமாகவும், அதே நேரத்தில் கெத்தாகவும் இருக்கிறது. ‘ஹெட்லைட்டை மட்டும் மாத்திடாதீங்க... அதான் XUV-க்கு அழகே’ என்று யாரோ மஹிந்திராவிடம் சொல்லியிருக்க வேண்டும். அதே கழுகுப் பார்வைகொண்ட ஹெட்லைட்ஸ்! புரொஜெக்டர் லைட்ஸ் உண்டு. ஆனால், லோ பீமுக்கு மட்டும்தான். (காஸ்ட் கட்டிங்?) LED DRL, குரோம் வளையத்தில் பனி விளக்குகள் லேசான மாற்றம் கண்டிருக்கின்றன. மற்றபடி பம்பரில் வேறெந்த மாற்றங்களும் இல்லை.

அலாய் வீலுக்கு டூயல் டோன் கொடுக்க வேண்டும் என்கிற மஹிந்திராவின்  ஐடியாவுக்கு ஒரு ஸ்மைலி. அதுவும் 18 இன்ச். வாவ்! பார்க்கவே பிரம்மாண்டமாக இருக்கிறது. W11 வேரியன்ட்டில் மட்டும்தான் இது. கதவுகள், ரூஃப் ரெயில், கதவுக்குக் கீழே ஃபுட் ஸ்டெப் என்று எத்தனை க்ரோம் மின்னல்கள்! ரொம்பவும் உற்றுக் கவனித்தால்தான் இது தெரியும்.

பூப்போன்ற சொகுசு; தீப்போன்ற பர்ஃபாமென்ஸ்!

XUV-யுடன் புழங்கியவர்களுக்கு இதன் பின் பக்கம், மிகப் பெரிய ஆச்சரியத்தை வரவழைக்கும். காரின் பின் பக்க டிசைனில்தான் ஓவர்டைம் பார்த்திருக்கிறது மஹிந்திரா. டெயில் கேட், டெய்ல் லைட்ஸ், ரூஃப் ஸ்பாய்லர்... எல்லாமே புதுசு!

கறுப்பின குத்துச்சண்டை சாம்பியன் பாபி லாஷ்லேவின் தோள்கள் போல் ‘கறுகறு’வென கும்மென இருக்கிறது இதன் டேஷ்போர்டு. லெதர் அப்ஹோல்ஸரி சீட்கள் வெரி நைஸ். சீட்களுக்கான ஃபிட்டிங்கில், உட்கார்பவர்கள் கொஞ்சம் சங்கடமாக ஃபீல் பண்ணலாம். மூன்று செங்குத்தான ஃபோம் ஸ்ட்ரிப்புகள் மீது உட்காரும்போது, முதுகில் இடைஞ்சலாக இருக்கலாம். ஆனால், இது ஒருவகையான சொகுசு ஃபீலிங்கையும் கொடுக்கிறது.

சென்டர் கன்ஸோல், பியானோ பிளாக் ஃபினிஷ்ஷில் அசத்துகிறது. ஆங்காங்கே சில்வர் கலரில் சில ஹைலைட்ஸ்... பரவாயில்லை; இந்த மஹிந்திராவின் பிளாஸ்டிக் பாகங்களில் ஸாஃப்ட் ஃபீல் கிடைப்பது ஆச்சரியம். மொத்தத்தில் All is Well. உதாரணத்துக்கு மேலே சன்ரூஃப், ஆட்டோ ஹெட்லைட்ஸ், ஆட்டோ வைப்பர், சாட்டிலைட் நேவிகேஷன் கொண்ட டச் ஸ்கிரீன், ஆண்ட்ராய்டு ஆட்டோ, ரிவர்ஸ் கேமரா, ஆறு காற்றுப் பைகள்... அப்புறம் ESP. அதாவது, எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம். உயரமான இந்த எஸ்யூவிக்கு கார்னரிங்கில் இது மிகப் பெரிய பலம்.

இந்த தடவை Arkamys ஆடியோ சரவுண்ட் சிஸ்டம். இதில் ஸ்மார்ட் வாட்ச் கனெக்ட்டிவிட்டி இருக்கிறது. மஹிந்திராவின் புளூசென்ஸ் எனும் ஆப்-பை இன்ஸ்டால் செய்து, ஆண்ட்ராய்டு அல்லது ஆப்பிள் வாட்ச் மூலம் இன்ஃபோயிட்மென்ட் சிஸ்டத்தை சிங்க் செய்து கொண்டு ஆடியோ கன்ட்ரோல், வாய்ஸ் கமாண்ட், கிளைமேட் கன்ட்ரோல், டயர் பிரஷர் என்று எல்லாவற்றையும் செக் செய்துகொள்ளலாம்.

பூப்போன்ற சொகுசு; தீப்போன்ற பர்ஃபாமென்ஸ்!

பர்ஃபாமென்ஸைப் பொறுத்தவரை XUV என்றைக்கும் சோடை போனதில்லை. அதுவும் இப்போது பவர் விஷயத்தில் சொல்லியடித்துவிட்டது மஹிந்திரா. பழைய காரைவிடப் பவரில் 15 bhp, டார்க்கும் 3 kgm கூடியிருப்பதால் பட்டையைக் கிளப்பலாம். இந்த 2.2 லிட்டர் டீசல் இன்ஜினில், 155 bhp பவரும், 36 kgm டார்க்கும் உண்டு. பழைய காரில் வேக்கும் கன்ட்ரோல்டு டர்போ சார்ஜர்தான் இருந்தது. இதில் டர்போ சார்ஜர்கூட எலெக்ட்ரானிக் கன்ட்ரோல் சிஸ்டத்துக்கு மாறிவிட்டது. எனவே பழைய காரைவிட ரைடிங் ஃபன்னும் அதிகரித்து விட்டது.

ரெவ் ரேஞ்ச் லேசாக இம்ப்ரூவ் ஆகியிருக்கிறது. 1,400 rpm-மிலேயே பூஸ்ட் ஆக ஆரம்பித்து, 1,800 rpm-மில் அதிரிபுதிரி பண்ண ஆரம்பிக்கிறது இன்ஜின். 4,000 rpm வரை விரட்ட முடிகிறது. அதே 6-ஸ்பீடு கியர்பாக்ஸ்தான். கியர்ஷிஃப்ட்டிங் கொஞ்சம் நீளமாகத் தெரிந்தது. அப்படியென்றால், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இல்லையா என்பவர்களுக்கு, 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் ஆப்ஷன் இருக்கிறது. கியர் விழுந்ததும் முன் பக்க வீல்களுக்கு பவர் பறப்பது அப்படியே ஃபீல் ஆனது. கொஞ்சம் கரடுமுரடு டூர்களுக்கு 4WD சரியான சாய்ஸ். பவர் கூடினாலும், குறைந்த கியர்களில் ஹார்டு ஆக்ஸிலரேஷன்களில் பழைய XUV5OO ஒரு மாதிரி பயமுறுத்தும். 2018 ஃபேஸ்லிஃப்ட்டில் அப்படி எதுவும் இல்லை. மொத்தத்தில், இனிஷியல் ரெஸ்பான்ஸ் நல்ல முன்னேற்றம் கண்டிருக்கிறது.

பூப்போன்ற சொகுசு; தீப்போன்ற பர்ஃபாமென்ஸ்!

18 இன்ச் வீல்கள் எம்மாம் பெருசு? ஆனால், ஓட்டுதல் தரத்தில் பழைய XUV போல்தான் இருக்கிறது. இதற்குக் காரணம், சஸ்பென்ஷனில் பெரிதாக மஹிந்திரா வேலை பார்க்கவில்லை. ஆனால், வீல்களின் செக்ஷனையும் அதிகப்படுத்தி இருப்பதால், மோசமான சாலைகளை மகிழ்வோடு ஏற்றுக் கொள்கிறது. பாடி ரோலில் பழசைவிட நல்ல கன்ட்ரோல். அதிலும் ரோல்ஓவர் பாதுகாப்புக்காக ESP சிஸ்டம் வேறு இருப்பதால், அதிக வேகங்களில் தைரியமாகப் பறக்கலாம். கூடவே EBD உடன் ABS உண்டு. பாதுகாப்பில் தன்னம்பிக்கையை வரவழைப்பதற்கு நன்றி மஹிந்திரா.

முன்பைவிட அதிக வசதிகள், இடவசதி, சொகுசு எல்லாவற்றிலும் சிறப்பான அனுபவத்தைத் தரும் இந்தப் புதிய வேரியன்ட்டான W11 (O) மாடல், பழைய W10 FWD MT வேரியன்ட்டைவிட 4,000 ரூபாய் குறைவாக வந்திருக்கிறது. அதாவது கிட்டத்தட்ட 19.02 லட்சம் இருக்கலாம். வசதிகளைக் கூட்டி விலையைக் குறைத்துவிட்டு, தனக்கான மதிப்பையும் கூட்டி புத்திசாலித்தனமாக வேலை பார்த்துள்ள மஹிந்திராவுக்கு ஷொட்டு!